Monday, May 8, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள்-தொடர்ச்சி 18




தேவைகளும் தேடல்களும்.

                 
               தோல்விகளிலிருந்துதான்  புதுப்புது அனுபவங்கள் கிடைக்கின்றன. அந்த அனுபவங்களே என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றன.

             ஆம் தொடக்கக் காலத்தில் மேடை நாடகங்களை அரங்கேற்றுவதில் எனக்கு ஏற்பட்ட  தடைகள்தான்   என்னைத் தகர்ச்சிக்கு  சிலிர்த்தெழ வைத்தன.

              70 களில் தனிநபர் பிரச்சனைகளை மையப்படுத்தி  பொழுது போக்கு நாடகங்களைப் படைத்து அரங்கேற்றிய என்னைச் சீண்டிவிட்டவை சமூக அவலங்கள்தான்.

              அந்த அடிப்படையில்தான்  விதவைகள் மறுமணத்தை வலியுறுத்தும்   “ பட்ட மரம் ” நாடகம் உருவானது. பழமை விரும்பிகள் “கட்டி அறுத்தவளுகளுக்கு கல்யாணமா?” என்று முகம் சுழித்தார்கள்.   ஆனாலும் அதையே உந்துதலாக எடுத்துக் கொண்டு அதே நாடகத்தை பலமுறை அரங்கேற்றினேன்.

              அறியாமையாலும் மூடநம்பிக்கையாலும்   பக்தி என்னும் போர்வையில் பாழ்படும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  1974ல் நான்  அரங்கேற்றிய “ நிலைக்கண்ணாடி” நாடகத்திற்கு  ஆன்மீக வாதிகள் ஏற்படுத்திய இடையுறு களைத்தான் முந்தையத் தொடரில் எழுதியிருந்தேன்.

             மத்தவன் சொல்லி நாம என்ன கேக்குறது?ன்னு   அங்கலாய்ப்பவர்கள்    தலைவலியும் காய்ச்சலும் தங்களுக்கு வர்றப்பதான்    “ஆமாய்யா அவன் சொன்னதிலேயும் தப்பில்லே”ன்னு ஒத்துக்கிற நிலைக்கு வர்றாங்க.

                  அப்படித்தான் சாதகம், சோதிடம், கைரேகை, குடுகுடுப்பை, கோணங்கி, பில்லி, சூன்யம் எல்லாம் ஏமாற்று வேலைகள், பால்குடம், காவடி, அலகு குத்தல், தீயிலிறங்கி நடத்தல், மதலை சுமத்தல், தோலாண்டி என்பவையெல்லாம்  தேவையற்ற வேண்டுதல்கள்,  மாயம், மந்திரமெல்லாம் மனிதர்களை ஏமாற்றும் செயல்கள் என்னும் கசப்புகளை  எனது “நிலைக் கண்ணாடி” நாடகத்தில்  கலை வடிவில் தேன்தடவிக் கொடுத்தபோது  ஏற்றுக் கொள்ளாமல் எதிர்வாதம் செய்தவர்களில் பலர்  பக்தி மார்க்கத்தினாலேயே  பாதிக்கப்பட்டபோதுதான்  உண்மையை உணர்ந்தார்கள்.

             அப்படி அந்த நாடகத்திற்குப் பிறகு நடந்த பல சம்பவங்களில் ஒரு சில இங்கே...

     நான் முன்பு வசித்த பகுதியில்  எனது பக்கத்துவீட்டுக்காரர்  ஒரு சாமியாடி. அவர்  வீட்டுக் கொல்லைப்புறக் கொட்டகையில் எப்போதும் கோணங்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.  குடும்பக் கோளாறுகள், நோய் நொடி களால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் நாளைக்கு நாலுபேர் வருவார்கள். அவர்களுக்கு முத்துப் போட்டுப் பார்த்து நிவர்த்திக்கு ஏதாவது சொல்லி அனுப்புவார்.

