Monday, February 22, 2016

இல்லறத் துணைநல ஏற்பு விழாவில் ...

திருவள்ளுவராண்டு2047 கும்பம் 9ஆம் நாள்( 21.02.2016) 
மதுரை பாண்டியன் திருமண அரங்கில் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் தமிழர் நெறிவழி நடைபெற்ற ஒரு திருமண விழாவில்  பல புதுமைகள் அரங்கேறியமை மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அழைப்பிதழிலேயே  திருவள்ளுவர்,  பெரியார்,பாரதிதாசன், பாரதியார், வள்ளலார் ஆகியோரின் அமுத மொழிகள் அச்சேறி அழகு செய்தன.

இணைந்து இல்லறமேற்போர் பெயர்களின் முன் தாய் தந்தையரின் பெயர் முதலெழுத்துகள் தமிழிலிருந்தது, சமக்கிருத ஆண்டு, பட்சம், நட்சத்திரம், யோகம், லெக்கனம் என்பவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, சூழியல் நெறிவழி உறுதி செய்தவாறு  மணவினைகள் நடந்தேறியமை முதலான பல சிறப்புகளைக் காண முடிந்தது.

 மொய் தவிர்க்கப்பட்டதும் வருகையும் வாழ்த்துமே விலையுயர்ந்த பரிசு எனக் குறிப்பிடப்பட்டதும் ஒரு மாறுபாடாவே இருந்தது.

 மணநிகழ்விற்கு முன்னதாக செவிச்சுவையாக
 “வாழ்க்கை உவகையால் நிறைந்தினிப்பது திருமணத்திற்கு முன்பா? பின்பா?“ என்னும் தலைப்பில்  கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில் மதுக்கூர் இராமலிங்கம், மகாராசன், நிசா, சோதி ஆகியோர் பங்கேற்ற  நகைச்சுவை பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.

மணவினை  நாவை .சிவம் அவர்களால் தொடங்கப்பட்டு
 தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் அவர்களால் தமிழ் நெறிப்படி  மெய்விளக்கத்தோடு நடந்தமை விழாக்காண வருகைதந்தோரை 
 சிந்திக்கவே வைத்தது.

மணமகன், மணமகள் அழைப்பு என்னும் சடங்குகளும் ஆடம்பர அலங்காரங்களும் தவிர்க்கப்பட்டிருந்தன.   

அந்நிரலில் புதுமையாக மூடநம்பிக்கைகளைச் சாடும், அறிவியலா? அற்புதமா? என்னும் மெய்விளக்க நிகழ்ச்சி பாவலர் பொன்.க அவர்களால் நடத்திக் காட்டப்பட்டது.  பில்லி சூன்யம், பெண்களுக்குப்  பேயோட்டுவதாக நடக்கும் வன்முறைகள், சாதகம், கைரேகை பித்தலாட்டங்கள்  முதலிய  மூடநம்பிக்கைகளைச் சாடி  போலிச் சாமியார்களால் மக்கள் ஏமாறும் நிலையினை விளக்கியதோடு சில அற்புதங்கள் அறிவியல் அடிப்படையானவையே என்பதைச் செயல் விளக்கங்கள் மூலம் செய்து காட்டினார். 

வெறும் கையில் தங்கச் சங்கிலி, திருநீறு. குங்குமம் வரவழைத்தல், அறிவியலறிஞர்களின் பெயர்களை ஒலிக்க அறுந்த கயிறுகள் இணைதல்,  நீளங்கள் மாறும் கயிறுகள், நெய் சொரிய நெருப்பின்றி எரியும் காகிதக் குவியல், எலுமிச்சம்பழத்திற்குள் இரத்தம், தேங்காய்க்குள் மலர்ந்த முல்லை மலர்கள் வரவழைத்தல், நீரூற்றப்  பற்றி எரியும் தேங்காய்,  நிறம் மாறும் சீட்டுகள், உடலில் தேய்த்தும் சுடாத தீப்பந்தங்கள். சூடம் விழுங்குதல், முதலான  பல தந்திரக் காட்சிகள் விழாவிற்கு வந்திருந்தோர்க்கு அறிவு விருந்தாக அமைந்திருந்தது. 

பலகுரல் இளவல் புதுகை வினி அவர்களின் பலகுரல் நகைச்சுவைத் தோரணம் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவுமாக அமைந்திருந்தது.

அந்நிகழ்வில் பாவலர் பொன்.க.,  எழுதி இசையமைத்துப் பாடிய 
          அறிவியல் கருத்தமைந்த பாடல் இதோ.....

