Friday, April 28, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள்- தொடர் -16


தடைக் கற்களே  படிக்கற்களாக


                   நீறு பூத்த நெருப்பு நாடகத்தில், சாதி ஆணவக் கொலையாக தாழ்ந்த சாதிப் பெண்ணைக் குத்துவிளக்கு பூசை என்ற பெயரில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் காட்சியில், அந்தப் பெண்ணுக்கு  நஞ்சு கலந்த பாலைக் கொடுக்க, அதைக்  குடித்த அப்பெண்   குத்து விளக்குகளுக்கிடையே மயங்கிவிழ ,ஆதிக்கசாதி செல்வந்தர் தன் உதவியாளோடு அவள்மீது பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்ற வைக்க அவள் எரிந்து சாவதாகக் காட்சி.

                  பெட்ரோலுக்குப் பதிலாக டின்னிலிருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, குத்து விளக்கு அடுக்கியிருந்த பெஞ்சின்  உள்புற விளிம்பில் பார்வையாளர்க்குத் தெரியாமல் பொருத்தியிருந்த தகரத் தோணியில்  கழிவுஎண்ணையையும் சிறிது பெட்ரோலையும் ஊற்றி வைத்திருந்தோம்.  பெண் உடலில் பற்ற வைப்பது போல, அந்த உதவியாள்  அந்தத் தோணியில் ஊற்றியுள்ள எரிபொருளில் தீயைப் பற்ற வைக்க வேண்டும். அது ஆறடி நீளமுள்ள அந்தத் தோணி முழுதும் பரவி எரியும். வெளியிலிருந்த பார்ப்பதற்கு படுத்திருக்கும் பெண்மீது நெருப்பு எரிவது போலத் தெரியும்.

                 திட்டமிட்டபடி  தகரத்தோணியின் ஒரு நுனியில்  செல்வந்தரின் கையாள் பற்றவைத்த தீ  பெஞ்ச் நீளத்திற்கும் பரவி எரிந்தது. ஆனால் நாங்கள் எதிர்பாராத விதமாக அந்தத் தகரத்தில் ஆணிஅடித்துக் கழற்றிய சிறிய ஓட்டை ஒன்று இருந்திருக்கிறது. அதை அடைக்க மறந்து விட்டோம். அதன் வழியாக எரியெண்ணைக் கசிந்து மேடையில் சொட்ட, சொட்டின் வழியே தீயும் மேடையில் விரித்திருந்த தார்பாயில் பிடிக்கத் தொடங்கியது.

                 முன்னேற்பாடாக மேடையின் இரு பக்கத்திலும் ஈரச்சாக்குகளையும்,  எண்ணைத் தீயை அணைக்கக் கூடிய நுரைத் தீயணைப்பானை வாங்கித் தயாராக வைத்திருந்தோம்.  ( எங்கள் மன்ற உறுப்பினர் தீயணைப்புத் துறையில் அலுவலராக இருந்ததால்)

               தார்பாயில் பற்றிய தீ பரவி, மயங்கி விழுந்ததாகப் பெஞ்சுகளுக்கிடையே  படுத்திருந்த அந்த நடிகையின் சேலை முந்தானை வரை சென்றுவிட்டது. விபரீதத்தை உணர்ந்த நான், முன்திரையை மூடச் செய்து, நடிகையை இழுத்து தீப்பற்றாதவாறு ஒப்பனை அறைக்கு அனுப்பிவிட்டேன். இருபுறமும் தயாராக வைத்திருந்த ஈரச் சாக்குகளைப் போட்டும் தீ அணையாத நிலையில் எனது மகன் உடனடியாக நுரைத் தீயணைப்பானைத் திறந்து இயக்கி நுரையைப் பீய்ச்சி தீயினை அணைத்து விட்டார்  ( அவர் ஊர்க்காவல் படையில் தீயணைப்புப் பயிற்சி பெற்றிருந்தவர்)

               இதற்குள் திரையமைத்திருந்த கலியமூர்த்தி  திரைச் சீலைகளைக் காப்பாற்ற, அவற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பார்வையாளர்கள் காட்சியின் மெய்மையை ரசித்துக் கைதட்டிக் கொண்டிருந்தனர்.   மேடையில் இருந்த இசைக் குழுவினர்  இசைக் கருவிளோடு மேடையைவிட்டு இறங்க, ஒலி, ஒளி அமைப்பாளர் மின்சாரத்தைத் துண்டிக்கவும்தான் நடந்த விபரீதம் வெளியே தெரிந்து,  சற்று நேரத்தில் ஒரே கலவரமாகிவிட்டது.

              தகுந்த முன்னேற்பாடு இல்லாமலிருந்திருந்தால் நாடக அரங்கு, அதைச்சுற்றியிருந்த வீடுகள் எல்லாம் மிகப்பெரிய தீ விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருப்போம்.  பத்து நிமிட பதற்றத்திற்குப் பின், மீண்டும் நாடகக் காட்சிகள் தொடர்ந்து நடந்து முடிந்தது.

                எங்கள் மன்றக் கவுரவ உறுப்பினராக இருந்த நினைவில் வாழும் திரு சின்னையா அவர்கள், அவ்வாண்டு   திருவப்பூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு  நடந்த அவர் குடும்பத்தாரின் மண்டகப்படி நாளன்று   அதே நாடகத்தைப் போடக் கேட்டுக் கொண்டார்.

                 அங்கு மிக எச்சரிக்கையோடு இந்தக் காட்சியை அரங்கேற்றினோம். ஆனால் காட்சிஅரங்கேறிய சிறிது நேரத்தில் ஒரு தீயணைப்பு வண்டி  அரங்கின் பின்புறம் வந்து நின்றது. வந்தவர்களிடம் விசாரித்தபோது  யாரோ நாடகக் கொட்டகை தீப்பிடித்து எரிவதாகப் போன் வந்ததால் அவர்கள் வந்ததாகச் சொன்னார்கள். அது எங்களின் தந்திரக் காட்சி என்று சொன்னபின் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

                 இதுபோலத்தான்  நான் பணிபுரிந்த இராசகோபாலபுரம் பள்ளி ஆண்டுவிழாவில் கண்ணகி நாடகத்தில், கண்ணகி,  பாண்டியன் அரண்மனைத் தூண்களில் எரிந்து கொண்டிருந்த தீவெட்டிகளை எடுத்து மதுரையை எரிப்பதாகக் காட்சியமைத்திருந்தேன்.  தலைமை ஆசிரியரும், ஆண்டுவிழாக் குழுவினரும்  தீ எரிக்கும் காட்சி வேண்டாமே என்றனர். அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு,  மிகுந்த முன்னேற் பாடோடு  தந்திரக் காட்சியாக  நடத்தப் பட்டு பயந்தவர்களாலேயே  பாராட்டப் பட்டது.

            அதே பள்ளியில் அடுத்த ஆண்டில் நடந்த ஆண்டுவிழாவில் 
“கருகி மணத்த மலர் ”( ஜோன் ஆப் ஆர்க்) நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் ஜோன் ஆப் ஆர்க்கை கட்டிவைத்து தீவைக்கும் காட்சியிலும் இதேபோலத் தந்திரக்காட்சியை நடத்திக் கல்வி அலுவலர் பொதுமக்களின் பாராட்டினைப் பெற்றது அந்நாடகம்.

              புதுக்கோட்டை  சீதையம்மாள் அரங்கில் நடந்த இளங்கோவடிகள் மன்ற ஆண்டுவிழாவில் “சிலம்பின் சிலிர்ப்பு” நாடகத்தில் கண்ணகி மதுரையை எரிப்பதான காட்சியிலும் இதே தந்திர உத்தியால் அந்நாடகம் சிறப்புப் பெற்றது.




                 நாடகம் நடத்துவதற்கென வசதிகள் கொண்ட அமைப்பு ரீதியான அரங்குகள் புதுகை நகரில் இல்லாத நிலையில், தடைகளையும், அச்சமூட்டல்களையும் கடந்து,  வலிந்து சில தந்திர உத்திகளை எனது நாடகங்களில் கையாண்டு வந்தேன்.

                 கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் நிகழ்த்து கலைகள் வெறும் இன்புறலுக்காக மட்டுமே அமையலாகாது என்பது நாடகச் செம்மல் பம்மல் சம்பந்தம்  அவர்களின் கருத்து. ஒரு கலை அல்லது படைப்பு  பார்ப்பவர் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவே  இருக்க வேண்டும். 

           அந்த எண்ணத்தில் பாமர மக்களிடம் அறியாமையால் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை மாற்றும் முயற்சியாக “ நிலைக் கண்ணாடி” என்னும் சமூக சீர்திருத்த நாடகத்தை ஆக்கி அரங்கேற்றினேன்.


                 
               இந்நாடகத்தில் போலிச் சாமியாரின் பித்தலாட்டங்கள், கைரேகை ஜோஸ்யம், குடுகுடுப்பை,  கோணங்கி, பால்குடம், காவடி முதலான பக்தி முறைகளால் அமைதி குலைந்த ஒரு குடும்பத்தின் கதையை காட்சிப் படுத்த முனைந்திருந்தேன்.

முப்பது நாள்கள் ஒத்திகை நடந்ததில் கதையின் மையப் பொருளால் தங்களின் மகிமை கெட்டுவிடும் என்றெண்ணிய சில ஆன்மீகவாதிகள் இந்த நாடகத்தை அரங்கேறவிடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    அவற்றில் மீண்டு அந்த நாடகம் அரங்கேறியதா? தடைப்பட்டதா?

        -- அடுத்த தொடரில் பார்ப்போமே.

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
போலிச்சாமியாரகளைப் பற்றியா?
இடையூறுகள் வரத்தானே செய்யும்
காத்திருக்கிறேன் ஐயா
அடுத்த பகிர்விற்காக

Kasthuri Rengan said...

அசர வைக்கும் அனுபவங்கள்
தொடரட்டும் அய்யா

சோலச்சி said...

தாங்கள் நடித்த காட்சிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே அய்யா. இருந்தபோதும் இந்தப் பதிவுகள் நாடக காட்சிகளை கண் முன்னே நிறுத்துகிறது. தங்களின் அன்பும் அரவணைப்பும் சோலச்சிக்கும் கிடைத்ததை எண்ணி பெருமைப் படுகிகின்றேன். பதிவுகளை தொடர்ந்து வாசிக்கின்றேன்
நட்பின் வழியில்
சோலச்சி
புதுக்கோட்டை

KILLERGEE Devakottai said...

வணக்கம் தங்களது தளம் இன்றே வருகிறேன்

தங்களது அனுபவம் பலருக்கும் பாடம்.
போலிச்சாமியாரின் தோலுறிப்பதை காண ஆவல் - கில்லர்ஜி

மணிச்சுடர் said...

வருகைக்கு நன்றி

இராய செல்லப்பா said...

..இதைத்தான் 'தீ பரவட்டும்' என்று அறிஞர் அண்ணா கூறினாரோ? நல்ல அனுபவம் போங்கள்!
- இராய செல்லப்பா நியூஜெர்சி

இராய செல்லப்பா said...

..இதைத்தான் 'தீ பரவட்டும்' என்று அறிஞர் அண்ணா கூறினாரோ? நல்ல அனுபவம் போங்கள்!
- இராய செல்லப்பா நியூஜெர்சி

Post a Comment