Friday, March 31, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -7

பணம் படுத்தும் பாடு

                   ஊர்ப்பொது அரங்கில் மணிமன்றத்தின் முதல் வெளியீடாக             “ தாய்ப்பாசம் ” நாடகம் அரங்கேறிய பின்னர். அப்பகுதியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதுவரை அப்பகுதி மக்கள் பார்த்திராத சமூக அமெர்ச்சூர் நாடகத்தின் புதிய வடிவத்தை விரும்பிய பலர்  அடுத்த ஆண்டு காமன் பண்டிகையில் எங்கள் நாடகத்தை நடத்த வேண்டும் என வெளிப்படையாக விரும்பினர்.   ஊர்க்கமிட்டியில் சில   டான்ஸ், பபூன் காமிக்  விரும்பிகளும்,விடிய விடிய புராண நாடகத்தைப் பார்த்துப் பழகிய  பழமை விரும்பிகளும்  எங்கள் நாடகத்தை நடத்த அங்கீகரிக்க வில்லை. 

                இதனால் சலிப்படைந்த பல இளைஞர்கள்  மணி மன்றத்தில் புதிதாக வந்து சேரத் தொடங்கினர்.  ஊர்க் காமன் பண்டிகை முடிந்த அடுத்த  மாதத்தில் மன்றம் சார்பாக ஒரு புதிய நாடகத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  

முன்பைவிடச் சிறப்பாக ஊரார் வியக்கும் வண்ணம் ஒரு மூன்று மணிநேரம் நடக்கிறார்போல நாடகத்தைப் போட வேண்டும் என்று நண்பர்கள் என்னை உசுப்பேற்றிவிட்டனர்.  இப்போதும் பெண்பாத்திரம் இல்லாத நாடகம்தான் என்றதும்  
“பருப்பு இல்லாத சாம்பாரா?“  என எகிறிக்குதித்தனர் இரண்டு உறுப்பினர்கள்.
பெண் உறுப்பினர்கள் இல்லாத மன்றத்தில், சம்பளத்திற்கு ஒரு நடிகையை அழைத்து நடிக்க வைப்பதில்  பணம், பெற்றோர் எதிர்ப்பு என்பவற்றை எதிர் கொள்ள வேண்டியிருக்குமே  என்று யோசித்தபோது,  எங்கள் மன்றத்தில் புதிதாகச் சேர்ந்த ஆறுமுகம் என்ற உறுப்பினர் தான் பெண் வேடத்தில் நடிப்பதாக முன்வந்தான்.   குரல்மாற்றிப் பேசும் திறமையும் அவனிடம் இருந்ததால் பெண்பாத்திரத்தை வைத்து கதை எழுத முடிவு செய்தேன்.  

                 இம்முறை மேடையில் நடிகர்கள் அறிமுகத்திற்குப் பதில்   சிலைடு போடுவது என்ற புதுமையைப் புகுத்த நினைத்தேன்.
 ஒப்பனை செய்யும் சுகி அவர்களிடம் சிலைடு தயாரிப்புப் பொறுப்பை ஒப்படைக்க முடிவாயிற்று. ஆர்க்லைட் வின்செண்ட் செல்வின் ஸ்மித் அவர்கள் சிலைடு போடுவதற்கான சிறப்பான கருவியை அமைத்துத் தரவும் ஒப்புதல் தந்தார். 

                      இசைக்குழு. திரை, ஒப்பனை, சிலைடு, மேடை, பந்தல் எல்லாவற்றுக்கும் பணத்துக்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு பல உறுப்பினர்கள் மௌனியாகிப்போனார்கள்.  கடந்த ஆண்டு ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு, வேண்டியவர்களிடம் பெற்ற நன்கொடையோடு வெறும் 96 ரூபாய்தான் வரவு செலவாகியிருந்தது. இந்த ஆண்டு புதிய உறுப்பினர் பங்களிப்பை தலா 10 ரூபாயாக உயர்த்தவேண்டும் என்றபோது சிலர் மனமில்லாமல்( பணமில்லாமலதான் ) ஒத்துக் கொண்டனர் .அதில் பெருவழித்துறையில் மின்தொழில் நுட்பராகப் பணியாற்றிய சுப்பிரமணியன், நாராயணன் ஆகியோர்  பற்றாக்குறை ஏற்பட்டால் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக முன்வந்தனர்.  

             என்னதான் திறமை, வாய்ப்புகள் இருந்தாலும் ஒரு செயலின் வெற்றி பணபலத்தில்தானே இருக்கிறது. அதனால்  அதையே மையக் கருவாக்கி     “ பணம் படுத்தும் பாடு” என்ற பெயரில் நாடக உரையாடல்களை எழுதத் தொடங்கினேன்.   

