Saturday, June 29, 2013

செஞ்சிலுவைச் சங்க முதலுதவிப் பயிற்சி.

                             புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி கலையரங்கில், இன்று 29.06.2013 மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும், தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கும்  ஒரு நாள் “ முதலுதவி“ ப் பயிற்சி முகாமை நடத்தியது. 

                             மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் பாவலர் பொன்.கருப்பையா அம்முகாமில் கலந்து கொண்டார். செஞ்சிலுவைச் சங்க   மாவட்டச் செயலாளர் முனைவர் ராசா முகம்மது அவர்கள் தலைமையில் முகாமினை மாவட்டத்துணைத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் வரவேற்புரையாற்றினார்.

                         செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் மாநிலக் கருத்தாளர் திரு. இராதாகிருஷ்ணன் “முதலுதவி“ பற்றிய செயல் விளக்கங்களோடான பயிற்சியினை அளித்தார்.

                         திடீர் விபத்துகள், நோய் மற்றும் இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளிக்கப்படாமையாலே பெரும்பாலான் மரணங்கள் நிகழ்கின்றன.. உரிய நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு செயற்கைச் சுவாச முறையில் முதலுதவி அளிப்பதையும், இரத்தப் போக்கை நிறுத்தும் வழிமுறைகள், தீவிபத்தில் பாதிக்கப் பட்டவர்க்கு அளிக்கப் பட வேண்டிய முதலுதவிகள் முதலியவை பற்றி அவர் விளக்கமளித்தார்.

                       மாலையில் நடந்த நிறைவு விழாவில்  செஞ்சிலுவைச் சங்க இணைச் செயலாளர் பேராசிரியர் எஸ்.விசுவநாதன் அவர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை தீத் தடுப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் திரு சாந்தார் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

                       இன்றைய இயற்கைச் சீற்றப் பேரிடர்களிலும், சாலை , தீ விபத்துகளிலும் பாதிக்கப் படுவோரைக் காக்க இத்தகு பயிற்சிகள் அவசியமானது என்பதையும், இப்பயிற்சி மாவட்டம் முழுமைக்கும் கொண்டு செல்லப் படவேண்டு மென்பதையும் பாவலர் பொன்.கருப்பையா வலியுறுத்தினார்.

Friday, June 28, 2013

முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு.

கல்வி கரையில.... 
                   
                  இன்று 28.06.2013 பிற்பகல்  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் , எனது இனிய நண்பரும் மணிமன்ற உறுப்பினருமான கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் (எ) வீ.கருப்பையன் அவர்களுக்கான  முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது.

               “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் ” எனும் தலைப்பில் ஆய்வேடு அளித்திருந்தார்.  தமிழகத்தின் தலைசிறந்த 16 மரபுக்  கவிஞர்களின் மறுமலர்சிப் பாடல்களை நுணுகி ஆய்ந்திருந்தார். 
               சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வழிகாட்டலில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தது.

               தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் இரா. காமராசு அவர்கள் புறத்தேர்வாளராக வாய்மொழித் தேர்வினை நடத்தினார். 
ஆய்வின் முக்கிய கருத்துகளை ஆய்வாளர் வழங்க பொது மதிப்பீட்டாளர்களால் வினாக்கள் தொடுக்கப் பட்டு விளக்கங்கள் பெறப்பட்டன.

               மாமன்னர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சு.மாதவன், முனைவர் செல்வராசு, முனைவர் முருகானந்தம், கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் கண்ணன் ஆகியோர் ஆய்வு பற்றிய வினாக்களைத் தொடுத்தனர். 

             பேராசிரியர் வீ.வைத்தியநாதன், புலவர் மு.பா, மு.முத்துசீனிவாசன், நிலவை பழனியப்பன், இரா.சம்பத்குமார், பாவலர் பொன்.கருப்பையா,  சுகுமாரி, மகாசுந்தர் , மாமன்னர் கல்லூரி ஆய்வுப்பட்ட மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

            பொது மதிப்பீட்டாளர்களின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் புறத்தேர்வாளர்  முனைவர் இரா.காமராசு அவர்கள்,  வீ.கருப்பையன்  அவர்களை அவரது ஆய்வுக்காக மதிப்புறு முனைவர் பட்டத் தகுதிக்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை செய்தார். 

