பட்டாலும் புத்தி வரலையே
கட்டுக் கட்டாக பணத்தாள்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து அந்தப் பெட்டியை ( சூட்கேஸை) ஆவலோடு திறந்த மாயாவியை பெட்டிக்குள் அங்கம்மா வைத்திருந்த கருநாகம் கடிக்கும். ஆத்திரமடைந்த மாயாவி அந்தப் பாம்பைக் கடித்து உதறி எறிந்து விட்டு மலைக்குகையில் அடைத்து வைத்திருக்கும் உண்மையான தந்தையிடம் ஓடி அவர் மகளைக் காப்பாற்றச் சொல்ல வேண்டும் என்பதுதான் காட்சி.
பயிற்சியில் பயன்படுத்திய சாரைப்பாம்பை வாயைத் தைத்துப் பெட்டிக்குள் வைத்திருந்தோம். மாயாவியாக நடித்தவர் பெட்டிக்குள் கையை விட்டதும் கடிக்க முடியாத அந்தப் பாம்பு அவர் கைகளில் சுற்றிக்கொண்டது. அவர் அந்தப் பாம்பை கடிப்பதுபோல் பாவித்துத் தூக்கி எறிய முயன்றார். அவர் கைகளில் இறுக்கமாகச் சுற்றிக் கொண்ட பாம்பு எவ்வளவு உதறியும் கையைவிட்டுப் பிரியவில்லை. இதை எதிர்பார்க்காத அவர் ஒருகையால் பாம்பின் தலையைப் பிடித்துக் கொண்டு,மறு கையால் அதன் வால் பகுதியைப் பிரிக்க, அது முறுக்க, ஒரு இரண்டு நிமிடப் போராட்டத்திற்குப் பின் ஆவேசமாய் கையைச் சுற்றியிருந்த பாம்பைப் பிரித்து விட்டார். பிரித்த பாம்பை அரங்கத்தின் பின்பக்கத்தில் வீச வேண்டிய அவர் பதற்றத்தில் முன்பக்கத்தில வீசி விட்டார்.
அதுவரை கைதட்டி ஆரவாரமாய் ரசித்த பார்வையாளர்கள், தங்கள் மத்தியில் பாம்பு வந்து விழுந்ததும் அதிர்ச்சியில் கதறிக்கொண்டு களைந்து ஓடத் தொடங்கினர். பாம்பென்றால் படையும் நடுங்கத்தானே செய்யும். கூட்டத்திலிருந்த துணிச்சல்காரர் ஒருவர் அதை அடித்துக் கொன்றுவிட்டார். என்றாலும் , எதிர்பாராத இந்நிகழ்வால் தொழில் நுட்பக் கலைஞர், சக நடிகர்கள் எல்லோரும் கொஞ்சநேரம் வெலவெலத்துப் போனோம் . ஆனாலும் நாடகத்தைத் தொடர்ந்தாக வேண்டுமே. மாயாவியாக நடித்தவரைத் தேற்றி அடுத்த இறுதிக்கட்டக் காட்சிகளை நடத்தினோம். நாடகத்தின் இறுதிக் கட்டம் என்பதால் மக்கள் மீண்டும் அந்த இடத்தில் உட்கார அஞ்சி நின்று கொண்டே அடுத்தடுத்த காட்சிகளைப் பார்த்தனர்.
இனிமே இதுபோல் விசப்பரிட்சையில் இறங்கக் கூடாதுன்னு அப்பவே முடிவு செஞ்சேன். ஆனாலும் அதுவும் பிரசவ வைராக்யம் போலத்தான் போயிற்று.
1986ல் அரங்கேற்றிய “நீறு பூத்த நெருப்பு” என்ற நாடகத்தில் ஒரு உணர்ச்சி மயமான காட்சி.
இந்நாடகக் கதையில், தந்தையின் கண்டிப்பை மீறி, தான் காதலித்த ஒரு பெண்ணை கதைத்தலைவன் மணந்து கொள்கிறான். தாழ்ந்த சாதிப் பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கசாதி யைச் சேர்நத கதைத் தலைவனின் தந்தை, தன் மகனை ஒறுக்கவோ ஒதுக்கவோ முடியாத நிலையில் அந்தப் பெண்ணை நயவஞ்சகமாகக் கொல்ல முயலுகிறார்.
அதன்படி அந்தப் பெண்ணின் சாதித் தோசம் நீங்க 108 குத்துவிளக்கு பூசை செய்யச் சொல்லி, அவளுக்கு பாலில் நஞ்சு கலந்து கொடுத்து விளக்கேற்றச் சொல்வார். விளக்கேற்றும் போது மயங்கி விழுந்த அந்தப் பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு, குத்து விளக்குப் பூசை செய்யும் போது சேலையில் தீப்பற்றி எரிந்து இறந்து விட்டதாகத் தன் மகனையும், ஊரையும் நம்ப வைத்து நாடகமாடுவார்.
இக்காட்சி பிரமிப்பாக அமைய வேண்டுமென்று இரண்டு பெஞ்சுகளில் குத்து விளக்குகளை ஏற்றி, அதற்கிடையில் அந்தப் பெண்ணை மயங்கி விழச்சொல்லி, அவள் மீது பெட்ரோல் போல் தண்ணீரை ஊற்றி, தந்திரமாக ஒரு தீப்படும் காட்சி வைத்திருந்தேன்.
அக்காட்சியில் நடிக்க வந்த நடிகை எலிசபெத், முதல்நாள் முழு ஒத்திகையின்போது பயந்து நடிக்கத் தயங்கினார். அந்தக் காட்சியில் நான் இரு பெஞ்சுகளுக்கிடையே படுத்து தீயின் வெப்பம் என்னைத் தாக்காதவாறு தீ எரித்துக் காட்டி தைரியமூட்டினேன். தயக்கத்தோடு பயிற்சி எடுத்தபின் மேடையில் அக்காட்சியை அப்படியே அரங்கேற்ற முடிவாயிற்று.
காட்சிப்படி, அந்தப் பெண்ணுக்குக் கதைத் தலைவனின் தந்தை வாழ்த்தி நஞ்சு கலந்த ( தேன்தான் ) பாலைக் கொடுத்தார். அந்தப் பெண் பெஞ்சுகளில் அடுக்கி வைத்திருந்த குத்து விளக்குகளை எரிய விட்டார். கடைசி விளக்கேற்றும்போது அவர் மயங்கிக் கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி, ஆதிக்க சாதிக்காரர் ஒரு போக்கிலி உதவியுடன் அவள் மீது பெட்ரோலை ஊற்றினார் ( தண்ணீர்தான் ).
எனது உத்தியின்படி தீப்பற்றி எரியத் தொடங்கியது. பார்வையாளர்கள் காட்சியின் தீவிரத்தில் உறைந்து போயிருந்தனர்.
அந்த வேளையில்தான் நாங்களே எதிர்பாராத, பதற வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது.
--- பதற்றத்தை தணித்துக் கொண்டு தொடர்வோம்
4 comments:
என்ன சார் இப்படி நல்ல இடத்தில் தொடரும் போட்டு விடுகிறீர்கள் ?
இராய செல்லப்பா நியூஜெர்சி
என்ன சார் இப்படி நல்ல இடத்தில் தொடரும் போட்டு விடுகிறீர்கள் ?
இராய செல்லப்பா நியூஜெர்சி
அருமை அய்யா http://ethilumpudhumai.blogspot.in/
நாங்களும் பதறிப் போய்தான் காத்திருக்கிறோம்
Post a Comment