Saturday, April 7, 2018

உலக சுகாதார நாள்


  1.  நலம்... நலமடைய ஆவல் 


 ஒரு நாட்டின்  வளம் அங்கு வாழும் மக்களின்  நலத்தைச் சார்ந்தே.அமைகிறது. . 

அடிப்படையாக    தனிமனிதனின் நலம் பெருக, 
அக் குடும்பத்தில் நலம் பெருகும். 

குடும்பங்களின் நலம் பெருக  அவ்வூரின் நலம் பெருகும்.

 ஒவ்வொரு ஊரின் நலமும் பெருக பெருக       
அம்மாநிலம்  நலம் பெருகும் . 

மாநில மக்களின் நலமே 
மனித வளத்தின் பெருக்கம். 

மனித வளம் பெருகிட , 
உழைப்பும் உற்பத்தியும் பெருகும். 
தொழில்துறை பெருகும்,  

தனிமனித வருவாயின் பெருக்கமே
ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அடித்தளம்.   
நாம் தன்னிறைவு பெற்ற சமூகத்தில் வாழ்வதாக
அப்போதுதானே பெருமைப்பட முடியும். 

எனவே உலக சுகாதார நாளைக் கொண்டாடுவதாகப் 
பெருமைப் பட்டுக் கொள்வதைவிட, 
 நல ஆதாரங்களைக் காப்பதையும் 
பெருக்குவதையும் நோக்கி 
நாம் செயல்பட முனைவோம்..
---------------------------------------------------------------------------------------------------------


சித்திரம் வரையச் சுவர் வேண்டும்-நம்
அத்தனை பேருக்கும் நலம் வேண்டும்
நோயற்ற வாழ்வு பெற வேண்டும்
நூறாண்டு வாழவும் வழி வேண்டும்.

நோயற்ற வாழ்வே பெருஞ் செல்வம்
நோயைத் தவிர்க்க வழிவகை செய்வோம்
தூய்மையை எதிலும் கடைப் பிடிப்போம் 
துயரத்தைத் தூரத்தில் விரட்டிடுவோம்.

உண்ணும் நீரும் உறிஞ்சும் காற்றும்
ஒழுங்காய் இருந்தால் நோய் வருமா?
வேதி உரத்தினில் விளையும்பொருளால்
வேதனை உடலுக்கு  உடன் வருமே .

கருத்தின்றி வீசும் கழிவுப் பொருளால்
காற்றும் நீரும் கடும் நஞ்சாச்சு
  கவனமாய்க் கழிவைக் கையாளத்  தெரிந்தால்
  கவலைகள் காற்றினில் பறந்தாச்சு

   சுற்றுப் புறமெலாம் சுத்தமாய் இருந்தால்
  சுகாதாரக் கேடுகள் பரவாது
  சுழற்சிக்கு ஏலாத வன்பொருள் தவிர்த்தால்
  சூழலை மாசுகள் கெடுக்காது

  காய்ச்சிய நீரையேப் பருகிடப் பழகு
  காற்று வெளியினில் தினந்தினம் உலவு
  உணவிலும் உடையிலும் தூய்மையை நிறுவு
  உழைத்தபின் ஓய்வெடு உடலுக்கு அழகுMonday, March 26, 2018

தாய்... தாய்...தாய்

நெஞ்சிருக்கும் வரை......

தாயிற் சிறந்த கோயிலுமில்லை...

தாயில்லாமல் நானில்லை...

அன்னை ஓர் ஆலயம் ...

அன்னையைப் போல்ஒரு தெய்வமில்லை...

என்றெல்லாம்  காலம் காலமாகப் பல்வேறு கவிஞர்கள் 
தாயின் பெருமையைப் போற்றிப் பாடி வந்துள்ளனர்.

எனது நெஞ்சிருக்கும் வரை நீங்காது நினைவில் வாழும் என் தாயின் 12 ஆவது நினைவு நாளில் என்னுள் எழுந்த எண்ண வரிகள் இதோ...


கருவாய்    நான்   உருவான  முதலே
கருத்தாக எனைக்  காத்த     தாயே
இணையாக உனக் கென்றும் நீயே
இன்னமுது  ஊற்றாய் இருந்  தாயே


உதிரத்தை உருக்கிப் பாலூட்டி  வளர்த்தாய்
உறங்கிட  எனக்குத் தாலாட்டு   இசைத்தாய்
உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்நீ புதைத்தாய்
உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்?