அறிவியலின் வழியில்தானே மாற்றம் நடக்குது- அதன்
அடிப்படைதான் மக்கள் வாழ்வில் மலர்ச்சி கொடுக்குது
அறியாமை இருட்டு இன்னும் அப்பிக் கெடக்குது- அதை 
அகற்றுவதில்  நமக்கு ரொம்பப் பொறுப்பு இருக்குது     - அறிவியலின்

கட்டுச்சோறு கட்டை வண்டி பயணங்கள் போச்சு- இப்பக் 
களைப்பில்லாம பாட்டியும் உலகைச் சுத்திவரலாச்சு
கடுதாசியும் தந்தியும்கூட கைவிட்டுப் போச்சு - உள்ளங்
கைகளுக்கும் உலகைக் காணும் இணையம் வந்தாச்சு  -- அறிவியலின்

கூட்டத் துவைக்க மின்னணுப் பொறிகள் எங்கும் வந்தாச்சு - வீட்டுள்
கொதிப்பைக் குளிரைக் கட்டுப் படுத்த எந்திரமாச்சு
கொடுத்த வேலைமுடிச்சுக் கொடுக்க ரோபோக்களாச்சு - விரும்பும்
குழந்தையினைக் குளோனிங்கில் பெறவும் வழியும் கண்டாச்சு - அறிவியலின்

நிலாவிலே  காலடிவச்ச  கதை பழசாச்சு - அங்கே 
நிரந்தரமாக் குடியிருக்க வழியும் கண்டாச்சு
செவ்வாய்க் கோளின் ஆராய்ச்சியிலும் தெளிவு வந்தாச்சு - பெண்ணுக்கு
செவ்வாய்தோசத் தடைகள் தீரும் நிலமை வந்தாச்சு  -- அறிவியலின்

கிரகங்களால் கெடுதல் என்னும் சாதகப் பேச்சு - இப்ப
கிக்ஸ்போசான் விண்வெளி ஆய்வால் பொய்யின்னு ஆச்சு
அணுவியலின் தொழில் நுட்பங்கள் அனைத்திலுமாச்சு - இனிமே
அறிவியலே அகிலத்தை ஆளும்  நிலைஒசந் தாச்சு    -- அறிவியலின் 


Monday, December 21, 2015

வீதி கலை இலக்கியக் களம், புதுக்கோட்டை. நிகழ்வு-22

கலை இலக்கியச் சுவை பருக வருக.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்துள் அமைந்துள்ள ஆக்ஸபோர்டு சமையற்கலைக் கல்லூரியில்....
27.12.2015 ஞாயிறு காலை 10.00 மணிக்கு....

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள...வீதிகலை இலக்கியக் களத்தின் 22ஆவது நிகழ்விற்கு இலக்கிய ஆர்வலர் அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறோம்.

களத்தில் .....

கவிஞர்கள் மீரா.செல்வக்குமார், பவல்ராஜ், ரேவதி ஆகியோர் கவிதை வழங்கிட..

திருமிகு மூட்டாம்பட்டி ராஜு அவர்கள் சிறுகதை படைத்திட...

திருமிகு சுப்பிரமணியன் அவர்கள் ஓவியக்கட்டுரை கட்டுரைக்க...

முனைவர் துரைக்குமரன் ( நசிகேதன்) அவர்கள் “உப்புவேலி” என்னும் நூலை அறிமுகம் செய்ய..

திருமிகு கஸ்தூரி ரெங்கன் அவர்கள் ” தாமஸ்ஹார்டி” எனும் இலக்கியவாதி பற்றி அறிமுகம் செய்ய... 

யு.கே. இன்போ இணையம்-  கார்த்தி அவர்கள் வெள்ள நிவாரண களப்பணி  அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள...

அண்மையில் வெளியான தாரைதப்பட்டை, கொம்பன் திரைப்படங்களின் பாடலாசிரியர் புதுகை 
கவிஞர் இரா. தனிக்கொடி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க....
சிறப்பாக நடந்தேற உள்ள இலக்கிய விருந்தினைச் சுவைத்திட மகிழ்வுடன் அழைக்கிறோம்.


அழைப்பின் மகிழ்வில்...பாவலர்.பொன்.கருப்பையா.    
கவிஞர் மா.நாகநாதன்.      

    

Wednesday, November 25, 2015

இன்னுமா தணியவில்லை சீற்றம் ?

மழைத்தாயே...மன்னிப்பாயே.

