Tuesday, December 9, 2014

காலநிலை மாற்றம் எதனாலே?

             22ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை , மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையி்ல் பொது மேடையில் “காலநிலை மாற்றம் எதனாலே?” என்னும் கருத்தமைந்த கீழ்வரும் பாடலை அன்றே இயற்றி அன்றே இசையமைத்துப் பாடினேன்.
மேடையிலிருந்த சான்றோரும்  குழந்தை விஞ்ஞானிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் தமிழக 32 மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என 2100 பேர்களும் அரங்கதிர கையொலி எழுப்பிப் பாராட்டிய பாடல். என்னுடைய 351 ஆவது பாடல் இது.
முன்னெடுப்பு 
ஆடியில காத்தடிச்சு ஆவணியில் மழைபெய்ஞ்சு
ஆறுகுளம் நிரம்பிவய அமோகமா வௌஞ்சதப்பா,
மாசம்தையில் பொங்கவச்சு மக்கநல்லா வாழ்ந்தகாலம்
 மறுபடியும் வராதான்னு மனசுரொம்ப ஏங்குதப்பா

எடுப்பு
காலநிலை மாறிப் போச்சுங்க - அதன் 
காரணமே  நாம தானேங்க
காற்றைநீரைக் கெடுத்துப் புட்டோங்க- அதைக் 
காப்பதுதான் நமது வேலைங்க
காக்கணும் காக்கணும் இயற்கை வளத்தைக் காக்கணும்
போக்கணும் போக்கணும் செயற்கைத் தனத்தைப் போக்கணும் - காலநிலை

தொடுப்பு
காடுகரை அழிச்சு எங்கும் கட்டட மாக்கிட்டோம்
கம்மாஏரிக் குளத்தைத் தூத்துக் குடியும் ஏறிட்டோம்
கடல்நீரும் ஆவியாகாமக் கழிவால் நெரப்பிட்டோம் - இப்போ
கழுதைக்குக் கல்யாணம் பண்ணி மழைக்கு வேண்டுறோம்
சுருங்கிச் சுருங்கி வான்மழையின் அளவும் சுருங்குது
எறங்கி எறங்கி நிலத்தடிநீர் மட்டம் எறங்குது                        --காலநிலை

நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வெடிகள் வெடிக்குறோம்-பெரும் 
நஞ்சைக் கக்கும் அணுக்கதிரை வானில் நெரப்புறோம்
நச்சுக்காத்தால் விண்வெளியைச் சூடு ஏத்துறோம் - அப்பறம்
நல்லாமழை பெய்யலேன்னு ஒதட்டைப் பிதுக்குறோம்
உருகி உருகிப் பனிமலைங்க ஒயரம் கொறையுது
உயரும் கடல்நீர் மட்டம் இந்த நெலத்தை விழுங்குது       -- காலநிலை

வேதிஉரம் புச்சி மருந்தில் வௌச்சல் பெருக்குறோம் - அதில்
விண்ணும் மண்ணும் பாழாப்போகும் நெலைய மறக்குறோம்
காருவண்டி ஆலைக்கழிவால் காத்தைக் கெடுக்குறோம் - அட
காலங்கெட்டுப் போச்சுதுன்னு கெடந்து பொலம்புறோம்
காலம்மாறிக் காத்து மழை சுழன்று அடிக்குது
கணக்கில்லாம உயிர்கள் மண்ணில் பொதைஞ்சு அழியுது -- காலநிலை

Monday, December 8, 2014

22 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேசிய அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றக்குழு மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து , திசம்பர்த் திங்கள் 7,8, 9 ஆகிய நாள்களில் புதுக்கோட்டை லேணா விலக்கு மவுண்ட் சீயோன்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்  22ஆவது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நடத்தியது. மாநில அறிவியல் இயக்கத்துடன் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்திருந்தனர்.

எனது குடும்பத்தில் எனது தம்பி சுரேசைத் தொடர்ந்து பெயரன் பரிதி இளம்வழுதியின் இழப்பையும் அடுத்தடுத்து சந்தித்த துயரத்தில் கடந்த பல நாள்களாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாது இருந்த என்னை மாநாட்டு வரவேற்புக்குழுவில் இடம்பெறச் செய்தனர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாவட்டப் பொறுப்பாளர்கள். அந்த வகையில் நான் கலந்து கொண்ட நிகழ்வு இது.

தனிமனிதத் துயரினும் மேலாக மனித குலத்தையே அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் மற்றும் வெப்பநிலையைப்புரிந்து கொள்ளுதல் என்னும் கருப்பொருள் பற்றிய இம்மாநாட்டில் இயன்ற பங்கினை ஆற்றிட முனைந்தேன்.
திசம்பர் 6ஆம் நாள் தொடக்கவிழாவி்ல் “புவியைக் காத்திடும்” என்னும் பாடலுடன் எனது பணி தொடர்ந்தது. மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி அவர்கள் தலைமையிலும் மவுண்ட் சீயோன் கல்விக்குழுமத் தலைவர் திரு .ஜெயபரதன் செல்லையா அவர்கள் முன்னிலையிலும் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் அறிவியல் கண்காட்சியினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்..

அறிவியலறிஞர் த.வி.வெங்கடேசுவரன் அவர்களின் தொடக்க உரையினைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் அவர்களின் கருத்துரையும் கல்வியாளர்களின் வாழ்த்துரையும் நடைபெற்றது.
“நீங்களும் விஞ்ஞானியாகலாம்” என்னும் அமர்வில் இளம் விஞ்ஞானிகளுடன் முது விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.

மாநாட்டில்32 மாவட்டங்களலிருந்து 253 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 1600 குழந்தை விஞ்ஞானிகளும் 200 வழிகாட்டி ஆசிரியர்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பெற்றோர், பார்வையாளர் என 2000 பேர் பங்குபெற்ற மிகப் பெரிய மாநாடாக இருந்தது.
இரண்டாம் நாள் பிற்பகல்  40 கருத்தாளர் பங்குபெற்ற 15 இணை அமர்வுகள் நடை பெற்றன.

அதில் “மந்திரமா தந்திரமா?” என்னும் தலைப்பில் நான் கருத்தாளராக இரண்டு மணி நேரம் இளம் விஞ்ஞானிகளுடன் கருத்துகளைப் பகிரும் வாய்ப்பு கிடைத்தது.
ஆசிரியர் கருத்தரங்கத்தினை அடுத்து த.அ.இ. மாநிலச் செயலாளர் திரு அமலராசன் அவர்கள் தலைமையில் மேநாள் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆலோசகர் முனைவர்  பொன்ராஜ் அவர்கள் அறிவியல் பேருரையும் மாணவர் சந்திப்பும் நடந்தது.
அந்நிகழ்வின் தொடக்கத்தில் “காலநிலை மாறிப்போச்சுங்க“ என்னும் பாடலைப்  பாடும் வாய்ப்பு எனக்களிக்கப்பட்டது.

பாடல் பின்னர்...


Tuesday, October 7, 2014

இந்தி ஆட்சி மொழியா?

             இந்தி, இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி.எனவே இந்தியை நடுவணரசின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற பிதற்றல்களோடு,  “தொடர்வண்டித் துறை, பொதுக் காப்பீட்டுத் துறை போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக இந்தி கற்றாக வேண்டும். இத்துறைகளின் சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி மொழியில்  மட்டுமே வெளியிடப்பட வேண்டும்” என்ற அரசாணைகளும் பிறப்பிக்கப் பட்டுள்ளன. 

             இந்நிலையில் இந்தியின் தொன்மை,மேன்மை பற்றிய செய்தியினை மக்களறியச் செய்வது நமது கடமையாகும்.

          “இந்தி என்ற சொல்லே பாரசீகச் சொல். இந்தியாவுக்கு முகலாயர்கள் வந்த பிறகே இந்தியின் வரலாறு தொடங்குகிறது.. அதாவது நவீன இந்தி மொழியின் வயது வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. முகலாயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது வட இந்தியாவில் கரிபோலி, பிரஜ்பாசா, பண்டேலி, கனொவுஜி, அவாதி, மகதி, மைதிலி, போஜ்புரி, பாகேலி, சட்டீஷ்காரி மற்றும் பல வட்டார மொழிகள் வழங்கி வந்தன.

          வட்டார மொழியாக் இருந்த கரிபோலியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி இந்தியாகும். அதே கரிபோலி மொழியுடன் பாரசீக கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி உருதுவாகும்..

