Tuesday, May 16, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 20

               

வலிகளோடும் வழிகள் தேடி... 

                  நாடும் வீடும்   மேடை நாடகத்தில், வஞ்சகன்  ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்  மனமொடிந்து    தன்னை மாய்த்துக் கொள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடுகிறாள். அங்கே மரம்வெட்டும் தொழிலாளி ஒருவன், வெட்டி விழுந்த மரத்தினடியில் சிக்கி உயிருக்குப் போராடிக்   கொண்டிருக்கிறான். அதனைக் கண்ட அப்பெண் அவனைக் காப்பாற்ற முயல்கிறாள். அவன் மீது விழுந்திருந்த மரத்தை (  அரங்கத்திற்கேற்ப கிளைகள் வெட்டப்பட்ட உண்மையான உதியமரம் ) அகற்ற முனைகிறாள். ( ஒத்திகையில் அட்டை மரத்தைப் புரட்டிப் பயிற்சியெடுத்த அந்த நடிகை உண்மையான மரத்தைப் புரட்டச் சிரமப்படுகிறாள். ஒருவழியாக அந்த மரத்தைப் புரட்டி நிமிர்த்தி வைத்துவிட்டு, மரத்துக்கு    அடியில் மயக்கமுற்றுக் கிடக்கும் விறகுவெட்டிக்கு முதலுதவி செய்ய அவனை நோக்கிக் குனிந்த போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது.

                 நிமிர்த்திய மரம் மீண்டும் கீழே விழாமலிருக்க அரங்கத்தின் மேல் கூரையிலிருந்து ஒரு கனமான கொக்கியைத் தொங்க விட்டிருந்தோம். மரத்தை நிமிர்த்தியதும் அதன் கவைப் பகுதியை அந்தக் கொக்கியில் மாட்டிவிட அந்த நடிகை மறந்துவிட்டார். விளைவு, நிமிர்த்திவைத்த அந்த மரம் அந்த நடிகையின் மேல் விழ, அதன் அழுத்தம் தாங்காமல் நடிகை  கீழேகிடந்த விறகு வெட்டிமேல் குப்புற விழ,இருவரும் மரத்தினடியில் ஒருவர்மேல் ஒருவர் கிடக்க  ...      காட்சி அப்படித்தான்போல என நினைத்த பார்வையாளர் பகுதி இளைஞர்களின் விசிலும் கைதட்டலுமாகிய ஆரவாரம் கிளம்பியது .  அரங்கப் பொறுப்பிலிருந்த எங்களுக்கோ என்ன செய்வது என்ற பரபரப்பு தொற்றியது . காட்சிக்குள் நுழையவும் முடியாமல் , நிறுத்தவும் முடியாமல் அப்போது  பட்டபாடு அப்பப்பா.... இதுதான் மேடை நாடகம் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்களே . திரைப்     படப்பிடிப்பானால் தவறாய்ப்போன காட்சியை நீக்கிவிட்டு   அடுத்த டேக் போய் விடலாம். மேடையில் என்ன செய்ய முடியும் ? கல்லில் விழுந்த கண்ணாடிதான்.

              திரையை மூடிவிட்டு மரத்தைப் புரட்ட, விளக்கணைக்கும் பொத்தானை அழுத்தினால் ஒளியமைப்பாளரும் அந்த நெருக்கடிக் காட்சியில் ஒன்றிப்போய் சிவப்பு விளக்கு எரிவதைக் கவனித்து மேடை விளக்கை அணைக்காமல் விட்டுவிட்டார். 

                  அந்த நெருக்கடியில்,  அந்த நாடகத்தில்  நகைச்சுவைப் பாத்திரத்தில் டீ க்கடை காயாம்பு வாக நடித்த ( தடித்த ) நடிகை  
 ( கதாநாயகி நடிகையின் உடன்பிறந்த    சகோதரிதான் )  காட்சிக்குள் நுழைந்து அந்த மரத்தைப் புரட்டிப்போட்டு, தன் தங்கையைத் தூக்கி விட்டார்.    ( இரத்த பாசமல்லவா )  அதன்பின் திரையிறக்க ப்பட்டது.  நல்ல வேளையாக விபரீதமாக எதுவும் நடக்க வில்லை.  நகைச்சுவை நடிகைதான்   கொஞ்சம் சீரியசாகிவிட்டார். தங்கைக்கு ஏற்பட்ட துன்பத்தால். கதாநாயகி தனது தவறுதான் என்று சொன்னபின்  சமாதானமானார்.  நடிகையை ஆசுவாசப் படுத்தி நாடகத்தைத் தொடர்ந்தோம். இடைப்பட்ட நேரத்தில்  வெண்திரையில் சிலைடு போட்டுச் சமாளித்தோம்.

                புதுமையாக உண்மையான பின்புலத்தை அமைக்க வேண்டுமென்ற எனது ஆர்வக்கோளாறு காரணமாக, உண்மையான மரத்தை வைத்து வெட்டச் செய்ததோடு,  அந்த  நாடகத்தில் வரும் டீக்கடை காட்சிகளில் தேநீர் தயாரிக்கும்  வேம்பாவுடனான டீஸ்டாலை அரங்கத்தில் அமைத்திருந்தேன். 16 அடி அகல மேடைக்குள் அதை   நிறுவுவதிலும், அகற்றுவதிலும் ஏற்பட்ட சிரமங்களை  அப்புறம்தான் உணர்ந்தேன்.