          மாமன்னர் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன் அவர்கள் முன்னிலையில்  நடந்த நிகழ்ச்சி பாராட்டிற்குரியதாக அமைந்திருந்தது.

Thursday, June 27, 2013

புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஓராண்டு நிறைவுநாளில் ( 25.06.2013 ) திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துப் பெருமைப் படுத்தும்  தமிழார்வலர்களுடன் பாவலர் பொன்.க.

Wednesday, June 26, 2013

திருவள்ளுவர் சிலை நிறுவிய நினைவு

            திருவள்ளுவராண்டு 2044 ஆடவைத் திங்கள் கக ஆம் நாள்(.25.06.2013) புதுக்கோட்டை சின்னப்பாத்திடலருகே உலகப் பொதுமறை தந்த தமிழ்ப்பாட்டன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் பொருட்டு அவரது சிலைக்குத் தமிழார்வலர்களை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் படிமத்திற்கு மலர் மாலை அணிவித்துப் பெருமை செய்யப் பட்டது.
  
          இந்நிகழ்வில் சிலை அமைப்புக் குழுத்தலைவர் சீனு.சின்னப்பா,  திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, மூத்தகுடிமக்கள் அமைப்புத் தலைவர் க.இராமையா, தமிழிசைச் சங்கத் தலைவர் இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார்,மணிமன்ற நிறுவுனர் பாவலர் பொன்.கருப்பையா, கம்பன் கழகச் செயலாளர் இரா.சம்பத்குமார், பாவேந்தர் இலக்கியப் பேரவைச் செயலாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, கோவிந்தசாமி மற்றும் தமிழார்வலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
          
         கடந்த ஆண்டு இதே நாளில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே நிறுவப்பட்ட இச்சிலை அரசியல் மாச்சரியங்களால் இன்னும் முறையான திறப்பு விழா செய்யப் படாமல் இருப்பது தமிழார்வலர்கள் மனதில் நெருடலாகவே இருக்கிறது.

Thursday, June 20, 2013

காசநோய் பராமரிப்பு

 ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
               
                   20.06.2013 அன்று புதுக்கோட்டை அரசு பொது மருத்தவமனை காசநோய்ப்பிரிவு கூட்ட அரங்கில் புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையமும், ரீச் தொண்டு நிறுவனமும் இணைந்து காசநோய் பராமரிப்புக்கான நோயாளிகளின் சாசனம் என்னும் கருத்தரங்கினை நடத்தியது. 
              
                  காசநோய் மருத்துவ இணை இயக்குநர் எஸ.ஆர்.சந்திரசேகர் அவர்கள் கருத்தரங்கத் தலைமையேற்றார். நிலைய மருத்துவ அலுவலர்  தனசேகரன் அவர்கள்  தொடக்க உரையாற்றினார்.  ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.
              
                  காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு புதுக்கோட்டை அமைப்பின் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் காசநோயாளிகளின் சாசனம் பற்றி ஒளிப்பட விளக்கங்களுடன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில்  காசநோயாளிகளின் உரிமைகளையும் பொறுப்புகளையும் விளக்கிப் பேசினார்.