         1800 ஆம் ஆண்டு வாக்கிலதான் இந்தி மொழியில் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. இந்த உண்மையை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

          1959ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தி்ல் பேசும்போது    “ இந்தியாவின் மற்ற் மொழிகளைவிட இந்தி சிறந்தது என நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்தி மொழியில் இருப்பதைவிட சிறந்த இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகள் பல உண்டு. தமிழ், வங்காளி, மராட்டி போன்ற மொழிகளைவிட இந்தி உயர்ந்தது என்ற நிலையி்ல் நாம் இந்தியை அணுகவில்லை” எனக் கூறினார். -- ஆதாரம் -தென்செய்தி அக்.1-15,2014.

         இப்போது சொல்லுங்கள் “இந்தி, தொன்மையான, பெரும் பான்மையான, இலக்கிய வளம் செறிந்த மொழி , எனவே நடுவண் அரசின் ஆட்சிமொழி”  என்னும் கூற்று மெய்தானா? 

மூன்று நூல்கள் வெளியீட்டு விழா.

தி.பி.2045 கன்னித்திங்கள் பத்தொன்பதாம் நாள் (05.10.2014) ஞாயிறு மாலையும் முன்னிரவும் ஒரு மகத்தான பொழுதுகளாயின.... ஆம் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” “புதிய மரபுகள்“., ” கம்பன் தமிழும் கணினித் தமிழும்” ஆகிய மூன்று முத்தான நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வுதான் காரணம்.

ஒரு படைப்பாளி ஒரே நேரத்தில் இப்படி சமூக அக்கறை கொண்ட மூன்று நூல்களை வெளியிட எத்தனை முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும் என்பது  எனது முதல் வியப்பு. 

அடுத்து ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கிய வாதிகள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் இயக்க வாதிகள், சமூகச் சிந்தனையாளர்கள். படைப்பாளியின் ஆசிரியர்கள், அவரின் மாணவர்கள். கிராமங்களிலிருந்தும், அயல் மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் திரளாக வந்திருந்தது மேலும் வியப்பு.

அரங்கில் அமர இடமின்றி இறுதிவரை நின்றவாறே விழாவைச் சுவைத்த காட்சியும் இந்த நிகழ்வில்தான் கண்டேன்.

இப்படிப் பல வியப்புகள் இருந்தாலும் எனக்குள் எழுந்த பெருவியப்பு  அரசுப்பள்ளிகளின் மேன்மை, தமிழ்வழிக் கல்வி,  வணிகமயமாகும் கல்விக்கு எதிரான கருத்துகள் அடங்கிய நூல்களை சில  மெட்ரிக் கல்வி வள்ளல்கள்! கட்டுக் கட்டாய் வாங்கியதுதான்.

ஒருவேளை இந்த நூல்களைப் படித்தபின்னர் சமச்சீர் கல்விக்கும்,தமிழ் வழிக் கல்விக்கும்  அவர்களின் ஆதரவுகள் பெருகினாலும் நல்லதுதானே.

Thursday, September 18, 2014

புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு இயக்கம்.


18.09.2014 அன்று புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் காசநோய் தொடர் சிகிச்சை மேற்கொண்டுவரும் நோயர்களின் உரிமைகள் , நோய் பற்றிய விழிப்பபுணர்வு கருத்துகள்  பரப்புரை, நோய்த்தடுப்பும் பாதுகாப்பும் பற்றிய கருத்துகள் கலந்துரையாடப் பட்டது.

Thursday, August 14, 2014

புதுக்கோட்டை மணிமன்றப் பொன்விழா.

 10.08.2014 அன்று புதுக்கோட்டை எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கி்ல் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, மணிமன்றத்தின் பொன்விழாவினைச் சிறப்பாக நடத்தியது.

முற்பகல் விழாவிற்கு மன்றத்தின் தலைவர் திரு.பொ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்றார். மன்றத்தின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா வரவேற்புரையாற்றினார்.

பொன்விழா கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை ஆ.குமார் அவர்கள் அறிமுகம் செய்ய, மேனாள் தக்கார் இராம.வைரவன் அவர்கள் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
பொன்விழா மலரினை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை எஸ்.வி.எஸ். குழுமத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 10,12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற 34 அரசுப் பள்ளிகளை கவிஞர் ரெ.சு.காசிநாதன் அறிமுகம் செய்ய, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்ததாக 10,12 அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவச் செல்வங்களையும், கல்வி மாவட்டப் பள்ளி முதல் மாணவர்களையும் மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் மதிவாணன் அறிமுகம் செய்ய “முதல் மாணவர் விருது” களை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்  வழங்கினார்.

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதனையடுத்து கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் நடுவராக அமர்ந்த “இன்றைய மாணவர், இளைஞர்களிடையே தமிழுணர்வு குறைந்து வரக்காரணம் வீட்டுச் சூழலா? நாட்டுச்சூழலா? ”என்னும் மின்னல் பட்டிமன்றம் நடைபெற்றது.
வீட்டுச் சூழலே என புலவர் மகா.சுந்தர் அவர்களும், நாட்டுச்சூழலே என முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்களும் வாதிட்டனர். முற்பகல் நிகழ்வுகளை கவிஞர் மு.கீதா அவர்கள் தொகுத்து வழங்கினார்.




முற்பகல் நிகழ்வுகளில் கலந்து கொண்டோர்க்கு மன்றத்தின் துணைத்தலைவர் நா.செந்தில்பாண்டியன் அவர்கள் நன்றி கூறினார்.
விழாவிற்கு வருகை தந்தோர்க்கு சண்முக பழனியப்பன் அவர்கள் பகலுணவு வழங்கினார்.

மாலை முதல் நிகழ்வு சிதம்பர ஈசுவரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. அதனையடுத்து  பாவலர் பொன்.க வின் நல்லிசைப்பாடல்கள் குறுவட்டினை சண்முக பழனியப்பன் அவர்கள் வெளியிட,  அதன் முதல் வட்டினை கவிஞர் இராம.வெ.கதிரேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 அடுத்ததாக “கலைவளர்க்கும் புதுக்கோட்டை” என்னும் தலைப்பில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும், “நாடகக்கலையின் வலிவும் நலிவும்“ என்னும் தலைப்பில் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையிலும், குரு.தனசேகரன் அவர்கள் முன்னிலையிலும்  மணிச்சுடர் கலைக்கூடம் வழங்கிய பாவலர் பொன்.க வின் இயக்கத்தில் உருவான “மண்ணுக்கஞ்சி” என்னும் சமூகவியல் நாடகம் சிறப்பாக நடைபெற்றது.  மாலை நிகழ்வுகளை கவிஞர் செ.சுவாதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நாடகத்தில் பங்கேற்றக் கலைஞர்களை முனைவர் சு.மாதவன் அவர்கள் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிறைவாக நிறுவனர் நன்றி கூறினார். மாலை விழாப் பார்வையாளர்களுக்கு அறமனச்செம்மல் சீனு .சின்னப்பா அவர்களால் இனிப்பும் காரமும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையின் இலக்கிய அமைப்பினர், சமூக சேவை அமைப்பினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நாடகக்கலைச் சுவைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டப் பொன்விழா சிறப்பாக இனிதே நிறைவுற்றது.

Monday, April 28, 2014

வீதி கலை இலக்கிய அமைப்பு - ஏப்ரல்-14


           இன்று 20.04.2014 முற்பகல் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் “வீதி” கலை இலக்கிய அமைப்பின் ஏப்ரல் திங்கள் கூட்டம் முனைவர் நா. அருள்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

         கவிஞர் செ.சுவாதி அவர்கள் சந்தக் கவிதையில் வரவேற்புரை யாற்றினார்.
         பாவலர் பொன்.க. அவர்கள் கடந்த மார்ச்சு திங்கள் கூட்ட அறிக்கையினை வாசித்தார். 'மோசம்' என்னும் தலைப்பில முனைவர் வீ.கே.கஸதூரிநாதன் அவர்களும் 'தொலைதூரத்தை அறிதல்' என்னும் தலைப்பில் சுரேசு மான்யா அவர்களும் கவிதைகள் வழங்கினர்.

          2975 லும் என்னும் அறிவியல் நுட்ப கவிதை இழையோடிய காதல் சிறுகதையினை கவிஞர் இராசி.பன்னீர் செல்வன் அவர்கள் வழங்கினா்ர்.

         “பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” என்னும் தலைப்பில் ஊடறு- பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு நூல் பற்றி கவிஞர் மு.கீதா அவர்கள் நூல் திறனாய்வு செய்தார்.

        சிசிலியன் ஆங்கில புதினத்தின் திரைத் தழுவல்களாக வந்த “பீமா” “சுப்பிரமணியபுரம்“ ஆகிய திரைப்படங்களின் ஒப்பீட்டாய்வினை திரு கஸ்தூரி ரெங்கன் அவர்கள் வழங்கினார்.

