Thursday, March 16, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள்--தொடர்ச்சி-2

கேள்விகளால் உருவான அடித்தளம்.

        தொடர்ந்து  அந்த ஊரில் நடந்து வந்த காமன் எரிந்தகட்சி எரியாத கட்சி இலாவணி நிகழ்ச்சிக்கு மாற்றாக ஏதாவது சமூகக் கருத்துள்ள  மேடைநாடகங்களைப் போடலாமே என  எனக்குள் எழுந்த எண்ணங்களை செயல்படுத்த,  ஒருநாள் என் வயதொத்த விடலைகளோடு  ஊருக்கு வெளியே உள்ள குண்டாற்றங்கரை தென்னந்தோப்பில்  கூடியது எங்கள் இளைஞர் படை ( ஆறுபேர்கள்தான் )

அவர்களிடம் எனது எண்ணத்தைச் சொல்லி,
“நாமே ஏன் ஒரு நாடக்குழுவை உருவாக்கக் கூடாது?” ங்கிற 
கேள்வியை  நா முன் வச்சேன். 
சரின்னு ஒத்துக்குவானுகன்னு நெனச்ச என்னை,  அந்த அஞ்சுபேருக்கிட்டேருந்து அடுக்கடுக்கா  வந்த  கேள்விகள் 
ரொம்பவே திணற வச்சிடுச்சு

ஊரை எதுத்துக்கிட்டு  ஒரு நிகழ்ச்சிய நம்மால நடத்த முடியுமா?
அப்படியே  ஒரு கலைக்குழு வை ஆரம்பிச்சா அதுல என்னென்ன நிகழ்ச்சி வைக்கிறது?
 பாட்டுக் கச்சேரி வைக்கலாமா?
ரெகார்டு டான்சு நடத்துனா மக்கள் விரும்புவாங்களே
நாடகம் நடத்துறதுன்ன யாரு கதை எழுதுறது?
 யாரு டைரக்ட் பண்ணுறது? 
நடிகைக்கு என்ன பண்றது?
நாடகத்துல பாட்டு டூயட்  உண்டா?
நாடகத்துல நடிக்க முதல்ல நம்ம வீட்டுல அப்பா அம்மா ஒத்துக்குவாங்களா?
நாடக ஒத்திகையை எங்கே பாக்குறது?
அந்த கலைக் குழுவுக்கு என்ன பெயர் வைக்கிறது?
தலைவர், செயலாளர், பொருளாளர் யார்?யார்?
ஒரு நாடகத்தை நடத்தற  செலவுக்கு  பணத்துக்கு என்ன செய்யுறது?
அப்படி ஒரு நாடகத்தைத் தயாரிச்சு ஊருக்குள்ள எந்த எடத்துல நடத்துறது?

இப்படி அடுக்கடுக்கா கௌம்புன  கேள்விகளால முதல்ல  அதிர்ந்து போனாலும், தொடங்கும்போதே முடங்கிப் போகக்கூடாது   
எடுத்த காரியத்தை எப்படியாவது நடத்தியே தீருவதுன்னு ஒரு அசட்டுத் துணிசல் எனக்குள் உருவாக ஆரம்பிச்சிடுச்சு.

முதல்ல  ஒரு அரை மணி நேரத்துல நடத்துற மாதிரி சின்னதா ஒரு நாடகத்தை நடத்துறது. அதுக்கு கதை வசனம் டைரக்சன் பொறுப்பை நானே ஏத்துக்கிறது. பெண்பாத்திரம் இல்லாத , காதல் டூயட் இல்லாத நாடகமா போடுறது ன்னு நா சொன்னதும் 

 “பருப்பு இல்லாத சாம்பாரா ? ”ன்னு ஒரு விடலைக் குரல் கௌம்புச்சு.

 படிப்பு, பெத்தவங்க  சம்மதம், ஊராளுங்க எதிர்ப்பு -இதல்லாம் சமாளிக்க முதல்ல இப்படித்தான் செய்யணுமுன்னு அந்தக் கேள்விநாயகன் வாயை ஒரு வழியா  அடைச்சேன்.

சரி நாடகத்தை எங்கே  போடுறது?   அடுத்த  கேள்வி எழும்புச்சு.

ஊர்ல காமன் ஊனியாச்சு. அதையடுத்து  காமன் எரிப்பு 16 நாள் மண்டகப்படின்னு ஊருக்குள்ள ஏதாச்சும்  நடக்கும். பொது இடத்துல போட்டா ஊருப் பெருசுக விடாது.  அதனால ஊர்ப்பொது இடத்துல போடாம, நா வசிக்கிற மேலத்தெருவில போடுறதுன்னு இடத்தையும்  குறிச்சாச்சு.

எப்போ போடுறது?

ஊர் காமன் பண்டிகையைத் தொடர்ந்து  அடுத்தடுத்து திருவப்பூர், கொன்னையுர்,  இளஞ்சாவுர், நார்த்தாமலை, சமயபுரம் மாரியம்மன் திருவிழாக்கள் வரும். அதுனால வைகாசி ( மே ) மாசத்துல போடலாமுன்னு முடிவாச்சு 
அதுக்கு பல கோயில்களுக்கு வேண்டுதல் வச்சிருக்க  ஒரு தீவிர மாரியம்மன் பக்தனைத் தவிர மத்தவங்க ஒத்துக்கிட்டாங்க. 

