Tuesday, September 27, 2016

வீதி கலை இலக்கியக் களம் - 31

25.09.2016 அன்று புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையல் ்கலைக் கல்லூரியில்  வீதி கலை இலக்கியக் களம் -31 ன் சிறப்பான கூட்டம் நடை பெற்றது.
கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், இலக்கியச் சொற்பொழிவு என அடுக்கடுக்கான நிகழ்வுகளில், இத்திங்களில் கவிதை நூல் வெளியீடு என்னும் புதிய பக்கமும் இணைந்து பொலிவு பெற்றது.

       வயது வேறுபாடற்ற இருபது கவிஞர்கள் ஒன்னுமில்லீங்கஎன்னும் தலைப்பில் எழுதிய கவிதைகளின்  தொகுப்பு ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது.

            இத்திங்கள் கூட்டத்தின் அமைப்பாளர்கள் கவிமதி சோலச்சி மற்றும் கவிஞர் மாலதி ஆகியோருடன் அச்சுப்பணியில் மலையப்பன் அவர்களின் பங்களிப்பும் சேர,  கவிதைத் தொகுப்பு நூல் மிகச்சிறப்பாக அமைந்தது.

அத்தொகுப்பினை வீதியின் மூத்த வரிச்சு என்பதால்,
 பாவலர் பொன்.கருப்பையா அவர்களை வெளியிட வைத்துப் பெருமைப் படுத்தினர் அமைப்பாளர்கள். அதனை கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொகுப்பின் அத்தனை கவிதைகளுமே முத்துச்சரமாய் அமைந்திருந்தது.. பெரும்பாலானவர்களின்  விருப்பத்திற்கிணங்கி, பாவலர் பொன்.க .  எழுதித் தானே இசையமைத்த  “ஒன்னுமில்லீங்க” என்ற பகுத்தறிவுச் சிந்தனைப் பாடலை இசையோடு பாடினார். 

இதோ அப்பாடல்...

அறிவை விரிவுசெய் அகிலமுன் வசமாகும் 
                அதிலொன்னும் குத்தமில்லே
ஆசையும் அச்சமும் அடிமைப் படுத்துதே
               அதுதானே ரொம்பத்தொல்லை.
பட்டம்  பதவியால் பணங்காசு சேக்கலாம் 
                பண்பாடு மாறலைங்க
பகுத்தறி  வில்லாத செயல்களால் வாழ்க்கைக்குப் 
                பயனொன்னும்  இல்லீங்க.                      -- அறிவை

கைக்குள்ளே உலகத்தைக் காட்டுற கணினிக்குள் 
               கைரேகை பாக்குறாங்க
கதிதேடிப் பஞ்சாங்கக் குழிக்குள்ளே வீழ்ந்துமே 
               கடனாளி  ஆகுறாங்க
கழுதைக்கும் தவளைக்கும் கல்யாணம்பண்ணியே 
               மழைபெய்ய வேண்டுறாங்க
கடவுளின்  செயலுன்னு  கைகட்டி நின்னாக்கப்  
                பலனொன்னும் இல்லீங்க                      -- அறிவை

சாதீயப் பொருத்தம் சரியில்லை  எனச்சொல்லிக்     
               காதலைக் கொல்லுறாங்க
சாதிகள் கடந்த காதல் மணங்கதான் 
               சமத்துவம் சொல்லுதுங்க
சாதிக்கத் துடிக்கும்  தலைமுறைக் கிடையுறு 
                சாதீயத் தொல்லையிங்க
சமூகம் மாறிட சமநீதி மலர்ந்திடும்
               தீதொன்னும் இல்லீங்க                              -- அறிவை

மனுதர்மம் தலைதூக்கும் மண்ணுக்குள் மனிதம் 
               முடங்கியே கிடக்குதுங்க
மனசுக்குள் கசிந்திடும் அன்பினால் மானுடம் 
               நிமிர்ந்தேதான் நடக்குமுங்க
மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும்  
               நிலையின்னும் மாறலைங்க
மதம்பிடித் தலையாமல் மனிதனாய் வாழ்ந்திடத்  
               தடையொன்னும் இல்லீங்க                   -- அறிவை

சாத்திரம் சகுனம் சம்பிரதாயங்கள்
               சலிச்சுமே போகலேங்க
சனியிடம் பெயர்ந்தும் குருவீடு மாறியும்
              சங்கடம் தீரலேங்க
முனிய  சாமியோ அய்யனா  ரப்பனோ
             துணைக்கேதும் வரலையேங்க
துணிவோடு இனியொரு புதுவிதி செய்திட
             தடையொன்னும் இல்லீங்க.                        -- அறிவை


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா அருமை
தடையொன்றும் இல்லை
அறிவை விரிவு செய்வோம்

Post a Comment