        “தாழ்ந்த என் தாயகமே“ என்னும் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலினை திரு கும.திருப்பதி அவர்கள் அறிமுகம் செய்தார்.

         நிறைவுரையாற்றிய முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்“ வீதி” இலக்கிய அமைப்பின் வளர்ச்சிக்கான கருத்துகளை வகுத்தளித்தார். 

        திருமதி பிரியதர்சினி அவர்கள் நன்றி கூறினார்.
இத்திங்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்திருந்த கவிஞர்கள் கீதா, சுவாதி அவர்களின் பெருமுயற்சியால் புதுகையின் புகழ்மிக்க இலக்கிய ஆர்வலர்கள் நிறையப் பேர் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. 

Friday, April 11, 2014

பொன்மாரி கல்வியியல் கல்லூரியில்...

11.04.2014 அன்று பொம்மாடிமலை பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் “கற்பது கற்கண்டே“ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி மேலாண்மை இயக்குநர் அ.லெ.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையேற்க தமிழ்த்துறைப் பேராசிரியர் செல்லையாஅவர்கள் வரவேற்புரை வழங்கினார். பேரா.தயாகரன் அவர்கள் முன்னிலையேற்றார்

 தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத்தலைவர்  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு, தமிழ் ஆகிய பாடங்களை எளிய , செலவில்லாத கற்பித்தல் துணைக் கருவிகள் தயாரித்துக் கற்பித்தலை எவ்வாறு சுவைமிக்கதாக ஆக்குவது எனப் பயிற்சியளித்தார்.

தமிழில் சொற்படிக்கட்டு அமைத்தல்.  தொடரும் சொல்லாட்சி முறை. சுழல் அட்டைகள் ,சிந்தனைச் சிறுகதைகள். மனப்பாடப் பகுதிகளை இசையுடன் பாடிக் கற்பித்தல் முதலியவற்றில் பயிற்சி யளித்தார்.

கணக்கு கற்பித்தலில் மாணவர்களை ஈர்க்கத்தக்க  கூட்டல் கழித்தல். பெருக்கல், வகுத்தல் களில் எளிய வழிமுறைகள், வேடிக்கைக் கணக்குகள், புதிர்க் கணக்குகள் . வடிகங்கள், கனஉருவங்கள் ஆகியன வரைதலும் தயாரித்தலும் ஆகியன பற்றி செயல்முறை விளக்கமளித்தார்.

அறிவியலில் எளிய, செலவில்லாத, பயன்படுத்தி ஒதுக்கும் எழுதுபொருள்கள், குடுவைகள், உறிஞ்சு குழல்கள், பலூன்கள் ஆகியவற்றைக் கொண்டு. காற்று, வெப்பம், உராய்வு, பரப்பு் இ்ழுவி்சை , சடத்துவம், குவிய தூரம், வேதிமாற்றம், மின்னியல், ஒத்த இயக்க உறுப்புகளின் செயலாக்கம் ஆகிய பகுதிகளைச் சுவைபடக் கற்பிக்கும் உத்திகளை கல்வியியல் மாணவர்களுக்கு செய்முறை விளக்கங்களோடு பயிற்சியளித்தார்.

இரண்டு மணி நேரம் நடந்த இப்பயிற்சியில் அனைத்து கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்றமை சிறப்பு.
நிறைவில் கல்வியியல் கல்லூரி முதல்வர் பேரா.இராசலிங்கம் நன்றி கூறினார்.

Sunday, March 30, 2014

வீதி இலக்கியக் கூட்டம் மார்ச் -2014

           புதுக்கோட்டை “வீதி” இலக்கியக் கூட்டம் இன்று 30.03.2014 முற்பகல் புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையல் கலைக் கல்லூரியி்ல் சிறப்பாக நடைபெற்றது. 

           புலவர் மா.நாகூர்  அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்க, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் முன்னிலையேற்றார்.                           திரு குருநாதசுந்தரம் அவர்கள் வரவேற்றார்.

“கரிசல் தவம்” என்னும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய சிறுகதையினை திரு குருநாதசுந்தரம் படைத்து அளிக்க, அக்கதை பற்றிய கருத்துப் பகிர்வு நடந்தது. சிறுகதையின் சிறப்புகளும் முரண்களும் விவாதிக்கப்பட்டன..

“நான்சியும் நானும்” என்னும் திருமதி வள்ளிக்கண்ணு அவர்களின்   சிறுகதையும் வாசிக்கப்பட்டது.  
 படைப்பாளிகள் பாராட்டப் பட்டனர்.

 புலவர் மா.நாகூர்அவர்களின்  “ என்ன செய்வது?” எனும் கவிதையும், கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்களின் “எச்சில்”  எனும் கவிதையும் வீதி யில் பகரப்பட்டு பாராட்டப் பட்டது.

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் “இலவசங்கள் யாருக்காக?” என்னும் நிகழ்கால சமூகஅரசியல் தாக்கங்களோடு கூடிய கட்டுரையினை படைத்தளித்தார். பதிவு பாராட்டிற்குரியது

கவிஞர் மு.கீதா அவர்கள் அருந்ததிய மக்களின் அவலம் பற்றிய தனது கவிதையோடு , தான் படித்த மலர்வதியின் “தூப்புக்காரி” மற்றும் பாமாவின் “கருக்கு” ஆகிய புதினங்களையும் ஒப்பிட்டு விளிம்பு நிலை மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய கருத்தினைப் பதிவு செய்தார்.
ஒப்பீடு சிறப்பாக இருந்தது.

முனைவர் துரைக்குமரன்அவர்கள்  யோசி, ஏழைதாசன், புதுகைத் தென்றல், காக்கைச் சிறகினிலே, ஆனந்தசோதி, இனிய உதயம், ஆகிய திங்களிதழ்களையும், திண்ணை, பதிவுகள், அதிகாலை, வல்லினம், தங்கமீன், ஊடறு, கவிதைச் சங்கமம், முத்துக்கமலம் முதலிய இணைய இதழ்களையும் அறிமுகம் செய்தார்.

நிறைவாக அனைத்து நிரல்களிலும் கலந்து கொண்டவர்களுக்கும் , படைப்புகள் அளித்தவர்களுக்கும் முனைவர் துரைக்குமரன்அவர்கள்  நன்றி கூறினார்.

Monday, March 24, 2014

நேரு இளையோர் மையம்- தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

          21.03.2014 முதல் 24.03.2014 வரை நான்கு நாள்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளகாகத்தில் நடைபெற்ற நேரு இளையோர் மைய  தென்மாநிலங்களின் தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் மூன்றாம் நாள் 23.03.2014 அன்று பாவலர்  பொன்.கருப்பையா அவர்களின் மணிச்சுடர் கலைக் கூடம் சார்பாக “தமிழக நாட்டுப்புறக் கலைகளும் பண்பாடும்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

                     ஓய்வு பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

                 முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

                  கருநாடக மாநிலம் தும்கூர், ஆந்திரமாநிலம் விசாகப் பட்டிணம், பாண்டிச்சேரி காரைக்கால், கேரளமாநிலம் பாலக்காடு, தமிழ்நாடு திருச்சி,புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 120 நேரு இளையோர் மைய இளைஞர்கள் முகாமில் பயிற்சி பெற வந்திருந்தனர்.

                 தமிழக நாட்டுப் புற நிகழ்த்துக் கலைகளான கும்மி, கோலாட்டம். கரகம். காவடியாட்டம். ஒயில், துகிலாட்டம், ஆகிய வற்றுள் பொதிந்திருக்கும் மக்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியன பற்றிய தெம்மாங்குப் பாடல்களைப் பாவலர் பொன்.கருப்பையா மற்றும் சிதம்பர ஈசுவரன் ஆகியோர்,திருநாளுர் சண்முகம் தவில் இசையுடன் பாடியும் ஆடியும் பயிற்சியளித்தனர்.

                தொழில்முறை, தொழுமுறைப் பாடல்களின் கருத்தினை ஆங்கிலத்தில் பொன்.க விளக்கியதும் சிதம்பர ஈசுவரன் பெண் குரலில் பாடியதும் கருத்தரங்கப் பயிற்சியாளர்களை மிகவும் ஈர்த்தது.

             ஒவ்வொரு மக்களிசைப் பாடலின்போதும்  முகமையர் மேடையேறி ஆடியது அவர்களின் ஆர்வ மிகுதியை வெளிப்படுத்தியது.

            தேசிய ஒருமைப்பாடு, இளைஞர் பண்பாடு. மனிதநேயம், வாழ்வியல் மேன்மை குறித்த பாடல்களை முகமையர் மிகுந்த ஈடுபாட்டோடு சுவைத்துக் கற்றனர்.

