Tuesday, November 29, 2011

சமூக நலத்துறை முதியோர் நாள் விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
29.11.2011 அன்று  காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை காவலர் மன்றத்தில், புதுக்கோட்டை சமூக நலத்துறையின் சார்பாக முதியோர் நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பெ.விஜயராணி அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி க.கௌசல்யா, சமூகசேவகர் புலவர் பொன்.கருப்பையா, கண்ணப்ப நாயனார் கண்தான இயக்கத் தலைவர் திரு.சி.கோவிந்தராசன், மாவட்ட நுகர்வோர் குழு பொதுச் செயலாளர் திரு சு.தனவேலு,  புலவர் மா.நாகூர், ரீகோ தொண்டு நிறுவன அமைப்பாளர் திருமதி பிரான்சிஸ் லில்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர் திருமதி ஆர்.சுப்புலெட்சுமி நன்றியுரையாற்றினார்.

                 தலைமையுரையில் மாவட்ட ஆட்சியர் முதியோர்  முதுமையை எண்ணிக் கவலைப் படாமல், தன்னம்பிக்கையுடனும். மகிழ்சியுடனும் இருக்க வேண்டும் எனவும் தங்களுக்குள்ள பிரச்சனைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறையினை  அனுகித் தீர்வுகாண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.                              சமூக சேவகர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் தனது உரையில் முதுமை சாபமல்ல அது ஒரு வரம், முதிர்ச்சியான அனுபவங்களே எதிர்கால சமூகத்தினரை வழி நடத்தும் முதியோரின் கூட்டுக்குடும்ப நெறியால் ஏற்படும் நல் விளைவுகளையும், முதியோரைப் புறக்கணிப்போர் படும் இன்னல் களையும் விளக்கி, மாண்புகளை மலர்த்திய மூத்தோர்களைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிறைவாக முதியோரை வாழ்த்திக் கீழ்க்காணும் பாடலை இசையுடன் பாடி அனைவரையும் மகிழச் செய்தார். விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்களும் திரளான முதியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடல்.
தத்துவமாய்   விளங்கும்   முதுமக்களே - என்றும்                                                                                            முத்தாய்நல்  மொழிகூறி  வாழ்த்துவமே                             --தத்துவமாய்

சிந்தையில்   ஊறியநல்  எண்ணங்களால் - அருஞ்                                                 
 செயல்பல   ஆற்றினர்   வண்ணங்களாய்                                                                       
முந்தைய    அனுபவத்   தொன்மங்களால் - எங்கும்                                                
 முகிழ்த்தன  பயன்விளை  நன்மைகளே                           -- தத்துவமாய்

வீரத்தில்    உயர்ந்தோங்கும்   சூரர்களாய் - நெஞ்ச                                                   
 ஈரத்தில     சுமைதாங்கித்        தீரர்களாய்                                                                  
சாரத்தால்  நிறைத்திட்டார்  சாதனைகள் - உப                                                            
காரத்தால்  ஓங்குமவர்   போதனைகள்                               --தத்துவமாய்

வாழ்க்கையில்  குறுக்கிட்ட  தடைகடந்தும் - பெரும்                                             
வறுமையை    வென்றுமே     வளமைகண்டார்                                                                  
தாழ்விலும்      நிறைவென்னும்  உயர்வுகொண்டார் - புதுத்                           
தலைமுறை   மேம்பட     வழிகள்தந்தார்                           --தத்துவமாய்

புல்நுனிப்       பனிபோலே    நிலையாமை - அதைப்                                                 
புரியாதோர்  சினம்கொள்வார்  அறியாமை                                                          
வில்லினில்  கணையேற்றும்  வெகுளாமை - நீக்கிச்                                             
சொல்லுக்குள்  சுவைசேர்ப்பார்  பெரும்பான்மை          --தத்துவமாய் 

சிற்பமாய்ச்  செதுக்கிய    சொந்தமெல்லாம் -தம்மை                                                    
அற்பமாய்   ஒதுக்கியும்   குமுறல்கொள்ளார்                                                        
அற்புதக்     கரங்களினால்  அரவணைப்போம் - அவர்                                                 
 பொற்பதம்  காட்டிய  வழிநடப்போம்                                    --தத்துவமாய்

No comments:

Post a Comment