கலகலப்பில் தீர்ந்த கலக்கம்
“ தாய்ப்பாசம்” மேடை நாடகத்தை ஆரம்பிக்கப் போற நேரத்துல நாடகத்துக்கு இசை வாசிக்க ஒத்துக்கிட்டிருந்த ( வெறும் புல்புல்தாராதான் ) என் சித்தப்பா ஆறுமுகம் அவர் வேலைபார்க்கிற மருத்துவமனையிலிருந்து வந்த அவசர அழைப்பால் மருத்துவமனைக்குப் போயிட்டாருன்னு கடம் வாசிக்கிற காளிமுத்து வந்து சொன்னதும் அப்படியே ஆடித்தான் போயிட்டேன்.
மணியோ ராத்திரி எட்டாச்சு . ஒரு மணி நேர சின்ன நாடகம்தான். நாடகம் முடிஞ்சுதான் சாப்பாட்டுப் பந்தின்னு பசியோட காத்துக்கிட்டிருக்க ரசிகர்கள் ஒரு பக்கம். ( காதுகுத்துக்கு வந்த உள்ளுர் வெளியூர் சொந்தக்காரங்கதான் ) பண்ணுன பாடம் மறக்குறதுக்குள்ளே மேடையேறிடணுமுன்னு தவிப்போட இருக்க கன்னிமேடை நடிகர்கள் மறுபக்கம் . இந்த நேரத்துலயா இப்படி ஒரு சோதனை?
மியூசிக் இல்லாம ஆரம்பிச்சா சப்புன்னு போயிடும் நாடகம். வாசிக்கிற சித்தப்பு வர்றவரைக்கும் காத்திருக்கவும் முடியாது. அந்த நெலையில நானே இசைக் கலைஞனா அவதாரம் எடுக்கவும் முடிவு செஞ்சேன்.
பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப, வாசவி தட்டச்சு நிலையத்துல டைப்ரைட்டிங் கத்துக்கிட்ட எனக்கு, எங்க சித்தப்பாவோட புல்புல்தாராவை அப்பப்ப தட்டித் தடவிப்பாத்த சில்லறை அனுபவம் கொஞ்சம் இருந்துச்சு. அந்தத் தைரியத்துல இப்பக் களத்துல இறங்கத் துணிஞ்சு சைடு சீன் ( தொங்கவிடப்பட்ட சேலைதான்) மறைவுல புல்புல்தாராவை எடுத்து முன்னால வச்சுக்கிட்டு ஒக்காந்தேன். கடத்துக்கு வச்சிருந்த பிலிப்ஸ் மைக்கை என் பக்கம் திருப்பி வச்சுக்கிட்டு கம்பிகளுக்குச் சுதி சேத்துக்கிட்டிருந்தேன்.
அந்த நேரம் பாத்து தேவைகார ரெங்கன் மாமா
“ மாப்ளே எங்க இருக்கே?”ன்னு கேட்டுக்கிட்டே மேடைப் பக்கம் அவசரமா ஓடியாந்தாரு.
என்னடா இந்த நாடகத்துக்கு வந்த சோதனை?ன்னு நொந்த மனசோட
“ இந்தா ஆரம்பிச்சாச்சு மாமா?” ன்னு ஒதறலோட மறைவை விட்டு வெளியே வந்தேன்.
“ செத்த பொறுங்க மாப்ளே . எங்க ஆபீஸ் இன்ஸ்பெக்டர் (பி.டபிள்யு.ஐ) வந்திருக்காரு. அவரைத் தலைமை தாங்கச் சொல்லி ஆரம்பிக்கலாம்” ன்னாரு. அவரும் எங்கப்பாவும் இரயில்வே தட ஆய்வுப் பிரிவுல வேலை பாக்கறதால ஒரு பேச்சுக்கு இந்த நாடகத்தைப் பத்தி சொல்லியிருப்பாங்க போல இருக்கு. அவரு குடியிருக்கிற குவாட்டர்சு பக்கத்துலதான்..
