Sunday, August 28, 2011

அழகு! அழகு!!

அழகியத்            தமிழ்மொழிப்        பேணுதல்       அழகு
அயல்மொழிக் கலப்பினை           அகற்றுதல     அழகு
ஆழ்ந்தத்             தனித்தமிழ்            பற்றென்றும்  அழகு
ஆணைகள்       தமிழினில்             அமைந்திடல் அழகு                                   இனியதாய்த்   தமிழ்ப்பெயர்         இடுதலே          அழகு
இளமையில்    தமிழ்வழிக்            கற்றலே            அழகு
ஈர்த்திடும்         கலையாவும்        தமிழென்பதே  அழகு
ஈடில்லாத்         தமிழ்ப்பண்            பாடுகொள்       அழகு
உயர்தனிச்        செம்மொழித        தமிழாய              தழகு
உணர்வுடைத் தமிழராய்               வாழ்தலே          அழகு
ஊற்றெனத்      தமிழ்நூல்கள்       உருவாதல்       அழகு
ஊக்கமாய்த்     தமிழினம்               காத்திடல்         அழகு
எம்மொழி         யினும்தமிழ்          இனிதென்பது   அழகு
எங்கெங்கும்   பெயர்ப்பலகைத் தமிழாதல்           அழகு
ஏற்றங்கொள் துறையெலாம்     தமிழேறல்         அழகு
ஏற்புடை           யாவினும              இன்தமிழ்            அழகு
ஐந்திணை       வரைதந்த               அருந்தமிழ்         அழகு
ஐயன்                குறள்நெறி             வாழ்ந்திடல்       அழகு
ஒப்பிலாத்       தமிழ்க்கலை         உயர்த்திடல்       அழகு
ஒன்றானோம் தமிழ்ச்சாதி          என்பதெவ்            வழகு
ஓதும்மொழி   எல்லாம்                 தமிழென்ப            தழகு
ஓங்கிடும்         தமிழ்ப்புகழ்           உலெகெங்கும்   அழகு
ஔவிய           அயல்கூற்று        அணுகாதல்         அழகு
ஔடத             மாய்த் தமிழ்          அமைந்ததே        அழகு

Thursday, August 25, 2011

தமிழ்ப் புத்தாண்டு

எது தமிழாண்டு?  ஒரு இனத்தின் அடையாளம் அவ்வினம் பேசுகின்ற மொழியேயாகும். அவ்வகையில் இலெமூரிய கண்டத்தில் நீண்ட நெடுங்காலத்திற்கு முன் தோன்றி, கடல்கோளால் அழிவுற்று. எஞ்சியத் தமிழினம், இந்தியத் துணைக்கண்டம் நகர்ந்து, வணிகம் மற்றும் வாழ்வியல் காரணங்களால் உலகம் முழுமைக்கும் பரந்து வாழும் நிலையில், அவ்வின அழிவிற்கு பிற பேரினம் கைக்கொண்டிருக்கும் ஆயுதம் தமிழ்மொழியின் சீர்மையை இயல் வழிகளிலெல்லாம் அழிப்பது என்னும் அற்ப முயற்சி. அதன் தொடர்ச்சிதான் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழினம் மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருந்த மாட்சியைக் குலைக்க,மீண்டும் ”சித்திரை - தமிழ்ப் புத்தாண்டு” என்னும்  சாணக்கிய அறிவிப்பு. இது ஏதோ முந்தைய அரசின் முதல்வர் தன்னிச்சையாக  அறிவித்த அறிவிப்பு இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பரிதிமால் கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் ” பிரபவ முதல் அட்சய” ஈறாய்  வழங்கப்பட்டு வரும் அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் இல்லை. அவற்றிற்காக கற்பிக்கப் பட்ட இதிகாசக் கதைகள், தமிழர் மரபு, மாண்பு, ஆகிய பண்பாட்டுக் கூறுகளுக்கோ, அறிவுக்கோ பொருத்தமானதாக இல்லை. மேலும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் குழப்பமின்றிக் கணக்கிட  ஏதுவாகவும்  இல்லை என ஆதாரங்களோடு விளக்கி, தமிழருக்கென ஒரு தொடர் ஆண்டினை அறுதியிட வேண்டுமெனப் போராடி வந்தனர். அதன் பின்னர்1921 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்கள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஆய்ந்து, தமிழ்மறை தந்த திருவள்ளுவர்  பெயரில் தொடர்  ஆண்டைத் தமிழ் கூறும் நல்லுலகம் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம்  கி.மு.31 என்பதைத் தமிழாண்டெனக் கொள்ள முடிவாற்றப்பட்டது. அதே வேளையில் தமிழ்நாட்டின் புவியியலை ஒட்டிய  பருவமாற்றங்கள், வேளாண் தொழில், வாழ்வியல் மேன்மைகளையொட்டி  விளைந்தவற்றை இயற்கை மூலமான கதிரவனுக்குப் படைத்து, உழைப்பிற்கு நன்றிகாட்டிட ஏற்ற திங்களான ”தை” த்திங்களையே திருவள்ளுவர் ஆண்டாகியத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத் திங்களாக கடந்த 2007ஆம்  ஆண்டு தமிழக அரசு அரசாணையாகப் பிறப்பித்துக் கொண்டாடப் பட்டு வருகிறது. இன்னும் தமிழ் மாதங்கள் என ” சைத்ர....முதல் ...பல்குனா” வரையான  சூரிய வீதியில் தங்கும் உடுக்களின் பெயர்கள் சமக்கிருத மொழியில் இருப்பதை ” சுறவம்,கும்பம் , மீனம் , மேழம்,விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை” எனத் தமிழில் வழங்கவேண்டுமெனத் தமிழறிஞர்கள் முனைந்து கொண்டிருக்கின்ற வேளையில், அரசியலிலோ, பொருளாதாரத்திலோ,  மக்கள் வாழ்வியலிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத  தமிழ்ப்புத்தாண்டு தை என்பதை சித்திரை என மாற்ற முயலுவது, தமிழ் உணர்வாளர்களை வேதனைப் படுத்தும் செயலாகும்  . அறிவுசால் ஆன்றோரின் மனக்குமுறலுக்கு அரசு ஆட்படும் நிலையினைத் தவிர்த்தலே அறிவார்ந்த அரசுக்கு நலம் பயக்கும்.

