Wednesday, June 7, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் . தொடர்ச்சி-28

புகழ்ச்சியில்   பணிவும்,  
இகழ்ச்சியில்  துணிவும்

                 வரலாற்று நாடகப் பயணத்தில், பொதுவெளி மேடை நாடக அரங்கேற்ற அனுபவங்களுக்கு முன், பள்ளி மேடைகளில் அரங்கேறிய வரலாற்று நாடக அனுபவங்களில் ஒன்றிரண்டைப் பதிவிடலாமென நினைக்கிறேன்.


                 நான்  நகராட்சிப் பள்ளியில்   ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆண்டில் (1969) நாடெங்கும் காந்தியடிகள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.

                பள்ளிகளில் காந்தியடிகளின் வாழ்வியல் சிறப்புகளை, பாட்டு. நடனம், முதலான கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று அரசின் சுற்றறிக்கை.

               பலபள்ளிகளில்  காந்தியின் புகழ்பற்றிய பாடல்கள், நடனங்கள் தயாரிக்கப்பட்டன. நான் பணிபுரிந்த மாலையீடு நகராட்சிப் பள்ளி,  நகராட்சி ஆணையரின் நிருவாகத்தின் கீழ் இருந்தது.  பள்ளிச் செயல்முறைகளைப் பார்வையிட வந்த பள்ளித்துணை ஆய்வாளர்  திரு பரமசிவம் அவர்கள்   என்னை அழைத்து  “எல்லாப் பள்ளிகளிலும் பாட்டும் ஆட்டமுமா இருக்கு . நீங்க காந்தி பற்றி ஒரு சின்ன  நாடகத்தைத் தயாரிங்க” ன்னார்.

            அவர் அப்படி என்னைப் பணித்தமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நான் புதுக்கோட்டையில்  ஆதார ஆசிரியர் பயிற்சி படித்த காலத்து  அவர் எனக்கு ஆசிரியர் பயிற்றுநராக இருந்தவர்.   பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்து  விடுதி விழாவில்  நான் நடத்திய  “வழிகாட்டி” என்ற நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியவர்.

               இன்னொன்று  1964ல் இருந்து நான் மணி மன்றம் 
தொடங்கி,  பிச்சத்தான்பட்டியில்     பொது மேடையில் நடத்திய நாடகங்களை நகர வாசியாய் இருந்து  பார்த்தவர். 

             அந்த நம்பிக்கையில்தான்  என்னிடம்  நாடகப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது.

             அவர் பணித்ததைத் தட்ட முடியாமல்  “காந்தியின் அகிம்சை” என்ற பெயரில்    ஒரு  பத்து நிமிட நாடகத்தைத் தயாரித்திருந்தேன்.

             மாவட்ட விழாக்குழு அந்த நாடகத்தைத் , காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் நடத்தத் தேர்வு செய்து விட்டனர்.

             இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு திறந்த ட்ரக்கில்  அந்த நாடகக் குழு  நகரின் முக்கிய இடங்களில்   நாடகத்தை  நடித்துக் கொண்டே விழா மேடைக்குச் செல்ல வேண்டும். அதாவது நகரும் நாடகக்குழுவாக.

              மூன்றாம் வகுப்பில் ஒரு மாணவனை மொட்டை யடிக்கச் செய்து உடன்  நடிக்கும்     நான்கு மாணவர்களையும்  ட்ரக்கில் ஏற்றி அவர்களுடன் ஊர்வலத்தின் முன்னே எங்கள் பள்ளியின் நகரும் நாடகக்குழு நகர்ந்தது.  நான்கு இடங்களில் நடித்துக் காட்டி நிறைவாக திருவப்புரில் நடந்த நிறைவு விழாவில் அரங்கேற்றியது.

              அது முதலாக நான் பணிபுரிந்த 13 நகராட்சிப் பள்ளிகளிலும்  பள்ளி ஆண்டுவிழா என்றால் கலை நிகழ்ச்சிப் பொறுப்பு என் தலையிலேயே சுமத்தப்பட்டது.

             அப்படிப் பள்ளி ஆண்டுவிழாக்களில் நடத்திய வரலாற்று நாடகங்களில்   சிறப்பாகக்   குறிப்பிடத் தக்கவை     மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் சிறு துளியான “மலைநாட்டு மன்னன்”, 

          சிலப்பதிகாரத்தில் ”கண்ணகி” வழக்குரைத்த காதை, 

        பிரான்சு வீரமங்கை ஜோன் ஆப் ஆர்க்கின் “ நெருப்பில் வீழ்ந்த மலர்”  

 “ சாணக்கிய சபதம்”   “ தலைக்கு ஒரு விலை”

  ஜான்சி ராணி இலக்குமிபாய் வீரம் பற்றிய
“விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” முதலியன.