அம்மாஎனும் சொல்லால் அதரத்தை  அசைத்தாய்
அப்பாஎனும்  உறவை        அறிமுகம்      அளித்தாய்
அறிவினை    ஊட்டும்நல் ஆசானாய்த் திகழ்ந்தாய்
அல்லலெனை   நெருங்கிடாத   அணையாக  இருந்தாய்


நன்னெறியில் நான்ஒழுக நாளும்நீ உழைத்தாய்
நலங்கெட்டு நலிந்தாலும் மடிதந்து மகிழ்ந்தாய்
நானிலத்தும் நான்தேடும் தெய்வமாக இருந்தாய்
நாளுமுனை மறந்திடாது நனிநெஞ்சில் நிறைந்தாய்


-- பாவலர் பொன்.க.,

Sunday, March 25, 2018

வீட்டுக்கொரு கழிப்பறை

வீட்டுக்கொரு கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத் தையும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஊர்ப்புற மக்களிடம்   ஊரக வளர்ச்சி முகமை மூலம் பரப்புரை செய்ய  உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுப் பாடல்.

இசைப்பாடல்   - பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை


வீட்டுக்கொரு கழிப்பறைதான்
                  ஏ அய்யா அம்மாமாரே
வேணுமுங்க அவசியமா
                  கட்டிடுவோம் வாங்க நீங்க
திறந்தவெளிப் பொட்டலத்தான்
                தேடிப்போயி மலம் கழிச்சா
 தீராத தொற்றுநோயும்
                தேடிவரும் நம்மலைத்தான்  --- வீட்டுக்கொரு

வாய்க்குள்ளே போறதெல்லாம்
                 ஏ அய்யா அம்மாமாரே
வயித்துக்குள்ளே தேங்கிடாமே
                 வெளியேவந்து ஆகவேணும்
காலைமாலை ரெண்டுவேளை
                 கழிவைவெளி யேற்றவேணும்
கலகலன்னு ஒடம்பிருக்கும்
                கண்டபிணி ஓடிவிடும்              - -- வீட்டுக்கொரு

பொழுதெல்லாம் அடக்கிவச்சு
                ஏ அக்கா தங்கைமாரே
பொழுதுபட்டும் விடியுமுன்னும்
               புதரைத்தேடிப் போறீகளே
தேக்கிவைக்கும் மலஜலத்தால்
               தீங்குரொம்ப வெளையும்தானே
தீரும்ஒங்க துயரமெல்லாம்
              கழிப்பறையைக் கட்டுனாலே   --- வீட்டுக்கொரு

கூரைவீடோ ஓட்டுவீடோ
              ஏ அய்யா அம்மாமாரே
குடியிருப்பின் வெளியேகொஞ்சம்
               எடமிருந்தாப் போதுந்தானே
பஞ்சாயத்து ஆபீசுக்கு
              கழிப்பறைன்னு கேட்டுப்போனா
பன்னெண்டாயிர ஊக்கநிதியில்
              கழிப்பறையும் வருமேதானா      --- வீட்டுக்கொரு

அஞ்சுக்கு மூனடியில்
              ஏ அய்யா அம்மாமாரே
அழகாஒரு கழிப்பறையை
             அமைச்சுவச்சு நீயும்பாரு
உருளைவடிவ உறைகளாலே
              உலர்கழிவுத் தொட்டிபோதும்
ஒருதுளியும் நாத்தமின்றி
               உரமாஅந்தக் கழிவும்மாறும்       --- வீட்டுக்கொரு

குளக்கரையில் மலம்கழிச்சா
              ஏ அண்ணந் தம்பிமாரே
கொசு கிருமி உருவாகி
             கொல்லைநோயைப் பரப்பிடுமே
குடிநீரும் காத்தும்கெட்டு
             கணக்கில்லாம தொல்லைதரும்
கவலைநீங்கி சுகமாவாழக்
             கழிப்பறைதான் அடித்தளமே      --- வீட்டுக்கொரு

சுத்தியுள்ள எடத்தையெல்லாம்
             ஏ அய்யா அம்மாமாரே
சுத்தமாக வச்சிக்குவோம்
            சுகவாழ்வு தானேவரும்
தூய்மைபாரத் திட்டத்தாலே
             திறந்தவெளியில் மலம்கழிக்கா
மாவட்டமா புதுக்கோட்டையை
            மாத்திடுவோம் வாங்கநீங்க          -- வீட்டுக்கொரு

தன்னனன்ன தானே னன்னே
தானானே தானே னன்னா
தனனானே தானே னன்னன்னா
ஏஅம்மாமாரே தானானே 
தானே தன்னன்னா

Wednesday, March 21, 2018

கட்டட்டும் கட்டிக்கிறேன்

 கட்டட்டும் கட்டிக்கிறேன்.

ஏய்  பொன்னி, பாத்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு ஒன்னைப் பிடிச்சிருக்காம். சம்மதம் சொல்லிடலாமா?” 