             தைத்திங்கள் முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு..
                                                     பாடல்.

 தைததிங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு
           தமிழ்ப் பண்பாடோடு தமிழாநீ கொண்டாடு                              --- தைத்திங்கள்

ஞாலத்தின் முதலதொழிலாய் வேளாண்மை தனைக்கொண்டு
           காலத்தை அதன்வழியே வகுத்தானே  நம்தமிழன்
ஆடிப்பட்டம் தேடிவிதைத்து மார்கழியில் மகசூல்கண்டு
        கூடிக்களிக்கும்  நாளாய்க் கொண்டானேத் தைமுதல்நாளை -- தைத்திங்கள்
சுழல்கின்ற புவிசெழிக்க சூரியனை முதன்மை கொண்டான் 
        சூரிய வீதியில் தங்கும் உடுக்கள் பன்னிரண்டு கண்டான் 
சுறவம்முதல்  சிலைஈறாய்ச் சு ழன்றிடும் ராசிகள்பெயரைச்
        ( சுறவம், கும்பம்,மீனம்,மேழம்,விடையொடு ஆடவை, 
          கடகம், மடங்கல், கன்னி, துலை,நளி,சிலை என) 
சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைதிங்கள் என்றான் -- தைத்திங்கள்

கார்கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்எனக்
        காலநிலைக் கேற்பப் பொதழுதைப் பருவங்களாய்ப் பிரித்து வைத்தான் வெயிமழை குளிர்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில் 
      விளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைக்கும் நாளே தைத்திங்கள்

மோகினி உருக்கொண்டு  கிருட்ணனை நாரதமுனியும்
     மோகித்துப் பிறந்திட்ட பிள்ளைகள் அறுபதன் பெயராம்
பிரபவமுதல் அட்சயஈறாய்  பெயரிட்டுத் தமிழாண்டென்னும் 
     பேதையர் புலம்பல் போக்க பிறந்ததே தமிழாண்டென்று            -தைத்திங்கள்

திங்களைப் பகுத்திட்ட திறன்மிகு தமிழ்ச் சான்றோர்
      திடமுடன் தமிழாண்டு தொடங்கிய காலம் சொன்னார்
தீங்கனிச் சுவைஊற்றாம் திருக்குறள் மறைதந்த 
      திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு எனக்கொண்டார்              - தைத்திங்கள்

Tuesday, August 16, 2011

நம்பிக்கை நட்சத்திரங்கள்

16.08.2011 அன்று புதுக்கோட்டை, கைக்குறிச்சி சுபபாரதி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றநாட்டு நலப்பணித் திட்டத்  தொடக்க விழாவில் மாணவத் தன்னார்வத் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பாவலர் பொன்.க ஆற்றிய உரையினிடையே        வழங்கிய  இசைப்பாடல்.

நாளைய உலகுக்கு நம்பிக்கை ஒளிதரும் நவமணி மாலைகளே - இந்த
            நாடு நலம்பெற நயமிகு தொண்டினை நாள்தோறும் ஆற்றுங்களே
சோலையில் மல்ர்ந்து சுகந்த மணம்தரும் சுடரொளிக் காந்தள்களே - அருங்
           கோடையில் ஊற்றென குளிர்ந்த நல்லறங்களைக் குவித்திட வாருங்களே  -

நாடு நமது என்போம்-- எந்த 
           நாளும் இனிது என்போம்                                                                                                            -- நாளைய

