Sunday, June 4, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-27

விழி திறந்து ஒளி தந்த மகளே

                 “தனிக்குடித்தனம்”  நாடகத்திற்கு தலைமையேற்ற சிறப்பு விருந்தினரை வழியனுப்பிவிட்டு, நாடகத்தைத் தொடங்க வேகமாக மேடைக்கு ஓடியபோது, அங்கே  நாடகத்தில் நடிக்கக் கூடிய மன்ற நடிகர்கள் எல்லோரும்   திரை திறந்த ஒளிமேடையில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.

            என்னைப் பார்த்ததும் “ மாட்டோம்  மாட்டோம் நாடகத்தில் நடிக்க மாட்டோம்” என ஆர்ப்பாட்டக் குரல் கொடுத்தார்கள்.
“என்னப்பா பிரச்சனை?”
 “நிறைவேற்று நிறைவேற்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்று”
“ என்னப்பா உங்க கோரிக்கை?“
“நிறைவேற்ற உறுதி கொடு”
“என்னன்னு சொன்னாத்தானே முடியுமா முடியாதான்னு சொல்லமுடியும்”
“ உங்களாலே முடியும். உறுதி கொடுங்க ”
 “ நேரமாயிடுச்சு,  எதுவானாலும் நாடகம் முடிஞ்சு பேசிக்குவோம்“
“முடிஞ்ச பிறகு எதுக்கு? தொடங்கும் முன்னே செய்யுங்க”
“ என்ன செய்யணும் சொல்லுங்க”
செய்யுறேன்னு சொல்லுங்க”
 “ இப்போ நாடகத்தை நடத்தப் போறீங்களா இல்லே கல்லெறி வாங்கப்போறீங்களா? -- பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு குடிமகனின் மிரட்டல்  குரல்.

“செல்வின் சார், நீங்க சிலைடைப் போடுங்க” நாடகத்தை ஆரம்பிப்போம்”  - ஒளிப்பதிவாளரிடம்  நான்

” போடாதே போடாதே. சிலைடு போடாதே”  கூட்டாக எதிர்ப்புக் குரல் மேடைக் கலைஞர்களிடமிருந்து 

 “  இப்ப என்னதான் செய்யணுங்குறீங்க?“

“ முதல்ல நாங்க கேக்குறதைச் செய்யுறேன்னு சொல்லுங்க”

 அட செய்யுறேன்னுதான் சொல்லேய்யா”  தர்ணாவுக்கு ஆதரவாக ஒரு ரசிகரின் குரல்.

“ சரி செய்யுறேன், என்ன செய்யணும்?

“அப்படிவாங்க வழிக்கு,  30நாள் 40 நாள்ன்னு எங்களை ஒத்திகை ஒத்திகைன்னு போட்டு வதைக்கிறீங்கல்ல, எங்களை யாருன்னு மக்களுக்கு அடையாளம் காட்டுறீங்களா?”  கதைத்தலைவனா நடிக்க இருந்தவரின் கேள்வி
“என்னப்பா நாடகத் துண்டறிக்கையிலே எல்லோருடைய பெயர்களையும்  அச்சடிச்சுத் தானே விளம்பரம் பண்றோம்.”

“நோட்டீசிலே சரி, மேடையிலே....?”

 ”அதான் வெள்ளைத் திரையில வண்ண சிலைடுல பெயர்களைப்  போடுறோமுல்ல”

“அது எங்க ஆயி அப்பன் வச்ச பேரு, இந்த மூனு மணி நேரத்துக்கு  எங்களுக்கு  என்ன பேரு?
.......

“ சார் , நாடகத்திலே என்ன பேருல நடிக்கிறோம்” மன்றத் தலைவரின் கேள்வி

“ நீங்க காதர்பாட்சாவா. அவரு பாட்டு வாத்தியார் பசவப்பா”

“அப்படி கேரக்டர் பேரைச் சொல்லி எங்களை மேடையில அறிமுகப் படுத்துங்க”

“அவ்வளவுதானே. செஞ்சுடுறேன். எல்லாம் எந்திரிச்சு அந்த நீலத்திரைக்குப் பின்னாலே போங்க” ன்னு சொல்லிட்டு அவங்க கோரிக்கையை நிறைவேற்றத் தொடங்கினேன்.