மண்ணுலகைக் காக்கும் ஏ...மழைத்தாயே - உந்தன்  
கண்ணீரின்  சீற்றம் தனைத் தணிப்பாயே

வான்மழையே உன்னைநம்பி கால்பகுதி நிலமதிலே 
வாழும் மக்கள் வாழ்வ தனைச் சிதைக்காதே - வெள்ளம்
வந்ததெல்லாம் போதும் இன்னும் வதைக்காதே  

காடுகளை அழிச்சு அங்கே  ஆலைகளை அமைச்ச தப்பு
வீடுகளில் ஏசிசெஞ்சு வெளிக்காத்தைக் கெடுத்த தப்பு
சூடுஏத்தி  ஓசோன் குடையைச் சுக்குசசுக்காக்  கிழிச்ச தப்பு
பாடுபட்டப் பயிர்களையே பறிகொடுத்துத் தவிக்கிறோ மிப்ப   - மண்

நீர்வடியும் பாதையெல்லாம்  நிரவிவீடு  கட்டுன குத்தம்
தூர்வாராக் கம்மாயெல்லாம் தொழிற்பேட்டை யாக்குன குத்தம்
ஊர்முழுதும் குப்பையைக்கொட்டி உன்வழியைத் தடுத்த குத்தம்
சோர்ந்தபின்னே  உண ர்ந்துட்டோமே சோதிக்காம காத்திடு நித்தம்- மண்



Friday, November 13, 2015

புண்ணுக்குப் புனுகு

 புரையோடிப்போன புண்ணுக்கு புனுகு தடவி என்ன செய்ய?

என்னாத்தா புள்ளைக்கு சாயங்காலத்துலேருந்துஒடம்பு காயுது. 
 தலை நட்டம வச்சுக்க முடியாம பாய விட்டு எந்திரிக்காம படுத்தே கெடக்குறான் ”
- விளக்கை ஏத்தி வச்சிக்கிட்டே வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்து வேலாயி பாட்டியிடம் கேட்டாள் வீராயி.

“ கொல்லை வேலியில இருக்க அந்த ஆடாதோடை எலையில அஞ்சாறு இனுக்கும் ,அஞ்சலை நொச்சி எலையில கைப்பிடியும் ஆஞ்சாந்து  அந்தக் கரிச்சட்டியில ஒழக்குத் தண்ணியில போட்டு கொதிக்க வச்சு எறக்கி எளஞ்சூட்டுல அரைக் கொவளை அவ வாயில ஊத்து. காச்ச காணாமப் போயிரும்.   ஏலே ராமக்கட்டி இருக்கா? 
“ இல்லையேத்தா”
“வேப்பமரத்து வீட்டு செம்புகம் பச்சப்புள்ளக்காரி. ஒரு எட்டுப் போயி அரைச்சங்கு புள்ளப்பாலு வாங்கியாந்து  வெள்ளத்துணியில நனச்சு ஒம்மவ நெத்தியில ஒட்டு. வெக்கை வெலகிப்போகும்”- என்றாள் பாட்டி

“செம்புகம் அவுக ஆத்தா ஊட்டுக்குப் போனவ இன்னம் வல்லையேத்தா”

“இல்லாட்டிப் போவுது  தாவாரத்துல சொருகியிருக்க சீமை ஓட்டை ஒரைச்சு நெத்தியில பத்து்ப்போடு தலைப்பாரம் தன்னால போயிடும்” 

பாட்டியின் பக்குவப்படி பண்டுவம் செய்தாள் வீராயி.
காலையில் கலகலப்பாய் பள்ளிக்கூடம் போனாள் வீராயியின் மகள் வெள்ளையம்மாள்.

          ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் இப்படிப் பத்தியமில்லாப் பாட்டி வைத்தியத்தில் ஒரே நாளில் காணாமல்போன காய்ச்சல்,  ஏன் இன்று எந்த மருந்து மாத்திரை ஊசிகளுக்கும் கட்டுப்படாமல் அடம் பிடிக்கிறது?  

“அது சாதாரணக் காய்ச்சல், இப்ப வர்றது பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், எலிக்காய்ச்சல். சப்பானியக் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல்” என்று காய்ச்சலின் பரிணாம வளர்ச்சியைப் பட்டியலிட்டுப் பயமுறுத்தி பணம் பண்ணும் போக்குதான்  நீண்டு கொண்டே போகிறது.   காய்ச்சலால் நிகழும் மரணங்களும்தான்.