              பள்ளி மேடைகளில் வரலாற்று நாடகங்களை நடத்துவதில்  இரண்டு நெருக்கடிகளைச் சந்தித்தாக வேண்டும். ஒன்று பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் நாடகம் முடிய வேண்டும். ஏனென்றால் நடனம், பாடல், முதலான பல நிகழ்ச்சிகளுக்கு  பல வகுப்புப் பிள்ளைகளுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும்.

             இன்னொன்று குறைந்த பொருட்செலவில்தான் நாடகம் அமைய வேண்டும். 

           சிறிய அரங்கினுள் பெரிதாக எந்த காட்சி அமைப்பையும் செய்ய முடியாது. ஒன்று அல்லது இரண்டு திரைச் சீலைகள்தான்.  சிம்மாசனம், அரச உடைகள், கிரீடம் வாள் முதலிய அரங்கப் பொருள்களை   நாடகம் தயாரிப்பவரே  செய்து கொள்ள வேண்டும்.

               இந்த வரம்புக்குள் நடத்திய நாடகங்களிலும் வெற்றி பெற்றது  ஒரு வரலாற்று நாடகம்.  

              திருச்சி வானொலி நிலையத்தார்  புதுக்கோட்டை  வந்து  மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முதலான    சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில்  மக்கள் மன்றத்தில் நடந்த  “ விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது.  அதுவே மறுமுறை நகர் மன்றத்திலும் நடத்தப்பட்டது.


                அந்நாடகம் இங்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி வானொலியில் பலமுறை ஒலிபரப்பப் பட்டது.  நாட்டுப் பற்றை விளக்கும் கதை, உரையாடல், போர்க்களக் காட்சிகளில் யானை பிளிறல், குதிரைக் குளம்பொலி, கனைப்பு, வாள்களின் உரசல், துப்பாக்கிகளின்  வெடிச் சத்தம் முதலான வற்றுக்கு எளிய கருவிகளால் உரிய ஒலிகளை அமைத்த  இசையமைப்புப் பாங்கு முதலானவற்றால் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நாடகம் அது..

                 எனது மேடை நாடகத்திற்கு ஒருமுறை தலைமை தாங்கி நாடகம் முழுமையையும் பார்த்து வியந்து பாராட்டிய  வானொலி அண்ணா திரு இளசை சுந்தரம் அவர்கள் அளித்த அந்த வாய்ப்பை என்றும் மறக்க முடியாது. 

              அதன் தொடர்ச்சியாக நான் திருச்சி வானொலி நாடகங்களில் நடிக்கவும் நாடகங்கள் எழுதவும் வந்த வாய்ப்புகள் தனிக்கதை.

            பள்ளி மேடை நாடகங்களில் நடித்த மாணவர்களின் திறமைகளையும் அவர்கள் இன்று வகிக்கும் பொறுப்புகளையும் நோக்க  வியப்பாகவும் நகைப்பாகவும்    இருக்கிறது.

           அன்று கண்ணகியாக  உரிமைக்குப் போராடிய  மாணவி, இன்று காவல் துணை ஆய்வாளராக இருக்கிறார்.
 ( பெயர்கள் வேண்டாமென நினைக்கிறேன்)  

           அன்று அகிம்சைவாதி காந்தியாக நடித்தவர் இன்று  கராத்தே மாஸ்டராக இருக்கிறார்.   

          இராணி இலட்சுமி பாய் பாத்திரமேற்றவர் இன்று ஒரு பெரிய  தனியார் நிறுவன  நிருவாகியாக இருக்கிறார்.  

         அவுரங்கசீப்பை அலற வைத்த கலகக்காரனாக நடித்தவர் இன்று ஒரு நீதிமன்ற நடுவராக இருக்கிறார். 

          அவர்களுக்கு ஆசிரியராக இருந்த நான்  அவர்களை உயர்த்திவிட்ட ஏணியாகவே ஓய்வு பெற்று, அவர்களின் உயர்வில் பெருமைப்பட்டு  இருக்கிறேன்.

         ஒரு முறை  ஒரு சிறுபான்மை    தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் , வீர சிவாஜி நாடகத்தை நடத்தக் கேட்டார்கள். நான் அப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம்  பெண்பாத்திரமே இல்லாத ஒரு நாடகத்தை வெறும் பெண் குழந்தைகளை வைத்து எப்படி நடத்துவது ? என்று கேட்டேன். அதில்தான் உங்கள் திறமையைக் காட்ட வேண்டுமென்று ஒரு சவால்போலச் சொன்னார்கள். 