Tuesday, March 11, 2014

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி பயிற்சி முகாம்.

              புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்  தமிழாசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டை இராணியார் உயர்நிலைப் பள்ளியி்ல் நடைபெற்றது.

             இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக முனைவர் துரைக்குமரன் மற்றும் குருநாதசுந்தரம் ஆகியோர் செயல்பட்டனர். வல்லுநராக பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.

            நெருங்கி வரும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் தமிழ்த்தேர்வில்  அதிக மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்கத் தமிழாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பற்றி பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

            தமிழ் முதற்றாளில் எளிமையாக அதிக மதிப்பெண் எடுக்க மாணவர்களை ஆயத்தம் செய்யும் வழிமுறைகளை கருத்தாளர் தமிழ்த்திரு குருநாத சுந்தரம் அவர்கள் விளக்கினார். 

          தமிழ் இரண்டாம் தாள் வினாக்களுக்கு எவ்வாறு விடையளிப்பது, அதிக மதிப்பெண் பெறவைப்பது பற்றி கருத்தாளர் முனைவர்  துரைக்குமரன் எளிமையாக விளக்கினார்.

         தேர்வுக் காலத்தில்  தமிழாசிரியர்கள் மாணவர்களைக் கையாள வேண்டிய வழி முறைகள் , பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி    வல்லுநர் பாவலர் பொன்.கருப்பையா 25 கருத்துருக்களை நெறிமுறைகளாக பயில்வோர்க்கு வழங்கினார்.

         இப்பயிற்சியில் மாணவர்கள் தேர்வு பயமின்றி, பதற்றப்படாமல், நம்மால் முடியும் என்னும் நம்பிக்கையோடு முனைந்து படித்தால் முதலிடத்தைப் பெறலாம் என்பதை இசைப்பாடலாக பாவலர் பொன்.க . வழங்கினார்.

                          நம்பிக்கையோடு முயல்க... நாளை உனது.

நம்பிக்கையின்    வழியில்தானே      முயற்சி     பெருகிடும்
நெம்பித்தள்ளும் முயற்சியிலுந்தன் வெற்றி   அமைந்திடும்
படிக்கப் படிக்கத்   தானேபாடம்       எளிதில்    புரிந்திடும் - நீ
பயிற்சிசெய்யச்  செய்யஎதுவும்      மனதில்    பதிந்திடும் -- நம்பிக்கையின்

பின்தேங்கி    இருப்பவர்கண்டு       நிறைவு   கொள்வதோ?
முன்னோக்கிப் பாய்ந்துவெற்றிக் கனியை  வெல்லவா
முந்திநிற்கும் மாணவர்கண்டு      சங்கடம்    எதுக்கு? -அவரை
முந்தநீயும்  முனைந்துவிட்டால் முதலிடம்   உனக்கு  -- நம்பிக்கையின்

நாளைநாளை   என்றுபடிக்க    நாளைக்   கடத்தலோ
நாலுநாளில்     தேர்வுக்குரிய    பாடம்       சுமக்கவோ?
வேளைதோறும் பசிக்குஉணவை வயிறு  மறுக்குமோ?  -தினம்
காலைமாலைக்  கற்கஇறுதித்   தேர்வு   கசக்குமோ?  -- நம்பிக்கையின்

தேர்வுக்காலம்    நெருங்கும்போது    பதற்றம்  கூடாது
தேர்ந்தபகுதி      திரும்பப்படிக்கக்     கலக்கம்  வாராது
தேவையற்ற    கேளிக்கைவிருந்து   நாடல்     ஆகாது- நீ
தெளிந்தமன     மகிழ்ச்சியோடு    தேர்வினை  நாடு     -- நம்பிக்கையின்

வேண்டுதல்கள்   மட்டுமேஉன்னை   உயர்த்தி   விடாது
தூண்டுதல்கள்    இல்லாவிளக்கோ   சுடரைத்   தராது
தோண்டுமளவே ஊற்றும்நீரைத்  தரும்  தவறாது - நீ
ஆண்டுமுழுதும்  கற்றதைமீட்கப்   பயமும்   வராது.  -- நம்பிக்கையின்

கடைசிநேரப்     பரபரப்பில்உன்   கவனம்     சிதறுமே
காலப்பகுப்பில்  விடைமுழுதும்  எழுத        முடியுமே 
கருத்துகளைத்  தெளிவா்ய்எழுதும்  பாங்கு போதுமே - உன்னைக்
களிப்புடனே   முதலிடத்தில்  கொண்டு    சேர்க்குமே. -- நம்பிக்கையின் 

Sunday, March 9, 2014

தமிழகத் தமிழாசிரியர் கழக முப்பெரும் விழாவில்...

                                தி.பி.2045 கும்பம் 25 ( 09.03.2014) ஞாயிறன்று புதுக்கோட்டை எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா அதன் மாவ்ட்டத் தலைவர் திருமிகு கு.ம.திருப்பதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

                பாவலர் பொன்.க அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து ,கழக மாவட்டச் செயலாளர் திருமிகு சி.குருநாதசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

               கழகத்தின் மேனாள் மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையேற்றனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார் அவர் தனது உரையில் தமிழ்மொழியின் சிறப்புகளை  விளக்கி, தாய்மொழியாம் தமிழ்மொழிவழிச் சிந்திப்பவரே வாழ்க்கையின் மேன்மைகளை அடைவர் என்பதை வலியுறுத்தினார்.

 தொடக்க உரையினைத் தொடர்ந்து கழகத் தமிழ்த்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற  660 மாணவர்களுக்குக் கேடயங்களும், பாவேந்தர், பாரதியார் நூல்களும் பரிசுகளாக வழங்கப்பெற்றன.

             பரிசுகளை  முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வழங்கினார். அவர் தனது பாராட்டுரையி்ல்  அதிகம் படிப்பறி வில்லாத பெற்றோரின் தமிழ்வழிப் பயிலும் குழந்தைகளே தமிழில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளமையினைத் தன்னையேச் சான்றுகாட்டி எந்த மொழியினைக்  கற்றாலும் தமிழ்மொழியில் பயிலுவோரே வாழ்க்கைப் பாடத்தை முழுமையாக அறிந்து கொள்பவர்களாக உள்ளனர் என்பதை மாணவர் மனங்கொள்ள எடுத்துரைத்தார்.

        அவரைத் தொடர்ந்து சுப.காந்திநாதன், முத்தமிழ்ப் பாசறை திருமிகு நெ.இரா.சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

       அதனையடுத்து  தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வேர்ச்சொல் ஆய்வறிஞர் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்னும் தலைப்பில்  விழாப் பேருரையாற்றினார். அனைத்து மொழிகளும் தமிழ்மொழியின் வேர்ச் சொல்லில் இருந்து பகிர்ந்து கொண்ட சொற்களைச் சான்றுகாட்டி தமிழ்வழிக் கற்றலே  எதிர்கால இளைய தலைமுறையினை உலக அரங்கில் உயர்த்தும் என்பதைப் பதிவு செய்தார்.

            அவரைத் தொடர்ந்து  தோழமைச் சங்களின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு ரெ.ரெங்கராசு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அமைப்புச் செயலாளர் திருமிகு ஆ.மணிகண்டன் , பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் திருமிகு மு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      விழாவின் முன் நிகழ்வாக, பாவலர் பொன்.கருப்பையா, செல்வி சுபாசினி ஆகியோரின்  தமிழிசைப் பாடல்கள்  இசைநிகழ்ச்சி நடைபெற்றது

            உணவு இடைவேளைக்குப் பின்னர் பள்ளி அளவில் தமிழ்ப் பாடத்தில் உயர்நிலை எய்திய மாணவர்களுக்கு வலுஊட்டல் பயிற்சியினை முனைவர் சு.துரைக்குமரன், முனைவர் பெரி.சே.இளங்கோவன் ஆகியோர் அளித்தனர்.

           அடுத்ததாக பணிஓய்வு பெற்ற கழகச் செம்மல்கள், அரங்கில் சிறப்பிக்கப் பட்டனர்.அவர்களை மாநில மதிப்பியல் தலைவர் புலவர் சந்தானமூர்த்தி அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

         தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற கழகச் செம்மல்களுக்குப் பாராட்டு செய்யப் பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு இளங்கோவடிவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

          முப்பெரும் விழாவினை அரங்கு நிறைந்த ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும்  சுவைத்து மகிழ்ந்தனர். 

          விழா நிகழ்வினை மாநில செயற்குழு உறுப்பினர் திரு மகா.சுந்தர் அழகுற தொகுத்து வழங்கினார்.

