Wednesday, December 14, 2011

பாரதியார்-130 பிறந்தநாள் விழா - நாடகம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
        
                      11.12.2011 அன்று, புதுக்கோட்டை ஐசுவர்யா கூட்ட அரங்கில், புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் உலகத் திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய ”கவிராசன் பாரதி விழா” சிறப்பாக நடைபெற்றது.
            
                   கிரவுன் சிட்டி சுழற்கழகத் தலைவர் ரொட்டேரியன் மு.அப்துல் சலாம் அவர்கள் தலைமையேற்க முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார்.
                       
                         உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
                       
                        இயற்றமிழ் பற்றி இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள்  உரைவீச்சு நிகழ்த்தினார்.  
                      
                      இளந்திரு கி.அரிமோகன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
                     
                        நாடகத் தமிழ் பற்றி பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் முன்னுரையோடு, அவர் எழுதி இயக்கிய, புதுகை மணிச்சுடர் கலைக்கூடம் சார்பான ” இவர்களும் இன்றும்” என்னும் நாடகம் சிறப்பாக நடைபெற்றது. 

                     நாடகத்தில் தமிழின் சிறப்பு, தாய்மொழி வழிக்கல்வி, பெண் சமத்துவம், பொதுவுடைமை, சாதி மதப் பிணக்குகள், அந்நிய முதலீடு, நதிநீர்ப் பிரச்சனை, நாட்டு ஒருமைப் பாடு, மனிதநேயம்  ஆகியவற்றின்  இன்றைய நிலைப் பாடும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றிய அன்றையச் சான்றோர் களாகிய திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் சிந்தனைகளும்  நாடக உரையாடல்கள் வாயிலாக நடித்துக் காட்டப் பட்டது.
                    
                   இந்நாடகத்தில்  திருவள்ளுவராக புலவர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களும், பாரதியாராக புலவர் மகா.சுந்தர் அவர்களும், பாரதிதாசனாராக தமிழாசிரியர் வள்ளியப்பன் அவர்களும்,  கூத்தனாக காப்பாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களும், நல்லமுத்துவாக உடற்கல்வி ஆசிரியர் இராச.ஜெய்சங்கர் அவர்களும் நடித்தனர். தலைமை ஆசிரியர் க.மதிவாணன் கதைமாந்தர்களை ஒப்பனையில் உருவாக்கியிருந்தார். 
                   
                  இசைப் பாடல்களோடும் நகைச்சுவையோடும் நடைபெற்ற இந்நாடகத்திற்கு இளந்திரு கி.அரிமோகன் இசையமைத்திருந்தார்.  
                
                 விழாவின் சிறப்பாக மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு ”மகாகவி பாரதியார் விருது” வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. 
                  
                  சிறப்பு விருந்தினர்களை உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டத் தலைவர் திரு சண்முக பழனியப்பன் அவர்கள் அறிமுகம்  செய்து வைத்தார். 
                   
                  விருது பெற்ற கவிச்சுடர் கவிதைப் பித்தன் அவர்களை கவிராசன்  இலக்கியக் கழகத் தலைவர் கவிஞர் நா.கண்ணன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
                
                    முன்னாள் அமைச்சர் உபத்துல்லா உள்ளிட்ட புதுக்கோட்டையின் இலக்கிய அமைப்பினரும் பொதுமக்களும் அரங்கு நிறைத்து விழாவினைச் சுவைத்தனர்.
               
                  பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
              
                   விழாவினை ஒருங்கிணைத்து நடத்திய கவி .முருகபாரதி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment