புதுக்கோட்டை,கோயில்பட்டியில் 11.09.20011 அன்று ” வழிகாட்டி சமூகப்பணி மன்ற ”த்தின் கல்வி ஊக்குவிப்பு பரிசளிப்பு விழா, ஊர்த்தலைவர் திரு.க.சுப்பையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் நாகராசன் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழிகாட்டி மன்ற அமைப்பாளர் திரு. எஸ்.ரெங்கராசு அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு. பிச்சை, மாரிமுத்து. ஒன்றிய உறுப்பினர் திரு.சுந்தர்ராசன், தலைமை ஆசிரியர்கள் திருமதி பெட்லாராணி, சுந்தரவடிவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அப்பகுதியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 35 பேர்களுக்கு மரக்கன்றுகளுடன் மதிப்புமிகு பரிசுகளை வழங்கிச் சிறப்புரையினை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ஆற்றினார். ஆசிரியர் பயிற்றுநர் திரு. பி.இராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார். மன்றத்தின் செயல்பாடுகளையும் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பாராட்டிப் பேசிய பாவலர் பொன்.கருப்பையா சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை மாணவர்கள் வளர்த்துக் கொண்டு, தங்களையும் தாங்கள் சார்ந்த பகுதியையும் உயர்த்த உழைக்க வேண்டும் என்று கூறினார். அன்று பாரதியாரின் 90 ஆவது நினைவு நாளை யொட்டி ”மலருக்குள் மணமாக” எனும் பாடலை அரங்கேற்றினார்.
- மலருக்குள் மணமாக நுழைந்தா-ஏங்கும் மனதுக்குள் இதமாகக்குளிர்ந்தாய் பாழ்பட்ட சமுதாயம், சீர்பெற்றுச் செழித்தோங்க பாதந்த மாகவியே -மலருக்குள்
தேருக்கு அச்சாக வேருக்கு நீராக, ஊருக்கு உழைத்திட்ட உன்தொண்டிற் கிணையேது? நேருக்கு நேர்நின்று நீதிக்குக் குரல்தந்தாய் பாருக்குள் உன்நினைவு மாறாது எந்நாளும் - மலருக்குள்
தாய்த்தமிழ் மகளுந்தன் கவிதையின்தேரேறி தமிழ்கூறும் உலகெங்கும் தளர்வின்றி வலம்வந்தாள் உயர்ந்தது தமிழ்ச்சொல்லே எனஓங்கி ஒலித்திட்டாய் உன்பாட்டின் கனவெல்லாம் நனவாகும் நிலைஎன்றோ? -மலருக்குள்
பெண்கல்வி மேடுறுத்தி பேதைமை விலங்கறுத்தாய் பெருமைகள் அவர்காண பெரிதும்நீ தினம் உழைத்தாய் வன்மைகள் மறைந்தொழிய வகைநூறு கணைதொடுத்தாய் உண்மைக்கு உழைப்போரின் தோள்தட்டி இதமளித்தாய் -மலருக்குள்
விண்வெளி தனைஅளக்க வெகுண்டுநீ முனைற்தாயே பன்முகக் கலைச்சுவையைப் பாட்டினில் கரைத்தாயே திண்ணிய மனத்தோடு திரண்டதோள் கேட்டாயே எண்ணிய முடிப்பார் நம் இளைஞர்தம் திறத்தாலே - மலருக்குள்
சாதிக்கும் மாந்தருக்குள் சாதிகள் எதற்கென்றாய் ஆதிக்க வெறிநீக்கு அடிமைநீ இல்லையென்றாய் மோதிட்ட உன்பாட்டு முரசத்தின் அதிரொலியாய் நீதிகள் சமமாகி நீடிக்கும் இனிநன்றாய்- மலருக்குள்
No comments:
Post a Comment