        கழக மாவட்டப் பொருளாளர் திருமிகு சந்தான ஆரோக்கியநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார். 

         விழா ஏற்பாடுகளை கழக மாவட்ட, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Saturday, March 8, 2014

நினைவஞ்சலிக் கூட்டம்


புதுக்கோட்டை திருக்குறள் தலைவராக இருந்து கடந்த 05.02.2014 அன்று இயற்கை எய்திய திரு பா.இராமையா அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் 08.03.2014 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடந்தது.

திருக்குறள் கழகமும், புதுக்கோட்டை மூத்த குடிமக்கள் அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச்செம்மல் திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையேற்று மறைந்த திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா அவர்களின் திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்தார்.

தமிழிசைச் சங்கத் தலைவர் திருமிகு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் பா.இராமையா அவர்களின் சிறப்புகளைத் தனது  அறிமுக உரையில்  கூறினார் .

காலமான பா.இராமையா அவர்கள் தனது இல்லத்தின் உப்பரிகைப் பகுதியினைத் தமிழ்ப்பணிக்காக பாலா தமிழரங்கம் எனப் பெயரிட்டு தொடர்ந்து  திங்கள் தோறும் அவ்வரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவுகள் நடத்தியமை, அவ்வரங்கம் முழுமையும் போற்றத்தகு தமிழறிஞர்களின் திருவுருவப் படங்கள் பொதிந்துள்ளமை, தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழிசைச் சங்கம், மூத்தகுடிமக்கள் அமைப்பு ஆகியவற்றை நிறுவியமை, ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டுவிழாக்களை தமிழ் மணம்கமழ நடத்தியமை, திருக்குறள் மாநாடு நடத்தியமை, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி திருச்சியோடு இணைக்கப்பட்டதைக் கண்டித்து இயக்கம் நடத்தியமை, தமிழ் செம்மொழியாக்கப்பட நடைப்பயணம் மேற்கொண்டமை.  

2010ல் சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தோடு இணைந்து சங்க இலக்கியப் பயிலரங்கத்தினை பத்துநாள்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தியமை, திருக்குறளின் தேர்ந்த 330 திருக்குறள்களுக்கு ஆங்கில உரை எழுதி நூலாக வெளியிட்டமை, அறமும் புறமும் என்னும் நூல் வெளியிட்டமை, புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைப் புரந்தமை, அனைத்திற்கும் மேலாக புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே திருவள்ளுவர் சிலையினை அமைப்புக்குழுத் தலைவராக இருந்து நிறுவியமை ஆகிய அன்னாரது சிறப்புகளை நிகழ்விற்கு வருகை தந்திருந்த புதுக்கோட்டையின் இலக்கிய சமூக அமைப்பினர் நினைவு கூர்ந்து அஞ்சலி உரையாற்றினர்.

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் திருமிகு.ரெ.இராமையா, இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு இராமுக்கண்ணு, உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டனை நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, புதுக்கோட்டை வர்த்தகக்கழக கவுரவத் தலைவர் திருமிகு இரா.சேவியர், உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு சண்முக பழனியப்பன், திலகவதியார் திருவருள் ஆதினத் தலைவர் திருமிகு தயானந்த சந்திரசேகரன்,  புலவர் துரை.மதிவாணன், ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால்செட்டியார், திருக்குறள் கழகப் பொதுச் செயலாளர் திருமிகு வே.இராமதாசு, மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா, சர்வசித் அறக்கட்டளையின் தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு,  இலக்கியப் பேச்சாளர்கள் தஞ்சை வி.விடுதலை வேந்தன், செயசீலன், மதுரை பத்திரிகையாளர் திருமிகு தி.அரப்பா,  முனைவர் தா.மணி, முனைவர் சு.மாதவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், வரலாற்றுப் பேரவை முனைவர் இராசாமுகம்மது, திருவள்ளுவர் மன்றத்தலைவர் திருமிகு மா.கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் இலக்கிய மன்றத் தலைவர் திருமிகு முகேசு , திரு ஆரோக்கியசாமி, தொழிலதிபர்கள்  திரு மைக்கேல்  ஏ.வி.எம் .நல்லையா.நட்புறவு இயக்கத் தலைவர் திரு முத்துச்சாமி ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்.

புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலிகளைச் செலுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்குறள் கழக இணைச் செயலாளர் திரு மா.மீனாட்சி சுந்தரம், பாவலர் பொன்.க ஆகியோர் செய்திருந்தனர். திருக்குறள் கழகப் பொருளாளர் திருமிகு கோ.கோவிந்தசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Wednesday, March 5, 2014

சேவைக்குப் பாராட்டு

புதுக்கோட்டை மத்திய சுழற்கழகமும்.புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகமும் இணைந்து 04.03.2014 அன்று சுழற்கழக அரங்கத்தில் ஆளுநரின் அலுவல் சார்ந்த வருகைக் கூட்டத்தினை நடத்தியது.

                 அந்நிகழ்வில் இரண்டு அமைப்புகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

                பல துறைகளிலும் செயற்கரிய சேவையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

                புதுக்கோட்டையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதரவற்று இறந்த, கோரப்படாத 149 உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து பெற்று முறையாக நல்லடக்கம் செய்தும், 

              அகவை முதிர்ந்த முதியோர்களுக்கு இல்லங்களிலேயே சென்று மருத்துவ உதவிகள் செய்தும், 

               நடக்க இயலாத நோய்வாய்ப்பட்டவர்களை ஆம்புலன்சு வண்டி மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் வரும் சர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளை சிறந்த சேவை நிறுவனமாகப் பாராட்டப் பட்டது

              அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மு.சரவணன், தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு, செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, அறங்காவலர் திரு.அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் சுழற்கழக ஆளுநர்  ரொட்டேரியன் கோபால் அவர்கள் வழங்கிய அவ்விருதினை பலத்த கையொலிகளுக்கிடையே பெற்றனர். 

Monday, March 3, 2014

இளங்கோவடிகள் இலக்கிய மன்ற இரண்டாமாண்டு விழா.

புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் இரண்டாமாண்டு சிலப்பதிகாரவிழா தி.பி.2045 கும்பம் 17,18,தேதிகளில்         ( 01.03.2014-02.03.2014) புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

கும்பம் கஎ ஆம் நாள் (1.03.2014 ) காரிக்கிழமை ( சனிக்கிழமை ) மாலை கலைவளர்மணி எம்.பி.எஸ் கருணாகரன் குழுவினரின் மங்கல இசையோடு விழாத் தொடங்கியது. செல்வி சு.சுபாசினி திங்களைப் போற்றுதும் வாழ்த்துப்பா இசைக்க, இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் தலைமையேற்க. கம்பன் கழகத் தலைவர் தமிழ்த்திரு ரெ.இராமையா, உலகத்திருக்குறள் கழக மாவட்டத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திருமதியர் மயில்சுந்தரி வைரமாணிக்கம், தருமாம்பாள் மலையப்பன், சத்தியபாமா இராமுக்கண்ணு, வள்ளியம்மைசுப்பிரமணியன், திருமதி சுந்தரராசன் ஆகியோர் மங்கலச்சுடரேற்றினர்.

 மன்றத்தின் துணைத் தலைவர் தமிழ்த்திரு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நாவுக்கரசர் முனைவர் சோ.சத்தியசீலன்  பற்றிய அறிமுக உரையினை புலவர் மா.நாகூர்அவர்கள் அளித்தார். முனைவர் சத்தியசீலன் அவர்கள் தனது தொடக்க உரையில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் சீர்மைகளைச் சாறுபிழிந்து சுவைஞர்களுக்கு வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலப் பொருளாளர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையிலும், மெ.இராமச்சந்திரன் செட்டியார்  அவர்கள் முன்னிலையிலும்  புதுக்கோட்டை சாய் நாட்டியாலயா வின் “சிலப்பதிகார நாட்டிய நாடகம்” நடைபெற்றது.   நாட்டிய நாடகம் மூலம் சிலம்பின் சிறந்த காட்சிகளை பார்வையாளர்களுக்குப் பருகத் தந்த நாட்டியக் குழுவினரைப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் பாராட்டிப் புகழ்ந்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.புலவர் கு.ம.திருப்பதி அவர்கள் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க, திருமிகு கு.சுப்பிரமணியன் அவர்கள்  நன்றியுரையாற்றினார்.

இரண்டாம் நாள் கும்பம் கஅ (18) 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் தலைமையில் “சிலப்பதிகாரச் சிறப்பியல்புகள்” உரையரங்கம் நடைபெற்றது. 

