Wednesday, April 11, 2012

மீண்டுமா?

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
              இன்று பிற்பகல் 2.10 மணியளவில்  இந்தோனேசியா சுமத்ரா பகுதியில் 8.6 ரிக்டர் அளவில்  ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை அதிர்வுக்குள்ளாக்கி, அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
             2004 திசம்பர் 26ல் ஏறத்தாழ 2.5 இலக்கம் மக்களையும் உடைமைகளையும் அழித்த ஆழிப்பேரலையின் தாக்கம், மக்கள் மனதை விட்டு அகலாத நிலையில் இத்தகு இயற்கைச் சீற்றம், பயம் கலந்த விழிப்புணர்வினைத் தூண்டியுள்ளது.
                      நோய் நாடுமுன் நோய் முதல்நாடிட இ யற்கை மனிதருக்கு நடத்தும் எச்சரிக்கைப் பாடம் இது.  இயற்கையைச் சீற்றம் கொள்ளச்செய்யும் மின்அணுக் கழிவுகளால் சுற்றுச் சூழலை மாசு படுத்திக் கொண்டிருக்கும் நாம் பயந்து ஆகப் போவது ஒன்றுமில்லை. 
                     வருமுன்னர் காவாதான் வாழ்க்கை என்னவாகும் என வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மறந்ததன் விளைவு இது. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றலும், அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகளும்  இன்றையச் சூழலில் உள்ளது ஆறுதலான ஒன்று. இனியாவது சுற்றுச் சூழல் காத்து இத்தகு பேரிடர் மீண்டும் தொடராது மேலாண்மைச் செயல்களை மேற்கொள்ளுவோமே.  பாவலர் பொன்.க. புதுகை.
                   

Thursday, February 23, 2012

பேரிடர் மேலாண்மை- ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                20.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி் கலை அறிவியல் கல்லூரி மாணவியர்  அழகம்மாள் புரத்தில் நடத்திய நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமில், பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”இயற்கைப் பேரழிவில் மாணவியர் பங்கு ” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிச்  செயல் முறை விளக்கங்களும் செய்து காட்டினார்.
             முகாமின் திட்ட அலுவலர்  செல்வி தமிழ்வாணி அவர்கள் வரவேற்க, கல்லூரியின் முதல்வர் திருமதி ஜானகி சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
              பாவலர் பொன்.க அவர்கள் தனது உரையில் இயற்கைப் பேரிடர் என்றால் என்ன? பேரிடர்களுக்கான காரணிகள் யாவை? பேரிடர் வருமுன் காத்தல் எவ்வாறு? பேரிடர் காலத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? பேரழிவு நிகழ்ந்த பின்னர் மாணவியர் ஆற்ற வேண்டிய பணிகள் யாவை? என்னும் வினாக்களுக்கான விளக்க உரையினை வழங்கினார்.
முதலுதவியின் நோக்கம், முதலுதவியாளரின் தகுதிகள், முதலுதவியில் பின்பற்ற வேண்டிய முதன்மைச் செயல்கள், மயக்கம், மாரடைப்பு, காயங்கள். எலும்பு முறிவு,  நச்சுக் கடிகள், அதிர்ச்சி முதலியவற்றுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி விளக்கினார். தொடர்ந்து காயங்களின் இரத்த ஒழுக்கை நிறுத்தும் முறைகள், எலும்பு முறிவுக்குப் போட வேண்டிய கட்டுகளின் வகைகள், தீக் காயங்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்டலும் முதலுதவி செய்தலும் பற்றிய செயல் முறை விளக்கங்களைச் செய்து காட்டினார்.             முதலுதவியில் பயன் படுத்தப் படும் தட்டை முடிச்சு, வளைய முடிச்சு. உயிர்காக்கும் முடிச்சு, நாற்காலி முடிச்சு முதலியவற்றைப் போடும் பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டது.
                     மாணவியர் பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டதும், அரும்பிய அய்யப்பாடுகளைக் கேட்டுத் தெளிவு பெற்றதும் சிறப்பாக இருந்தது.

புதிய தலைமுறை -இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                   புதிய தலைமுறை அறக்கட்டளையும் காந்தி கல்வி நிலையமும் இணைந்து, புதுக்கோட்டை  கைக்குறிச்சி வெங்கடேசுவரா கல்வி நிறுவனத்தில், 2012 பிப் 9 மற்றும் 10 ஆகிய இருநாள்கள்  இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த ஒளிப்படக் கண்காட்சி மற்றும் பயனுள்ள வாழ்க்கைக்குத் தேவையான பண்புகள் குறித்த பயிற்சி முகாமினை ” இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?” என்னும் தலைப்பில்  சிறப்பாக நடத்தியது. 
           அம்முகாமில் பாவலர் பொன் கருப்பையா அவர்கள் 10.02.2012  முற்பகல் அமர்வில் ”தியாக மனப்பான்மை” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். 
தனது  உரையில் நாட்டின் விடுதலைக்காக உடல். பொருள், ஆவியினைத் தியாகம் செய்த மாந்தர்களின் அருஞ்செயல்களை விளக்கி இன்றைய இளைஞர்களின் சிரமங்களை நோக்கிப் பயணிக்கும் போக்கினை மாற்றி சிகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய பாதைகளுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 
               புதிய தலைமுறை அறக்கட்டளை  புதுக்கோட்டை மாவட்ட  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ந.சுதாகர் அவர்கள் வரவேற்க, மாவட்ட நுகர்வோர் சங்கச் செயலாளர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமை உரை யாற்றினார். மேனாள்  தலைமைப் பொறியாளர் பொறி. சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். நிறைவில் கல்லூரியின் முதல்வர் திருமதி பிரின்சி இமாகுலேட் அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

