நாற்றங்காலும் நடவுப் பயிரும்
மாற்றுக் கருத்துகளைக் கருத்து ரீதியாக எதிர் கொள்வர் கொள்கை வாதிகள் சிலர் . குள்ளநரிகளாய் கூட இருந்தே அடுத்துக் கெடுப்பவர் பலர்.
எனது முற்போக்கு நாடகக் கருத்தகளை விரும்பாத அத்தகு குள்ளநரி ஒன்று. “ கரையேறிய அலைகள்” நாடகத்தில் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடிக்க, இருபது நாள்களாகப் பயிற்சி பெற்றிருந்த ஒருவரை நாடகத்தின் முதல்நாள் கடத்திவிட்டார்.
இறுதி முழு ஒத்திகையின்போது அவரைக் காணாது தேடினால் அவரது அண்ணன் அவரை மேல்மருவத்தூருக்கு ஒரு அவசர ஆன்மீகப் பணிக்காக அனுப்பி விட்டதாகத் தெரிந்தது.
“அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தில் கதைத் தலைவனாக நடிக்கப் பயிற்சியெடுத்தவர் திடீரென பணி மாறுதல் காரணமாக சென்னை சென்றுவிட, நான் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கசப்பான பட்டறிவால், அடுத்தடுத்த நாடகங்களில் நான் எந்த முதன்மைப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்காமல் என்னை எதற்கும் தயாரான நிலையிலேயே ( ஒரு ஜோக்கர் போல ) வைத்திருப்பேன்.
எந்த க்காலி இடத்தையும் இட்டு நிரப்பும் திறமை யுள்ளவன்தான் ஒரு மேடைநாடக இயக்குநராக இருக்க முடியும் என்பது எனது மேடை நாடக அனுபவம்.
அந்த வகையில் இந்த நாடகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்கக் காவல் ஆய்வாளர் பாத்திரத்தை நானே ஏற்று நடித்து, நாடகம் நின்றுபோகும் எனக் குள்ளநரி கண்ட கனவினைக் களைத் தொழித்தேன்.
“இத்தனைக்குப் பிறகும் மேடை நாடகத்தைத் தொடர வேண்டுமா?” என்ற விரக்தியில் சோர்ந்து போயிருந்த எனக்கு அரசு வழக்குரைஞராக அப்போதிருந்த திரு எருதலான், திரைப்பட இயக்குநர் மகேந்திரா போன்றவர்கள் “சமூக மாற்றத்திற்கான கூர்ப்புள்ள கருவி மேடை நாடகங்கள்”, விடாது தொடருங்கள் எனப் புத்துணர்ச்சியளித்துத் தொடரச் செய்தனர்.
அந்தத் தெம்பினில் 1987ல் இரு முறையும், 1990ல் இருமுறையும் சிறப்பாக அரங்கேறிய சமூக நாடகம்தான் “ தனிக்குடித்தனம்”
இந்த நாடகக் கதையும் ஒரு பெண்ணின் சீர்மைச் செயலை உட்கருவாகக் கொண்டதுதான்.
ஒரு குடும்பத்தில் தலைமகனாய்ப் பிறந்தவன்தான் அந்தக் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் வாழ்நாள் முழுதும் சுமக்கவேண்டுமா? அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகளுக்குத்தான் அத்தனை சுமைகளுமா? என்ற கேள்விகளுக்கு , அந்த தலைமகனுக்கு மனைவியாய் வந்த பெண் மூலம் விடை தேடுவதாய் அமைந்தது இந்நாடகம்.
படிப்பு, பருவம், உடல்திறன் அனைத்தும் இருந்தும் அண்ணன் வருவாயில் ஆடம்பரமாய் வாழ நினைத்த தனது கணவனின் தம்பி, தங்கை ஆகியோர்க்கு குடும்பப் பொறுப்பை உணர்த்த முயல்கிறாள் தலைமகனின் மனைவி பரிமளம். உடன் பிறந்த தங்களைவிட இடையில் வந்தவளுக்கு என்ன உரிமை என,
தங்கள் சுகபோகத்திற்குத் தடையாய் இருப்பதாய் அ ண்ணியின் அறிவுரையை அலட்சியம் செய்கின்றனர் தலைவனின் உடன் பிறப்புகள்.