செந்தூரான் கல்விக்குழுமத் தலைவர் தமிழ்த்திரு இராம.வைரவன், மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா ஆகியோர் முன்னிலையேற்றனர்.இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு மு.இராமுக்கண்ணு அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிலம்பொலி செல்லப்பனார் பற்றிய அறிமுகத்தை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் துணைத் தலைவர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் நிகழ்த்தினார். 

 இளங்கோவடிகளுக்கு நாடெங்கும் மன்றங்கள் பல்க வேண்டும், சிலப்பதிகாரக் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டும் எனத் தனது கருத்துரையில் சிலம்பொலியார் கூறினார். விரைவில் புதுக்கோட்டையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைந்தது போல இளங்கோவடிகளுக்கும் சிலை அமைக்கப்படும் என்றும், கண்ணகிக்குக் கோட்டம் ஒன்று அமைக்கப் படும் என்றும் இளங்கோவடிகள் மன்றத் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் கூறினார்.

தொடர்ந்து முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் “ சிலம்பின் எச்சரிக்கை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.உலகத் திருக்குறள் பேரவையின் மகளிரணித் தலைவர் திருமதி சந்திரா ரவீந்திரன் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்தளிக்க, புலவர் மகா.சுந்தர் அவர்களின் நன்றியுரையோடு காலை நிகழ்வுகள் நிறைவுற்றன.

மாலை புதுகை இசைப்பள்ளி தந்திக்கருவி வித்தகர் திருமிகு அம்பிகாபிரசாத் அவர்கள் வயலின் இசைக்க, கலைமுதுமணி புதுகை கே.இராசா, திருச்சி கோபு நாகராசன் ஆகியோர் மிருதங்கம் இசைக்க சிறப்பானதொரு இசையரங்கம் நடைபெற்றது. 

நிகழ்விற்கு ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால் செட்டியார் அவர்கள் முன்னிலையேற்றார்.

அந்நிகழ்வினையடுத்து வெங்கடேசுவரா கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஆர்.எம்.வி.கதிரேசன் அவர்கள் தலைமையிலும் குழந்தைகள்நல மருத்துவர் ச.இராமதாசு, எம்.ஆர்.எம். கல்விநிறுவனத் தலைவர் திருமிகு எம்.ஆர்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும்  “ நெஞ்சு அணி” என்னும் தலைப்பில் வாணியம்பாடி கவியருவி முனைவர் தி.மு.அப்துல்காதர் அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.

 இன்றையச் சமூகத்திற்கு சிலப்பதிகாரம் காட்டும் நெறிகள் எவ்வாறு நெஞ்சணிகளாக அமைந்துள்ளன என்பதை அரங்கு நிறைந்தோர் ஆழக்கொள்ளும் தகைமையில் அவரது உரைவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது..வரவேற்புரையினை முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் வழங்க, நன்றியுரையினை சிலட்டூர் இராமலிங்கம் அவர்கள் வழங்கினார்

விழாவின் நிறைவு நிகழ்வாக புதுக்கோட்டை வர்த்தகர் கழகத்தின் கவுரவத்  தலைவர் திருமிகு ஆர் சேவியர், பொன்மாரி கல்வி நிறுவனங்களின்  அறங்காவலர் திருமிகு அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் “சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஊழ்வினையா? ஆள்வினையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

ஊழ்வினையே என்னும அணியில் நகைச்சுவை அருவி இரா.மாது, கற்பனைக் களஞ்சிய நங்கை ரேணுகாதேவி ஆகியோரும், ஆள்வினையே என்னும்அணியில் சன்மார்க்க சீலர ஜோதி இராமலிங்கம் இசைப் பேரரசி ஜோதிலெட்சுமி ஆகியோரும் வாதிட்டனர்.

அமுதசுரபி இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் முனைவர் திருப்புர் குமரன் அவர்கள் நடுவராக இருந்து சீர்மை செய்தார். இருதரப்பு வாதங்களையும் ஒப்புநோக்கி “ சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஆள்வினையைவிட ஊழ்வினையே” எனத் தீர்ப்பளித்தார். பட்டிமன்றக் குழுவினரையும் முன்னிலையாளர்களையும் பார்வையாளர்களையும் திருமிகு  கோ.தனபதி அவர்கள் வரவேற்க, திருமதி ஜானகிகணேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியினை பாவலர் பொன். கருப்பையா சீராகத் தொகுத்தளித்தார்.  

இரண்டு நாள் நிகழ்வுகளுக்கும் புதுக்கோட்டையின் பல்வேறு சமூக, கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தமிழ்ச் சான்றோர்களும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தது பெருமைக்குரியதாக இருந்தது.

விழாவிற்கு வருகை தந்தோரில் பலர் இளங்கோவடிகள் மன்றத்தில் தங்களை வாழ்நாள் உறுப்பினராக, ஆண்டு உறுப்பினராக இணைத்துக் கொண்டது விழாக்குழுவினருக்குப் பெருமையாக அமைந்தது.



Wednesday, February 26, 2014

சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள்.

பிப்பிரவரி 28 தேசிய அறிவியல் நாளையொட்டி 26.02.2014 அன்று புதுக்கோட்டை சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை வளர என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையும் எளிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் முறைகளும் பற்றிய செயல் விளக்கங்கள் அளித்தார்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்று ஆசிரியர்கள் செயல்வழிக் கல்வியினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக்
கூறினார்.

கருத்துரையாற்றிய பாவலர் பொன்.க. பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் புதிய உத்திகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால்  பள்ளிவயதில் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.

செயல்வழி கற்பித்தல் மாணவர்களைத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடச் செய்யும். ஒவ்வொரு  ஆசிரியரும் கற்பித்தல் துணைக் கருவிகளைப் பயன்படுத்துதலும்  மாணவர்களை  செய்து பார்க்க வாய்ப்பளிப்பதும்  அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.

அறிவியல் மனப்பான்மை வளர, ஆக்கப் புர்வமான செயல்கள் பெருகும். அறிவியலை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் நாட்டின் சமூக, பொருளாதார நிலை மேம்படும் என்பதை வலியுறுத்திய அவர் செலவில்லாத, குறைந்த செலவிலான கற்பித்தல் துணைக்கருவிகளைத் தயாரிக்கும் முறைகளைக் கல்வியியல் மாணவர்களுக்கு செயல்விளக்கமாகச் செய்து காட்டினார்.

ஏறத்தாழ மூன்றுமணிநேரம் நடந்த இக்கருத்தரங்கில்  பேராசிரியர்களும் கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுத் தாங்களாக முன்வந்து சில ஆய்வுகளைச் செய்தமை பாராட்டிற்குரியதாக இருந்தது..

Thursday, February 6, 2014

திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.

புதுக்கோட்டை அண்ணலார் பு.அ. சுப்பிரமணியனார் அவர்களால் தொடங்கப்பட்ட திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்த திரு.பா.இராமையா அவர்கள் 06.02.2014 அன்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி என் போன்ற தமிழ் உணர்வாளர்களையும் சமூகச் சிந்தனையாளர்களையும் பெரிதும் பாதித்து விட்டது.

 இந்தியன் வங்கி மேலாளர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .  புதுக்கோட்டை வடக்கு அரச வீதியில் தனது வசிப்பிட உப்பரிகையில் “பாலா தமிழரங்கு“ என ஒரு அரங்கினை அமைத்து, கடந்த 1999லிருந்து திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்து  திங்கள் கூட்டங்களை தொடர்ந்து நடத்தித்  தமிழ்ச்சான்றோர்களை அழைத்து கருத்துரையாற்றச் செய்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்.

அதே அரங்கில் மூத்த குடிமக்கள் அமைப்பினையும் நிறுவி, தமிழிசைச் சங்கத்தினையும் இயக்கி வந்தவர்.

அவ்வரங்கு முழுமையும் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்த  சான்றோர்களின் ஒளிப்படங்களைப் பரப்பி மிளிரச் செய்தவர்.

கடந்த 2010 திசம்பர்த் திங்களில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு திருக்குறள் கழகத்தையும் இணைத்து பத்து நாள்கள் “சங்க இலக்கியப் பயிலரங்கத்” தினை கலை இலக்கியச் சுவையோடு நடத்தியவர்.

அன்னாரின் அருமுயற்சியால் புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே உருவாகி  உயர்ந்து நிற்கும் “ திருவள்ளுவர் சிலை “ அவரைக் காலமெல்லாம் நினைக்கத் தூண்டும் ..

ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டு விழாவினை கலை இலக்கிய நிகழ்வுகளோடு நடத்தி சிறந்த தமிழறிஞர்களுக்குக் “ குறள்நெறிச் செம்மல்“ விருதுகளை வழங்கி  வந்த அவர் கடந்த  23.11.2013 ல் திருக்குறள் கழகத்தின்        59 ஆம்  ஆண்டுவிழாவினை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை வைத்து, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பொ.திராவிடமணி அவர்களுக்கு “அண்ணலார்-சி.இலக்குவனார் குறள்நெறிச் செம்மல் விருதினை“ வழங்கிச் சிறப்பித்தார்.

திருக்குறளின் பால் தீவிர ஆர்வமுடைய இவர் “ திருக்குறள் ஆங்கில உரை விளக்கம்“ மற்றும் “ அறமும் புறமும்” ஆகிய இரு நூல்களைப் படைத்து அவற்றை சென்னை ஊடகவியலார் திரு.க.அய்யநாதன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்.

 தமிழியச் சிந்தனையும் பகுத்தறிவுச் சீர்மையும் கொண்டு  தன் வாழ்நாள் முழுவதும் தமிழின மேம்பாட்டிற்காக உழைத்த அன்னாரது மறைவு புதுக்கோட்டை இலக்கிய வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

Saturday, February 1, 2014

நாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.

01.02.2014 அன்று புதுக்கோட்டை அழகம்மாள் புரத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு “முதலுதவி பற்றிய விழிப்புணர்வு” கருத்துரையினைச் செயல் விளக்கத்தோடு முகமையர்க்கு நடத்தினார்.


இயற்கைச் சீற்றங்கள், பேரிடர், வருமுன்னர் காத்தல், பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டியன, விபத்து, பேரிடர்களில் பாதிக்கப் பட்டோர்க்குச் செய்ய வேண்டிய முதலுதவி ஆகியன பற்றி நடப்பியல் சான்றுகளுடன் விளக்கமளிக்கப் பட்டது.

மூர்ச்சையடைந்தவரை  இயல்பு நிலைக்குக் கொணர்தல், சி.பி.ஆர் என்னும் மார்பழுத்த சிகிச்சை , செயற்கைச் சுவாசமளித்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழிமுறைகள்,  எலும்பு முறிவுகளின் வகைகளும் அவற்றிற்கான கட்டுகளும், முதலுதவியில் பயன்படும் முடிச்சுகள், தீக்காயம் பட்டோர்க்கான முதலுதவி, நீரில் மூழ்கியவரை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப்பட்டோரை தூக்கிச் செல்லும் முறைகள், நச்சுக்கடிகள், மின்விபத்துகளுக்கான முதலுதவி முதலானவை செயல் விளக்கங்களோடு மாணவியர்க்கு பயிற்றுவிக்கப் பட்டது.

கதை, பாடல், நகைச்சுவையோடான இந்நிகழ்வில் முகமையர் சிறிதும் சோர்வின்றி ஈடுபாட்டுடன் பங்கேற்றமை சிறப்பாக இருந்தது.

Friday, January 31, 2014

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை விழிப்புணர்வு பரப்புரை

30.01.2014 அன்று புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் , தேசிய விவசாயம்  மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியுடன் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும வளர்ச்சி ஆய்வு மையம் இணைந்து வங்கிச் சேவைகள் குறித்த கிராம அளவிலான விழிப்புணர்வு பரப்புரை முகாமினை நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.மனோகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர்                                           திரு துரை.குமரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நபார்டு வங்கி  மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. எஸ்.சோமசுந்தரம் அவர்கள் கருத்துரையாற்றினார்.

வங்கிச் சேவைகள் குறித்த பாடல்களுடன் பாவலர் பொன்.கருப்பையா மக்களிடையே பரப்புரை நிகழ்த்தினார.

ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் திரு.எஸ்.சந்துரு, செஸ்டாட்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு எல்.பிரபாகரன், இந்தியன் வங்கி மேலாளர் திரு.சி.வி.என்.ஜனார்தன், இந்தியன் ஓவர்சீஸ வங்கி மேலாளர் திரு ஆர். இராமநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 



செஸ்டாட்ஸ் மேலாளர் திரு வீரமுத்து அவர்கள் நன்றியுரையாற்றினார்.
பகுதி மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கினார்.

Monday, January 27, 2014

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை.

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதுக்கோட்டை அறிவியல் , தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியுடன் இணைந்து கடந்த இருவாரங்களாகப் புதுக்கோட்டையின் பல சிற்றூர்களில் முகாம்களை நடத்திவருகிறது.
அவ்வகையில் இன்று (27.01.2014) ஆவுடையார் கோயி்ல் ஒன்றியம் துஞ்சனூர் கிராமத்தில் விழிப்புணர்வு பரப்புரை முகாம் நடைபெற்றது.
கரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவி திருமதி இராஜேசுவரி தலைமையேற்றார்.
ஆவுடையார் கோயில் அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஜெயந்தி வரவேற்புரையாற்றினார்.
செஸ்டாட்ஸ் மேலாளர் திரு மா.வீரமுத்து  வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.
அவர் தனது உரையில் கிராமப்புற வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, கிராமப்புற மக்கள் வங்கிகளில் கணக்குத் தொடங்கவேண்டியதன் அவசியம், சிக்கன வாழ்க்கையும் சேமிப்பும், வங்கிகளில் வரவு-செலவு செய்தல், வங்கித் தொடர்பாளர்களை அணுகுதலும் அவரது சேவையினை பயன்படுத்தலும், சிறுதொழில், வேளாண்தொழில், மேற்படிப்பு, கட்டுமானப் பணிகள் முதலானவற்றிற்கு வங்கிகள் மூலம் கடன் பெறும் வழிமுறைகள், வங்கிக்கடன்களைத் திரும்பக் கட்டுதலும் தொழில் மேம்பாட்டிற்கு புதியகடன்கள் பெறுதலும் முதலான கருத்துகளைக் கதை, பாடல் மூலம் நகைச்சுவையாக மக்களுக்கு விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து கரூர் கனரா வங்கி மேலாளர் திரு கார்த்திக் தனது கிளை வங்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கியுள்ள கடன்கள், மக்கள் சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கலந்துரையாடல் மூலம் விளக்கினார்.

சிறப்புரையாற்றிய  நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு சோமசுந்தரம்  கிராமத்து மகளிர் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்

நிறைவாக அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் திரு ஆ.செல்வராசு நன்றி கூறினார்.
இம்முகாமில் வங்கிக் கடன் மூலம் எத்தகைய தொழில்களைத் தொடங்கலாம் என்பது பற்றி பாவலர் பொன்.க எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

சிறுதொழில் குறுதொழில் சுயமாகத் தொடங்கிட
                                                         நாடுங்கள் வங்கிகளை
செய்கின்ற தொழிலினில் வருமானம் பெருக்கிட
                                                      செயல்திட்டம் போடுங்களே
பதினெட்டு வயசுக்கு மேலுள்ள யாவரும்
                                                        பயன்பெறும் வகையினிலே
கடன்தந்து உதவிட வங்கிகள் இருக்குது 
                                                        உடன்அதை நாடுங்களே

சுயதொழில் தொடங்கிடுங்கள் - அதன்வழி
சோர்வின்றி உயர்ந்திடுங்கள்                                           -- சிறுதொழில்


கைத்தறி நெசவையும் கம்மியர் தொழிலையும்                                                                                     கடன்பெற்றுத் தொடங்கிடலாம்
தையல்கடை வைக்கத் தச்சுத் தொழில்செய்யத்                                                                                                            தடையின்றிக் கடன்பெறலாம்
முறுக்குத் தொழில்செஞ்சும் முன்னேற வழியுண்டு  
                                                   முனைந்துமே இறங்கிடுங்கள்
மூங்கில்பாய் முடைஞ்சு முறுக்கிக் கயிறுசெய்ய
                                                        முறையாகக் கடன்பெற்லாம்
                                                                                                      -- சிறுதொழில்

அனுபவம் இருக்கின்றத் தொழிலினைத் தொடங்கிட
                                                        ஆர்வமாய் முன்வருக
அதற்கான அறிவினைப் பெறவுமே அடிப்படைப்        
                                                         பயிற்சியை மேற்கொள்ளுக
இருக்கின்ற பகுதியில் சுயதொழில்மேற்கொள்ள 
                                                         இடம்பொருள் காட்டிடுக
ஈட்டிடும் வருவாயில் கடன்கட்டிச் சேமித்து
                                                         ஏற்றமாய் வாழ்ந்திடுக.
                                                                                                     -- சிறுதொழில்

Thursday, January 23, 2014

புகையில்லாப் போகி - துளிர் இல்ல நிகழ்வு

புதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் 13.01.2014 அன்று துளிர் இல்ல மாணவர்கள் “ புகையில்லாப் போகி ” நிகழ்வினை ஊர்வலம் மற்றும் ஓவியப் போட்டிகளுடன் கொண்டாடினர்.