       அன்றும் கொசு, எலி, பறவை, கிருமிகள் இருக்கத்தான் செய்தன.  மனிதரைக் கடிக்கத்தான் செய்தன.ஆனால் அதன் பாதிப்பால் மனித உயிர்கள் போனதில்லை. ஏனென்றால் அந்தப் பாதிப்புகளை எதிர் கொள்ளும் நோய்எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இருந்தது. உணவு, உறைவிடம் வாழ்க்கைமுறையும்  அப்படி

அறிவியலில் அபரிமிதமான வளர்ச்சி கண்ட இன்றோ, கருவாகும் காலம் தொட்டே அந்நிய நாடுகளில் தடை செய்யப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலேயே வளர்கிறது மனித உடல். நவீன சாகுபடி , அதிக உற்பத்தி என்னும் பெயரில் விளைபொருள்களில் நச்சேற்றம். கழிவுகளுக்கிடையேயான உறைவிடங்கள்

உற்பத்திப் பெருக்கம் என்னும் நோக்கில் விளைநிலங்கள் தொழிற் பேட்டைகளாகி அவை உமிழும் நச்சுக் கழிவுகள் நிலத்தையும் நீரையும் காற்றையும் வெளியையும் மாசாக்கிக் கொண்டே இருக்கிறது. 

உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் உள்ளிழுக்கும் காற்றும் நஞ்சு கலந்ததாகி விட்டது.

மனிதன் தன்னலப்பேணியாகி இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான்.

பொது சுகாதாரத்திற்காக அரசு ஒதுக்கும் நிதியும் திட்டங்களும்   பல்கிப்பெருகிவரும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த ப் போதுமானதாக இல்லை. புரையோடிய புண்ணுக்குப் புனுகு தடவிப் பயனில்லை.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்  

என்னும் குறள்வரிகளை எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டியது இன்றையத் தேவை.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு மனிதவளப் பெருக்கத்தைச் சார்ந்தது. 
மனிதவளம்  உடல் நலத்தைச் சார்ந்தது. 
உடல் நலமோ தூய்மையான சுற்றுச் சூழலைச் சார்ந்தது.

எனவே  நோயால் நிகழும் மரணங்களைத் தவிர்க்க ,சுற்றுச் சூழலைக் காக்கும் பொறுப்பில் நாமும் ஆள்வோரும் கருத்தூன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் .



Tuesday, October 27, 2015

மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்

வாசிப்பு முகாமில்...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 24.10.2015 ,25.10.2015 ஆகிய இரண்டு நாள்கள் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான “மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாமினை நடத்தியது.

மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா அவர்கள் தலைமையில்  கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் உமாராணி அவர்கள் முதல்நாள் முகாமினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாற்றுக்கல்வியின் அவசியம் பற்றி மருத்துவர் சலீம், ஸ்டீபன்நாதன்  ஆகியோர் உரையாற்றினர்.
“நம்கல்வி நம்உரிமை” ”2016-புதிய கல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்” ஆகிய இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்நூல்கள் பற்றிய குழுவிவாதங்கள் செய்யப்பட்டது.
வாசிப்பிற்கான புத்தகங்களின் மேன்மை பற்றிய பாவலர் பொன்.க.அவர்களின் பாடல் முகாமில் பாடப்பட்டது
பாடல்
புத்தகம் நம்மோடு பேசத் துடிக்குது பேசிப் பார்ப்போமா
புத்தகப் பேச்சினில் வித்தகம் ஆயிரம் விளங்கிக் கேட்போமா?
மௌன மொழியினாலே நம் மௌனம் கலைத்து விடுமே
மனசுக்குள் புதுப்புது மாற்றங்கள் தந்திடும் மகத்துவம் அறிவோமா?

நேற்றைய மாந்தரின் மாட்சியை 
வீழ்ச்சியை நிரல்படச் சொல்லிடுமே
இன்றையப் புதுமையின் எழுச்சியை
 வளர்ச்சியை எழிலாய்க் காட்டிடுமே
நாளையத் தலைமுறை நாடிடும் 
செயலுக்கு நம்பிக்கை ஊட்டிடுமே
நாளொரு நிகழ்வையும் பொழுதொரு
 நடப்பையும் நலிவின்றிப் பேசிடுமே

அறிவியல் வளர்ச்சியை அணுயுகப் 
புரட்சியை ஆய்வுடன் சொல்லித் தரும்
அருங்கலை மிளிர்ச்சியை அழகியல்
 மலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித் தரும்
வானியல் மருத்துவப் பொறியியல் 
வேளாண் கருத்துகள் ஊட்டிவிடும்
வாழ்வியல் சுவைகளை வகைவகை 
இலக்கிய ஏடுகள் அள்ளித் தரும்.

