Tuesday, September 27, 2016

வீதி கலை இலக்கியக் களம் - 31

25.09.2016 அன்று புதுக்கோட்டை ஆக்சுபோர்டு சமையல் ்கலைக் கல்லூரியில்  வீதி கலை இலக்கியக் களம் -31 ன் சிறப்பான கூட்டம் நடை பெற்றது.
கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், இலக்கியச் சொற்பொழிவு என அடுக்கடுக்கான நிகழ்வுகளில், இத்திங்களில் கவிதை நூல் வெளியீடு என்னும் புதிய பக்கமும் இணைந்து பொலிவு பெற்றது.

       வயது வேறுபாடற்ற இருபது கவிஞர்கள் ஒன்னுமில்லீங்கஎன்னும் தலைப்பில் எழுதிய கவிதைகளின்  தொகுப்பு ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது.

            இத்திங்கள் கூட்டத்தின் அமைப்பாளர்கள் கவிமதி சோலச்சி மற்றும் கவிஞர் மாலதி ஆகியோருடன் அச்சுப்பணியில் மலையப்பன் அவர்களின் பங்களிப்பும் சேர,  கவிதைத் தொகுப்பு நூல் மிகச்சிறப்பாக அமைந்தது.

அத்தொகுப்பினை வீதியின் மூத்த வரிச்சு என்பதால்,
 பாவலர் பொன்.கருப்பையா அவர்களை வெளியிட வைத்துப் பெருமைப் படுத்தினர் அமைப்பாளர்கள். அதனை கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொகுப்பின் அத்தனை கவிதைகளுமே முத்துச்சரமாய் அமைந்திருந்தது.. பெரும்பாலானவர்களின்  விருப்பத்திற்கிணங்கி, பாவலர் பொன்.க .  எழுதித் தானே இசையமைத்த  “ஒன்னுமில்லீங்க” என்ற பகுத்தறிவுச் சிந்தனைப் பாடலை இசையோடு பாடினார். 

இதோ அப்பாடல்...

அறிவை விரிவுசெய் அகிலமுன் வசமாகும் 
                அதிலொன்னும் குத்தமில்லே
ஆசையும் அச்சமும் அடிமைப் படுத்துதே
               அதுதானே ரொம்பத்தொல்லை.
பட்டம்  பதவியால் பணங்காசு சேக்கலாம் 
                பண்பாடு மாறலைங்க
பகுத்தறி  வில்லாத செயல்களால் வாழ்க்கைக்குப் 
                பயனொன்னும்  இல்லீங்க.                      -- அறிவை

கைக்குள்ளே உலகத்தைக் காட்டுற கணினிக்குள் 
               கைரேகை பாக்குறாங்க
கதிதேடிப் பஞ்சாங்கக் குழிக்குள்ளே வீழ்ந்துமே 
               கடனாளி  ஆகுறாங்க
கழுதைக்கும் தவளைக்கும் கல்யாணம்பண்ணியே 
               மழைபெய்ய வேண்டுறாங்க
கடவுளின்  செயலுன்னு  கைகட்டி நின்னாக்கப்  
                பலனொன்னும் இல்லீங்க                      -- அறிவை

சாதீயப் பொருத்தம் சரியில்லை  எனச்சொல்லிக்     
               காதலைக் கொல்லுறாங்க
சாதிகள் கடந்த காதல் மணங்கதான் 
               சமத்துவம் சொல்லுதுங்க
சாதிக்கத் துடிக்கும்  தலைமுறைக் கிடையுறு 
                சாதீயத் தொல்லையிங்க
சமூகம் மாறிட சமநீதி மலர்ந்திடும்
               தீதொன்னும் இல்லீங்க                              -- அறிவை

மனுதர்மம் தலைதூக்கும் மண்ணுக்குள் மனிதம் 
               முடங்கியே கிடக்குதுங்க
மனசுக்குள் கசிந்திடும் அன்பினால் மானுடம் 
               நிமிர்ந்தேதான் நடக்குமுங்க
மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும்  
               நிலையின்னும் மாறலைங்க
மதம்பிடித் தலையாமல் மனிதனாய் வாழ்ந்திடத்  
               தடையொன்னும் இல்லீங்க                   -- அறிவை

சாத்திரம் சகுனம் சம்பிரதாயங்கள்
               சலிச்சுமே போகலேங்க
சனியிடம் பெயர்ந்தும் குருவீடு மாறியும்
              சங்கடம் தீரலேங்க
முனிய  சாமியோ அய்யனா  ரப்பனோ
             துணைக்கேதும் வரலையேங்க
துணிவோடு இனியொரு புதுவிதி செய்திட
             தடையொன்னும் இல்லீங்க.                        -- அறிவை


Monday, September 26, 2016

புதிய கல்விக் கொள்கை - இசைப்பாடல்

 புதிதாக நடுவணரசு வகுக்க முனைந்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கையில், கல்வியாளர்களின், பொது மக்களின் கருத்தறியப்படாமல்  வெளியிடப்பட்டுள்ள உள்ளீடுகளின் பாதிப்பு மற்றும் முரண்களை நீக்கக் கோரி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த நிலையில் பாமர மக்களுக்கு அதன் எதிர்காலத் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு சென்றடைய, கலை வடிவங்களும் , இசைப்பாடல்களும்  ஓரளவு நல்ல பயனளிக்கும் என்பதால் இந்த இசைப்பாடலை ஆக்கியுள்ளேன்..

அறிவொளி காலத்து “ கடையாணி” பாடலின் இசையில் இப்பாடலைப் பாடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------
பாடல்
இசைப்பாடல்-  பாவலர் பொன்.கருப்பையா.

