Wednesday, January 24, 2018

காலத்தின் குரல்நிறைவேறாதவையும்  நிறைவேற்ற        நினைப்பதுவும்


            அகவை எழுபத்தொன்றாயிற்றா? என்ற நினைப்போடு என் அறையின் நாள்காட்டியில் தேதியைக் கிழிக்க முனைந்தபோது,

“எழுபதாண்டு காலம் இம்மானுட சமூகத்திற்குள்  சங்கமித்து காலததைக் கழித்தாயே இச்தச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு நீ என்ன செய்து கிழித்தாய்?”

என்று என் கன்னத்தில் அறைந்ததுபோல் அந்த நாள்காட்டி என்னைக் கேட்டதாக ஓர் உணர்வு.

மன உறுத்தலோடு, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தேன். 

                 விளையாட்டுப் பருவம், விடலைப் பருவம் கடந்து,                  36 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களை, பாடப் புத்தகங்களுக்கு அப்பால் அவர்களிடம் புதைந்து கிடந்த வாழ்வியல் திறன்களை வளர்த்து உருவாக்கி இருக்கிறேனே, அதற்காக தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகூட வழங்கி இருக்கிறதே என நான் நினைக்கு முன்,

 ” அது உன் வயிற்றுப் பிழைப்புக்கான வருமானத்திற்காகச் செய்த பணி” என்றது காலத்தின் குரல்.

              50 ஆண்டுகாலம் மணிமன்றம் என்ற கலை,கல்வி வளர்ச்சி அமைப்பின் மூலமும், 14 ஆண்டுகளாய் நினைவில் வாழும்  என் இணையாள் பெயரில் “மரகதவள்ளி அறக்கட்டளை”யை நிறுவி அதன் மூலமும்,  வகுப்புவாரி முதல் மாணவர்களுக்கும், மாவட்ட முதல் மாணவர்களுக்கும், முழுத்தேர்ச்சி அரசுப் பள்ளிகளுக்கும்  மாவட்ட உயர் அலுவலர்களைக் கொண்டு விருதுகள் வழங்கி   வந்துள்ளோமே என்று பெருமிதம் கொள்ளுமுன்...

” நீட் தேர்வு முறையில்தான் அந்த முதல் மாணவர்களெல்லாம் கரைந்தே போனார்களே” என்றது காலத்தின் குரல்.

               கடந்த ஐம்பது ஆண்டுகளாய் பள்ளி ஆண்டுவிழாக்களில், வானொலியில், பொதுவெளி மேடைகளில் மணிமன்றம், மணிச்சுடர் கலைக்கூடம் மூலம் 72 சமூக, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி, 354 இசைப்பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடி,3ஒலி நாடாக்கள்,2 இறுவட்டுகள் வாயிலாக, மக்களிடையே சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்திருக்கிறேனே எனப் பட்டியலிட முனைந்தபோது....

” விதைத்தாயே, அதில் விளைச்சல் என்ன கண்டாய்?” எனக் கேட்டது காலம்.

           அறிவொளி இயக்கம், தொடர் அறிவொளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச, முதலிய அமைப்புகளில் இணைந்து 25 ஆண்டு காலம் பாமர மக்களிடம் மணிடிக்கிடந்த மூட நம்பிக்கைகளை, மந்திரமா? தந்திரமா?, நழுவப்படக்காட்சி, எளிய அறிவியல் ஆய்வுகள் மூலமாக     அ றியாமையை அகற்றும் விழிப்புணர்வுப் பணியை ஆற்றி இருக்கிறேனே  எனச் சொல்லுமுன்...

” மூட நம்பிக்கை ஒழிஞ்சுதா? அறியாமை அகன்றிடுச்சா? என்ற காலத்தின் கேள்விக்கு , ஆம் எனச் சொல்லி என்னை நான் ஏமாற்றிக் கொள்ள இயலவில்லை.

               28 ஆண்டு காலம் தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் காவல்துறைக்குத் துணையாகப் பணியாற்றிப் பாராட்டு, பதக்கமெல்லாம் வாங்கிய சேவையைச் சொல்ல முற்பட்டபோது,

“ நீ துணையாய்ப் போனே, அது உனக்கு எப்பவாவது துணையா நின்னுச்சா? ன்னு நச்சுன்னு குட்டியது காலம்.

செஸ்டாட், நபார்டு வங்கி மூலம் கிராமப்புற மக்களுக்குச் சிறுசேமிப்பு, சிறுகுறு தொழில் தொடங்க வங்கிகளின் சேவை பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரை நிறையச் செய்திருக்கிறேனே...