                     பள்ளி இறுதித்தேர்வில் வெற்றி பெற்று, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த நேரம் அது. இரவு  வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு அரிகேன் விளக்கைத் திண்ணையில் வைத்துக் கொண்டு நாடக உரையாடலை வளர்த்தேன்.  
“என்னடி ராத்திரி பன்னெண்டு மணிவரைக்கும் ஒக்காந்து எழுதுறான் ஓம்புள்ளே” ன்னு அப்பாவின் அதட்டலுக்கு “ காலேஜ் பாடம் நெறைய இருக்கும் போல” ங்கிற அம்மாவின் பதில்களும் படிக்கத்தெரியாத அப்பாவின் நிலையும்  எனது நாடகப் படைப்புக்கு வசதியாவே அமைஞ்சது.

                        அந்த ஆண்டு  காமன் பண்டிகையில்  திண்டுக்கல் சாமி குழுவினரின்  “முனிவர் சபதம்” ங்கிற நாடகம் ( அரிச்சந்திர மயான காண்டம் தான்)  நடந்துச்சு. அதுல  நடனக் காரப்பெண்ணோட குத்தாட்டமும், பபூன் காமிக்ங்கிற பேர்ல பபூனோட குதர்க்கப் பேச்சு பாதியாகவும்  மகன் லோகிதாசனை இழந்த சந்திரமதியோட ஒப்பாரி மீதியாகவும் விடியவிடிய நடந்துச்சு.

               அந்த நாடகத்தை விட சிறப்பா அமையணுமுன்ன நம்ம நாடகத்துலேயும் ஒரு பொண்ணோட டான்சு  இடையிடையே இருக்கணமுன்னு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆசைப்பட்டாங்க.
அந்த செலவை அந்தப் பகுதியில தையல்கடை வச்சி நடத்திக்கிட்டிருந்த ஜனாப் ஜானிபாய் ஏத்தக்கிறேன்னு சொன்னாரு. சரி அதுக்காக தெருக்கூத்துல டான்சாடுற பொண்ணைக் கூப்புட முடியுமா? ன்னு மன்றத்தோட விதிமுறையைச் சுட்டிக்காட்டித் தவிர்க்க நெனைச்சேன்.


        அந்த சமயத்துல ஆபத் பாந்தகனா வந்தார்  அய்யனார்புரம் அமெச்சூர்ல நடிச்சுக்கிட்டிருந்த மீனாட்சி சுந்தரம். அவரோட தங்கையை நடனமாட ஏற்பாடு செய்துதர ஒத்துக்கிட்டாரு.

       யாரு அந்த நடனப் பெண் தெரியுமா?  திரைப்படத் துறையில அந்தக் காலத்துல அதிக சம்பளம் வாங்கி கதாநாயகனா பேர்பெற்ற புதுகையின் புகழ்பெற்ற பி.யு.சின்னப்பா அவர்களின் தங்கை மகள் நடனமணி நாகலெட்சுமிதான்

                  அப்பறமென்ன  அந்தாண்டு நாடகம்.   மனிதகுலத்தை ஆட்டுவிக்கும் பணத்தின் திருவிளையாடல் பற்றிய கதை. நகைச்சுவையான உரையாடல்கள். பெண்பாத்திரம் பங்கேற்ற ( ஆண்தான் ) காட்சிகள். புதுமையான சிலைடு அறிமுகம். இவற்றோடு புகழ் பெற்ற நடன மாது நாகலெட்சுமியின் நடனம் இவற்றோடு  வெற்றிநடை போட்டதைச் சொல்லவும் வேண்டுமோ?

                                                                        -- இன்னும் தொடரும்.



4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தங்களின் அயரா முயற்சி வெற்றியடைந்ததை அறிந்து மகிழ்கின்றேன் ஐயா

semmozhiththamizharam said...

நல்ல ஆவணப் பதிவுகள்; வரலாற்றுப் பங்களிப்பு; வாழ்த்துக்கள் ...பாராட்டுக்கள் பொன்.க. அய்யா ...!

semmozhiththamizharam said...

நல்ல ஆவணப் பதிவுகள்; வரலாற்றுப் பங்களிப்பு; வாழ்த்துக்கள் ...பாராட்டுக்கள் பொன்.க. அய்யா ...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வொரு நிலையிலும் ஆரம்ப காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சூழல் நாடகத்துறையில் இருப்போருக்கு மட்டுமன்றி அனைத்து துறையில் இருப்போருக்கும் நல்ல பாடம். தங்களின் விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுத்ததை தங்களது பதிவுகள் உணர்த்துகின்றன.

Post a Comment