“ வேண்டாம்மா”

“ஏன்டி, அந்தக் கிராமத்திலேயே அந்தப் பையன்தான் நெறையப் படிச்சிருக்காம்”

“ படிப்பைப் பத்திக் கவலையில்லை”

” படிச்சிருந்தாலும்    அரசாங்க வேலையை எதிர்பாக்காம சொந்த நெலத்துல விவசாயம் பண்ணி வெளைச்சல் பாக்கிற பையன்டி. ”

“ வேலையைப் பத்தியோ விவசாயத்தைப் பத்தியோ எனக்குப் பிரச்சனையில்லை”

“ வேற என்ன? ஓன் நெறத்துக்கு கொஞ்சம் கம்மின்னு பாக்குறியா?”

“நெறத்தைப் பத்தியோ, அழகைப் பத்தியோ நா ஒன்னும் பெருசா நெனைக்கிறவ இல்லே”

“ பீடி சிகரெட்  புகையிலை மதுன்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்னு விசாரிச்சதுல தெரியுது”

“ நானும் கேள்விப் பட்டேன்”

“ அவங்க அப்பா அம்மால்லாம் நல்ல குணமானவங்க.ஒன்னைய தங்கங்தங்கமா பாத்துக்குவாங்களாம்  கொழுந்தன் நாத்துனா பிச்சுப்புடுங்கல் இல்லை”

“ மாமியார்  நாத்தனார் கொடுமையைப் பத்தி நா கவலைப்படலே”

“ ரெண்டு எடத்துல ஒங்க அப்பாவும் மாமாவும்  சாதகம்    பாத்ததுல பத்துப் பொருத்தமும் நல்லா இருக்காம்டி”

“ இந்த சாதகம், சகுணத்தையெல்லாம் பத்திக் கவலைப் படுறவ இல்லே நா”

“ அடியே, அவ்வளவு  நகை போடு, இவ்வளவு சீர் செய்யுங்கன்னு எதுவுமே கேக்காம  பொண்ணை மட்டும் குடுத்தாப் போதுமுங்குறாங்கடி மாப்பிளை வீட்ல”

“ அப்படி எதுவும் கேட்டிருந்தா என்னைப்  பொண்ணுப் பாக்க வந்தப்பவே வெளியே போங்கன்னு சொல்லிருப்பேன்“

“ அதுக்காக, ஒரே பொண்ணு ஒன்னை ஒன்னும்  சும்மா அனுப்பப் போறதில்லே. நகை, பண்டம் பாத்திரம், கட்டில் மெத்தை, மிக்சி கிரைண்டர், டிவி, பிரிட்ஜ்,  மாப்பிள்ளைக்கு கழுத்துக்குச் செயினு, கைக்கு பிரேஸ்லெட், விரலுக்கு மோதிரம்,  பல்சார் பைக் அப்டி இப்டின்னு ஒரு பத்து லெட்சத்துக்கு சீர் செய்ய நானும் ஒங்கப்பாவும் திட்டம் போட்டு வச்சிருக்கோம்”

“ என்னதான்  ஆசைகாட்டினாலும்  எனக்கு சம்மதமில்லேம்மா”

” ஏன்டி, வேற யாரையும் மனசுக்குள்ளே விரும்புறியா?

” விரும்பியிருந்தா ஒங்கக்கிட்டச் சொல்றதுக்கு எனக்கு என்ன பயம்?”

“அப்பறம் எதுக்குடி இந்தக் கல்யாணத்தை வேணாங்குறே?“

” ஏம்மா, பத்துப் பொருத்தம் சரியா இருக்கு, பத்து லெட்சம் செலவு செஞ்சு கட்டிக் குடுக்குறேன்னு சொல்ற நீங்க, ஒரு பொண்ணு சங்கடமில்லாம வாழத் தேவையான ஒன்னு அந்த  மாப்பிள்ளை வீட்டுல இருக்காங்குறதைக் கவனிச்சீங்களா?”

“ என்னடி இல்லை? கப்பல்மாதிரி வீடு . அந்தக் கிராமத்துலேயே அவுக வீடுதான் பெருசு”

“  வீடுதான் பெருசு. ஆனா கழிப்பறை- அதான் கக்கூஸ் அந்த வீட்ல இல்லையாம். என் தோழிய விட்டு விசாரிச்சேன் ”

“ப்பூ.. இந்த சின்ன விசயத்துக்கா இம்புட்டு பிடிவாதமா வேண்டாங்குறே?  கிராமத்துல, வீட்டுக்குள்ளேயோ, வெளியிலேயோ கக்கூஸ் வச்சுக் கட்டமாட்டாங்க. அப்படியே காலாறக் குளத்துப் பக்கமோ, காட்டுப் பக்கமோ  காத்தாட  வெளியே போறதத்தான் விரும்புவாக “

