Friday, November 13, 2015

புண்ணுக்குப் புனுகு

 புரையோடிப்போன புண்ணுக்கு புனுகு தடவி என்ன செய்ய?

என்னாத்தா புள்ளைக்கு சாயங்காலத்துலேருந்துஒடம்பு காயுது. 
 தலை நட்டம வச்சுக்க முடியாம பாய விட்டு எந்திரிக்காம படுத்தே கெடக்குறான் ”
- விளக்கை ஏத்தி வச்சிக்கிட்டே வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்து வேலாயி பாட்டியிடம் கேட்டாள் வீராயி.

“ கொல்லை வேலியில இருக்க அந்த ஆடாதோடை எலையில அஞ்சாறு இனுக்கும் ,அஞ்சலை நொச்சி எலையில கைப்பிடியும் ஆஞ்சாந்து  அந்தக் கரிச்சட்டியில ஒழக்குத் தண்ணியில போட்டு கொதிக்க வச்சு எறக்கி எளஞ்சூட்டுல அரைக் கொவளை அவ வாயில ஊத்து. காச்ச காணாமப் போயிரும்.   ஏலே ராமக்கட்டி இருக்கா? 
“ இல்லையேத்தா”
“வேப்பமரத்து வீட்டு செம்புகம் பச்சப்புள்ளக்காரி. ஒரு எட்டுப் போயி அரைச்சங்கு புள்ளப்பாலு வாங்கியாந்து  வெள்ளத்துணியில நனச்சு ஒம்மவ நெத்தியில ஒட்டு. வெக்கை வெலகிப்போகும்”- என்றாள் பாட்டி

“செம்புகம் அவுக ஆத்தா ஊட்டுக்குப் போனவ இன்னம் வல்லையேத்தா”

“இல்லாட்டிப் போவுது  தாவாரத்துல சொருகியிருக்க சீமை ஓட்டை ஒரைச்சு நெத்தியில பத்து்ப்போடு தலைப்பாரம் தன்னால போயிடும்” 

பாட்டியின் பக்குவப்படி பண்டுவம் செய்தாள் வீராயி.
காலையில் கலகலப்பாய் பள்ளிக்கூடம் போனாள் வீராயியின் மகள் வெள்ளையம்மாள்.

          ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் இப்படிப் பத்தியமில்லாப் பாட்டி வைத்தியத்தில் ஒரே நாளில் காணாமல்போன காய்ச்சல்,  ஏன் இன்று எந்த மருந்து மாத்திரை ஊசிகளுக்கும் கட்டுப்படாமல் அடம் பிடிக்கிறது?  

“அது சாதாரணக் காய்ச்சல், இப்ப வர்றது பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், எலிக்காய்ச்சல். சப்பானியக் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல்” என்று காய்ச்சலின் பரிணாம வளர்ச்சியைப் பட்டியலிட்டுப் பயமுறுத்தி பணம் பண்ணும் போக்குதான்  நீண்டு கொண்டே போகிறது.   காய்ச்சலால் நிகழும் மரணங்களும்தான்.

       அன்றும் கொசு, எலி, பறவை, கிருமிகள் இருக்கத்தான் செய்தன.  மனிதரைக் கடிக்கத்தான் செய்தன.ஆனால் அதன் பாதிப்பால் மனித உயிர்கள் போனதில்லை. ஏனென்றால் அந்தப் பாதிப்புகளை எதிர் கொள்ளும் நோய்எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இருந்தது. உணவு, உறைவிடம் வாழ்க்கைமுறையும்  அப்படி

அறிவியலில் அபரிமிதமான வளர்ச்சி கண்ட இன்றோ, கருவாகும் காலம் தொட்டே அந்நிய நாடுகளில் தடை செய்யப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலேயே வளர்கிறது மனித உடல். நவீன சாகுபடி , அதிக உற்பத்தி என்னும் பெயரில் விளைபொருள்களில் நச்சேற்றம். கழிவுகளுக்கிடையேயான உறைவிடங்கள்

உற்பத்திப் பெருக்கம் என்னும் நோக்கில் விளைநிலங்கள் தொழிற் பேட்டைகளாகி அவை உமிழும் நச்சுக் கழிவுகள் நிலத்தையும் நீரையும் காற்றையும் வெளியையும் மாசாக்கிக் கொண்டே இருக்கிறது. 

உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் உள்ளிழுக்கும் காற்றும் நஞ்சு கலந்ததாகி விட்டது.

மனிதன் தன்னலப்பேணியாகி இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான்.

பொது சுகாதாரத்திற்காக அரசு ஒதுக்கும் நிதியும் திட்டங்களும்   பல்கிப்பெருகிவரும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த ப் போதுமானதாக இல்லை. புரையோடிய புண்ணுக்குப் புனுகு தடவிப் பயனில்லை.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்  

என்னும் குறள்வரிகளை எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டியது இன்றையத் தேவை.

ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு மனிதவளப் பெருக்கத்தைச் சார்ந்தது. 
மனிதவளம்  உடல் நலத்தைச் சார்ந்தது. 
உடல் நலமோ தூய்மையான சுற்றுச் சூழலைச் சார்ந்தது.

எனவே  நோயால் நிகழும் மரணங்களைத் தவிர்க்க ,சுற்றுச் சூழலைக் காக்கும் பொறுப்பில் நாமும் ஆள்வோரும் கருத்தூன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் .



5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் ஐயா... நாம் சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
நேர்ய் எதிர்ப்பு சக்தி இல்லா உடலை வளர்த்து வருகிறோம்
நன்றி ஐயா

சோலச்சி said...

உண்மை தான் அய்யா

கா.மாலதி. said...

நம்மைவிட கொசுக்கள்பலமாக உள்ளனநம்மைச்சுற்றி நச்சுக்கள்
நிதி நதியாகி கடலில் கலந்துவிட்டது கணக்குச்சொல்வதற்கு
புனுகாவது வாங்க வேண்டுமே அப்பா.

கா.மாலதி. said...

அப்பா, கில்லர்ஜி கடவுளைகண்டு தோழி கீதாவின் ஆசைகளை
கடவுளிடம் கூறும்படி அழைத்தார்,தோழி என்னை அழைக்க
நான் தங்களை அழைத்துள்ளேன்.( எனது வலைப்பக்கம்)

Post a Comment