              அவருடைய மனைவிக்கு வயிற்றில் கட்டிவந்து துன்பப்பட்டபோதும்  வெறும் சாம்பலை மந்திரித்துத் தடவுவதும், காளிக்கு  முடிகாணிக்கை செலுத்துவதுமாக இருந்து,கடைசியில்  நோய் முற்றிய நிலையில்  மரணமடைந்தார்.  அதேபோல் அந்த சாமியாடியும் தனது நரம்புத் தளர்ச்சி நோய்க்கு மருத்துவத்தை நாடாமல் மாந்தரீகத்தை நாடி இறுதியில் வாதநோய் பாதித்து இறந்தார். அவரது மாந்தரீகத்தை நம்பிய மக்கள் அப்போதுதான் கொஞ்சம்சிந்திக்கத் தொடங்கினார்கள் .

                  பில்லி சூன்யம் வைப்பது, செய்வினை செய்வது, போன்றவற்றில்  பேர் வாங்கிய    எனது  உறவினர் ஒருவர், எனது அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு, என் தாயாரிடம் 
 “ பய துக்கிரித்தனமாப் பண்றான், சாமிக்குத்தமாயிடும், கண்டிச்சு வை” ன்னு அறிவுரை சொன்னார்.
அவர் தனக்கு வந்த நோயைத் தீர்க்க வழிதெரியாமல் சிரமப்பட்டு  நோய் முற்றிய நிலையில்  அரிமழம் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு காப்பாற்ற முடியாமல் 
இற ந்தே போனார். அவருடைய வாரிசுகள் அப்போதுதான்
 எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.


                நான் வசித்த பகுதியில் ஐந்து பெண்குழந்தைகளின் தாயார் ஒருவர், போதிய வருமானமற்ற கணவர்,  குடும்பப் பிரச்சனை இவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.  ஆன்மீகத்தில் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்த அவர் கணவர் (  எனது நாடகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தவர்)  ஒரு மாந்தரீகரைக் கொண்டு வந்து  தன் மனைவியின் மனநோய்க்கு தீர்வுகாண முயன்றார்.  ஒரு மாதம் இரவு தோறும்    வீ ட்டுக்குள்ளேயே  ஏதேதோ  மந்திரங்கள் செய்வதாகப்   பணத்தைக் கறந்து   அவர்களைக் கடனாளியாக்கி, அந்தப் பெண்மணியைப் பைத்தியமாக்கி  வி ட்டு தலைமறைவாகிவிட்டார்.  அவரே ஒருநாள்  என்னிடம் வந்து  நீ நாடகத்துல சொன்னது சரிதாம்பா. அயோக்கியப் பய என் குடியைக் கெடுத்துட்டான்னு புலம்புனார். பாவம் அந்தக் கவலையே அவருக்கு இறுதியாகி விட்டது.

           எனது நாடகத்திற்கு முட்டுக் கட்டைகள் போட்ட,  எங்கள் பகுதிக் கோயில் பூசாரியாக இருந்த ஒருவர்,  கோயில் பொருள்களை அபகரித்ததும், அவரை ஊரார் புறக்கணித்ததும் எனது நாடகக் கருத்துகளின் மீது பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாக அமைந்தது.

                   எனது கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்கள் எங்கள்  மணிமன்றத்தில் புதிய வரவுகளாக, மீண்டும் அந்த நாடகம் அதே பகுதியில் 1982 ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தேறியது முன்னிலும் சிறப்பான வரவேற்புடன்.


              1991 அறிவொளி இயக்க ஈடுபாட்டினை அடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில்  இணைந்து செயல் பட்டுப் பட்டி தொட்டிகளிலெல்லாம் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த காலம்.