“ அம்மா, அப்படி திறந்த வெளியில மலம் கழிக்கிறது எவ்வளவு சுகாதாரக் கேடு தெரியுமா? இயற்கையா ஏற்படுற உடல்கழிவை  அப்பப்ப வெளியேத்தனும். அடக்குறதுதான் ஒடம்புல  பல நோய் உருவாகக் காரணம்.    அவசர ஆத்திரமுன்னா பொண்ணுங்க  கழிப்பிடம் தேடி வெளிய போறது எவ்வளவு ஆபத்துன்னு தினம் தினம் செய்தியில பாக்குறியல்ல.   அதனால கழிப்பறையை முதல்ல  கட்டச் சொல்லு  அப்பறம் நா   கட்டிக்கிறேன்”
.
( அப்போது வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த அப்பா)

“ நீ கேக்குறதுக்கு முன்னாலே மாப்பிளை  தூய்மை பாரத் திட்டத்திலே  கழிப்பறை கட்ட  பஞ்சாயத்து ஆபீசுல  மனு கொடுத்து, அவங்களும் வந்து எடத்தைப்  பாத்துட்டு, பன்னெண்டாயிரம்  ஊக்கநிதியில கழிப்பறை கட்ட ஏற்பாடு பண்ணிட்டாங்கலாம்.”

“பாத்தீங்களா நம்ப பொண்ணு நெனைச்சதையே மாப்பிளையும் நெனைச்சிருக்காரு.” 

“ அதுதான்டி பதினோராவது பொருத்தம்”

” அப்பறம் என்னடி?“

“ கட்டட்டும் கட்டிக்கிறேன்”
------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, March 19, 2018

தமிழ்ப் பண்பாடு


   “தமிழ்ப் பண்பாடு“    --கவிதை-


தமிழரின் பண்பாடு தரணியில் 
                      அமைந்தது  தனிப்பெருஞ்  சிறப்போடு
தலைமணி முடியெனத் தகதகத்
                       திருந்தது  தகைமைச்       சான்றோடு
தனக்கென வாழாது பிறர்க்கென
                      வாழ்ந்தவர் தழைத்திட்ட ப்  பூக்காடு
தன்மானம் காத்தலில் தமிழினம்
                      முதலெனச் சாற்றுவம்      தெம்போடு

அன்பின் வழியினில் அகம்புற
                      வாழ்க்கையும் அமைந்தங்கு நடந்ததுவே
பண்பின் வெளிப்பாடு பட்டின்
                       ஒளியென  பதிந்தெங்கும்   கிடந்ததுவே
மன்புகழ் காத்திட மறத்தமிழ்
                       வீரரும் மார்தந்து   மாண்டனரே
பண்வழிப்   பாவலர் காட்டிய 
                      நெறியினில் புவனத்தை  ஆண்டனரே

கற்றவரைப் புகழ் பெற்றவரின்
                      மேலாய்ப் போற்றிப் புகழ்ந்தனரே
கொற்றவனைப்  பாடிப் பெற்றபொருள்
                       கொண்டு சுற்றம்  தழுவினரே
அற்றநிலை  யெனில் அறம்தழு 
                      வாதவரை  அதட்டி இகழ்ந்தனரே
உற்றதுய    ரினில்உடை  இழந்தார்
                        கைபோல்   உதவியே  மகிழ்ந்தனரே

ஏறுதழுவிய வீரரையேப் பெண்டிர்
                     இணைய   ராய்  ஏற்றனரே
ஊறுளங் கொண்டவர் உற்றா 
                     ராயினும்  ஒதுக்கியே தூற்றினரே.
காதல் கணவரைக் கைபற்றி 
                   நங்கையர் கற்புநெறிக் காத்தனரே
காணும்  மக்கட்செல்வம் களிப்புற
                  வாழ்நெறி கடிதே யாத்தனரே

வந்தவிருந்தினர்  வன்பசி போக்கியே
                     வாழ்ந்தது தமிழ்க் குடியே
நொந்தொன்றை விலக்காது நோற்பவர் 
                      கருத்தையும்  ஏற்றனர் முறைப்படியே
எந்நிலை  மாந்தரும்  எங்களது 
                      உறவென்று ஏற்றசீர் மனத்தினரே
சிந்தையிலும் மாற்றார்  சீர்கெட
                       நினையாத செந்தமிழ் இனத்தினரே

ஈட்டும் பொருளுக்கு ஏற்றநல்
                      உழைப்பினை ஈந்திட்ட தரப்பினரே
பாட்டும் இசையுமாய் பல்கலை 
                       வளர்த்திட்ட பண்பமை மரபினரே
பிறர்க்கென வாழ்தலை பெற்றியாய்க்
                       கொண்ட பெருமக்கள் வாழ்ந்தனரே
எவர்க்கெப் புகழ்வரின் எமக்கென 
                       மகிழ்ந்திட்ட இனிமனக்  குணத்தவரே.
-------------------------------------------------------------------------------------------------

Wednesday, January 24, 2018

காலத்தின் குரல்நிறைவேறாதவையும்  நிறைவேற்ற        நினைப்பதுவும்


            அகவை எழுபத்தொன்றாயிற்றா? என்ற நினைப்போடு என் அறையின் நாள்காட்டியில் தேதியைக் கிழிக்க முனைந்தபோது,

“எழுபதாண்டு காலம் இம்மானுட சமூகத்திற்குள்  சங்கமித்து காலததைக் கழித்தாயே இச்தச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு நீ என்ன செய்து கிழித்தாய்?”

