Friday, September 27, 2013

வழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்

         27.09.2013 அன்று புதுக்கோட்டை அடப்பன்காரச் சத்திரத்தில் வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடை  பெற்றது. 

        அம்முகாமில் “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமா?” என்னும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

        வழக்காடு மன்றத்தின் நடுவராக புலவர் மகா.சுந்தர் செயல்பட்டார்.

       வழக்கினைத் தொடுத்த இராச.ஜெய்சங்கர் மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயம் என்பது குற்றம். வீடே ஒரு மனிதனை மாமனிதனாக்குகிறது என வழக்கினைத் தொடுத்தார்.

       வழக்கினை மறுத்த பாவலர் பொன்.கருப்பையா  சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்   நட்பு வட்டாரம் சேவை அமைப்புகள் மனிதனுக்கு பட்டறிவினையும் சமூக ஈடுபாட்டையும் தருவன... அவ்வாறான சமூக ஈடுபாட்டாலேயே பெரியார், காந்தி, காமராஜ், அன்னை தெரசா, பெர்னாட்ஷா, அண்ணா, மார்க்ஸ் போன்றவர்கள் மாமனிதர்களாக விளங்குகின்றனர் எனச் சான்றுகளுடன் வழக்கினை மறுத்தார்.

         நிறைவில் வீடு நாற்றங்கால்... அது மனிதனை உருவாக்குகிறது.. சமுதாயம் விளைநிலம். ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு ஒளிமயமான சமூகத்திற்கு வழி வகுக்கிறது எனவே “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமே” என நடுவர் மகா.சுந்தர்  தீர்ப்பளித்து  வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

      நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரோடு, ஹரிமோகன், மஸ்தான் பஹ்ருதீன், பொன்.தங்கராசு, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
26.09.2013 அன்று நற்சாந்துபட்டியில் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில்  “ இயற்கையை நேசிப்போம்“ என்னும் தலைப்பில் பாவலர் பொன்.கருப்பையா முகாம் மாணவரிடையே உரை நிகழ்த்தியபோது.

Tuesday, September 17, 2013

காசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.

             புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காசநோய்ப் பிரிவில் 17.09.2013 அன்று,  புதுக்கோட்டை மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் சார்பில், நாள்தோறும் காசநோய் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவு தினமும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

           துணை இயக்குநர் ( காசநோய் ) மருத்துவர் எஸ்.ஆர். சந்திரசேகர் அவர்கள்  திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

          மாவட்டக் காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத் தலைவர் திரு.ஆர்.இராஜ்குமார், மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, செயற்குழு உறுப்பினர் தா.சிவராமகிருஷ்ணன், வசந்தா ஆகியோர் நோயாளிகளுக்குப் பயறு வகைச் சத்துணவினை வழங்கினர்.

           சிகிச்சை அமைப்பாளர் திருமதி மணிமேகலை மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 

           ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள்.

17.09.2013 அன்று பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.இராமசாமி பெரியார் அவர்களின் 135 ஆவது பிறந்த நாளில், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே, மின்வாரிய அலுவலம் எதிரில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாவட்டத் திராவிடர்கழகத்தினரோடு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா மாலை அணிவித்தார்.

Saturday, September 14, 2013

உலக முதலுதவி நாள் - ரெட் கிராஸ் பயிற்சி
உலக முதலுதவி நாளில்...                        14.09.2013 அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கூட்ட அரங்கி்ல், உலக முதலுதவி நாளை முன்னிட்டு, மாவட்ட ரெட்கிராஸ் சங்கம், மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு      “ தேடுதல் மற்றும் மீட்பு” பயிற்சியினை நடத்தியது.

                      மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் செயலாளர் திரு ராஜா முகம்மது அவர்கள் தலைமையில் பயிற்சி தொடங்கியது ரெட்கிராஸ் மாவட்டத் தலைவர் திரு சீனு.சின்னப்பா அவர்கள் பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.. அமைப்பின் பொருளாளர் திரு நாகப்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் வரவேற்றார்.

                      மாவட்ட மீட்பு மற்றும் தீத் தடுப்பு நிலைய அலுவலர் திரு சத்திய கீர்த்தி அவர்கள்  பேரிடர், இயற்கைச் சீற்றம்,  வருமுன் காத்தல், வந்தபின் மேற்கொள்ள வேண்டியன, தீ.. விபத்துகள், தீத்தடுப்பு முறைகள், மீட்டல். தீயணைப்பான் வகைகள் பற்றி விளக்கமாகப் பயிற்சி யளித்தார்.

                     முன் அனுபவம் பெற்ற பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தொண்டு நிறுவனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர்க்கு வாயுத் தீயணைப்பானைக் கையாளும் முறை, மீட்டலில் உருவாக்கத் தூக்கி தயாரித்தல் ஆகியன பற்றிச்  செயல் விளக்கமளித்தார்.

                     எண்ணைத் தீயினை அணைக்கும் முறை செயல் விளக்கம் செய்து காட்டப் பட்டது. 

                     நிறைவு நிகழ்ச்சிக்கு வருகை தந்த செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் பயிற்சி அளித்தவர் களையும் பயிற்சி பெற்றவர்களையும் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார்.

அக்சயா-ரீச்-காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு - காலாண்டுக் கூட்டம்.

                 .14.09.2013 காலை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கி்ல், தமிழ்நாடு  அக்சயா திட்டத்தின் ரீச் தொண்டு நிறுவனமும், புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கமும் இணைந்து நடத்திய காலாண்டுச் செயல்திட்டக் கூட்டம்  திரு ஆர்.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் வரவேற்றார்.

                காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்க மாவட்டச் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் கலந்து கொண்டு கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

              1.கிராமங்கள் தோறும் காசநோய் பாதிக்கப் பட்டவர்கள் கணக்கெடுப்பினை மேற்கொள்வது.

              2. வரும் 17.09.2013 அன்று நமது இயக்கம் மூலம்  புதுக்கோட்டைத் தலைமை அரசு மருத்துவ மனையில் காசநோயாளிகளுக்கு சத்துணவுப் பயறு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்குவது.

             3. தொண்டு நிறுவனங்களை மாவட்டக் காசநோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ்க் கொண்டுவர தமிழக அரசினைக் கேட்டுக் கொள்வது.

             
கூட்டத்தில்  இயக்கப் பொருளாளர் மாயழகு, துணைத் தலைவர் மேகலா, லெ.பிரபாகரன், தா.சிவராம கிருஷ்ணன், வீரமுத்து, பரமசிவம், வசந்தா, விஜயலெட்சுமி, மற்றும்  நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sunday, September 1, 2013

மாவட்டத் துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 01.09.2013 அன்று புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்திய மாவட்ட அளவிலான துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா போட்டிகளை நடத்திய போது.

துளிர் வினாடிவினா பரிசளிப்பு


31.08.2013 அன்று நடைபெற்ற துளிர் வினாடி வினாப் போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவிற்குத் தலைமையேற்றுப் பரிசுகள் வழங்கிய போது

பெரியார் ஆயிரம் வினா-விடை எழுத்துப் போட்டி

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 31.08.2013 அன்று நடைபெற்ற “பெரியார் 1000” வினா-விடை எழுத்துத் தேர்வினை பாவலர் பொன்.க மேற்பார்வையிட்ட போது.
புதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ துளிர் இலலத் திங்கள் கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் துளிர் இல்ல மாணவர்களுடன் பாவலர் பொன்.க..