               ஒவ்வொருவருடைய நாடகப் பாத்திரப் பெயரையும் நடிப்பவர் பெயரையும் நான் சொல்லச் சொல்ல ஒவ்வொருவராக வந்து தங்களின் “பஞ்ச்” டயலாக் ஒன்றைச் சொல்லிச் சென்றனர்.

             நாடகம் பார்வையாளர்களின் கையொலியுடன் கலகலப்பாகத் தொடங்கியது .

             நாங்கள் முன்னரே திட்டமிட்டுச் செய்த ஒருவகை
 “அறிமுக உத்தி” என்பது பார்வையாளர்களுக்குத் தெரியவா போகிறது?

                                                   பெண்சிசுக் கொலை.

 பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியும், நெல் மூக்கைச் செருகியும் கொன்றழிக்கும் ஈனச்செயல்  தென்மாவட்டக் குக்கிராமங்களில் நடப்பதான செய்தி நாளேடுகளில் பரபரத்த வேளை.

               பெண்சிசுக் கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தி 1994ல் ஆக்கப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த மேடை நாடகம்தான்
 “ விடியலைத்தேடி”





                 பெண்களுக்குத் திருமணத்தின்போது சீர்வரிசை செய்வதைச் சுமையாகக் கருதி, அந்தியுர் என்ற கிராமத்தில், பெண்குழந்தை பிறந்தால் உடனே அக்குழந்தையின் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியோ, நெல்சுனையை அக்குழந்தையின் தொண்டைக்குள் செருகிக் கொன்று புதைத்து விடும் சமூகஅநீதிச் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.     பள்ளி.  போக்கு வரத்து செய்தித் தொடர்பு என்ற எவ்வித   வசதிகளும்    இல்லாத    அந்த மலைக்கிராமம்    கங்காணியார் குடும்பம்  என்ற ஒரு தனிக் குடும்பத்தின் சர்வாதிகாரத்தில்   இயங்கும் 
ஒரு  த னித் தீவாகவே இருந்து வந்தது.

              இரண்டு முறை பெண்குழந்தை பிறந்து அவற்றைக் கொன்ற   பின்னர் மூன்றாவதும்  பெண்குழந்தையாகப்    பிறந்தால், அப்பெண் தன் கணவனை விலக்கிவிட்டு ஆண்குழந்தை வேண்டி  வேறு கணவனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற  முரண்பாடான நடை முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது அக்கிராமத்தில்.

                அந்த கங்காணி மகள் குருவம்மாவுக்கு  மூன்றாவதாகப் பிறந்த  பெண்  குழந்தையைக் கொன்று புதைக்க அக்குழந்தையின் தந்தை  கொண்டையனிடமே ஒப்படைக்கிறார்  கங்காணி.  அவன் அக்குழந்தையைக் கொல்ல விரும்பாமல்  அடுத்த ஊர்    தமுக்கு அடிக்கும் கொம்பேறி என்பவனிடம்   வளர்க்க  ஒப்படைத்து  விட்டு கரடிக்காட்டிற்குள் தலைமறைவாகிறான் கொண்டையன்.

               தாய் முகம் தெரியாது, தன்னை  வளர்த்த    கொம்பேறியே தனது தந்தை என நினைத்து  வேணி என்னும் பெயரில்   வளர்கிறாள்  அக்குழந்தை .  அப்படி வளர்ந்த அந்தப்பெண்   படித்துப் பட்டம்பெற்று   புலனாய்வுக்  காவல் ஆய்வாளராகிறாள்.

                அந்தியுரில் நடக்கும்  சிசுக் கொலை தடுப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட வேணி,  மாறுவேடத்தில்    அந்தியுர் வந்து  கங்காணி வீட்டில்  எடுபிடியாக இருக்கும்  ஊமைத்துரை என்னும் வெகுளியோடு பழகி  இரகசியங்களைச் சேகரிக்கிறாள்.