என்று என் கன்னத்தில் அறைந்ததுபோல் அந்த நாள்காட்டி என்னைக் கேட்டதாக ஓர் உணர்வு.

மன உறுத்தலோடு, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தேன். 

                 விளையாட்டுப் பருவம், விடலைப் பருவம் கடந்து,                  36 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களை, பாடப் புத்தகங்களுக்கு அப்பால் அவர்களிடம் புதைந்து கிடந்த வாழ்வியல் திறன்களை வளர்த்து உருவாக்கி இருக்கிறேனே, அதற்காக தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகூட வழங்கி இருக்கிறதே என நான் நினைக்கு முன்,

 ” அது உன் வயிற்றுப் பிழைப்புக்கான வருமானத்திற்காகச் செய்த பணி” என்றது காலத்தின் குரல்.

              50 ஆண்டுகாலம் மணிமன்றம் என்ற கலை,கல்வி வளர்ச்சி அமைப்பின் மூலமும், 14 ஆண்டுகளாய் நினைவில் வாழும்  என் இணையாள் பெயரில் “மரகதவள்ளி அறக்கட்டளை”யை நிறுவி அதன் மூலமும்,  வகுப்புவாரி முதல் மாணவர்களுக்கும், மாவட்ட முதல் மாணவர்களுக்கும், முழுத்தேர்ச்சி அரசுப் பள்ளிகளுக்கும்  மாவட்ட உயர் அலுவலர்களைக் கொண்டு விருதுகள் வழங்கி   வந்துள்ளோமே என்று பெருமிதம் கொள்ளுமுன்...

” நீட் தேர்வு முறையில்தான் அந்த முதல் மாணவர்களெல்லாம் கரைந்தே போனார்களே” என்றது காலத்தின் குரல்.

               கடந்த ஐம்பது ஆண்டுகளாய் பள்ளி ஆண்டுவிழாக்களில், வானொலியில், பொதுவெளி மேடைகளில் மணிமன்றம், மணிச்சுடர் கலைக்கூடம் மூலம் 72 சமூக, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி, 354 இசைப்பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடி,3ஒலி நாடாக்கள்,2 இறுவட்டுகள் வாயிலாக, மக்களிடையே சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்திருக்கிறேனே எனப் பட்டியலிட முனைந்தபோது....

” விதைத்தாயே, அதில் விளைச்சல் என்ன கண்டாய்?” எனக் கேட்டது காலம்.

           அறிவொளி இயக்கம், தொடர் அறிவொளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, முதலிய அமைப்புகளில் இணைந்து 25 ஆண்டு காலம் பாமர மக்களிடம் மணிடிக்கிடந்த மூட நம்பிக்கைகளை, மந்திரமா? தந்திரமா?, நழுவப்படக்காட்சி, எளிய அறிவியல் ஆய்வுகள் மூலமாக     அ றியாமையை அகற்றும் விழிப்புணர்வுப் பணியை ஆற்றி இருக்கிறேனே  எனச் சொல்லுமுன்...

” மூட நம்பிக்கை ஒழிஞ்சுதா? அறியாமை அகன்றிடுச்சா? என்ற காலத்தின் கேள்விக்கு , ஆம் எனச் சொல்லி என்னை நான் ஏமாற்றிக் கொள்ள இயலவில்லை.

               28 ஆண்டு காலம் தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் காவல்துறைக்குத் துணையாகப் பணியாற்றிப் பாராட்டு, பதக்கமெல்லாம் வாங்கிய சேவையைச் சொல்ல முற்பட்டபோது,

“ நீ துணையாய்ப் போனே, அது உனக்கு எப்பவாவது துணையா நின்னுச்சா? ன்னு நச்சுன்னு குட்டியது காலம்.

செஸ்டாட், நபார்டு வங்கி மூலம் கிராமப்புற மக்களுக்குச் சிறுசேமிப்பு, சிறுகுறு தொழில் தொடங்க வங்கிகளின் சேவை பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரை நிறையச் செய்திருக்கிறேனே...

