Wednesday, October 26, 2016

யாருக்கு நல்லதுங்க?

25.10.2016 அன்று  கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி மற்றும் திராணிப்பட்டியில் கிராம சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
செஸ்டாட், மற்றும் வேபாக் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட  
சுகாதார விழிப்புணர்வு முகமையின் நான்காவது நாள் நிகழ்வாக கல்லுப்பட்டி மற்றும் திராணி்ப்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கல்லுப்பட்டி ஊ.ஓ.தொடக்கப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திட்டத்தின் பயிற்சியாளர் திருமிகு உஷாநந்தினி, ஆர்.சுப்பிரமணியன், செஸ்டாட்ஸ்  வீரமுத்து , பாவலர் பொன்.கருப்பையா ஆகியோர், வீடுகளின் உள்ஒழுங்கு, வெளிப்புற நேர்த்தி, வீட்டுத் தோட்டம், கழிப்பறை ஆகியவற்றின் அடிப்படையில்  அனைத்து வீடுகளையும் பார்வையிட்டு சிறந்த பத்து வீடுகளைத் தேர்வு செய்தனர்.
தேர்வான வீடுகளுக்குப்  பரிசுகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தும் பாடலை பாவலர் பொன்.க எழுதி, இசையுடன் பாடி மக்களைப் பாட வைத்தார்.

பாடல்
யாருக்கு நல்லதுங்க? - இது
யாருக்கு நல்லதுங்க?
நமக்கு நல்லதுங்க - இது
ஊருக்கு நல்லதுங்க

சோப்புப் போட்டுக் கையக்கழுவி
சுத்த மாக நாமிருந்தா                    -- யாருக்கு நல்லதுங்க?
கருத்த ஒடம்போ செவத்த ஒடம்போ
தினமும் குளிச்சு நாமிருந்தா    -- யாருக்கு நல்லதுங்க?

ஆடுமாடும் கட்டுத் தறியும் கோழிக் 
 கிடாப்பும் சுத்தமா இ ருந்தா           --யாருக்கு நல்லதுங்க?
மக்குற குப்பையும் மக்காத குப்பையும் 
தனித்தனியா பிரிச்சுப் போட்டா  -- யாருக்கு நல்லதுங்க?

மக்குன குப்பை எருவா மாறி
மளமளன்னு பயிரு வளந்தா         --யாருக்கு நல்லதுங்க?
வீட்டைச் சுத்தித் தோட்டம் போட்டு
விதவிதமாக் காய் வெளைஞ்சா  --யாருக்கு நல்லதுங்க?


தெருஓரத்துல மரங்க வளர்த்து
இளைப்பாற  நிழலைத்  தந்தா     --யாருக்கு நல்லதுங்க?
ஊரைச் சுத்திக் ்காடு வளர்த்து
ஒய்யாரமா பலன் கெடைச்சா   -- யாருக்கு நல்லதுங்க?


காய்ச்சல் தடுக்கும் கசப்பு மருந்தைக்
கண்ணைமூடிக் குடிச்சுக் கிட்டா  --யாருக்கு நல்லதுங்க?
கழிப்பறையை வீட்டுக்கு வீடு 
கட்டிநாம பயன் படுத்துனா  --யாருக்கு நல்லதுங்க?

யாருக்கு நல்லதுங்க? - அது 
நமக்கு நல்லதுங்க
யாருக்கு நல்லதுங்க - அது
ஊருக்கு நல்லதுங்க.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல் ஐயா
ஊருக்கு நல்லது செய்வோம்
நன்றி

மணிச்சுடர் said...

கருத்துப் பகிர்வுக்கு நன்றி அய்யா.

Post a Comment