சரி குழுவுக்கு என்ன பேர் வைக்கிறது?  

ஆளாளுக்கு ஒரு பேரைச் சொல்ல, அந்தச் சமயத்துல சினிமாவுல சிரிக்கவும் சிந்திக்கவும் வைச்ச கலைவாணர் பெயர்லே “கலைவாணர் மன்றம்“ ன்னு வைக்கலாமுன்னு கலைக்குழுவுக்கு பெயர் சூட்டும் அசந்தாவும் முடிஞ்சது.

இப்போ அந்தக் குழுவுக்கு யார் தலைவர்? செயலாளர்? பொருளாளர்? 

பதவிப் பிரச்சனை பெருசா இன்னக்கி மாதிரி போட்டியில்லாம  தலைவரா என்னையே இருக்கச் சொன்னானுக.

“அவருக்குத்தான் கதை வசனம், டைரக்சன் பொறுப்பு கொடுத்தாச்சுல்ல. நம்மல்ல யாரு மூத்தவரோ அவரு தலைவரா இருக்கட்டுமு”ன்னு  ஒரு சனாதனி சொல்ல அந்த அடிப்படையில   சுப்பிரமணியன் என்பவர் ( 19 வயசுதான். மத்தவங்க 17க்குள்ளதான்)  மன்றத் தலைவரா ஏகமனதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வந்திருந்த மற்ற நாலு பேருக்கும் செயலாளர், பொருளாளர். துணைத்தலைவர், துணைச் செயலாளர் பதவிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. 

பொறுப்புக்கு வந்தவுடனேயே  முக்கியமான பிரச்சனையைப்  பொருளாளர் கிளப்புனார். 

“சின்னமோ, பெருசோ  நாடகம்னு ஒன்னு போடணுமுன்ன  அதுக்குக் கொட்டகை, மைக்செட், மேடை, லைட், மேக்கப், சீன் இதுக்கெல்லாம் காசுக்கு என்ன வழி?”

இந்தக் கேள்விக்கு கொஞ்சநேரம் யாராலயும் வாயைத் தொறக்க முடியல.

கேள்வியின் நாயகனே அதுக்கான வழியையும் சொன்னார்.
உறுப்பினர்கள் ஆளுக்கு முதல்ல ஒரு ரூபா போடுறதுன்னு. 

“கடலமிட்டாய் வாங்கக்கூட காலணாக் காசு கையில் இல்லாத வெட்டிப் பசங்க ஒரு ரூபாய்க்கு எங்கே போவாங்க?”
 1963ல் ஒரு ரூபாய்ங்கிறது  ஒரு சராசரிக் குடும்பத்தோட ஒருவார சோத்துப்பாடு . 

வசதியில்லாத,  படிக்கிற பசங்க என்ன செய்றதுன்னு முழிக்க  முனுமுனுக்க  ஒரு ரூபாயைச் சேத்துக்கிட்டு அடுத்த கூட்டத்துக்கு வாங்கன்னு பொருளாளரோட ஒத்தி வைப்புத் தீர்மானத்தோடு ஆண்டிகள் கூடிக் கட்டிய மடத்துச் சுவர்களாய் அன்றைய கூட்டம்    களைந்தது.

ஆனாலும்  எடுத்த முயற்சியில் சற்றும் தளராத வேதாளம் போல என்னுள் எழுந்த கலைக் குரங்கு படைப்புக் கிளைகளில் தீவிரமாய்த்  தாவத் தொடங்கியது. 

ஆம்.  எனது படிப்புக்காகத் தனது மூக்குத்தியையும் இழந்து என்னைப் படிக்க வைத்த என் தாயின் பாசத்தை கதைக்கருவாய்க் கொண்டு எனது  பேனா கவிழத் தொடங்கியது 

  ஒரு மாதத்தில் 40 பக்க நோட்டில்  “தாய்ப்பாசம்” என்னும்  நாடகம் கருக்கொண்டு வளர்ந்தது.  கதை, வசனம் என்ற பெயரில் கிறுக்கப்பட்ட எனது கன்னிப்படைப்பு,  அடுத்த கலைவாணர் மன்றக் கூட்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

--- தொடர்ந்து வரும் 






3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாய்ப்பாசம் காண காத்திருக்கிறோம். உங்களது அனுபவங்கள் எனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள ஆரம்பித்தபோது நான் எதிர்கொண்டவற்றை நினைவுபடுத்தின.

Kasthuri Rengan said...

உங்கள் அனுபவங்கள் இளம் தலைமுறைக்கு அவசியம்
தொடர்க

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
கலைவாணர் மன்றம்
தாய்ப்பாசம்
ஆரம்பமே அமர்க்களம் ஐயா
தொடருங்கள்
காத்திருக்கிறோம்

Post a Comment