நம்கல்வி நம்உரிமை என்னும் நூல் பற்றிய விவாதக் கருத்துகள்  தொகுத்தளிக்கப் பட்டன. 

இரண்டாம் நாள் முகாம்  லெ.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின்“ முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” என்னும் நூல் பற்றிய அறிமுகத்தினை கவிஞர் ஆர்.நீலா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நூலாசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் தனது ஏற்புரையில் கல்வித் திட்டம் மாறவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்.
முனைவர் ஆர்.இராமானுசம், பேராசிரியர்.பொ.இராஜமாணிக்கம் ஆகியோர் எழுதிய“புதிய கல்விக்கொள்கை விளக்கமும் விமர்சனமும்” நூல் பற்றிய குழுவிவாதம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கை பற்றி பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் அவர்கள் விளக்கஉரை நிகழ்த்தினார் 

இரண்டாம் நாள் முகாமில்  குழந்தைகளின் மனவெழுச்சிகளுக்கும் இயல்பிற்கேற்பவும் .குழந்தை மையக் கல்வித் திட்டம் இருக்க வேண்டும் என்னும் பொருளமைந்த பாடலைப்  பாவலர் பொன்.க .,பாடினார்
                                                                   பாடல் 
சிறகடிச்சுப் பறக்கட்டுங்க சின்னச் சிட்டுக்குருவி -அதன்
சிறகைஒடிச்சு முடக்காதீங்க சிறைக்குள்ளே அடக்கி
குழந்தைங்க மனசுக்குள்ளே கோடிஎண்ணம் ஒளிஞ்சிருக்கு 
கொஞ்சிநாம அன்பு செஞ்சா குறைவில்லாதத் திறன் வளரும்

தவறித் தெளிஞ்சுக் கத்துக்கிடத்தான் பிள்ளைகளே விரும்பும்- அதைத்
தடுத்து நமது கருத்தைத் திணிச்சா உரிமையை இழக்கும்
போகுற போக்குல போயித் திருத்துங்க புரிஞ்சுக்கும் நிறைய-சில
போக்கிரிப் பிள்ளையும்  புத்திசாலியாகி புதுப்பிக்கும் அறிவை

சொல்வதையெல்லாம் கேட்டுக்கக் குழந்தை அடிமை இல்லைங்க
சொந்தமாச் சிந்திச்சுக் கேட்டு அறியும் துடுக்குப் பிள்ளைங்க
பரிசும் அடியும் பழகிப் போனா பாதிப்பு ரொம்பவுங்க - எதிலும்
பட்டுத் திருந்தும் அனுபவந்தான் பலனை வெல்லுங்க

ஆடிஓடித் திரியும் பருவம் அனுபவப் படிப்பு - அது
ஆற்றலோடு சிக்லைத் தீர்க்கும் அறிவையும் வளர்த்து
ஆக்கப் புர்வச் செயலை வளர்க்கும் கல்வி தேவை்ங்க -அது 
ஆளுமையை வளர்க்கும் கருவி அறிந்து கொள்ளுங்க

நிறைவாக பாலகிருஷ்ணன் அவர்களின் தொகுப்புரையோடு முகாம் நிறைவுற்றது.





Tuesday, October 6, 2015

வலைப்பதிவர் திருவிழாக் காண எல்லோரும் வரலாம்

வாருங்கள் வலைப்பதிவர் திருவிழாக்காண.....

11.10.2015 புதுக்கோட்டை ஆரோக்யமாதா மக்கள் மன்றத்தில் சிறப்பாக  நடைபெற உள்ள வலைப்பதிவர் திருவிழா, ஏதோ இணைய தளத்தில் வலைப்பூ வைத்திருப்பவர் மட்டும்தான் கலந்து கொள்ளலாம் என்பதில்லை. 

சமூக வலைததளங்களில் இயங்குபவர்கள், 
மின்னஞ்சல் மட்டும் வைத்திருப்பவர்கள்,
 ஏன் கணினி கைளாயத் தெரியாத 
தமிழார்வம் உள்ளவர்கள் கூட
 இந்தத் திருவிழாவிற்கு  
அன்போடு வரவேற்கப்படுகிறார்கள் 

வாருங்கள் ... கணித்தமிழ் மின்னணு ஊடகவழி
 உருவாகி வளரும் பதிப்புலகப் 
பரிணாமத்தினைப் பாருங்கள்.
உலகளாவிய உறவுகளைத் தொடருங்கள்.

புத்துணர்வு  பூக்கும் நெஞ்சில்.

Monday, October 5, 2015

ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்டுக்கல் தனபாலன்

ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... | திண்டுக்கல் தனபாலன்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.