Wednesday, October 26, 2016

யாருக்கு நல்லதுங்க?

25.10.2016 அன்று  கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி மற்றும் திராணிப்பட்டியில் கிராம சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செஸ்டாட், மற்றும் வேபாக் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட  
சுகாதார விழிப்புணர்வு முகமையின் நான்காவது நாள் நிகழ்வாக கல்லுப்பட்டி மற்றும் திராணி்ப்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கல்லுப்பட்டி ஊ.ஓ.தொடக்கப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திட்டத்தின் பயிற்சியாளர் திருமிகு உஷாநந்தினி, ஆர்.சுப்பிரமணியன், செஸ்டாட்ஸ்  வீரமுத்து , பாவலர் பொன்.கருப்பையா ஆகியோர், வீடுகளின் உள்ஒழுங்கு, வெளிப்புற நேர்த்தி, வீட்டுத் தோட்டம், கழிப்பறை ஆகியவற்றின் அடிப்படையில்  அனைத்து வீடுகளையும் பார்வையிட்டு சிறந்த பத்து வீடுகளைத் தேர்வு செய்தனர்.
தேர்வான வீடுகளுக்குப்  பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் பாடலை பாவலர் பொன்.க எழுதி, இசையுடன் பாடி மக்களைப் பாட வைத்தார்.

பாடல்
யாருக்கு நல்லதுங்க? - இது
யாருக்கு நல்லதுங்க?
நமக்கு நல்லதுங்க - இது
ஊருக்கு நல்லதுங்க

சோப்புப் போட்டுக் கையக்கழுவி
சுத்த மாக நாமிருந்தா                    -- யாருக்கு நல்லதுங்க?
கருத்த ஒடம்போ செவத்த ஒடம்போ
தினமும் குளிச்சு நாமிருந்தா    -- யாருக்கு நல்லதுங்க?

ஆடுமாடும் கட்டுத் தறியும் கோழிக் 
 கிடாப்பும் சுத்தமா இ ருந்தா           --யாருக்கு நல்லதுங்க?
மக்குற குப்பையும் மக்காத குப்பையும் 
தனித்தனியா பிரிச்சுப் போட்டா  -- யாருக்கு நல்லதுங்க?

மக்குன குப்பை எருவா மாறி
மளமளன்னு பயிரு வளந்தா         --யாருக்கு நல்லதுங்க?
வீட்டைச் சுத்தித் தோட்டம் போட்டு
விதவிதமாக் காய் வெளைஞ்சா  --யாருக்கு நல்லதுங்க?


தெருஓரத்துல மரங்க வளர்த்து
இளைப்பாற  நிழலைத்  தந்தா     --யாருக்கு நல்லதுங்க?
ஊரைச் சுத்திக் ்காடு வளர்த்து
ஒய்யாரமா பலன் கெடைச்சா   -- யாருக்கு நல்லதுங்க?


காய்ச்சல் தடுக்கும் கசப்பு மருந்தைக்
கண்ணைமூடிக் குடிச்சுக் கிட்டா  --யாருக்கு நல்லதுங்க?
கழிப்பறையை வீட்டுக்கு வீடு 
கட்டிநாம பயன் படுத்துனா  --யாருக்கு நல்லதுங்க?

யாருக்கு நல்லதுங்க? - அது 
நமக்கு நல்லதுங்க
யாருக்கு நல்லதுங்க - அது
ஊருக்கு நல்லதுங்க.

Sunday, October 23, 2016

வீதி கலை இலக்ககியக் களம் -32


இன்று வீதி கலை இலக்கியக் களம் -32 ஆவது நிகழ்வு புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரியில்  திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக  பாண்டிச்சேரி முனைவர் செல்வக்குமாரி அவர்களும், தோழர் பிரியா பாபு அவர்களும் கலந்து கொண்டனர்.

திருநங்கையர் பற்றிய சிறப்புக் கூட்டமாக அமைத்திருந்தனர்  கூட்ட அமைப்பாளர்கள் திருவாளர்கள் செல்வா மற்றும் மீரா செல்வகுமார் ஆகியோர்.

திருநங்கை பற்றிய கவிதைகள் அரங்கேறின. கவிஞர்  கீதா அவர்கள் சிறுகதை வாசிக்க  கருத்துகள் பகிர்வு நடந்தது.

திருநங்கையரின்  சமூக நிலைப்பாடு பற்றி முனைவர் செல்வக்குமாரி அவர்கள் உரையாற்றினார்,  தோழர் பிரியாபாபு நான் எவ்வாறு திருநங்கையானேன்?  திருநங்கையர் எவ்வாறு பாலின சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்பாக முகநூல் நண்பர்கள் திருநங்கை பற்றிப் பகிர்ந்த கவிதைகள் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சி முழுமையும்  காணொளிப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்    “ ஆணாகப்பிறந்து” என்ற பாடலை, 
பாவலர் பொன்.கருப்பையா எழுதி இசையமைத்து   அவரே பாடினார்.

பாடல்
ஆணாகப் பிறந்து பெண்ணாகி வாழும் 
நங்கையரே திருநங்கையரே
ஆணவம் தவிர்த்து அன்பினில்  தழைத்து
ஆற்றல் வாய்ந்ததிரு நங்கையரே

அர்ச்சுணன் சிகண்டிஉம் முன்னோடிகள்
அழகிய வரலாற்றுக் கண்ணாடிகள்
இரக்கமும் வலிமையும் இருக்கும் உம்மை
இரண்டும் கெட்டான்என எவன் சொன்னது?

விடைதேடும் இயற்கையின் விளைவுகளே
வேண்டுமென்றா வேடம் புனைந்து கொண்டீர்?
வளரிளம் பருவத்தின் மாற்றம் கண்டே 
வலியின் வலிதாங்கி மாற்றிக் கொண்டீர்.

நிசங்களின் வெளிச்சம் போனாலென்ன?
நிழலின் இருட்டினில் சிரித்துக் கொள்வீர்
உறவுகள் வெறுத்தும்மை ஒதுக்கியென்ன?
உலகெங்கும் உமக்குறவு பறந்திடுவீர்

பாகனின் துரட்டிவழி துதிக்கை நீட்டும்
பலமறியா யானைபோலா நீங்கள்?
பாவிகளின் பாரத்தை சுமத்தல்விட்டு
பணிசெய்வீர் பாலின பேதம்விட்டு.