“ஓ... அப்ப மக்களை உண்டியலை ஒடைக்க வச்ச பாவத்தில உனக்கும் பங்கிருக்குன்னு சொல்லு” என்று எடக்கு மடக்கா காலம் என் மீது ஒரு பழியைப் போட்டது.

                  கதிரவன்  புப்பந்தாட்டக் கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், இளந்தென்றல் கலை மன்றம் முதலிய அமைப்புகளை உருவாக்கி, அவை மூலம் இளந்தலைமுறைக்கு விளையாட்டுத் திறனை ஊக்குவித்தேனே... என நினைத்தபோது

” அப்படி எத்தனைபேர் ஒலிம்பிக்கில், ஆசியாட்டில் பதக்கம் பெற்றுள்ளார்கள்? ” என எள்ளலாய் வந்தது காலத்தின் கேள்வி.

               மாவட்ட காசநோய்த் தடுப்பு இயக்கம், அனைவருக்கும் சுகாதார இயக்கம் ஆகியன மூலம் கிராமப்புற மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பரப்புரை செய்ததெல்லாம் சேவை இல்லையா? என மனதுக்குள் நான் பொங்கியபோது....

” அதனால் காசநோய் மட்டுப் பட்டுடுச்சா இல்லே இறப்பு எண்ணிக்கைதான் குறைஞ்சிடுச்சா?” என எதிர்க் குரல் காலத்திடமிருந்து வந்தது உணர்ந்தேன்.

             செஞ்சிலுவைச் சங்க பயிற்சி பெற்று, பள்ளிகளில்  வழிகாட்டியாய், கருத்தாளராய் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்குச் சாலை விபத்துத் தடுப்பு, முதலுதவி மற்றும் மீட்புப் பயிற்சிகள் அளித்திருக்கிறேனே என்றெண்ணியபோது...

” சாலை விபத்துகள் குறைந்து விட்டதா? நீ  கற்றுத்தந்த படி எத்தனைபேர் முதலுதவி செய்து உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்?” என்று பதில் சொல்ல முடியாதபடி வாயை அடைத்தது காலத்தின் குரல்.

நுகர்வோர் பாதுகாப்புக் குழுவில் இணைந்து, எடை மோசடி, கலப்படம் பற்றி வில்லுப்பாட்டு மூலமெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதைச் சொல்லவா? என நினைக்குமுன்..

“ கலப்படமும் எடை மோசடியும் ஒழிஞ்சிருச்சா? ” எனக்கேட்டது காலத்தின் குரல்.

             திருக்குறள் கழகம், இளங்கோவடிகள் மன்றம், கணினித் தமிழ்ச் சங்கம், வீதி கலை இலக்கியக் களம், முதலான இலக்கிய அமைப்புகளில் களமாடி இலக்கியப் பணியாற்றியதையும், ஆறு நூல்கள் வெளியிட்டுள்ளதையும் தாய்மொழியாம் தமிழுக்குச் செய்த தொண்டுகள் இல்லையா ? எனக் கேட்க மனம் ஏங்கியபோது...

” காற்றில் கரைத்த கற்புரம் நீ,  ஆயிரமாயிரம் இலக்கியவாதிகள் சாதிக்காததை நீ என்ன சாதிச்சுட்டே.” எனும் அலட்சியக் குரல் காலத்திடமிருந்து வந்தது.

          இறுதியாக காலம் ஏற்றுக் கொள்ளும் புண்ணிய சேவையைச் சொல்லி ஆறுதலடைய  நினைத்தேன். சர்வசித் மக்கள் சேவை இயக்கத்தில் இணைந்து 200க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் கோரப்படாத உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து எடுத்து நல்லடக்கம் செய்துள்ளமையைக் காலத்தின் செவியில் உரக்கப்  போட்டபோது...

“ இது நல்ல சேவைதான். ஆனால் இனிமேல் அத்தகைய உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கல்லவா போய்விடும்”. என அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது காலம்.

          வாழும் காலத்தே செய்தவையெல்லாம் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய் விட்டதை உணர்ந்த நான்          “ இறந்த பிறகு எனது உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்பிற்காக “உடற்கொடை”யளிப்பதாக 2010ல் 171ஆம் எண்ணில்  பதிவு செய்து மெய்யியல் துறையின் ஒப்புதல் பெற்றுள்ளதைக் காலத்தின் கருத்தில் பதிவிட்டபோது...

” நல்ல செயல்தான். அதற்கும் நீ விபத்திலோ, தற்கொலை செய்து கொண்டோ சாகாமல் இயற்கையாக மரணிக்க வேண்டும் என்ற காலத்தின் எச்சரிக்கைக்கு....

” அந்த நாளைத்தான் விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று நாள்காட்டியின் தேதியை விரைந்து கிழித்தேன்.