மாறவேணும் புதிய கல்விக் கொள்கைங்க - அதில
மக்கள்நலம் கொஞ்சங் கூட இல்லேங்க
தானானே தானேனன்ன தன்னன்னா - தானே
தானானே தானேனன்ன தன்னன்னா

சமத்துவத்தை மலர்த்துவதே கல்விதான் - அதைச்
சாத்தியமா ஆக்கும் பொதுப் பள்ளிதான்
சாதிக்கும் மாந்தரை உருவாக்கத்தான்- நாட்டில் 
சகலருக்கும் வேண்டும் புதிய கல்விதான்  -       மாறவேணும்

தேக்கமில்லாத் தேர்வு முறையில் மட்டுமே - எங்கும் 
தேடிக்கல்வித் தொடரும் வாய்ப்புக் கிட்டுமே
தோத்தவனை  தெரிஞ்ச தொழிலைச் செய்யவே - நெட்டித்
துரத்துவது குலக் கல்வித் திட்டமே.                 - மாறவேணும்

தேர்ச்சியிலே தரம் பிரித்தல் தர்மமா? - இது
தேசிய நீரோட்ட வர்க்க பேதமா?
வசதியாளர் பட்டம் பதவி ஆள்வதோ? - வாழ்வில்
வறுமைப் பட்டோர் துன்பத்திலே வீழ்வதோ?       -- மாறவேணும்

வேறுவேறு மொழிகள் பேசும் மண்ணிது - இதுல
வேதமொழிக் கல்வியை வலிந்து  திணிப்பதா?
வீரவர லாற்றை நூலில் மறைப்பதா? - மனுதர்ம
வேதகாலப் பழங் கதைகளை நுழைப்பதா?           - மாறவேணும்

அரசுப்  பள்ளி மாணவர்கள் குறைஞ்சிட்டா - அதை
அடுத்து தனியார் பள்ளியோடு இணைப்பதா?
ஆசிரியர்க்கு ஐந்தாண்டுக்கொரு மதிப்பீடா?- இதனால்
அரசுக்கல்வி அந்நிய  மயமா ஆகாதா?              - மாறவேணும்

மக்களைமேல் உயர்த்துவதே கல்வியின் எல்லை - தனியாய்
மாநிலத்தின் பட்டியலிலும் கல்விவர  வில்லை
மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் பயனிலாக் கொள்கை - மாற்றி
மலர்த்த வேண்டும் புதுசாஒரு கல்விக் கொள்கை. -- மாறவேணும்

Friday, September 2, 2016

இளம் விஞ்ஞானிகளுக்குத் தெம்பேற்றம்.

உடல்நலக்குறைவால் சில மாதங்கள் எந்த செயல்விளக்க நிகழ்ச்சிகளிலும் ஈடுபடாதிருந்த நான்,

01.09.2016 அன்று இனிய நண்பரும் ஸ்ரீ வெங்கடேசுவரா பதின்ம மேல்நிலைப்பள்ளித் தாளளருமான கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் அன்பான அழைப்பினை ஏற்று, 06.09.2016ல் அப்பள்ளியில் புதிய தலைமுறை நடத்த உள்ள “வீட்டுக்கொரு விஞ்ஞானி” நிகழ்ச்சிக்காக அப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாட்டுக் கருவிகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு செயல் விளக்கக் கருத்துப் பகிர்வு நிகழ்வினை நடத்தினேன்.

எனது முன்னாள் மாணவரும் இந்நாள் அப்பள்ளியின் துணை முதல்வருமாகிய திரு சு.குமாரவேல் என்னை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்பள்ளியில் இயக்குநர் கவிஞர் ஆரா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.

மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு அறிவியல் காலந்தோறும் வளர்ந்து வந்த நிரலை விளக்கி, இன்று உலகை மாற்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் மாணவர்களுக்கு சுவைபட விளக்கினேன்.

ஒரு விஞ்ஞானி உருவாக அவன் மனதில் முதலில் அறிவியல் உணர்வு தூண்டப்பட வேண்டும். அறிவியல் மனப்பான்மையினை உருவாக்க, பள்ளி, வீடு, சமூகம் அவனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பிறர் சொன்னவற்றையே்ா, படித்த, பார்த்தவற்றையே அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் 

ஏன், எதற்கு, எப்படி, எதனால் என்னும் கேள்விகளுக்கு அவற்றை உட்படுத்தி ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏற்றுக் கொள்ளும் அறிவியல் மனப்பான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தானே முயன்று, தடைகளையும், விமர்சனங்களையும் கடந்து, தன்னம்பிக்கையோடு. விடாமுயற்சியுடன் உழைப்பதாலேயே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் என்பதை, மாணவர்களுக்கு  சர் ஐசக் நியுட்டன், ஆர்க்கிமிடிஸ், கலிலியோ தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைச் சுட்டிக்காட்டித் தெம்பு ஊட்டினேன்.

ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் உள்ள அறிவியல் உண்மைகளை, எளிய அறிவியல் ஆய்வுகளைச் செய்துகாட்டி விளக்கிய போது,

 மாணவர்கள் ஆர்வமுடன்  உள்வாங்கிக் கொண்டதையும், தாங்களே முன்வந்து சில ஆய்வுகளை ஈடுபாட்டோடு செய்ததையும் கண்டு வியந்துபோனேன்..


உணவு இடைவேளை நேரம் கடந்தும் மாணவர்கள் சோர்வின்றித் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டது உண்மையில் அப்பள்ளியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி உருவாவது திண்ணம் என்ற மகிழ்வில் நிகழ்வினை நிறைவு செய்தேன்.