               குறிப்பாக அற்புதங்களை விளக்குதல்  என்னும் தலைப்பில்  மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டது.  அதில் வெறும் கையில் விபுதி வரவழைப்பது, தங்கச் சங்கிலி வரவழைப்பது, தேங்காய்க்குள்  மலர்ந்த மலர்கள், எலுமிச்சம் பழத்தினுள் இரத்தம் வரவழைப்பது,  தலையில் தேநீர் தயாரிப்பது, தீ தேய்த்தல், சூடம் விழுங்குதல்,  தீப்படுகையில் நடத்தல், குழிக்குள் மனிதரைப் புதைத்து உயிருடன் மீட்டல்  முதலானவை அறிவியல் வழிப்பட்டவை என்பதை செயல்வழி நடத்திக் கொண்டிருந்தோம். இதற்காக பாண்டிச்சேரி, நாகை முதலிய இடங்களில் பயிற்சியும் பெற்றிருந்தேன்.

                அந்த சமயத்தில்தான்  ஆன்மீகப் போர்வையில் அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த பாத்திமாநகர் பிரேமானந்தா சாமியாரின் அன்முறைச் செயல்கள் கசிந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஒவ்வொரு சிவன் ராத்திரியிலும் அவர் வயிற்றுக்குள்ளிருந்து லிங்கம் எடுக்கும் அற்புதங்கள் நிகழ்த்துவதும், அதன்பால் ஈர்க்கப்பட்ட பல அரசியல் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல முக்கிய புள்ளிகள் அங்கு சென்று ஆசீர்வாதம் பெறுவதுமான செயல்கள் நடந்து கொண்டிருந்தது.

              ஊடகங்கள் முன்னிலையில் அரசு அலுவலர்கள் பார்வையில்   லிங்கம்  எடுப்பது அற்புதமல்ல அது அறிவியல்  வழிப் பயிற்சி என்பதைப்  பொதுமேடையில்  செய்து காட்டி நீதிமன்றத்திலும் நிரூபித்து அந்தப் போலிச் சாமியார் சிறைத் தண்டனைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் மக்களிடமிருந்த  அத்தகு நம்பிக்கைகள்  கொஞ்சம்  
 மட்டுப்பட்டன. 

            அத்தகு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட  திருக்குறள் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகள் தங்கள்  திங்கள் நிகழ்வுகளிலும், ஆண்டுவிழா நிகழ்வுகளிலும்  முற்போக்குக் கருத்துள்ள கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த எங்கள் மன்றத்திற்கு    அழைப்பு விடுத்தன.  வாய்ப்புகளில் மகிழ்ந்தாலும், பல மாறுபட்ட பின்புலக் காட்சிகளை வைத்து அரங்குகளில் நாடகம் நடத்திய எனக்கு ஒற்றைத் திரையிலேயே  கதையையும் காட்சிகளையும் நகர்த்த வேண்டிய நெருக்கடி இருந்தது.

ஆனாலும் கருத்துகள் பரவட்டும் என்ற நோக்கில் அந்த மேடைகளிலும்  பகுத்தறிவுக் கருத்துகளை நாடகமாக்கி நடத்தினோம்.  அவற்றுள்   நகர்மன்றத்தில் அரங்கேற்றிய   ஆசிரம அக்கிரமங்களைத் தோலுரிக்கும்    “நெருஞ்சிப் பூக்கள்” என்ற நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப் பட்டது.

     

            இப்படி  போலிச் சாமியார்களைப் பற்றியேதானா நாடகங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இன்றும் அவற்றின் தேவையுள்ளதால்  இரண்டு தொடர்களும் அதற்கானதாகிவிட்டது.

          அடுத்த  பதிவில், பெண்ணுரிமை, பெண்சமத்துவம்   ச மூக சமநீதி பற்றிய நாடகங்களின் சிறப்புகள் தொடரும்.




2 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் பாவலரே...
தங்களது அனுபவம் பலருக்கும் பயன் பெறும்வவிடயமே... தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போலிச்சாமியார்கள் என்று கூறவேண்டாம் ஐயா. சாமியார்கள் என்றாலே போதும். பெரும்பாலும் அங்கு போலிதான்.

Post a Comment