              அந்த டீக்கடை வேம்பாவால் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது.  அந்த நாடகத்தில்  மனைவியை இழந்த ஒரு செல்வந்தரின்  மூன்று வயதுக் குழந்தைக்கு  தாயாக  நடிக்க வேண்டிய நிர்பந்தம்  விறகுவெட்டியின் காதலிக்கு வருகிறது.  அந்தக் குழந்தை பாத்திரத்தில் எனது மூன்று வயது மகனை நடிக்க வைத்திருந்தேன்.

             அவனை எனது அப்பா தன் பொறுப்பில் மேடையின் மறை பகுதியில் வைத்துக் கொண்டிருந்தார்.  அரங்கப் பொருள்கள் மாற்றத்தால் காட்சிக்குக் காட்சி இடைவெளி அதிகமாகிப் போனதால் நாடகம் சற்று காலம் நீண்டே நடந்தது. 

             அடுத்து அந்தக்  குழந்தை பாத்திரம் தனது  அம்மாவோடு  வீட்டுக்குள்  சிரித்து விளையாடும் காட்சி  நடக்கவேண்டும்.   நேரமோ  இரவு 1.00 மணி..  குழந்தையாக நடித்த எனது மகன் அவனது தாத்தா மடியில் படுத்துத் தூங்கிவிட்டான்.  தூங்கிவிட்ட குழந்தையை விழிக்க வைக்க,  அவனை வைத்திருந்த எனது அப்பா  காட்சிக்காக வைத்திருந்த வேம்பாவில்  இருந்த பழைய தேநீரை அவனுக்குக்  குடிக்கக்  கொடுத்திருக்கிறார்.  அதைக் குடித்த குழந்தை வாந்தியெடுத்திருக்கிறான்.  பயந்துபோன என் அப்பா,  எனது மனைவியை அழைத்துக் கொண்டு குழந்தையைப்   பக்கத்திலிருந்த மருத்துவரிடம் காட்ட   கொண்டு போய் விட்டனர்.

                நாடகக் காட்சிகளை நகர்த்தும் மும்முரத்திலிருந்த எனக்கு,  காட்சிக்கான குழந்தையைத் தேடும்போதுதான் அரங்கப் பொறுப்பிலிருந்த உதவி இயக்குநர் நடப்பினைச் சொல்கிறார்.


         இப்போது  நான் குழந்தைக்கு அப்பாவாக மருத்துவம் பார்க்கச் செல்வதா?  நாடக இயக்குநராய் நாடகத்தைத் தொடர்வதா?  பாதியில் நாடகத்தை நிறுத்துவதா?  குழப்பத்தில் இருந்த நான் ஒரு முடிவுக்கு வந்தேன். குழந்தையை  எனது மனைவியும் எனது அப்பாவும்  மருத்துவரிடம் காட்டிக் கவனித்துக் கொள்வார்கள். நாடகத்தை என்னைத் தவிர யாராலும் தொடர முடியாது. எனவே நாடகத்தைத் தொடர முடிவு செய்தேன். 

இப்போது நாடகத்தில்  அம்மாவோடு விளையாடும் குழந்தைக்கு  என்ன செய்வது?  என்ற நெருக்கடி.   அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு     “தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையோடு நான் போய்  விளையாடிவிட்டு வருகிறேன் ” என்று    குழந்தையின் அப்பாவாக நடிப்பவரிடம்  சொல்லும்படி   உடனடியாக உரையாடலை மாற்றி நிலைமையைச் சமாளித்தேன். அடுத்தடுத்து      குழந்தை பாத்திரம் பங்கேற்கும் காட்சிக்கு என்ன மாற்று செய்வது என்ற குழப்பத்தோடு காட்சிகளை நகர்த்திக் கொண்டு  இருந்த நிலையில்,  என் அப்பா எனது மகனோடு மேடைக்கு வந்து  “வாந்தி நின்னுடுச்சுப்பா” ன்னாரு.  சோர்வாக இருந்த என் குழந்தை  மீண்டும் மேடைக்கு வந்த புத்துணர்ச்சியில் அவனுக்கான  உரையாடல்களை  உடன் நடிப்பவர்கள் வாயிலாக வெளிப்படுத்தி ஒருவாறு  நாடகத்தை முடித்தேன். 

              அந்த நாடகத்தில் பெற்ற   கசப்பான பட்டறிவால் 
 “ இனிமே  குழந்தை பாத்திரங்களை  வைத்து நாடகம் எழுதவே கூடாது”
” புதுமைங்கிற பேர்ல மேடைக்கு அடங்காத செட்டிங்களை அமைக்கவே கூடாது” ங்கிற இரண்டு உறுதிகளை  எனக்குள்ளே எடுத்துக்கிட்டேன்.  


 சமூக மாற்றம் காண விழையும் படைப்பாளிகளின்    மனம்   கிளை  தாவும்   குரங்குகள்தானோ? அவை  ஓரிடத்தில்  கட்டுப்பட்டு நிற்குமா? 


எடுத்த முடிவுகளில்  நான் உறுதியாக நின்றேனா?  

               --- அடுத்த தொடரில்  சொல்கிறேன்.


3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு நாடகம் அரங்கேறுவதற்குள் எத்துனை எத்துனைத் துன்பங்கள்
ஆயினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாய் வென்று சாதித்திருக்கிறீர்கள் ஐயா
நன்றி

KILLERGEE Devakottai said...

நாடகம் நடத்துவதில் எவ்வளவு சிரமங்கள் ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களின் மன உறுதி ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது. உங்களுடைய அனுபவத்தை உணரமுடிகிறது.

Post a Comment