“ஓ... அப்ப மக்களை உண்டியலை ஒடைக்க வச்ச பாவத்தில உனக்கும் பங்கிருக்குன்னு சொல்லு” என்று எடக்கு மடக்கா காலம் என் மீது ஒரு பழியைப் போட்டது.

                  கதிரவன்  புப்பந்தாட்டக் கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், இளந்தென்றல் கலை மன்றம் முதலிய அமைப்புகளை உருவாக்கி, அவை மூலம் இளந்தலைமுறைக்கு விளையாட்டுத் திறனை ஊக்குவித்தேனே... என நினைத்தபோது

” அப்படி எத்தனைபேர் ஒலிம்பிக்கில், ஆசியாட்டில் பதக்கம் பெற்றுள்ளார்கள்? ” என எள்ளலாய் வந்தது காலத்தின் கேள்வி.

               மாவட்ட காசநோய்த் தடுப்பு இயக்கம், அனைவருக்கும் சுகாதார இயக்கம் ஆகியன மூலம் கிராமப்புற மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பரப்புரை செய்ததெல்லாம் சேவை இல்லையா? என மனதுக்குள் நான் பொங்கியபோது....

” அதனால் காசநோய் மட்டுப் பட்டுடுச்சா இல்லே இறப்பு எண்ணிக்கைதான் குறைஞ்சிடுச்சா?” என எதிர்க் குரல் காலத்திடமிருந்து வந்தது உணர்ந்தேன்.

             செஞ்சிலுவைச் சங்க பயிற்சி பெற்று, பள்ளிகளில்  வழிகாட்டியாய், கருத்தாளராய் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்குச் சாலை விபத்துத் தடுப்பு, முதலுதவி மற்றும் மீட்புப் பயிற்சிகள் அளித்திருக்கிறேனே என்றெண்ணியபோது...

” சாலை விபத்துகள் குறைந்து விட்டதா? நீ  கற்றுத்தந்த படி எத்தனைபேர் முதலுதவி செய்து உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்?” என்று பதில் சொல்ல முடியாதபடி வாயை அடைத்தது காலத்தின் குரல்.

நுகர்வோர் பாதுகாப்புக் குழுவில் இணைந்து, எடை மோசடி, கலப்படம் பற்றி வில்லுப்பாட்டு மூலமெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதைச் சொல்லவா? என நினைக்குமுன்..

“ கலப்படமும் எடை மோசடியும் ஒழிஞ்சிருச்சா? ” எனக்கேட்டது காலத்தின் குரல்.

             திருக்குறள் கழகம், இளங்கோவடிகள் மன்றம், கணினித் தமிழ்ச் சங்கம், வீதி கலை இலக்கியக் களம், முதலான இலக்கிய அமைப்புகளில் களமாடி இலக்கியப் பணியாற்றியதையும், ஆறு நூல்கள் வெளியிட்டுள்ளதையும் தாய்மொழியாம் தமிழுக்குச் செய்த தொண்டுகள் இல்லையா ? எனக் கேட்க மனம் ஏங்கியபோது...

” காற்றில் கரைத்த கற்புரம் நீ,  ஆயிரமாயிரம் இலக்கியவாதிகள் சாதிக்காததை நீ என்ன சாதிச்சுட்டே.” எனும் அலட்சியக் குரல் காலத்திடமிருந்து வந்தது.

          இறுதியாக காலம் ஏற்றுக் கொள்ளும் புண்ணிய சேவையைச் சொல்லி ஆறுதலடைய  நினைத்தேன். சர்வசித் மக்கள் சேவை இயக்கத்தில் இணைந்து 200க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் கோரப்படாத உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து எடுத்து நல்லடக்கம் செய்துள்ளமையைக் காலத்தின் செவியில் உரக்கப்  போட்டபோது...

“ இது நல்ல சேவைதான். ஆனால் இனிமேல் அத்தகைய உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கல்லவா போய்விடும்”. என அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது காலம்.

          வாழும் காலத்தே செய்தவையெல்லாம் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாய்ப் போய் விட்டதை உணர்ந்த நான்          “ இறந்த பிறகு எனது உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்பிற்காக “உடற்கொடை”யளிப்பதாக 2010ல் 171ஆம் எண்ணில்  பதிவு செய்து மெய்யியல் துறையின் ஒப்புதல் பெற்றுள்ளதைக் காலத்தின் கருத்தில் பதிவிட்டபோது...

” நல்ல செயல்தான். அதற்கும் நீ விபத்திலோ, தற்கொலை செய்து கொண்டோ சாகாமல் இயற்கையாக மரணிக்க வேண்டும் என்ற காலத்தின் எச்சரிக்கைக்கு....

” அந்த நாளைத்தான் விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று நாள்காட்டியின் தேதியை விரைந்து கிழித்தேன்.