Thursday, October 10, 2013

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு மணிமன்றம் மரகதவள்ளி அறக்கட்டளை சார்பாக பாராட்டிதழ் வழங்கப் பட்டது.

Tuesday, October 1, 2013

திருக்கோகர்ணம் - நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்..

                   
    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஐந்தாம் நாள்  நிகழ்வுகள் திருவப்புர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்துள் நடைபெற்றது.

                    மாலை நிகழ்வாக “ இயற்கையை நேசிப்போம் ” என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்  நலப்பணித் திட்ட மாணவர் களிடையே உரையாற்றினார்.

                இயற்கையின் கொடைகளாக மனித சமூகம் பெறும் ஆற்றல்கள் பற்றியும், பல்லுயிரியப் பெருக்கம் நிலம், நீர், காற்று, வான், நெருப்பு ஆகிய ஐந்து மூலங்களின் சீற்றங்களும் அவற்றால் ஏற்படும் அழிவுகளையும் விவரித்துக் கூறினார்.

            புவியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது சரிதானா? என்னும் பாடல் மூலம் இயற்கையை எவ்வாறு மாசின்றி, அழிவின்றிக் காப்பது என்னும் விளக்ங்கங்களையும் மாணவர்களுக்கு உணர்த்தினார். 

             முகாம் மாணவர்கள் மிக்க ஈடுபாட்டுடன் இந்நிகழ்வில்  பங்கேற்றது சிறப்பு

           முகாமின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் அவர்கள் நன்றி கூறினார்.

பெரியார் 1000 வினா-விடை - பரிசளிப்பு

                      29.09.2013 பிற்பகல் புதுக்கோட்டை நில அளவையர் கூட்ட அரங்கில் மாநில பெரியார் உயராய்வு  மையம் நடத்திய “ பெரியார் 1000 வினா-விடை” ப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டஅளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

                மானமிகு மு.அறிவொளி அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்றார்.

               மாவட்டச் செயலாளர் மானமிகு ப.வீரப்பன் அவர்கள் வரவேற்றார்.  ஆ.சுப்பையா, ரெ.புட்பநாதன், ரெ.மு.தருமராசு ஆகியோர் முன்னிலையேற்றனர். 
           
               
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா வெற்றியாளர் களை அறிவிக்க,  பெரியார் மணியம்மை பல்கலைக் கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மைய இணை இயக்குநர் மானமிகு முனைவர். க.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார். மண்டல இளைஞரணிச் செயலாளர் மானமிகு அ.சரவணன் நன்றி கூறினார். 


Friday, September 27, 2013

வழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்

         27.09.2013 அன்று புதுக்கோட்டை அடப்பன்காரச் சத்திரத்தில் வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடை  பெற்றது. 

        அம்முகாமில் “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமா?” என்னும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

        வழக்காடு மன்றத்தின் நடுவராக புலவர் மகா.சுந்தர் செயல்பட்டார்.

       வழக்கினைத் தொடுத்த இராச.ஜெய்சங்கர் மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயம் என்பது குற்றம். வீடே ஒரு மனிதனை மாமனிதனாக்குகிறது என வழக்கினைத் தொடுத்தார்.

       வழக்கினை மறுத்த பாவலர் பொன்.கருப்பையா  சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்   நட்பு வட்டாரம் சேவை அமைப்புகள் மனிதனுக்கு பட்டறிவினையும் சமூக ஈடுபாட்டையும் தருவன... அவ்வாறான சமூக ஈடுபாட்டாலேயே பெரியார், காந்தி, காமராஜ், அன்னை தெரசா, பெர்னாட்ஷா, அண்ணா, மார்க்ஸ் போன்றவர்கள் மாமனிதர்களாக விளங்குகின்றனர் எனச் சான்றுகளுடன் வழக்கினை மறுத்தார்.

         நிறைவில் வீடு நாற்றங்கால்... அது மனிதனை உருவாக்குகிறது.. சமுதாயம் விளைநிலம். ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு ஒளிமயமான சமூகத்திற்கு வழி வகுக்கிறது எனவே “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமே” என நடுவர் மகா.சுந்தர்  தீர்ப்பளித்து  வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

      நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரோடு, ஹரிமோகன், மஸ்தான் பஹ்ருதீன், பொன்.தங்கராசு, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
26.09.2013 அன்று நற்சாந்துபட்டியில் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்  “ இயற்கையை நேசிப்போம்“ என்னும் தலைப்பில் பாவலர் பொன்.கருப்பையா முகாம் மாணவரிடையே உரை நிகழ்த்தியபோது.

Tuesday, September 17, 2013

காசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.

             புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய்ப் பிரிவில் 17.09.2013 அன்று,  புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் சார்பில், நாள்தோறும் காசநோய் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவு தினமும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

           துணை இயக்குநர் ( காசநோய் ) மருத்துவர் எஸ்.ஆர். சந்திரசேகர் அவர்கள்  திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

          மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத் தலைவர் திரு.ஆர்.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன், வசந்தா ஆகியோர் நோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவினை வழங்கினர்.

           சிகிச்சை அமைப்பாளர் திருமதி மணிமேகலை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 

           ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள்.

17.09.2013 அன்று பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.இராமசாமி பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாளில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே, மின்வாரிய அலுவலம் எதிரில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாவட்டத் திராவிடர்கழகத்தினரோடு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா மாலை அணிவித்தார்.