Friday, July 26, 2013

த.நா.அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில்..

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
20.0702013 அன்று, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க. தலைமையேற்று உரையாற்றியது.உடன் த.நா.அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன், மாவட்டச் செயலாளர் க.செயபாலன், இணைச்செயலாளர் மஸ்தான் பக்ருதீன்.
தமிழ்நாடு அறிவியல் இயயக்க மாவட்ட மாநாட்டில் பாவலர் பொன்.க. தலைமையில் ம.ச.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை அறிவியலறிஞர் இரா.இராஜ்குமார் உரையாற்றியது

Wednesday, July 24, 2013

இசைத்தமிழ் - பயிற்சி

                     தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், “தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி“ புதுக்கோட்டை அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24.07.2013 அன்று  நடைபெற்றது.

                   ஒன்பது, பத்து வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் உள்ள செய்யுள் பகுதிகளை இசையோடு எப்படிக் கற்பிப்பது என்பதை பாவலர் பொன்.கருப்பையா “இசைத்தமிழ்“ என்னும் தலைப்பில் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சியளித்தார்.

                  இசைத்தமிழின் வரலாறு, தொன்மை, தொல்காப்பியத்தில், சங்க இலக்கியங்களில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில், தேவாரத் திருமுறைகளில்  எவ்வாறெல்லாம் காணப்படுகின்றன என்பதையும். காலப்போக்கில் உயர்ந்தும் தாழ்ந்தும் போன இசைத் தமிழ், இடைக்காலத்தில் மேம்பட்டிருந்ததையும், தேவாரத் திருவாசகப் பனுவல்கள் துணைகொண்டு விளக்கினார்.

                பண்டைப் பண்கள், அவற்றிற்கான இராகங்கள், ஏழு சுரங்கள், 72 மேளகர்த்தாக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர் தமிழிசை மக்கள் வாழ்க்கையில் எப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரையில் இணைந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.

               தற்போதைய 9,10 தமிழ்ப் பாட நூல்களில்  உள்ள மனப்பாடப் பகுதிகளை, மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்றத் தக்க இசையில் பாடி, ஆசிரியர்களை இணைந்து பாடப் பயிற்சியளித்தார்.

             இரண்டு பிரிவுவேளைகளிலும் நடந்த இப்பயிற்சியினைச்  சோர்வின்றி ஆர்வமுடன் தமிழாசிரியர்கள் பின்பற்றியது பாராட்டிற்குரியதாக இருந்தது.

இந்திய திரைப்பட நூற்றாண்டுக் கொண்டாட்டம்.

             .புதுக்கோட்டை நில அளவையர் சங்கக் கூட்ட அரங்கில் புதுகை திரைப்படக் கழகம் 21.07.2013 அன்று இந்திய திரைப்பட நூற்றாண்டு கொண்டாட்டத்தினையொட்டி “திரைப்படநாள் விழா“ வினை நடத்தியது.
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்  ஆறு பன்மொழி, பன்னாட்டுத் திரைப் படங்கள் திரையிடப் பட்டு, கருத்துப் பகிர்வுகள் நடந்தன.

             அவற்றுள் ஆஸ்கர் உள்ளிட்ட 19 விருதுகளைப் பெற்ற ” தி ரெட் வயலின் “ என்னும் கனடாக் கதைப் படத்தையும் , 27 விருதுகளைப் பெற்ற “தி வயலின்“ என்னும் மெக்சிகோ கதைப் படத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
            
          “தி ரெட் வயலின் “ திரைப் படத்தை ப்ராண்ட்கோஸ் எனும் இயக்குநர் நேர்த்தியாக இயக்கி இ ருந்தார்.

           தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பற்றிக் கவலைப்படும் தாய், தனது வீட்டுப் பணிப்பெண் கூறும் 5 சீட்டு ஆருடத்தின் அச்சத்தால் உடல் நலிந்து மகப்பேற்றின் போது ஒரு ஆண்குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண்மணியின் கணவர் ஒரு வயலின் இசைப் பிரயர் என்பதால்   மனைவியிடம் முன்னர் பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு வயலினை பரிசளிக்கப் போவதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இறந்த மனைவியின் உடலிலிருந்த எடுத்த தலைமுடியினைக் கருக்கி அவளுடம்பிலிருந்து எடுத்த இரத்தத்தில் குழப்பி அந்த வண்ணத்தை தான் பரிசளிக்க வைத்திருந்த வயலின் இசைக் கருவிக்கு வண்ணமாக்குகிறார்.
லாட் எண் 72 என்கின்ற அந்த வயலினைத் தன் குழந்தைக்கு பயிற்றுவிக்கிறார்.
ஒரு இசைப் போட்டியின் போது  கஸ்பார் வைன் என்கிற அந்தச் சிறுவன் மயங்கி விழுந்து இறக்கிறான்.

