Thursday, December 22, 2016

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.

Image may contain: 7 people, people standingபுதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் 18.12.2016 அன்று கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகமையில் LK Institute of Skill Development  நிறுவனம் தயாரித்து அளித்த கணினித் தமிழ்க் கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட அதனை கவிஞர் கீதாவும்ஈ பாவலர் ்பொன்.கருப்பையாவும் பெற்றுக் கொண்டனர்.

முகாம் தொடக்கத்தில்  பாடுவதற்காக பாவலர் பொன்.க எழுதி  இசையமைத்திருந்த பாடல், தொடக்கம்  திட்டமிட்ட  நேரத்தில் தொடங்கப்பட இயலாச் சூழலில் அப்பாடல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பாடல் இதோ...

புதிய பொலிவு பெறுகு தெங்கள் இனிய தமிழ்மொழி
புவியைச் சுருக்கி இணைக்கு திப்போ இணையத் தமிழவழி
கணினித் தமிழ்ச் சங்கம் காட்டும் பயிற்சி  யின்வழி
கடல் கடந்து விண்ணைத் தொடுது கன்னித் தமிழ்மொழி       - புதிய

மின்னஞ்சல் வழியில் செய்தி தமிழில் அனுப்புவோம்
மேன்மையான நடப்பைப் பிறர் அறிய வழங்குவோம்
வலைத் தளங்கள் உருவாக்கி வளமை பெருக்குவோம்
வகைவகை யாய்ப் படைப்பு களை வழங்கி மகிழுவோம்       - புதிய

முக நூலைத் தொடங்கித் தரவைப் பதிவு செய்யலாம்
முனைப் புடனே  செய்திப் படங்கள் ஏற்றிக் காட்டலாம்
நானி  லத்து மனிதர் களையும்  நண்ப  ராக்கலாம் 
நட்பு வட்டத்  தோடு செய்தி பகிர்ந்து கொள்ளலாம்    -- புதிய 

வலை யொளியில் காணொளி நல் காட்சி ஏற்றலாம்
உலகம் முழுதும் பார்த்தவரின் விருப்பமறியலாம்
விக்கி  பீடியாவில் தமிழில் கருத்தை எழுதலாம்
விரும்பும் நூலை பிடிஎப்பில் படித்து மகிழலாம்            - புதிய

திறன்  செயலிப் பேசிகளில் திரட்டி ஏற்று  வோம்
தேவைப் படும் வகையியல திறந்து பயன் படுத்துவோம்
கணினி வழி வன்மு றைகள் பரவுதல் தடுப்போம்
கடவுச் சொல்லை கமுக்க  மாக மூடியே வைப்போம் - புதிய 
Image may contain: one or more people and indoor

Tuesday, December 20, 2016

இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய
இணையத்தமிழ்ப்பயிற்சி முகாம்.
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் 18.12.16 அன்று காலை 10 மணியளவில் தொடக்கவிழாவோடு துவங்கியது.
வரவேற்புரை
கவிஞர் ராசிபன்னீர்செல்வன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
[விழா நடக்கும் இடத்திற்கான பொறுப்பு மற்றும் அவர்களே உணவும் தேநீரும் வழங்குவார்கள் என்று கூறி பெரிய நிதிச்சுமையை குறைத்தார் திட்டமிடலின் போது]
வாழ்த்துரை
மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திருமிகு ஜெய்சன் ஜெயபரதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்களும் சிறப்பானதொரு வாழ்த்துரையை வழங்கினார்கள்.
பயிற்சி கையேட்டு நூல் வெளியிட்டு சிறப்புரை
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் பயிற்சி கையேட்டு நூலை வெளியிட அதை கணினித்தமிழ்ச்சங்க உறுப்பினர்களாகிய பாவலர் பொன்.கருப்பையா அவர்களும் ,கவிஞர் கீதாவும் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பானதொரு உரையை கவிஞர் தங்கம்மூர்த்தி வழங்கினார்.
பயிற்சி நோக்கவுரை
கணினித்தமிழ்ச்சங்கத்தின் தோற்றம்...தோற்றுவித்தவர்,ஏன் கணினித்தமிழை வளர்க்க வேண்டும் என கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.ஒவ்வொரு நாளும் தூங்காமல் திட்டமிட்டு அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது. 
வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நூல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நன்றியுரை
கவிஞர் கீதா நன்றியுரை கூற தொடக்கவிழா இனிதே நிறைவுற்றது.