தேசத்தின் உயிர் நிலை கிராமத்தில தான்எனும் கூற்றினை மறப்போமோ? 
          தேயுறும் வளங்களை மீட்டிடும் பாமரர் நலம்பெற உழைப்போமா?
ஓய்வின்றி உழைத்திடும் உன்னத மனங்களை மகிழ்வுறச் செய்வோமா?
          தாழ்வின்றிக் களப்பணி ஆற்ிறிட வாருங்கள் தாமதம் இனியேனோ?                      -- நாடு நமது
மானுடப் பிறவியின் மகத்துவம் மற்றவர் பயனுற வாழுவதே - கல்
          தூணெனத் தாங்கிடும் தொண்டினைத் தொடருங்கள் துயருரும் மனிதருக்கே
கனிவுடன் ஆற்றிடும் பணிகளுக் கெதிர்ப்படும் தடைகளுக் கஞ்சுவதோ? மனத் 
          துணிவுடன் தொடருங்கள் துயரங்கள் உங்கள் உயரத்தை மிஞ்சிடுமோ?                -- நாடு நமது
தமக்கென வாழ்ந்திடும் தரித்திரப் பிறவியாய் இருப்பதில் பெருமையில்லை 
         பிற்ர்க்கென உழைப்பதில் பெருமைகொள் உன்னைப் பேரிடர் தொடுவதில்லை
களிப்புடன் ஆற்றிடும் தொண்டனின் வாழ்வினில் களைப்பில்லை காணீரோ?உங்கள்
        விழிப்புணர் சேவையால் வளப்படும் மனிதங்கள் விரைந்துமே வாரீரோ?              -- நாடு நமது

என்னத்த நா பாடுறது?

14.08.2011 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற த.மு.எ.கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில்  நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க  பாவலர் பொன்.க சுடச்சுட எழுதி, சுடச்சுட அரங்கேற்றிப் பாடிய இசைப் பாடல்.

என்னத்தநா பாடுறது? எதுக்குத் தாளம் போடுறது? நெஞ்சுக்குள்ளே நெனைப்புகள் வந்து முன்னுப் பின்னா மோதுறதே.                        --என்னத்த


சாதிமத பேதமின்றிச் சமநீதி காத்துவந்த
                 சத்தியவான்களைப் பாடுறதா?
சாதிக்கும் மாந்தரெல்லாம் சாதிக்குள் அடைககாக்கும்
               சண்டித்தனப் போக்குகளைப் பாடுறதா?
பண்பாடு மாறாம பாருயரப் பாடுபடும்
              பாட்டாளித் தோழரைப் பாடுறதா?
பசப்பு வேலைசெஞ்சு பதவிசுகம் தேடும்
              பகல்வேசக் காரங்களைப் பாடுறதா?                                        -- என்னத்த


மத்தவங்க துயர்போக்கத் தன்னலத்தைத் துறந்திட்ட
              தியாகத் தீபங்களைப் பாடுறதா?
சொத்துசுகம் சேருதுன்னு நித்தம்பழி பாவம்செய்யும்
             வக்கிர மனிதர்களைப் பாடுறதா?
கைம்மாறு நோக்காம கடமையைச் செஞ்சுவரும்
              கண்ணியவான்களைப் பாடுறதா?
கடமையைச் செய்யக்கூட கைநீட்டி லஞ்சமவாங்கும்
            கசட்டு மனுசங்களைப் பாடுறதா?                                            --என்னத்த

பெண்ணின் பெருமைசேர்க்க பெரிதுமே உழைத்திட்ட
             பேராண்மைச் சான்றோரைப் பாடுறதா?
பொன்பொருளைப் பெற்றும்பெண்ணை வன்கொடுமை செய்யுமந்தப்         
            பேராசைப் பித்தர்களைப் பாடுறதா?
பெத்தபிள்ளை வாழத் தங்கள் சொத்தோடு சுகமிழந்த
            உத்தமப் பெற்றோர்களைப் பாடுறதா?
பெத்தவங்க சுமையின்னு தத்தளிக்கத் தள்ளிவிட்ட
            புத்திகெட்டப் பிள்ளைகளைப் பாடுறதா?                                -- என்னத்த

தமிழின மொழிகாக்கத் தங்களையேத் தத்தம்செஞ்ச
            தன்மானச் சிங்கங்களைப் பாடுறதா?
தமிழினம் எரிகின்றத் தனலிலே குளிர்காயும்
           தரங்கெட்ட சொந்தங்களைப் பாடுறதா?
தரணிக்கே பண்பாட்டு ஊற்றுக்கண்ணாய் விளங்கிய
           தமிழ்மண்ணின் பெருமையைப் பாடுறதா?
தரங்கெட்டுப் பன்னாட்டு மோகத்துல சிக்கிநாளும்
           தடுமாறும் கீழ்மைகளைப் பாடுறதா?                                         --என்னத்த

Saturday, August 6, 2011


புவியைக் காப்போம்.... இசைப்பாடல்  பொன்.கருப்பையா

 புவியைக் காத்திடும் இயற்கையை மனிதன் அழிப்பது முறைதானா?
புத்திடும் புக்களைக் கால்களில் போட்டு மிதிப்பதும் சரிதானா?

 பதில்  சொல்லு சொல்லு மனிதா?
புவி மீட்பதென்ன எளிதா?
உந்தன் பொறுப்பற்ற செயலினால் புவிக்கோளை
அழித்திட முனைவதும் சரிதானா?