நிகழ்வில் துளிர் இல்லக் குழந்தைகளுடன் பாவலர் பொன்.க. மற்றும் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள்.

இடப்பக்கம் திருப்பு

Sunday, January 19, 2014

திருவள்ளுவர் நற்பணி மன்ற விழா

புதுக்கோட்டை மச்சுவாடி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் 16ஆம் ஆண்டு விழா 19.01.2014 அன்று வெள்ளி அரங்கில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற மக்கள் கலைவிழாவில் “பாரதிகலைக்குழுவினர்” வழங்கிய மாத்தியோசி  பல்சுவை நிகழ்ச்சியினை பாவலர் பொன்.கருப்பையா,  தான் எழுதி இசையமைத்த “ தைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு” மற்றும் ”திருவள்ளுவர்” பற்றிய பாடல்களைப் பாடி  நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.

                                வள்ளுவரே... வள்ளுவரே ..   இசைப்பாடல் 

உலகுக்கு    உயிர்கொடுக்க  உதித்தஒரு  ஆதவன்போல்
உயர்திருக் குறளைத்தந்த   பாவலரே - உங்கள்
வழியி்ல்  இந்தப்  புவிசுழலும்  வல்லவரே
வள்ளுவரே... திருவள்ளுவரே

அறம்பொருள் இன்பமென்று  அழகியமுப்    பாலைத் தந்தாய்
அகிலத்தில்    வாழும்மாந்தர்  அனைவருக்கும் பொதுமை சொன்னாய்
அன்புடனே    அறிவும்ஓங்க   அதிகாரம்     பலவும்   செய்தாய்
ஆள்வோர்க்கும்  வாழுவோர்க்கும்  அரியநெறிகள்  ஆக்கித் தந்தாய்
வள்ளுவரே.... திருவள்ளுவரே

இயங்கிடும்  உலகம் என்றும்   ஏரின்பின்னே   நடக்குமென்றாய்
இயலாத    தொன்றுமில்லை   முயற்சிசெய்யக் கிடைக்குமென்றாய்
ஈதல்          இசைபடவே       வாழ்ந்திடவும்     வழியைச்சொன்னாய்
ஈடில்லா  இல்லறத்தின்   மேன்மைஅன்பு    அறத்திலென்றாய்
வள்ளுவரே...திருவள்ளுவரே

ஏற்றநல் அறம்புரிய இனியபொருள் விளையுமென்றாய்
ஏகாந்த வீடுபேற்றின் இறுதிநீக்கி இன்பம் வைத்தாய்
இன்பத்துப் பாலதிலே எத்தனையோ நுட்பம் வைத்தாய்
என்றும்குறள் வழிநடப்போர் ஏற்றம் வாழ்வின் அமையுமென்றாய்
வள்ளுவரே... திருவள்ளுவரே.

Saturday, January 18, 2014

தமிழ்ப் புத்தாண்டு தையே.

தைத்திங்கள்  முதல்நாளே  தமிழருக்குப் புத்தாண்டு
        தமிழ்ப்பண்  பாட்டோடு  மகிழ்ந்துநீ  கொண்டாடு  -- தைத்திங்கள்

ஞாலத்தின்  முதல்தொழிலாய்  வேளாண்மைத்  தனைக்கொண்டு
      காலத்தை  அதன்வழியே   வகுத்தானே  நம்தமிழன்                                              ஆடிப்பட்டம் தேடி விதைத்து மார்கழியில   மகசூல்கண்டு                                            கூடிக்களிக்கும் நாளாய்க் கொண்டானே தைமுதல்நாளை                                                                                                                    
                                                                                    -- தைத்திங்கள்

சுழல்கின்ற  புவிசெழிக்கச்  சூரியனை  முதன்மை  கொண்டான் 
          சூரியவீதியில்  தங்கும்  உடுக்கள்  பன்னிரண்டு  கண்டான்
சுறவம்முதல்  சிலைஈறாய்ச்  சுழன்றிடும்  ராசிகள் பெயரைச்                             சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைமுதலென்றான்                              
                                                                                        -- தைத்திங்கள்

கார்கூதிர்  முன்பனி  பின்பனி  இளவேனில்  முதுவேனில் என
    காலநிலைக் கேற்பபொழுதைப் கணக்காகப்  பகுத்து வைத்தான்
வெயில்மழை முன்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில்
    விளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைத்தநாளே                                                                                                                   
                                                                                      -- தைத்திங்கள்





Wednesday, January 15, 2014

அனைத்துத் தோழமைகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்திருநாள், திருவள்ளுவர்நாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்.

கடந்த ஒரு வாரகாலமாகத் தொடர்ந்து இணையத்தில் இருக்கையிட நேரமின்றி நெருங்கிய பணிகள்.
நபார்டு வங்கி மற்றும் செஸ்டாட் அமைப்பின் மூலம்  கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை பற்றிய விழிப்புணர்வு பரப்புரைக்காகப் பாடல்கள் எழுதி,  இசையமைத்துப் பாடி, குறுந்தகடு ஒலிப்பதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து.... கிராமியச் சாயலில் வங்கிகள் தரும் வளர்ச்சி பற்றி “ அண்ணே ஒரு சந்தேகம்” என்னும் நிகழ்ச்சியினைத் தயாரித்து  இயக்கி காணொளிப் பதிவு செய்து குறுவட்டு வெளியிட்டமையிலும் கிராமத்துச் சொந்தங்களுக்கு பரப்புரை நிகழ்வுகளில் கலந்து கொண்டமையிலும் பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன.

அதனைத் தொடர்ந்து கவிநாடு மேற்கு சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதி இளந்தென்றல் கலை மன்றத்தின் 9 ஆம் ஆண்ட தமிழர்திருநாள் பொங்கல்விழா,  கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் ஆயத்த முனைப்பு.

4.01.2014 அன்று பகுதிக் குழந்தைகளுக்கு கவிஞர் செ.சுவாதி, கவிஞர்.மு.கீதா , தலைமை ஆசிரியர் இரா.சிவகுருநாதன் ஆகியோரைக் கொண்டு பேச்சு, பாட்டு. திருக்குறள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல், விழிப்புணர்வுப் பாடல் போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தியது

12.01.2014 அன்று சண்முகநகர், மங்களம் நகர், கே.கே.நகர், சாய்ராம்நகர், கிருஷ்ணாநகர், விரிவாக்கப் பகுதி ஆகிய பகுதிகளில் மூன்று பிரிவாக ஆறு நடுவர்களைக் கொண்டு வண்ணக்கோலப்போட்டி நடத்தியது.
13.01.2014 அன்று  கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் புகையிலாப் போகி, மற்றும் இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தியது.

அன்று மாலை வெள்ளியரங்கில் நடந்த நல்லிணக்கப் பொங்கல் நிகழ்வு மன்றும் மனிதநேய மாண்பாளர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டது.

14..01.2014 தமிழர்திருநாளன்று  பகுதி இல்லங்களில் பொங்கலிட்டு  இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம்  இணைந்து சிறுவர் முதல் பெரியவர் வரைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள்முழுவதும் நடத்தியது.

அன்றுமாலை, பகுதிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மே டையேற்றியது.
அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு.
நிறைவாக கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களை நடுவராகக் கொண்டு ” மக்களின் மனங்களில் பெரிதும் நிலைத்திருப்பவை “பழைய திரைஇசைப்பாடல்களா? புதிய திரையிசைப் பாடல்களா?“ என்னும் இன்னிசைப் பட்டிமன்றம்.  பழையபாடல்களே அணியில் கீழாத்தூர் மக்களிசைக் கலைஞர் ரெ.வெள்ளைச்சாமி, நன்னிலம் மகேசுவரி, ஆலங்குடி லெ.வடிவேலு ஆகியோரும், புதிய திரையிசைப் பாடல்களே


அணியில் இராச.ஜெய்சங்கர், திண்டுக்கல் கிலோனா மணிமொழி, புலவர் மகா.சுந்தர் ஆகியோரும் வாதிட்டனர். சிறப்பாக அமைந்தது.
15.01.2014 அன்று காலை புதுக்கோட்டை சின்னப்பாத் திடலருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி, பொங்கலிட்டு வாழ்த்துப் பகிர்வு.
அதனைத் தொடர்ந்து பிச்சத்தான்பட்டி இளைஞர் நற்பணிமன்றத்தினர் நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்து நடத்தியது. 
இத்தகு நிகழ்வுகளால் நட்புகளோடும், உறவினர்களோடும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் மகிழ்வினையும் உளமாறப் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன்.