பயிற்சி முதல்நிலை
முதல் பயிற்சியாக தொடக்கநிலையில் உள்ளவர்களுக்கு முனைவர் பழனியப்பன் அவர்கள் மற்றும் புதுகை எல்.கே இன்ஸ்டியூட் உதயக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து 80 பேருக்குமேல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.அதில் 40 பேருக்கு மேல் அன்றைய பயிற்சியில் மின்னஞ்சல் துவங்கி, வலைப்பூவும் வடிவமைத்தனர்.
வலைப்பூவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தெளிவாக விளக்கினார்கள்.அனைவரும் தங்களது தளத்தை செம்மைப்படுத்திக்கொள்ள உதவினார்.
விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் என்ன?என்ன எழுதாலாம்....அதன் பயன்கள் என்ன என்று விக்கிபீடியாவைச்சேர்ந்த பிரின்ஸ் என்ராசு அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
முனைவர் ஜம்புலிங்கம் அய்யா தனது விக்கிபீடியா அனுபவங்களைக்கூறி எப்படி எழுத வேண்டும் .எதை எழுதக்கூடாது என்பதை கூறி..
பயிற்சியை மெருகூட்ட விக்கிபீடியாவில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்காக ஒரு கட்டுரை துவங்குகின்றேன் என்று துவங்கினார்கள்.நம்பிக்கைக்குரிய விக்கிபீடியா உறுப்பினராக அய்யா விளங்குகின்றார்..கணினித்தமிழ்ச்சங்கம் அளித்த முதல்பயிற்சியில் தான் அவர்கள் விக்கிபீடியாவைப்பற்றி அறிந்து பின் 300 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமிகு ரமேசு டி.கொடி திருச்சி
யூ ட்யூபில் எவ்வாறு வீடியோவைப்பகிர்வது என்பதைப்பற்றி சிறப்பாக விளக்கினார்.
அலைபேசி பயன்பாடு
அலைபேசியில் என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும்,கூகுளில் ஷார்ட்கட் முறைகளையும்,திருமிகு கோபிநாத் [ஜி டெக் எஜுகேசன்]அவர்களும் திருமிகு ராஜ்மோகன் அவர்களும் எடுத்துக்கூறியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவர்கள்
திருமிகு கில்லர்ஜி,
திருமிகு எஸ்.பி செந்தில்குமார்,
திருமிகு கோபிசரபோஜி,
திருமிகு தமிழ் இளங்கோ. ....
கவிஞர் செல்வா மற்றும் புதுகை செல்வா ஆகியோர் தங்களது வலைப்பூ அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பானதொரு மதிய உணவும் தேநீரும் தந்து உபசரித்த விதம் மிக அருமை.
அனைவரிடமும் கருத்து படிவம் வழங்கி கருத்துகளைப்பெற்றபோது..சிறப்பான பயிற்சி மேலும் வழங்க வேண்டும்,பிறமாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என அனைவரும் பயன் பெற்றோம் என்று எழுதியிருந்த போது ...அதுவரை பட்ட சிரமங்கள் எல்லாம் பனியாகக்கரைந்தன.
இப்பயிற்சி முழுமையடைய முழுமுதற்காரணம் கவிஞர் முத்துநிலவன் அண்ணா தான்.இரவுபகல் பாராது இதற்காக உழைத்துள்ளார்.அவர்களின் சீரான திட்டமிடலே முக்கிய காரணம்...கணினியில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்..என்ற தாகத்தை அன்றைய பயிற்சி உருவாக்கியுள்ளது.