Sunday, June 11, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-29


கனக மணிகளினும் 
                மேலாய்க் கண்ணீர்த் துளிகள்

                     ஆடிப்பூரம் பொருட்காட்சிக் கலைமேடையில்  புதுக்கோட்டை கல்வித்துறை சார்பாக, பள்ளி மாணவர்களைக் கொண்டு  “ தலைக்கு ஒரு விலை”  என்ற  நாடகத்தினை அரங்கேற்றி, பாதி நாடகம் நடந்து கொண்டிருந்த வேளையில் “ நாடகத்தை நிறுத்து” என்ற குரல்  இரண்டாவது முறையாகக் கேட்டதும்  குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

                 அங்கே பொருட்காட்சி மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளரான உதவி மக்கள்தொடர்பு அலுவலர் ஆவேசத்துடன் மேடையினுள் நுழைந்தார்.


             “ஏன் சார் நாடகத்தை நிறுத்தணும்?” ன்னு கேட்டேன்


            “ சிறப்பு  நடன    நிகழ்ச்சி நடத்தும் அரசு நர்த்தகி சுவர்ணமுகி வந்துட்டாங்க. அவங்க நிகழ்ச்சி தொடங்கணும்” ன்னார்


“சார் இன்னும் ஐந்து நிமிடத்தில் நாடகம் முடிந்து விடும். முக்கியமான உச்சகட்ட காட்சி அடுத்துதான்” என்றேன்.


                  பரிசில் பெற வந்த ஆவூர்    புலவர் பெருந்தலைச் சாத்தனார்  காட்டில் இருக்கும் குமணனைச் சந்திக்கிறார். அவருக்கு பரிசளிக்க பொருளேதும் இல்லாத நிலையில், தனது தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக தன் தம்பி இளங்குமணன் அறிவித்திருப்பதால், தனது தலையை வெட்டிக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்னை பரிசாகப் பெற்றுக் கொள்ள தனது வாளை புலவரிடம் கொடுக்கிறார். 


                அடுத்த காட்சியில் இரத்தம் வழியும் ஒரு மூட்டையுடன் புலவர் இளங்குமணன் முன் நிற்கிறார். தனது அண்ணனைக் கொல்ல,  தானே காரணமாக இருந்ததை எண்ணிய இளங்குமணன் , மனம் திருந்தி கதறுகிறான்.


              அவனது மனமாற்றத்தைக் கண்ட புலவர், தான் கொண்டு வந்திருப்பது குமணனின் தலையல்ல வாழையின் அடிக்கிழங்கு எனக்காட்டி அண்ணன் தம்பியை சேர்த்து வைக்கிறார்.


இந்த இரு காட்சிகளும் நடந்தால்தான் நாடகக் கரு முற்றாக பார்வையாளர்களுக்கு விளங்கும்.


              ஆனால்  அந்த அலுவலர் எனது கோரிக்கையை  ஏற்காமல் 

“ ஒரு பள்ளி மாணவர் நாடகத்திற்காக அரசு நர்த்தகியைக் காக்க வைக்க முடியாது” எனப் பிடிவாதமாக நாடகத்தை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார்.

              எங்கள் விவாதத்தைக் கண்ணுற்று அங்கு வந்த கல்வித்துறை அலுவலரிடமும் ஒரு ஐந்து நிமிடம்  அனுமதி பெற்றுத் தாருங்கள் நாடகத்தை முடித்து விடுகிறேன் என்று மன்றாடினேன்.


              அவரின்  வேண்டுகோளையும் மறுத்து, முன் திரையை மூடச் செய்தார் அன்றைய உதவி மக்கள் தொடர்பு அலுவலர். கல்வி அலுவலரும் செய்வதறியாது மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.


             “ அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்” என்ற பழமொழியின் பொருளை  அப்போதுதான் உணர்ந்தேன்.


              வேறு வழியின்றி    ஒலி வாங்கியில் ”  மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்  நெருக்கடியால் நாடகம் இத்தோடு நிறுத்தப்படுகிறது” என அறிவித்துவிட்டு,  ஏக்கத்தோடு நின்ற மாணவ நடிகர்களை அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன்.  


             பக்கத்திலிருந்த ஒரு ஆசிரியர் வீட்டில் அவர்களது ஒப்பனையைக் கலைத்து, அவர்களின் ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லி, ஒரு தானியில் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்  அவரவர் இல்லங்களில் சேர்ப்பித்தேன்.


              அரசு நர்த்தகியின் நடன நிகழ்ச்சி முடிந்தபின்,  அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க என்னையும் நாடகத்தில் நடித்த மாணவர்களையும் ஒலி பெருக்கியில்  அழைத்திருக்கிறார்கள் . நாங்கள் அந்த அழைப்பிற்கு மதிப்பளிக்கவில்லை.