அவருக்குப் பொழுது போகலையா இல்ல எங்களுக்குப் பொழுது சரியில்லையான்னு தெரியலே வந்திட்டாரு.
சரி தேவைகாரர் விருப்பமுன்னு வந்தவரை அழைக்க அவரோட போனா, அங்கே பதினெட்டுப்பட்டி நாட்டு அம்பலம் திருமலை, ஊர்த் தலைவர் மாயாண்டி, மளிகை அப்பாஸ் ராவுத்தர், இரயில்வே நிலைய ஸ்டால் முதலாளி இராமசாமி ன்னு எதிர்பார்க்காத பெரிய ஆளுங்கல்லாம் உட்கார்ந்து இருக்காங்க. எனக்கு உள்ளாடையெல்லாம் வேர்த்துப் போச்சு. இவங்க மத்தியில பசங்க நல்லா நடிக்கணுமேன்னு உள்மனசு ஓலமிட ஆரம்பிச்சுடுச்சு.
“வாங்க வந்து ஆரம்பிச்சு வச்சுட்டு வந்துடலாம்ன்னு” பொதுவுல ரெங்கன் மாமா சொன்னதும் அதுக்காகவே காத்திருந்த மாதிரி அஞ்சுபேரும் மேடைக்கு வந்துட்டாங்க. அவங்களை வரவேற்று அறிமுகப்படுத்துற வேலையும் எனக்கு. பொதுவுல வணக்கத்தையும் வரவேற்பையும் சொல்லிட்டு ,
“இப்போ இவங்க இந்த நாடகத்தை ஆரம்பிச்சு வைப்பாங்க”ன்னு வேர்க்க விறுவிறுக்கச் சொல்லிட்டு சைடு சீனுக்குள்ளே மறைஞ்சுக்கிட்டு வழிஞ்ச வேர்வையைத் தொடைச்சுக்கிட்டேன். மறுநாள் சீர் எடுக்கிற மாமன்களை வரவேற்றுப் போட வச்சிருந்த மாலைகளை அவர்களுக்குப் போட்டாரு தேவைகாரர். இதுல ்ஒரு கால்மணி நேரம் ஓடிச்சு.
தொடங்கி வச்ச யாராவது பேசி இன்னம் கொஞ்சம் நேரத்தை இழுக்க மாட்டாங்களா, அந்த நேரத்துக்குள்ளயாவது என் சித்தப்பா வந்து புல்புல்தாராவை பொறுப்பேத்துக்க மாட்டாரா? ன்னு என் மனசுக்குள்ளே ஏற்பட்ட எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிட்டு எல்லாரும் எதுவும் பேசாம இறங்கிட்டாங்க.
அவங்களை முன்வரிசை பக்கத்துல நாற்காலி போட்டு உட்கார வச்சுட்டாரு ரெங்கன் மாமா. சின்னப்பசங்க நாடகத்துக்கு இவ்வளவு கூட்டமா? இத்தனை பெரிய மனுசங்க தலைமையா? படைச்சவளே நீதான் எனக்குத் தைரியத்தைக் கொடுக்கணுமுன்னு வேண்டிக்கிட்டு, நடிகர் அறிமுகப் பட்டியல், நாடகச் சுவடி ( ப்ராம்ட்) இதுகளோட பக்கத்திரை மறைவில உட்கார்ந்து புல்புல்தாராவில டைட்டில் மியூசிக்ங்கிற பேர்ல வேகமாய்க் கம்பிகளிலும் பொத்தான் களிலும் என் விரல்கள் விளையாடின. ”கொஞ்சிக்கொஞ்சிப் பேசி மதிமயக்கும்” பாடலிசைதான் அது.
