Saturday, May 6, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -17

தேன்தடவிய கசப்புகள்          

                கற்பனைகளை விட நம்மைச் சுற்றி நிகழும்  அறிவுக்கு ஒவ்வாத     ந டப்புகளே  ஒரு படைப்பாளியை  சமூக   மாற்றத்திற்கான படைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

               அந்த வகையில், நான் களமாடிய கிராமத்து மக்களின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,  அவர்களின் வாழ்வியல் இடர்ப்பாடுகளை மந்திரம்  பில்லி, சூன்யம் முதலிய வற்றால் தீர்ப்பதாக ஆசைகாட்டி, நம்ப வைத்துத் தங்களின் பொருளாதார வசதிகளைப் பெருக்கிக் கொண்ட சில போலிச் சாமியார்களின்   தில்லு முல்லுகளைப்  பற்றிப் பாமர மக்களுக்குத் தோலுரித்துக் காட்ட 
 “ நிலைக்கண்ணாடி” என்னும் நாடகத்தைப் படைத்தேன்.

கதையின் சுருக்கம் இதுதான் 

              அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஒரு அரசு ஊழியரின் மனைவிக்கு, மாங்கல்ய தோசம் இருப்பதாக  ஒரு சாதகக்காரன் சொன்னதை நம்பி, அதனை நிவர்த்தி செய்ய ஒரு சாமியாரை நாடுகின்றனர் அந்தக் குடும்பத் தலைவரும் அவருடைய மருமகளும்.

             வசதியான இடம் என்பதை அறிந்த அந்தப் போலிச் சாமியாரும் அந்தப் பெண்ணின் மாங்கல்ய தோசம் நீக்க அவ்வீட்டுக்குச் சென்று வழிபாடு செய்யப் பெரும் பொருள் கேட்கின்றான். முற்போக்குச் சிந்தனையாளனான அப்பெண்ணின் கணவன் அதைத் தடுத்து அந்தப் போலிச்சாமியாரை வெளியேற்றுகிறான்.

              இதில் ஆத்திரமுற்ற அந்தப் போலிச் சாமியார், தன்னை அவமானப் படுத்திய அந்தக் குடும்பத்தைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னுடைய கையாள்களை, கைரேகை ஜோசியனாக, குடுகுடுப்பைக் காரனாக,  அவ்வீட்டிற்கு அனுப்பி அந்தக் குடும்பத்திற்கு கேடுகாலம் நெருங்குவதாகக் குறி கூறச்செய்கிறான்.





               சென்னையில் பட்டப் படிப்பு முடித்து கிராமத்திற்குத் திரும்பும் அக்குடும்பத் தலைவனின் தங்கை, அந்தச் சாமியார் அனுப்பிய கைரேகை, குடுகுடுப்பை,  ஆகியோரை அடித்து விரட்டுகிறாள்.

             தன் ஆட்களை அவமதித்த  அந்தத் துடுக்குக்காரியைப்  பழிவாங்க  அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாக தன் கையாளை கோணங்கிக்காரனாக அனுப்பிப்  பேயோட்ட முயல்கிறான்   அந்தப் போலிச் சாமியார். வந்த கோணங்கிக்காரனையும் எருக்க மிளாறால் அடித்து விரட்டுகிறாள் அப்புரட்சிப்பெண்.

             தனதுமுறைப்பெண்ணாகிய அத்துடுக்குக்காரப்    பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆசையில், தனது அக்காளின்  தோசம் தீர்க்க முன்வருகிறான் ஒரு வெகுளி  இளைஞன். தன்கணவனுக்குத் தெரியாமல் தன்வெகுளித் தம்பியை அந்தச் சாமியாரிடம் அனுப்பி, தனது தாலிபாக்கியம் நிலைக்க  பரிகாரம் கேட்கச் சொல்கிறாள் அவனது அக்கா.  

               அவனை அம்மனுக்குப் பால்குடம் எடுக்கச் சொல்லி அவர்களைத் திசை திருப்பிவிட்டு , தன்னை அவமானப் படுத்திய அந்தத் துடுக்குக்காரப் பெண்ணைக் கடத்தி,  வன்கொடுமை செய்யத் திட்டமிடுகிறான் போலிச் சாமியார்.  பால்குட நிகழ்வில்,தனக்கு அம்மன் அருள் வந்ததாக ஆடி அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து,   அந்தப் போலிச்சாமியார் கும்பலைப் போலீசில் பிடித்துக் கொடுப்பதாக அந்த நாடகத்தை முடித்திருந்தேன்.

               ஒருமாத கால ஒத்திகையில், கதையின் உட்பொருளை மோப்பம் பிடித்த அந்தப் பகுதி கோயில் குருக்கள், பஞ்சாங்கம் பார்க்கும் பண்டாரம் இருவரும் சேர்ந்து முதலில் பகுத்தறிவு வாதியாக நடிக்க முன்வந்த எங்கள் மன்ற உறுப்பினரின் அப்பாவிடம் சொல்லி அவனை நடிக்க விடாமல் செய்தார்கள்.   அதற்கு வேறு நபரைத் தயாரித்து பயிற்சி கொடுத்து வந்தேன். 