                        ஒவ்வொரு காசநோயாளருக்கும்  சர்வதேச அளவில், சமமான பராமரிப்பு இலவசமாக உண்டு என்றார். நோயாளிகள் குடும்பம் மற்றும் சமூகத்தால் கவுரமாக நடத்தப் பட வேண்டும். நோயின் நிலை, சிகிச்சை முறை, மருந்துகளின் பெயர் அளவு ஆகியவை பற்றி தமிழில் நோயாளர்கள் தகவல் கேட்டுப் பெறும் உரிமை உள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
                
                     பராமரிப்பு குறித்தும் நியாயமற்ற சிகிச்சை பற்றியும், பக்க விளைவுகள் பற்றியும் மேல் அலுவலர்களிடம் முறையிடும் உரிமை நோயாளிக்கு உண்டு என்றார்.
ஆய்வுக்காலம் முதல் குணமாகும் வரை தங்களது வருமானத்திற்கான தொழில்பாதுகாப்பு , மற்றும் ஊட்டச்சத்துகள் பெறுவது, தரமான மருத்துவ வசதி கிடைப்பது ஆகியவற்றிற்கான உறுதிபெறும் உரிமையினையும் குறிப்பிட்டார்.

                    அதே வேளையில் நோயாளர்கள் தங்களது நோய் அனுபவங்களை குடும்பம் , நண்பர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதும், நோய் கண்டவரை ஆய்வுக்கு வழிநடத்தலும், தனது நோய்க்கான சிகிச்சையினை இடைவிடாது மருத்துவர் கூறும் காலம் வரை தொடர்வதும்  காசநோயினைக் கட்டுப் படுத்தி சமூக நலனுக்கு ஒத்துழைக்கும் பொறுப்புகளும் நோயாளர்களுக்க உண்டு என்பதை  வலியுறுத்திப் பேசினார்.
                  அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு.லெ.பிரபாகரன்  நோயாளிகளின் கடமைகள் பற்றிப் பேசினார். திட்ட மேலாளர் திரு சி.குமார் அவர்கள் நன்றி கூறினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். நோய் கண்டறியப் பட்ட 26 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு  பயன் பெற்றனர் 

Monday, June 17, 2013

தமிழ்வழிக் கல்வி கூட்டு இயக்கம்

                                                மாற்றங்களை யோசிப்போம்.
17.06.2013 மாலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வழிக்கல்வி கூட்டிணைப்பின் பரப்புரைக் கூட்டம் புலவர் மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலிமிருந்து தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர். அண்மையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அரசாணை யால்  தமிழினத்  தலைமுறைப் பாதிப்புகள் பற்றித் தமிழறிஞர்கள் உரையாற்றினர்.  அக்கூட்டத்தில் பாவலர் பொன்.க இயற்றி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

                                          கொந்தளிக்கும் வெந்தணல்

உரிமைபறி         போகுதிங்கே      உறைக்கலையா       தமிழா?
உணர்ச்சியற்ற மரக்கட்டையா உறங்குறியா               தமிழா?
உயர்தனிச்      செம்மொழிதான்நம்  பயிற்றுமொழி  தமிழா  -  அதை
உதறிவிட்டு  ஆங்கிலவழிக்    கல்விஎதுக்குத்              தமிழா?                           -- உரிமை

தாய்ப்பாலில்     வளரும்பிள்ளைத்  தாக்கும்நோயை    தாங்கிடுமே
தட்டுக்கெட்டப்  புட்டிப்பாலில்            எளிதாநோயும்         புகுந்திடுமே
தமிழ்வழியில்   படிச்சவங்கலாம்    தரணிபோற்றப்        பெருகலையா?
தரமிழந்த            கல்விமுறைக்கு    ஆங்கி்லந்தான்             மறுதலையா?        -- உரிமை

கிளிவளரும்        கூண்டுக்குள்ளே     கழுகைநுழைச்சு       வளர்ப்பதா?
கழுகுப்பசிக்குக்  காலப்போக்கில்     கிளியும்உயிரை       இழப்பதோ?
மொழிசிதைச்சு  இனமழிக்கும்         முயற்சிக்குக்கை      கொடுப்பதோ?
விழியிரண்டில்  வேறுவேறு               காட்சிபுகுத்த                நினைப்பதோ?       -- உரிமை

தெள்ளுதிணை        மாவின்பக்கம்         தேன்தடவி              நஞ்சைவச்சு
தேவைப்பட்டதை எடுத்துக்கோன்னு   தெளிவில்லாச்  சொல்லுவாங்களா?
திறன்வளர்த்து       மேம்படுத்தும்        தாய்மொழியைத்   தள்ளுவாங்களா?
தேசம்மறந்து       பொருள்திரட்டும்    தேய்மொழிப்பின்  செல்லுவாங்களா?  -- உரிமை