அடுத்து நான் விசிலடிக்க, மேடை விளக்கை மைக்செட் காரர் அணைக்க, நான் நடிகரோட பாத்திரத்தைச் சொல்லி நடிகர் பெயரைச் சொல்ல, இசைப் பின்னணியில் நடிகர் மேடைக்குவர, ஆர்க் லைட் ஆறுமுகம் மேடையில் நிற்பவர் மீது அந்த வண்ண ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்பது திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி நான் முதல் விசில் ( ஊதல்) அடித்ததும் மேடை விளக்கோடு சேர்ந்து பந்தல்ல போட்டிருந்த தொடர் விளக்கு ( சீரியல் செட் ) குழல் விளக்கு ( ட்யுப்லைட்) வீட்டு விளக்குகள் எல்லாம் சேர்ந்து மூச்சை நிறுத்திக் கொண்டன்.
” எவன்டா அவன் லைட்டையெல்லாம் ஆப் பண்ணுனவன்? பொண்டுக புள்ளைக ஒக்காந்திருக்கது தெரியலே?“ இருட்டுக்குள்ளிருந்து ஒரு பெரிய மனுசனோட அதட்டல்.
“டேய் பந்தல் லைட்டைப் போடுடா. மேடை லைட்டை மட்டும் ஆப் பண்ணு” ன்னு நா கத்த, “ எல்லாம் ஒரே கனெக்சன்ல இருந்திருக்கு”ன்னு ஆர்க் லைட் ஆறுமுகம் சொல்ல, வாண்டுகளின் சீட்டியொலி, சிறுசுகளின் சிரிப்புகளைத் தொடர்ந்து எல்லா விளக்குகளையும் எரிய விட்டார் மைக்செட்காரர் முபாரக். மேடைக்குத் தனி லைன் மாத்திக் கொடுக்கப்பட்டு, ஒரு வழியா நடிகர்கள் அறிமுகம் முடிஞ்சது.
இந்த களேபரத்துல முதல் காட்சியிலேயே மிராசுதாரா நடிச்சவரு வசனத்தை மறந்துட்டு மேடையில முழிச்சிக்கிட்டு நிக்க. நா அப்பப்ப அவருக்கு எடுத்துக்கொடுத்துச் சமாளிக்க வேண்டியதாயிற்று.
இதுல வில்லனா நடிச்சவன் ஒரு காட்சியில கதாநாயகனைக் கொல்லப் போறேன்னு சீரியசா வசனம் பேசிச் சிரிச்சதுல அவனுக்கு ஒட்டியிருந்த ஆட்டுவால் மீசை பிச்சுக்கிட்டு கீழே விழுந்துடுச்சு. சீரியசான காட்சி காமெடியாக கூட்டத்துல ஒரே சிரிப்பு.
விழுந்த மீசையை எடுத்து ஒட்டுறதுக்காக லைட்டை ஆப் பண்ணி, சீனை மூடச் சொல்லி் நா விசிலடிக்க, சீன் ஆபரேட்டரா இருந்த அடைக்கலம் வேகமா இழுவைக் கயித்தை இழுக்க, கயிறு பந்தல் கம்புல சிக்கிக்கிட்டு வரமாட்டேன்னு வம்பு பண்ண, “ அட இழுடா, இழுடா” ன்னு நா போட்ட அதட்டல்ல வேகமா அவன் கயிற்றைச் சுண்ட, சீன் ஆளை விடுங்கடான்னு அறுந்து கீழே விழுந்துடுச்சு.
அதைச் சரிசெய்ய முடியாம அவன் திண்டாட, இருட்டுக்குள்ளே விழுந்த மீசை யாரு காலோடவோ ஒட்டிக்கிட்டுப் போக. அதைக் கண்டுபிடிக்க முடியாம வில்லனை மேக்கப் குடிசைக்குள்ளே இழுத்துக்கிட்டுப் போயி அவசரஅவசரமா அடுப்புக்கரியைக் குழைச்சு மீசையை வரைஞ்சு மேடைக்குள்ளே தள்ளி விட்டேன்.