அவர்களுக்குப் பணத்தின் அருமையை உணர்த்தவும், வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கவும் , தான் ஒரு எதிர்த் தலைவியாக மாறித் தனது கணவனோடு அந்த வளாகத்திலேயே ஒரு வீட்டிற்குத் தனிக்குடித்தனம் போகிறாள் கதைத் தலைவி பரிமளம்.
தங்களைத் தவிக்கவிட்டுத் தங்கள் அண்ணனோடு தனிக்குடித்தனம் சென்ற பரிமளத்தை அவள் கொழுநனும், நாத்தியும் எதிரியாக நினைத்து வெறுக்கின்றனர்.
தனித்து விடப்பட்ட இருவரும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதிலும், அவர்களுக்கு வருமானத்திற்கான வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும் , மறைமுகமாக உதவுகிறாள் பரிமளம்.
தனது அண்ணனைவிட அதிக வசதிகளை அடைய, குறுக்கு வழியில் பொருளீட்ட முனைத்த தம்பி முத்து, ஒரு மோசடிக் கும்பலில் சிக்கித் தவிக்கிறான். தனது அண்ணியைவிட மேலான நகை, புடவைகளுக்கு ஆசைப்பட்ட விசயா ஒரு ஆடம்பரப் பிரியனை நம்பி மோசம்போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
அவர்களை அவர்களின் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி, இருவருக்கும் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து வாழ்க்கை அனுபவங்களை உணர்த்துகிறாள் பரிமளம்.
பரிமளத்தின் நல்லெண்ணச் செயல்களால் நாணப்பட்ட இருவரும் இறுதியில் கூட்டாகச் சேர்ந்து வாழ விரும்புகின்றனர்.
தனியே இருக்கும் போதுதான் சொந்தக் காலில் நிற்கும் பொறுப்பு அதிகரிக்கும். குடும்பங்கள் பிரிந்து இருந்தாலும் பாசம் என்றைக்கும் சேர்ந்தே இருக்கும் என அறிவுறுத்தி அவர்களைத் தனிக்குடித்தனம் அமர்த்துகிறாள் பரிமளம்.
நகைச் சுவை, செட்டிங், இவற்றால் இந்நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நாடகத்தில் இரண்டு புதிய முயற்சிகள்.
திரைகளைக் கொண்டு காட்சிப் பின்புலத்தை மாற்றுவதைத் தவிர்த்து, ஒரே அரங்க அமைப்பில், மாடிப்படியோடு கூடிய நான்கு குடியிருப்புகளைக் காட்டுவது. மூன்று நுழைவாயில் கொண்ட குடியிருப்புகள் கீழே. மாடியில் ஒரு குடும்பம் வசிப்பதாகக் காட்டுவது .
அதற்காக ஒரு மாதம் முயன்று செட்டிங் தயாரித்திருந்தேன். ஒவ்வொரு குடும்பத்தின் செயல் நடப்பை அந்த வீட்டின் விளக்கால் பிரித்து அடையாளப்படுத்தி யிருந்தேன்.
விளக்குகள் எரிய வேண்டிய குறிப்புகளை ஒளியமைப்பாளர் ஒரு காட்சியில் மாற்றி எரியவிட, குடியிருப்பு மாறிப்போன குழப்பம் ஓரிடத்தில்.
மேடை மாடிப்படியில் ஏறிப்போனவர்கள் இறங்க வழியின்றித் திண்டாடியதும், வெளியிலிருந்து காட்சிக்கு வரவேண்டியவர்கள் இறங்காமல் அங்கேயே நின்ற தால் அடுத்த காட்சிக்கு வெளியிலிருந்து வரமுடியாமல் தவித்த முரண்நகைச் சுவைகளும் நடந்தன.
நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தவர்களை கவனித்துவிட்டு நாடகத்தைத் தொடங்க மேடைக்கு நான் வந்தபோது...
நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் “நடிக்க முடியாது” என்று மேடையிலேயே ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டனர்.
அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்?
--- அடுத்த தொடரில்
2 comments:
நடிகள்களே தர்ணா செய்தார்களா
பிறகு என்ன ஆயிற்று ஐயா
காத்திருக்கிறேன்
புதுகை மணிச் சுடர்
தங்கள் வலை சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும் ஐயா
Post a Comment