              நானும் அதைச் சவாலாகவே எடுத்துக் கொண்டு அம்மாணவியர்க்குப் பயிற்சியளித்தேன். 

             அப்பள்ளி  ஆண்டுவிழாவில்   சிறந்த நிகழ்ச்சிக்கு பரிசளிப்பதுண்டு என்பதால் பல கலைநிகழ்ச்சிகள் போட்டிக்கானவையாகவே நடந்தன. 

           ஆண்டுவிழா நிறைவில் பரிசுக்குரிய நிகழ்ச்சியாக
 “ மலைநாட்டு மன்னன்”  நாடகம்  அறிவிக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. 



                 எல்லாக் குழந்தைகளிடமும் எல்லாத்திறமைகளும் புதைந்துதான்  கிடக்கின்றன. அகழ்ந்தெடுக்கும்போதுதான் அதனதன் மகத்துவம் புரிகின்றது.

              அதே போல புதுக்கோட்டை ஜே.சி.ஐ யும் கண்ணதாசன் நற்பணி மன்றமும் நடத்திய நாடகப் போட்டியிலும்  மாணவர்கள் நடித்த மலைநாட்டு மன்னன் நாடகம் முதல் பரிசு பெற்றதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

              பரிசு பெற்றதைப் பெருமையாக நினைக்கும்  அதே வேளையில்  புறக்கணிக்கப்பட்டபோது பட்ட  வேதனையையும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்.

         1970 களில் புதுக்கோட்டையில் மாவட்ட நிருவாகம் “ஆடிப்பூரம் ” பொருட்காட்சி நடத்திய காலம். பலதுறை சார்ந்த சிறப்புகள்  பொருட்காட்சி அரங்குகளில்  வைக்கப்படும். ஒவ்வொருநாள் மாலையும் இரண்டு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

              அப்படி ஒருநாள் கல்வித்துறை சார்பான கலை நிகழ்ச்சியில்,   நான் பணிபுரிந்த பள்ளி சார்பாக  “ தலைக்கு ஒரு விலை” என்ற  எனது    முப்பது நிமிட   நாடகம் நடத்த வாய்ப்பு தரப்பட்டது.  

              குமணவள்ளல் பற்றிய வரலாற்று நாடகம்  அது. பொதுமக்கள் கூடும் பெருவெளி மேடை என்பதால்   திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடுமையாகப் பயிற்சியளித்திருந்தேன். 

              கல்வித் துறை அலுவலரும் முழு ஒத்திகையைப் பார்த்து அருமை எனப் பாராட்டி அரங்கேற வாய்ப்பளித்தார். 
 அரச இருக்கை, உடைகள். வாள், கிரீடம் முதலியவற்றை வாடகைக்கு எடுத்து மாலை 6.30 மணி நாடகத்திற்கு 4.00 மணிக்கே ஒப்பனை செய்து மாணவர்களை ஆயத்த நிலையில்  வைத்திருந்தேன்.

            தொடக்கத்தில் நடந்த நாதசுர கச்சேரிக் காரர்கள் 6.45க்குத்தான் மேடை விட்டார்கள். அரசவை நடனத்துடன் தொடங்கிய நாடகம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது.

              படைத்தளபதியின் சூழ்ச்சியால் இளங்குமணனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு குமணன் காட்டுக்குச் செல்கிறான். 

             காட்டில் அவன் தனித்து வருந்தும் உணர்ச்சி மயமான காட்சி நடந்து கொண்டிருந்தது.  

     “போதும் நிறுத்துங்க நாடகத்தை” என்ற குரல் மேடையின் பக்க மறைவிலிருந்து வந்தது.

        அதை பொருட்படுத்தாது நாடகத்தைத் தொடர்ந்தேன்.  

            குமணனிடம்  மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க விரும்பாமல் குமணனின் தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன்கழஞ்சு என முரசடிக்க வைக்கிறான் தம்பி இளங்குமணன். 

    “ இப்போ நிறுத்தப் போறியா இல்லையா?”

 கோபாவேசத்தோடு ஒருவர் மேடைக்குள் நுழைந்தார்.

யார் இவர்? ஏன் நிறுத்தச் சொல்கிறார்? புரியாமல் விழித்தேன்.

             --- அடுத்து நடந்ததை அடுத்த தொடரில் 


   

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கோபாவேசத்தோடு வருவது யாரென்று தெரியாமல்
நாங்களும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறோம் ஐயா

வலிப்போக்கன் said...

நாடகம் மறந்து போனதை நிணைவுபடுத்தியது தங்கள் பதிவு.. நன்றி!

Post a Comment