Friday, December 16, 2016

தமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க..

தமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க...

“தொன்று நிகழ்ந்த தனைத்து முணரந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் 
என்று பிறந்தவள்  என்றுண ராத 
இயல்பின ளாம் எங்கள் தாய்“ --

என்ற பாரதியின் வாக்கிற்கேற்பவும்  

“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்“ என்ற பாவேந்தர் 

மொழிவிற்கேற்பவும், உலகின் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் மூத்த,தொன்மை வாய்ந்த மொழியாய்த் தோன்றிய மொழி 
நம் தமிழ்மொழி.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ்மொழி என பிரித்தானியா கலைக் களஞ்சியம் சொல்லும் பெருமை கொண்ட மொழி தமிழ்மொழி.
இத்தகு பெருமையும் தனித்தன்மையும் மிக்க தமிழ்மொழியில் காலப்போக்கில் பிறமொழிகள் சிறிது சிறிதாகக் கெடுவாய்ப்பாகக் கலக்கத் தொடங்கின.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமற்கிருதம் போன்ற பிற மொழிச்சொற்கள் சில தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நம் தமிழ் நூல்களில் வந்து கலந்ததாக வரலாற்றாய்வாளர் கூறுகின்றனர்.         ( திருக்குறளில் வெறும் 17 சொற்களே பிறமொழிச் சொற்கள் என்பார் பாவாணர்)
தமி்ழைப் பிற உலக மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்ந்த கால்டுவெல்                        “ தமிழுக்கு அயன்மொழியின் துணை தேவையில்லை. 
பிறமொழிச் சொற்களை விலக்கினாலே தமிழுக்குப் பெருமை மிகும்” என்று குறிப்பிட்டார்.


தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக்கூறப்பட்ட களப்பிரர் காலத்தில் தான் பல  தமிழ் நூல்கள் பிறமொழிக் கலப்போடு புடைத்தெழுந்தன. 
காலச்சூழலில் ஆண்ட மன்னர்களின் பேதைமையாலும் ஆரிய ஆதிக்கம் மிகுந்தது.

அழிவின் விளிம்பில் இருந்த தமிழ்,  அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்  காரைக்கால் அம்மையார் போன்றோரின் திருமுறைகளால் ஓரளவு காப்பாற்றப்பட்டது என்றே கூறலாம்.  ஆழ்வார்களின் இறைஇசைப் பாடல்களும்கூட சமற்கிருதத்தைப் புறந்தள்ளியே இருந்ததைக் காணலாம். 

கம்பரும், ஒட்டக்கூத்தரும்  இயன்றவரை பிறமொழிச் சொற்களைத் தவிர்ததே தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். என்றாலும் பல புலவர்கள் பிறமொழிக் கலப்போடே படைப்புகளைத் தந்துள்ளமை வேதனைக்குரியதே.

பல்லவர் காலத்திலும் பின்பெழுந்த  மூவேந்தர் காலத்திலும்  வெறிகொண்ட சமற்கிருத தாக்கம் தமிழில் மிக்கிருந்தது வெள்ளிடைமலை.

 புலவர்களின் புனைவுகள், மன்னர்களின் கீர்த்திக் கல்வெட்டுகள் பிறமொழிக் கலப்போடே காணப்படுகின்றன. 
பிற்காலத்தில் தெலுங்கு கன்னடம், சமற்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடை தமிழின் தனித் தன்மைக்குப் பெரும் முட்டுக்கட்டையாய் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

அயல்நாட்டார் வருகை  காரணத்தால், இனிமைத் தமிழ்மொழி இனந்தெரியாப் பிறமொழிகளின் கலப்பிற்குட்பட்டுச் சிதையத் தொடங்கியது.

குறிப்பாக ஆங்கில, பாரசீக,போர்ச்சுகீசிய மொழிகள் தமிழில் இரண்டறக் கலந்து பேதமின்றி பேச்சு, எழுத்து வழக்கில் நிலைபெறத் தொடங்கிற்று.