தமிழ்ப் புத்தாண்டு நாள் -2043

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                 புதுக்கோட்டை சண்முகா நகர் இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக தி.பி 2043 சுறவம் முதல் நாள்  சண்முகாநகரில் 7 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நாள் விழாச்  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
              விழாவினையொட்டி பகுதி மாணவர்களுக்கான பேச்சு, பாட்டு, ஓவியப் போட்டிகளும், இளைஞர்களுக்கான இறகுப் பந்துப் போட்டிகளும், மகளிர்க்கான கோலப்போட்டிகளும், நடைபெற்றன.
             திறந்த வெளியில் பொங்கலிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவித்து, விளையாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் காலையில்தொடங்கியது.                                  விளையாட்டுப் போட்டி நடுவர்களாக தலைமையாசிரியர் திரு பொன்.க.மதிவாணன், திரு சத்தியமூர்த்தி, திரு.இரா.மணிமாறன், திரு கருணாநிதி, திரு சாண்டில்யன் ஆகியோர் செயல்பட்டனர்
 அதனைத் தொடர்ந்து  மழலையர், சிறுவர், இளைஞர். பெற்றோர் முதலியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள் முழுவதும் நடைபெற்றது. பகுதி மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
            இரவு நிகழ்வாக போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 
            விழாவிற்குப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் திரு உ.சரவணன் தலைமையேற்க, திரு ப. இராமசாமி, முன்னிலையேற்றார். கவிநாடு மேற்கு ஊராட்சி மன்றத் த லைவர் திரு.இரா.சந்திரசேகரன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
            அதனைத் தொடர்ந்து புதுகை சாலமன் வழங்கும் இராகம் மெலோடி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவிற்கு தமிழாசிரியர் அ.சுப்பையா அவர்கள் வரவேற்புரையாற்ற, ஆசிரியர் திரு சீனிவாச நாராயணன் அவர்கள் நன்றிகூறினார். விழா ஏற்பாடுகளை இளந்தென்றல் கலைமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் செய்திருந்தார். திரு சோமசுந்தரம், திரு. கனகராசு, திரு .பா.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் விழாக்குழுவாகச் செயல்பட்டனர்.

Wednesday, December 14, 2011

நேரு யுவ கேந்திரா - கலைவிழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                14.12.2011 அன்று புதுக்கோட்டையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டைக் கிளையும் புதுக்கோட்டை சுழற்கழகமும் இணைந்து  இளையோர்க்கான மாவட்ட அளவிலான கலை விழாவினைச் சிறப்பாக நடத்தினர்.
                
               மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் இளையோர் மன்றத் தினர் முற்பகல் நடைபெற்ற  கலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். நாட்டுப் புறப் பாடல்கள். கிராமிய தனி நடனம்,  கரகம், பரதநாட்டியம், குழு நடனங்கள் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன.

              பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் ஆர்.நீலா ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து மாநிலப் போட்டிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்தனர்.

              பிற்பகல்  வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலை நிறைவு விழா, புதுக்கோட்டை சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் என்.கனகராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

              திரு சேது.கார்த்திகேயன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் மற்றும்  நகர்மன்ற உறுப்பினர் சையது இபுறாகிம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

             நேரு யுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்கவுரையாற்றினார்.  புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகத் தலைவி திருமதி ராணி கனகராசன், மேனாள் தலைவர் திரு செந்தி, ஏஞ்சல் வேர்ல்டு அறக்கட்டளை நிருவாக இயக்குநர்
திரு . ஜே.ஆரோக்கியராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளின் பங்கேற்றவர், போட்டிகளின் சிறப்புப் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் உரையாற்றினார்.

             வெற்றியாளர்களை கவிஞர் ஜீவி அவர்கள் பாராட்டிப்பேசிப் பரிசுகளை வழங்கினார்.. நிறைவாக சுழற்கழகப்  பொருளாளர் திரு.ஆரோக்கியசாமி அவர்கள் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா முடிவுற்றது.

பாரதியார்-130 பிறந்தநாள் விழா - நாடகம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
        
                      11.12.2011 அன்று, புதுக்கோட்டை ஐசுவர்யா கூட்ட அரங்கில், புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய ”கவிராசன் பாரதி விழா” சிறப்பாக நடைபெற்றது.
            
                   கிரவுன் சிட்டி சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் மு.அப்துல் சலாம் அவர்கள் தலைமையேற்க முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.
                       