              அடுத்து  அந்தப் பகுதிப் பள்ளியில் நாடகப் பயிற்சி நடத்தவிடாமல் பள்ளித் தலைமை ஆசிரியருக்குப்  புகாரளித்து இடையுறு செய்தனர். வேறு இடத்தில் பயிற்சியளித்து வந்தோம். 

              அடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நடிகைக்கு மிரட்டல் கடிதம் போட்டனர். அவருக்கு தைரியம் சொல்லி முதல்நாளே முழு ஒத்திகைக்கு வரவழைத்தோம்.


              அதையடுத்து, நிகழ்ச்சிக்கு மின் இணைப்பு வழங்கிய அந்த வீட்டு அம்மையார் பற்றி மின்வாரியத்தில் புகாரளித்தனர். உடனடியாக ஒரு மின்னாக்கி ( ஜெனரேட்டர் ) ஏற்பாடு செய்து கொண்டோம்.

                  எல்லாத்தடைகளையும் மீறி நாடகம் நடந்து கொண்டிருந்த போது,  சில சில்லறைச் சலசலப்புகளை அந்தப் பிற்போக்கு வாதிகளின் கைத்தடிகள் ஏற்படுத்திப் பார்த்தார்கள். பாதுகாப்புக் கு வந்திருந்த காவல் துறை யினரால் அந்த சலசலப்பு அடங்கியது.


                இறுதியாக  பால்குடம் எடுக்கும் போது சட்டிப் பறை யடிக்க ஏற்பாடு செய்து அழைத்திருந்த தொழிலாளிக்கு  மதுவை அளவுக்கு அதிகமாக வாங்கிக் கொடுத்து எழுந்து நிற்க முடியாத அளவுக்குச் சாய்த்து விட்டார்கள். அந்த வேடத்தையும் நானே ஏற்று நாடகத்தை வெற்றிகரமாக முடித்தோம். 

காலங்காலமாய் பீடித்திருந்த மூட நம்பிக்கை நோய். கசப்பான மருந்தை அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்வார்களா?.  அதனால்தான் நாடகக்கலையென்னும் தேனைத் தடவி அந்த மருந்தைப் புகட்டினேன்.  பாராட்டினார்கள் பலர். பகை கொண்டனர் சிலர்.

              இரண்டு நாள்கள் கழித்து நகராட்சி ஆணையரிடமிருந்து விசாரணைக்கு வரச்சொல்லி  எனக்கு அழைப்பாணை வந்தது.
( நான் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆசிரியராகப் பணிபுரிந்த காலம்) விசாரணைக்குச் சென்ற போது அந்த ஆணையர் 
“ என்னய்யா அரசுப் பணியிலிருந்து கொண்டு அனுமதியில்லாமல் நாடகமெல்லாம் போடுகிறாயாமே?” எனக் கேட்டார். ” அனுமதி வாங்க வேண்டுமென்பது எனக்குத் தெரியாது” என விளக்கமெழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். 

              ஆன்மீகப் போர்வையில் உழைக்காமல்  பிழைக்கும் எத்தர்களின் வேலைதான்  அந்தப் புகாரென்று  பின்னர் தெரிந்தது.

              ஆனால் அவர்களே ஒரு கட்டத்தில்  இந்த  நாடகத்தில் காட்டப்பட்டவையெல்லாம் உண்மையென்று உணர்ந்த காலம் வந்தது. எப்போது தெரியுமா?

                                                   --- அடுத்த தொடரில் 

4 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா, சுவையான நாடகத்தைத் தருவதற்கு எத்தனை சுமைகளச் சுமந்து தடைகளைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்! இவையும்கூட நாடகம்போலவே, 'அடுத்து என்ன ஆச்சு?' எனும் ஆவலைத் தூண்டுவனவாக உள்ளன. அந்த ஆவலைத் தீர்க்கும் அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். (போலிச்சாமிகளை நாட்டுத் தலைவர்கள் வந்து பார்க்கும் நடப்புலகில் பகுத்தறிவாளர்களை ஆணையரகள் அழைத்து விசாரிக்கிறார்களா? பொய்யும் புரட்டும் பலியாக நம் கலை ஆயுதங்களை இன்னும் கூராக, இன்னும் ஆழ-அழகுடன் தீட்டுவோம்)

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு உண்மையினைக் கூற, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தனை எத்தனைத் தடைகளைத் தாண்டி வரவேண்டி இருக்கிறது
தொடருங்கள் ஐயா
தொடர்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வொரு நிலையிலும் தடைகள். அவற்றை நீங்கள் எதிர்கொண்ட விதம் அருமை. 1980களின் இறுதியில் ஒரு இதழில் நான் எழுதிய கடிதம் வெளிவந்தபோது அலுவலகத்தில், அனுமதி இன்றி இவ்வாறெல்லாம் எழுதக்கூடாது என்று அலுவலகத்தில் கூறப்பட்டது. நல்லதைச் சொல்வதற்கும், பகிர்வதற்கும்கூட அனுமதியாம். இருந்தாலும் நான் தொடர்ந்து செய்தேன். தங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.

இராய செல்லப்பா said...

எவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்கிறீர்கள் என்று வியப்பாக உள்ளது. விடாமியற்சியுடன் இலக்கியம் படைத்துவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

Post a Comment