வாசிப்பு முகாமில்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 24.10.2015 ,25.10.2015 ஆகிய இரண்டு நாள்கள் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான “மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாமினை நடத்தியது.மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் தலைமையில் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் உமாராணி அவர்கள் முதல்நாள் முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாற்றுக்கல்வியின் அவசியம் பற்றி மருத்துவர் சலீம், ஸ்டீபன்நாதன் ஆகியோர் உரையாற்றினர்.
“நம்கல்வி நம்உரிமை” ”2016-புதிய கல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்” ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்நூல்கள் பற்றிய குழுவிவாதங்கள் செய்யப்பட்டது.
வாசிப்பிற்கான புத்தகங்களின் மேன்மை பற்றிய பாவலர் பொன்.க.அவர்களின் பாடல் முகாமில் பாடப்பட்டது
பாடல்
புத்தகம் நம்மோடு பேசத் துடிக்குது பேசிப் பார்ப்போமாபுத்தகப் பேச்சினில் வித்தகம் ஆயிரம் விளங்கிக் கேட்போமா?
மௌன மொழியினாலே நம் மௌனம் கலைத்து விடுமே
மனசுக்குள் புதுப்புது மாற்றங்கள் தந்திடும் மகத்துவம் அறிவோமா?
நேற்றைய மாந்தரின் மாட்சியை
வீழ்ச்சியை நிரல்படச் சொல்லிடுமே
இன்றையப் புதுமையின் எழுச்சியை
வளர்ச்சியை எழிலாய்க் காட்டிடுமே
நாளையத் தலைமுறை நாடிடும்
செயலுக்கு நம்பிக்கை ஊட்டிடுமே
நாளொரு நிகழ்வையும் பொழுதொரு
நடப்பையும் நலிவின்றிப் பேசிடுமே
அறிவியல் வளர்ச்சியை அணுயுகப்
புரட்சியை ஆய்வுடன் சொல்லித் தரும்
அருங்கலை மிளிர்ச்சியை அழகியல்
மலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித் தரும்
வானியல் மருத்துவப் பொறியியல்
வேளாண் கருத்துகள் ஊட்டிவிடும்
வாழ்வியல் சுவைகளை வகைவகை
இலக்கிய ஏடுகள் அள்ளித் தரும்.
நம்கல்வி நம்உரிமை என்னும் நூல் பற்றிய விவாதக் கருத்துகள் தொகுத்தளிக்கப் பட்டன.
இரண்டாம் நாள் முகாம் லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்“ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்னும் நூல் பற்றிய அறிமுகத்தினை கவிஞர் ஆர்.நீலா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நூலாசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் தனது ஏற்புரையில் கல்வித் திட்டம் மாறவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்.
முனைவர் ஆர்.இராமானுசம், பேராசிரியர்.பொ.இராஜமாணிக்கம் ஆகியோர் எழுதிய“புதிய கல்விக்கொள்கை விளக்கமும் விமர்சனமும்” நூல் பற்றிய குழுவிவாதம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கை பற்றி பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் அவர்கள் விளக்கஉரை நிகழ்த்தினார்
இரண்டாம் நாள் முகாமில் குழந்தைகளின் மனவெழுச்சிகளுக்கும் இயல்பிற்கேற்பவும் .குழந்தை மையக் கல்வித் திட்டம் இருக்க வேண்டும் என்னும் பொருளமைந்த பாடலைப் பாவலர் பொன்.க .,பாடினார்
பாடல்
சிறகடிச்சுப் பறக்கட்டுங்க சின்னச் சிட்டுக்குருவி -அதன்
சிறகைஒடிச்சு முடக்காதீங்க சிறைக்குள்ளே அடக்கி
குழந்தைங்க மனசுக்குள்ளே கோடிஎண்ணம் ஒளிஞ்சிருக்கு
கொஞ்சிநாம அன்பு செஞ்சா குறைவில்லாதத் திறன் வளரும்
தவறித் தெளிஞ்சுக் கத்துக்கிடத்தான் பிள்ளைகளே விரும்பும்- அதைத்
தடுத்து நமது கருத்தைத் திணிச்சா உரிமையை இழக்கும்
போகுற போக்குல போயித் திருத்துங்க புரிஞ்சுக்கும் நிறைய-சில
போக்கிரிப் பிள்ளையும் புத்திசாலியாகி புதுப்பிக்கும் அறிவை
சொல்வதையெல்லாம் கேட்டுக்கக் குழந்தை அடிமை இல்லைங்க
சொந்தமாச் சிந்திச்சுக் கேட்டு அறியும் துடுக்குப் பிள்ளைங்க
பரிசும் அடியும் பழகிப் போனா பாதிப்பு ரொம்பவுங்க - எதிலும்
பட்டுத் திருந்தும் அனுபவந்தான் பலனை வெல்லுங்க
ஆடிஓடித் திரியும் பருவம் அனுபவப் படிப்பு - அது
ஆற்றலோடு சிக்லைத் தீர்க்கும் அறிவையும் வளர்த்து
ஆக்கப் புர்வச் செயலை வளர்க்கும் கல்வி தேவை்ங்க -அது
ஆளுமையை வளர்க்கும் கருவி அறிந்து கொள்ளுங்க
நிறைவாக பாலகிருஷ்ணன் அவர்களின் தொகுப்புரையோடு முகாம் நிறைவுற்றது.
2 comments:
நன்றி ஐயா
பாடல் மிகவும் அருமை ஐயா...
Post a Comment