                         உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
                       
                        இயற்றமிழ் பற்றி இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள்  உரைவீச்சு நிகழ்த்தினார்.  
                      
                      இளந்திரு கி.அரிமோகன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
                     
                        நாடகத் தமிழ் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் முன்னுரையோடு, அவர் எழுதி இயக்கிய, புதுகை மணிச்சுடர் கலைக்கூடம் சார்பான ” இவர்களும் இன்றும்” என்னும் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. 

                     நாடகத்தில் தமிழின் சிறப்பு, தாய்மொழி வழிக்கல்வி, பெண் சமத்துவம், பொதுவுடைமை, சாதி மதப் பிணக்குகள், அந்நிய முதலீடு, நதிநீர்ப் பிரச்சனை, நாட்டு ஒருமைப் பாடு, மனிதநேயம்  ஆகியவற்றின்  இன்றைய நிலைப் பாடும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய அன்றையச் சான்றோர் களாகிய திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் சிந்தனைகளும்  நாடக உரையாடல்கள் வாயிலாக நடித்துக் காட்டப் பட்டது.
                    
                   இந்நாடகத்தில்  திருவள்ளுவராக புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களும், பாரதியாராக புலவர் மகா.சுந்தர் அவர்களும், பாரதிதாசனாராக தமிழாசிரியர் வள்ளியப்பன் அவர்களும்,  கூத்தனாக காப்பாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களும், நல்லமுத்துவாக உடற்கல்வி ஆசிரியர் இராச.ஜெய்சங்கர் அவர்களும் நடித்தனர். தலைமை ஆசிரியர் க.மதிவாணன் கதைமாந்தர்களை ஒப்பனையில் உருவாக்கியிருந்தார். 
                   
                  இசைப் பாடல்களோடும் நகைச்சுவையோடும் நடைபெற்ற இந்நாடகத்திற்கு இளந்திரு கி.அரிமோகன் இசையமைத்திருந்தார்.  
                
                 விழாவின் சிறப்பாக மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு ”மகாகவி பாரதியார் விருது” வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. 
                  
                  சிறப்பு விருந்தினர்களை உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டத் தலைவர் திரு சண்முக பழனியப்பன் அவர்கள் அறிமுகம்  செய்து வைத்தார். 
                   
                  விருது பெற்ற கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்களை கவிராசன்  இலக்கியக் கழகத் தலைவர் கவிஞர் நா.கண்ணன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
                
                    முன்னாள் அமைச்சர் உபத்துல்லா உள்ளிட்ட புதுக்கோட்டையின் இலக்கிய அமைப்பினரும் பொதுமக்களும் அரங்கு நிறைத்து விழாவினைச் சுவைத்தனர்.
               
                  பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
              
                   விழாவினை ஒருங்கிணைத்து நடத்திய கவி .முருகபாரதி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

பேரிடர் மேலாண்மை

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                       01.12.2011 புதுக்கோட்டை அசோக்நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இலாகிஜான் அவர்கள் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்திரு க.பாண்டியன் தலைமையேற்றார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு சபாரெத்தினம் அவர்கள் முன்னிலையேற்றார்.
                     
                    இயற்கைச் சீற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? அவற்றைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணிகள் என்னென்ன? என்பதைப் பற்றி மாணவர் மனங்கொள்ளத் தக்க வகையில்  கருத்தாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் விளக்கினார்.
                    
                    இயற்கைச் சீற்றங்களிலோ, திடீர் நோய்களினாலோ, எதிர்பாராத விபத்துகளினாலோ பாதிக்கப் பட்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்  என்பனவற்றைச் செயல் விளக்கங்களோடு பயிற்சியளித்தார். 
             குறிப்பாக நீரில் மூழ்கியவரை நீளக் கயிறு கொண்டு மீட்டல், தீ, புகை சூழ்ந்த மாடிப் பகுதியில் சிக்கி மயக்கமுற்றவரை தவழ்ந்து மீட்டல், தீயணைப்பவர் தூக்கு மூலம் மீட்டுக் கொணர்தல், சாலை விபத்து, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டல், மயக்கமுற்றவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் , செயற்கைச் சுவாசமளித்தல், நெஞ்சழுத்த முறையில் இதயத் துடிப்பை மீளச் செய்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழி முறைகள், எலும்பு முறிவுகளுக்கு முக்கோணக் கட்டுத் துணி கொண்டு கட்டுகள் போடுதல், காயம் பட்டவரை ஒருவராக, இருவராக, நால்வர் சேர்ந்து தூக்கிச் செல்லுதல்,உருவாக்கத்தூக்கிகள்தயாரித்தல்ஆகியவற்றில்பயிற்சிஅளிக்கப்பட்டது.                                                                                                                 
                     முதலுதவியில் பயன் படும் முடிச்சுகள் போடுவது பற்றிய பயிற்சியும் அளிக்கப் பட்டது, 
மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றனர். நிறைவாக பள்ளிப் பட்டதாரி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நகரச் செயலாளருமான திரு பழனிச்சாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.