Friday, September 2, 2016

இளம் விஞ்ஞானிகளுக்குத் தெம்பேற்றம்.

உடல்நலக்குறைவால் சில மாதங்கள் எந்த செயல்விளக்க நிகழ்ச்சிகளிலும் ஈடுபடாதிருந்த நான்,

01.09.2016 அன்று இனிய நண்பரும் ஸ்ரீ வெங்கடேசுவரா பதின்ம மேல்நிலைப்பள்ளித் தாளளருமான கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் அன்பான அழைப்பினை ஏற்று, 06.09.2016ல் அப்பள்ளியில் புதிய தலைமுறை நடத்த உள்ள “வீட்டுக்கொரு விஞ்ஞானி” நிகழ்ச்சிக்காக அப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாட்டுக் கருவிகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு செயல் விளக்கக் கருத்துப் பகிர்வு நிகழ்வினை நடத்தினேன்.

எனது முன்னாள் மாணவரும் இந்நாள் அப்பள்ளியின் துணை முதல்வருமாகிய திரு சு.குமாரவேல் என்னை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்பள்ளியில் இயக்குநர் கவிஞர் ஆரா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.

மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு அறிவியல் காலந்தோறும் வளர்ந்து வந்த நிரலை விளக்கி, இன்று உலகை மாற்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் மாணவர்களுக்கு சுவைபட விளக்கினேன்.

ஒரு விஞ்ஞானி உருவாக அவன் மனதில் முதலில் அறிவியல் உணர்வு தூண்டப்பட வேண்டும். அறிவியல் மனப்பான்மையினை உருவாக்க, பள்ளி, வீடு, சமூகம் அவனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பிறர் சொன்னவற்றையே்ா, படித்த, பார்த்தவற்றையே அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் 

ஏன், எதற்கு, எப்படி, எதனால் என்னும் கேள்விகளுக்கு அவற்றை உட்படுத்தி ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏற்றுக் கொள்ளும் அறிவியல் மனப்பான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தானே முயன்று, தடைகளையும், விமர்சனங்களையும் கடந்து, தன்னம்பிக்கையோடு. விடாமுயற்சியுடன் உழைப்பதாலேயே புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் என்பதை, மாணவர்களுக்கு  சர் ஐசக் நியுட்டன், ஆர்க்கிமிடிஸ், கலிலியோ தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைச் சுட்டிக்காட்டித் தெம்பு ஊட்டினேன்.

ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் உள்ள அறிவியல் உண்மைகளை, எளிய அறிவியல் ஆய்வுகளைச் செய்துகாட்டி விளக்கிய போது,

 மாணவர்கள் ஆர்வமுடன்  உள்வாங்கிக் கொண்டதையும், தாங்களே முன்வந்து சில ஆய்வுகளை ஈடுபாட்டோடு செய்ததையும் கண்டு வியந்துபோனேன்..


உணவு இடைவேளை நேரம் கடந்தும் மாணவர்கள் சோர்வின்றித் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டது உண்மையில் அப்பள்ளியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி உருவாவது திண்ணம் என்ற மகிழ்வில் நிகழ்வினை நிறைவு செய்தேன்.

4 comments:

Geetha said...

உங்களைப்போன்றவர்களின் ஊக்கமே இன்றைய சமுதாயம் நல்வழிபட தேவை அய்யா

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களைப் போன்றோரின் முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா
உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்

மணிச்சுடர் said...

இருக்கும் வரை இயன்றதைச் செய்வதுதானே இப்பிறவியின் பயன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை ஐயா! மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி . பாராட்டுகள் ஐயா

Post a Comment