                 கொண்டையனை விலக்கிவிட்டு புலிக்குட்டி என்பவனைத் தன் மகள் குருவம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் கங்காணி. வெடிவிபத்தில் கங்காணி இறந்ததும்  குருவம்மாள் அந்த கிராமத்தையே  ஆட்டிப் படைக்கிறாள்.

              பெண்சிசுக்களைக் கொல்வதில் கொடூரமாக நடந்து கொள்ளும்        கு ருவம்மாவுக்கு   அவளுடைய     மகன் கோபால் முரடனாகத்  தாயின் அன்முறைக்கு துணையாகிறான்.

              உளவுபார்க்க வந்திருக்கும்    வேணியை  ஊரைவிட்டு விரட்ட அவளின் தந்தை  வெட்டியான்  கொம்பேறியை அடியாள்களை வைத்துத் தாக்குகிறான். கடுமையான தாக்குதலால் இறக்கும் நிலையில்,  கொம்பேறி வேணியோடு பழகும் ஊமையனிடம்   தனது மகள் இல்லை,  கொண்டையன் மகள் என்பதைச் சொல்லி இறந்து விடுகிறான்.

               தன் தந்தை இறப்புக்குக் காரணமான கோபாலைச் சட்டத்தின் முன் நிறுத்த வேணி முயற்சிக்கையில் அவளை தன் கூலிப்படை மூலம் கடத்திக் கொல்ல முயற்சிக்கிறாள்  குருவம்மா.

              கொம்பேறி இறந்ததையும், அவனால் வளர்க்கப்பட்ட தன் மகள்     வேணி குருவம்மாவால் கொடுமைப் படுத்தப்பட இருப்பதையும்  ஊமைத்துரை மூலம் அறிந்த கொண்டையன்,  வேணியைக் காப்பாற்ற  வருகிறான். 

               வேணியைத்தூணில் கட்டி வைத்து மண்ணெண்ணையை ஊற்றி எரிக்க முயலும்  குருவம்மாவைத் தடுத்து,  வேணி தங்கள் மகள் என்னும் உண்மையைச் சொல்கிறான்  கொண்டையன்.


                பெண்களால்தான் ஒருசமூகம் முன்னேறமுடியும். மாற்றத்திற்கான விதைகள் பெண்களாலே விதைக்கப்படுகிறது. பெண்கள் இல்லாத உலகு விடியல் இல்லாத  இருளாகவே இருக்கும், மணம்தரும் மலர்களை அரும்பில் அமிலம் ஊற்றிக் கருக்கலாமா? எனப் பெண்களின் அருமை பெருமைகளை குருவம்மாவுக்கு உணர்த்துகிறான் கொண்டையன். 

                     பெண்சிசுக் கொலைக்கு ஒரு பெண்ணான தானே காரணமாகியிருந்த தனது செயலுக்கு வருந்துகிறாள் , பெண்குழந்தைகளை அரும்பவிடாமல் அழித்து     மனித      குலத்தையே    குருடாக்கிய   தனக்கு   தன்மகளே விழி திறந்து  
ஒளிதந்தவள் எனப் பெருமை கொள்கிறாள்.  


            --- அடுத்த தொடரில் வரலாற்று நாடக அனுபவங்கள்.



       









3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நாங்கள் முன்னரே திட்டமிட்டுச் செய்த ஒருவகை
“அறிமுக உத்தி” என்பது பார்வையாளர்களுக்குத் தெரியவா போகிறது?

நாடகத்திற்குள்ளேயே மற்றொரு நாடகமா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அறிமுக உத்தியை வித்தியாசமான முறையில் இருந்தது. பெண் சிசுக்கொலை நாடகம் பல திருப்பங்களைக் கொண்டு சிறப்பாக அமைந்திருந்தது. பாராட்டுகள்.

Kasthuri Rengan said...

காலத்தின் முன்னே பிறந்துவிட்டீர் ஐயா ...
இந்தக் காலம் என்றல் அகிலம் அறிந்த முகமாக இருப்பீர்...
செமையான அனுபவப் பகிர்வு

Post a Comment