பிறமொழிக் கலப்பால் தமிழ்மொழி தன் தனித்தன்மையை இழந்து நாளடைவில் கலப்பு மொழியாகி அழிந்து விடும் என்கிற மொழிக்காப்பு உணர்வில்தான்  மறைமலையடிகள்,  பரிதிமாற்கலைஞர்,தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து , தமிழினத்தை ஓர் அறிவுக் குமுகமாக மாற்றி நிலை நிறுத்தும் அரிய பணியினைத் தொடர்ந்தனர்.

கால்டுவெல் , சி.யு.போப், வீரமாமுனிவர் போன்ற் அயலகச் சான்றோரும் தனித் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளனர்.
தனித்தமிழின் வளர்ச்சிக்கு  தமிழ்த் தென்றல் திரு.வி.க. கி.ஆ.பெ.விசுவநாதன் போன்ற பலரின் இதழியல் தொண்டும் மறக்கவியலாதவை. 

கடந்து நூற்றாண்டின் இணையற்ற பாவலர்கள் பாரதியும் பாரதிதாசனும் தங்களின் படைப்புகளின்வழி தனித்தமிழின் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர்.

“தாய்ப்பாலில் நஞ்செனவே
தமிழில்வட மொழி சேர்த்தார்
தவிர்த்தல் வேண்டும்.
தமிழ்ப் புலவர் தனித் தமிழில்
நாடகங்கள் படக்கதைகள் 
எழுத வேண்டும்“  எனத் தனது “தமிழியக்க“ நூலில் பாவேந்தர்  பகர்ந்துள்ளது நோக்கத் தக்கது.
தமிழ் வரலாற்றில் முதன்முறையாக வடசொல் ஆட்சிகளைத் தவிர்க்கும உணர்வோடு தனித்தமிழிலேயே எழுதும் முயற்சியில் இலக்கியங்களைப் படைத்த பெரும்பாவலர் பாரதிதாசன் என்று செக்.மொழியறிஞர் கமில்சுவலபில் கூறியுள்ளார் .
ஆனால் இன்று  தமிங்கிலம் தலைதூக்கிய நிலை. சமற்கிருதமும் இந்தியும் தலைமொழிகளாய்ப் புகும் நிலை. 

இப்படிக் காலங்காலமாய்  தமிழில் பிறமொழிக் கலப்பை நோக்குங்கால்        “ மெல்லத் தமிழினி சாகும் என்றந்த பேதை“ சொன்னதுபோல் எங்கே தமிழ்மொழி அழிந்து போகுமோ என்ற கவலையால் தமிழ்த்தாய் கண்ணீர் வடிப்பது  வேதனையளிப்பதாகவே உள்ளது.

இந்நிலை இப்படியே தொடர விடப்போகிறோமா? 
ஒரு மொழி அழியும்போது அம்மொழி பேசும் இனமுமல்லவா அழிந்துபடும்.
“இந்நிலைமாற வேண்டுமெனில்... 
பேச்சில் எழுத்தில்  இதழ்களில் , சின்னத்திரை, வண்ணத்திரை  காட்சி  ஊடகங்களில்,சமூக மின்னணு ஊடகங்களில்., பிறமொழிக் கலப்பில்லாத படைப்புகள் வரத் ்துறைதோரும் பரப்புரை மேற்கொள்வோம்”. 
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ,
 “தனித்தமிழ் இயக்கம் தொடர்வோம்” 

பிறமொழிப் பெயர்கள் தவிர்த்து 
“தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவோம்.”

 “தாய்மொழிவழி நம் குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்வோம்.” தாய்மொழிவழிச் சிந்தனையே பிறமொழி கற்றலுக்கு உதவும் .

“பிறமொழி நூல்களைத் தனித்தமிழில் மொழிபெயர்ப்போம்.”
தனித்தமிழில் பேசுவோம். 
தனித்தமிழ்ப்  படைப்புகளை உருவாக்குவோம். 
 தமிழ்த்தாயின் கண்ணீரைத் துடைப்போம். 
தமிழினம் காப்போம்.