எந்தமொழிக்       கில்லாமேன்மை        நம்மொழிக்         கிருப்பதாலே
நொந்தமனத்        தந்திரிமாரின்            நெஞ்செரிச்சல்   மூண்டதோ?
சொந்தமண்ணில்   தமிழினமும்       அந்நியன்போல்   வாழ்வதோ?
கொந்தளிக்கும்  தமிழினத்தின்            வெந்தணல்           வீணாவதோ?              -- உரிமை

Tuesday, June 11, 2013

காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம்

                .புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் 11.06.2013 அன்று  மாவட்ட காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையச் செயற்குழுக் கூட்டம்  திரு இராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
           
              ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன், மறுவாழ்வு மையச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர்கள் திரு.லெ.பிரபாகரன், திரு.த.சிவராம கிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளர்கள் ம.வீரமுத்து, ஆர்.சுப்பிரமணியன், முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

             கூட்டத்தில் எதிர்வரும் 18.06.2013 அன்று மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் காசநோயாளர்களுக்கு “காசநோயாளர் உரிமைகளும் உய்வும்“ எனும் தலைப்பில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது என்றும், கருத்தாளர்களாக பாவலர் பொன்.கருப்பையா, திரு லெ.பிரபாகரன் ஆகியோர் நோயாளர்களுடன் கலந்துரையாடுவது என்றும்.. உரிமைகள் பற்றிய ஒளிப்பட உரை நிகழ்த்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

தேசிய இளையோர் படைத் தொண்டர்களுடன்...

                    .11.06.2013 முற்பகல் புதுக்கோட்டையில், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.சதாசிவம் அவர்கள் தலைமையில் தேசிய இளையோர் படைத் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது.
                  
                     கணக்காயர் திருமதி இராசராசேசுவரி வரவேற்றார்.
                  
                     பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தேசிய இளையோர் படைத் தொண்டர் களுக்கு எழுச்சியுரையாற்றினார்.
                   
                   அவர் தனது உரையில் இன்றைய இளைஞர் போக்கும் நேற்றைய தொண்டர்கள் தியாகங்களும் பற்றிய ஒப்பீடுகளைச் சுட்டிக்காட்டினார். புகழுக்கும். பொருளுக்கும் மயங்காமல்  சமூக மேம்பாட்டிற்காகத் தன்னலம் கருதாமல்  உழைக்கும் இளைஞர்கள் இன்று ஏராளமாக இருந்தும் அவர்களை வழிநடத்தும் சரியான சமுதாயத் தலைவர்கள் இல்லாமையால்தான் வன்கொடுமைகளும் ஊழல்களும் பயங்கர வாதங்களும் தலைதூக்குகின்றன என்னும் கருத்தைப் பதிவு செய்தார்.
                  
                    தொண்டாற்றும் பாதைகளில் சந்திக்க வேண்டிய இடர்களை உறுதியோடு எதிர்கொண்டு , உணர்ச்சி வயப்படாமல் அறிவுப்புர்வமான செயல்களில் இளைஞர் ஈடுபட்டால் உலக நாடுகளில் நமதுநாடு உயர்ந்து நிற்கலாம் என்றார்.       

                   நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் இன்றும் நினைக்கப்படுவது அவர்களின் தன்னலம் கருதாப் பொதுநலத் தொண்டால்தான். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயலுங்கள், முனைந்து முன்னேறுங்கள்.. நாட்டை முன்னேற்றுங்கள் என எழுச்சி பொங்கக் கூறினார்.
                    நன்றியுரையாற்றிய விராலிமலை தேசிய இளையோர் படைத் தொண்டர் சதீஸ்குமார், இத்தகு உற்சாகமூட்டும் உரைகள் தங்கள் பணிசிறக்க பேருதவியாக இருக்கும் என்றார்.