                மறுநாள் பள்ளிக்கு வந்த கல்வி அலுவலர் நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தப்பட்டு , மாணவர்களை அழைத்து பரிசுகளை வழங்கிச் சென்றார்.


    ஒரு  படைப்பு அரங்கேற்றத்தின் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கொச்சைப் படுத்தப் படும்போது அந்தப்  படைப்பாளன் படும் மன வேதனையை பட்டவரே உணர்வர். அதைவிட இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்துத் தங்கள் திறமைகளை மேடையில்  காட்டி, பாராட்டுப் பெற நினைத்திருந்த மாணவர்களின் மனநிலை, அவர்களின் பெற்றோரின் மனநிலையும்  எப்படி இருந்திருக்கும்?


 நீறு  பூத்த நெருப்பாக நெடுநாளாக என்னுள் கனன்று கொண்டிருந்த அந்த ஆதங்கம் ஆற்றுப்படும் நாள் ஒன்று வந்தது.


சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் இணைந்து புதுக்கோட்டையில் 21,22,23-01-2011 ஆகிய மூன்று நாள்கள் நடத்திய “இயல், இசை, நாடகத்திற்குத் தமிழின் கொடை” என்னும் கருத்தரங்கின் ஐந்து நெறியாளர்களில் ஒருவனாக நானும் செயலாற்றும் வாய்ப்பு வந்தது.

    அக்கருத்தரங்கின் நிறைவு நாளில் நாடகத்திற்குத் தமிழின் கொடை என்னும் பொருளுக்கான  சங்க இலக்கியம் தந்த நாடகம் ஒன்றினை நடத்தித்தர  திலகவதியார் திருவருள் ஆதீன ப் பொறுப்பாளர்  தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.


    நெடுநாளாய்  நிறைவேறாதிருந்த கனவினை நனவாக்க  முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடிப்பூரம் பொருட்காட்சியில் முழுமை பெறாது தடைப்பட்ட குமணன் வரலாற்றை இன்னும் சற்று விரிவுபடுத்தி “பழிதவிர்த்த பாவலர்” என்னும் பெயரில் ஒரு மணி நேர நாடகமாக அரங்கேற்றினேன். 

 மணிச்சுடர் கலைக்குழுவினரால் நடிக்கப்பெற்ற அந்நாடகம்  கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது.
அந்நாடகத்திற்காகக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

             கருத்தரங்கிற்குத் தலைமை யேற்றிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன எண்பேராயக் குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உதிர்த்த ஆனந்தக் கண்ணீர்தான் .

          ஆம் நாடகத்தில் குமணன் நாடிழந்து காட்டுக்குள் படும் துயரம் முதல் பெருந்தலைச் சாத்தனாரால் மனம் திருந்திய இளங்குமணன் தன் அண்ணனைத் தேடி ஓடி அண்ணனைக்  கட்டித் தழுவி அவனிடம்   தன் தவறுக்கு  மண்ணிப்புக் கோரி  மணிமுடியை ஒப்படைக்கும் காட்சி வரையிலான  நாடகத்தை முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த   சிலம்பொலி செல்லப்பனார் நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து  அகம் மகிழப்  பாராட்டினார். 

            அப்போது பாராட்டுரைத்த கவிச்சுடர் கவிதைப் பித்தன் “அய்யா சிலம்பொலியார்  விழிகள் சிந்திய   ஆனந்தக்      கண்ணீரே”   இந்நாடகத்திற்கான சிறப்புப் பரிசென அறிவித்தார். 


அந்தத் தமிழ்ச் சான்றோரின் கண்ணீர்த் துளிகளே கனகமணிகளினும் மேலாய் இன்றும் என்னுள்ளத்தில்  .

                     அம்மேடை நாடகத்தின் உரையாடல்கள் திருச்சி வானொலி    நிலையத்தாரால் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டு,  திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது .

                  இது போன்ற இலக்கிய வரலாற்று நாடகங்களை உரிய பின்புலங்களோடு நடத்த வேண்டுமென என்னுள் அரும்பிய எண்ணங்களை ஈடேற்ற,  மணிமன்றத்தின் முப்பதாம் ஆண்டு விழா மேடையில் ,    குறுந்தொகையில்  பெண்கொலை புரிந்த நன்னன் என வரும் வரியினை மையப்புள்ளியாகக் கொண்டு  “ துணை தேடும் கணையாழி”  என்னும்  வரலாற்று நாடகத்தை ஆக்கி  பொது வெளி மேடையில்    அரங்கேற்ற முனைந்தேன்.  

அந்த நாடக அரங்கேற்றத்தில்   இதுவரை பட்டிராத  பட்டறிவு எங்களுக்கு.

              என்னவென அறிய ஆவலா? 
       -----பொறுத்திருங்கள்  அடுத்த தொடரில் வரும்.