             அவனது இறப்பிற்குப் பின்னர் அந்த வயலின் அமெரிக்கா, பிரான்ஸ் ருஷ்யா, சீனா, மொரிசியஸ்  ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பல குணப்பட்டவர்களின் கைகளில் பயணிக்கிறது. அந்த வயலினை அதிக ஏலத்தில் எடுக்க பலர் போட்டி போடுகின்றனர்.

           காதல் வீரம் சோகம் என்னும் நிலைகளில்  ஆதிக்கம்  செய்த அந்த வயலினின்  தொன்மையினை மொரிசியல் தொல்லியல் துறை அறிஞர் துப்பறிந்து கண்டு பிடிப்பதாகக் கதை நிறைகிறது. நல்ல ஒளிப்பதிவு, இனிய வயலின் இசை, பின்னும் முன்னுமாகக் கதை நகர்த்தும் உத்தி முதலிய மேலான கூறுகள் அருமை.

             இசையின் இயல்பினை ஈர்ப்பாகச் சொல்லப் பட்ட இப்படத்தில் ஏனோ நம்ம ஊர் கிளிஜோசியக்கார உத்தியாக அந்த ஐந்து சீட்டுகளின் படி எல்லாம் நடப்பதாகக் கதை நகர்வது மூடநம்பிக்கை நமக்கு மட்டும் சொந்தமில்லை... உலகின் மூலை முடுக்குகளிலும் இன்னும் முனகிக் கொண்டுதான் இருக்கிறது என்பது சற்று நெருடல்தான்.

Monday, July 22, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
             தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு 20.07.2013 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

           வரவேற்புரையினை மாவட்ட இணைச்செயலாளர் மஸ்தான் பக்ருதீன்  ஆற்றினார். மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் தொடக்க உரையாற்றினார்.

         அதனையடுத்து “இயற்கை வள மேலாண்மை “ என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா தலைமையேற்றார்.

           அவர் தனது உரையில் புவியின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பாடத்திட்டத்தில் இயற்கை வள மேலாண்மை பற்றிய பாடங்கள் வைக்கப் படவேண்டியதையும், பல்லுயிர் சமநிலையே உலகின் உயிரின நிலைப்புக்கு அடித்தளம் என்பதையும் இளைய தலைமுறையினருக்கு இயன்ற வழிகளிலெல்லாம் உணர்த்தும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துகளைப் பதிவு செய்தார்.

           அடுத்து ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை  அறிவியல் அறிஞர் இரா.இராஜ்குமார்  இயற்கை வேளாண்மை பற்றிய கருத்துரையினை வழங்கினார்.

Sunday, July 7, 2013

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்.


                   2013 சூலை 4,5 நாள்களில்,புதுக்கோட்டை தேர்வு அரங்கில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை வருவாய் மாவட்டப் பள்ளிகளில்  ஒன்பது, பத்தாம் வகுப்புத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிமனைப்  பயிற்சி நடைபெற்றது. 

                 திருவாளர்கள் நா.முத்துநிலவன், திருமுருகன், வள்ளியப்பன், செயலெட்சுமி ஆகிய மாநிலப் பயிற்றுநர்களுடன் பாவலர் பொன்.கருப்பையா தமிழ் செய்யுள் பகுதியினை இசையோடு கற்பிக்கும் வல்லுநராகக் கலந்து கொண்டு, முதன்மைப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளித்தார்.

                 மாணவர் பின்பற்றத் தக்க எளிய இசையோடு செய்யுள் பகுதி கற்பிக்கப் படும்போது அதன் இசையோடு பாடுபொருளின் கருத்து பசுமரத்தாணியாக மாணவர் மனங்களில் பதியும் என்பதால், செய்யுள் பகுதியினை இசையோடு கற்பித்தல் நல்ல பலனளிக்கும் என விளக்கினார்.

               குறிப்பாக மனப்பாடப் பகுதிச் செய்யுள்கள் இசையோடு கற்பிக்கப் படும்போது  எளிதாக மாணவர் மனங்களில் பதியும் எனும் தனது பட்டறிவோடு  அப்பகுதிகளைப் பாடிக்காட்டி பயிற்சியாளர்களைப் பின்பற்றிப் பாடச்செய்து பயிற்சியளித்தார். முதன்மைப் பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றது சிறப்பாக இருந்தது.

Tuesday, July 2, 2013

முதலுதவி - பயிற்சி சான்று பெறல்

செஞ்சிலுவைச் சங்க புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவினர்க்கு  மாமன்னர் கல்லூரி கலையரங்கில் நடந்த முதலுதவிப் பயிற்சி நிறைவில் பாவலர் பொன்.க.அவர்களுக்கு மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்பு அலுவலர் திரு சாந்தார் அவர்கள் சான்றிதழ் வழங்குகிறார்.