சீர் செய்ய முடியாத ட்ராப் சீனை அத்தோட அதன் ஆயுளை முடிச்சு ஓரங்கட்டிட்டு, லைட்டை ஆன் பண்ணி விட்ட இடத்துலேயிருந்து வில்லனை வசனம் பேச வச்சா, “ டேய் என்னடா வில்லனுக்கு மீசை மாறிப்போச்சு” ன்னு முன்னால இருந்து ஒரு கமெண்ட். “டேய் இருட்டுல கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் நடந்த சண்டையில கதாநாயகன் வில்லனோட மீசையைப் பிச்சுட்டான்டா” ன்னு அதுக்கு பதில் குரல்.
லைட் ஆன் ஆப்லே மிச்ச நாடகத்தை கலகலன்னு ஓட்டி முடிச்சப்ப கெடைச்ச கைத்தட்டல் அடங்க அஞ்சு நிமிசமாச்சு. நேரத்தைப் பாத்தா மணி பத்தரை.
அத்தனை தடைகளுக்குப் பிறகும் கூட்டம் கலையாம இருந்தது எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு ( பந்தி நடக்காததும் படுக்க இடமில்லாமலுமுன்னு அப்பறம்தான் தெரிஞ்சுச்சு)
நாடகம் முடிஞ்சதும் எங்கம்மா ஓடிவந்து நடிச்ச எல்லாரையும் மேடையில நிக்கவச்சு சூடம் கொளுத்தித் திருட்டி சுத்தி ரோட்டுல போட்டாங்க..
எல்லாருக்கும் மாத்து விரிச்சு இலையைப் போட்டு பந்தி பரிமாறச் சொல்லிட்டு தேவைகார ரெங்கன் மாமா எங்கக்கிட்ட வந்து.
“ ரொம்பப் பிரமாதமாப் பண்ணிட்டீங்கடா” ன்னு சொன்னதோட கையோட கொண்டு வந்திருந்த வரக்காப்பியை ஆளுக்கு ஒரு குவளை அவரு கையால ஊத்தியும் குடுத்தாரு.
“அப்படியே மாப்ளே நம்ப பசங்களை வச்சு, இந்த கலர் பேப்பர், குறுத்து, பாவட்டா எல்லாத்தையும் வெட்டி ,சணல்லே ஒட்டி பந்தலைச் சுத்தியும், குறுக்கு மறுக்காவும் கட்டி அலங்காரம் பண்ணிட்டுப் போய் படுங்க”ன்னாரு.
இப்படி ஒரு வாய்ப்பைத் தந்தவருக்கு அதைக் கூட செய்யாம விடுவோமா. வேர்த்து அழிஞ்சது போக மீதியிருந்த பவுடரைத் தேங்காய் எண்ணையத் தடவித் தொடச்சு முகத்தைக் கழுவிட்டு பந்தல் அலங்காரத்துல இறங்கினோம்.
சாப்பிட்டு முடிச்ச சொந்தங்களுக்கு அன்னக்கி எங்க நாடகம்தான் மென்னு துப்ப வெத்தலை பாக்கா ஆகிஇருந்துச்சு
ஆறே முக்கால் ரூபாயக் கையில வச்சிக்கிட்டு, ஒரு நாடகத்தை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கப் போறோமுன்னு கலக்கத்தோட இருந்த எங்களுக்கு கலகலப்பாய்க் கெடைச்ச பாராட்டுகள்தான் எங்கள் கலை மேடையின் அடுத்த படிக்கட்டாய் அமைந்தது.
--- தொடர்ந்து வரும்
5 comments:
மிக அருமையான தொடர் அய்யா
விழுந்து விழுந்து சிரித்தேன் ..
ஆகா
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
என்பதை மெய்ப்பித்துவிட்டீர்கள் ஐயா
நன்றி
தொடர்ந்து எனது மேடை நாடக அனுபவங்களைப் பார்த்து கருத்தளித்துவரும் கரந்தை செயக்குமார், சு.மது ஆகியோர்க்கு மகிழ்வான நன்றிகள்.
உங்கள் நாடகம் வெத்தலை பாக்காக...ஐயா ரசனையாக உள்ளது.
நல்ல நகைச்சுவை..அய்யா
Post a Comment