Sunday, June 11, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-29


கனக மணிகளினும் 
                மேலாய்க் கண்ணீர்த் துளிகள்

                     ஆடிப்பூரம் பொருட்காட்சிக் கலைமேடையில்  புதுக்கோட்டை கல்வித்துறை சார்பாக, பள்ளி மாணவர்களைக் கொண்டு  “ தலைக்கு ஒரு விலை”  என்ற  நாடகத்தினை அரங்கேற்றி, பாதி நாடகம் நடந்து கொண்டிருந்த வேளையில் “ நாடகத்தை நிறுத்து” என்ற குரல்  இரண்டாவது முறையாகக் கேட்டதும்  குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

                 அங்கே பொருட்காட்சி மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளரான உதவி மக்கள்தொடர்பு அலுவலர் ஆவேசத்துடன் மேடையினுள் நுழைந்தார்.


             “ஏன் சார் நாடகத்தை நிறுத்தணும்?” ன்னு கேட்டேன்


            “ சிறப்பு  நடன    நிகழ்ச்சி நடத்தும் அரசு நர்த்தகி சுவர்ணமுகி வந்துட்டாங்க. அவங்க நிகழ்ச்சி தொடங்கணும்” ன்னார்


“சார் இன்னும் ஐந்து நிமிடத்தில் நாடகம் முடிந்து விடும். முக்கியமான உச்சகட்ட காட்சி அடுத்துதான்” என்றேன்.


                  பரிசில் பெற வந்த ஆவூர்    புலவர் பெருந்தலைச் சாத்தனார்  காட்டில் இருக்கும் குமணனைச் சந்திக்கிறார். அவருக்கு பரிசளிக்க பொருளேதும் இல்லாத நிலையில், தனது தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக தன் தம்பி இளங்குமணன் அறிவித்திருப்பதால், தனது தலையை வெட்டிக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்னை பரிசாகப் பெற்றுக் கொள்ள தனது வாளை புலவரிடம் கொடுக்கிறார். 


                அடுத்த காட்சியில் இரத்தம் வழியும் ஒரு மூட்டையுடன் புலவர் இளங்குமணன் முன் நிற்கிறார். தனது அண்ணனைக் கொல்ல,  தானே காரணமாக இருந்ததை எண்ணிய இளங்குமணன் , மனம் திருந்தி கதறுகிறான்.


              அவனது மனமாற்றத்தைக் கண்ட புலவர், தான் கொண்டு வந்திருப்பது குமணனின் தலையல்ல வாழையின் அடிக்கிழங்கு எனக்காட்டி அண்ணன் தம்பியை சேர்த்து வைக்கிறார்.


இந்த இரு காட்சிகளும் நடந்தால்தான் நாடகக் கரு முற்றாக பார்வையாளர்களுக்கு விளங்கும்.


              ஆனால்  அந்த அலுவலர் எனது கோரிக்கையை  ஏற்காமல் 

“ ஒரு பள்ளி மாணவர் நாடகத்திற்காக அரசு நர்த்தகியைக் காக்க வைக்க முடியாது” எனப் பிடிவாதமாக நாடகத்தை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார்.

              எங்கள் விவாதத்தைக் கண்ணுற்று அங்கு வந்த கல்வித்துறை அலுவலரிடமும் ஒரு ஐந்து நிமிடம்  அனுமதி பெற்றுத் தாருங்கள் நாடகத்தை முடித்து விடுகிறேன் என்று மன்றாடினேன்.


              அவரின்  வேண்டுகோளையும் மறுத்து, முன் திரையை மூடச் செய்தார் அன்றைய உதவி மக்கள் தொடர்பு அலுவலர். கல்வி அலுவலரும் செய்வதறியாது மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.


             “ அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்” என்ற பழமொழியின் பொருளை  அப்போதுதான் உணர்ந்தேன்.


              வேறு வழியின்றி    ஒலி வாங்கியில் ”  மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்  நெருக்கடியால் நாடகம் இத்தோடு நிறுத்தப்படுகிறது” என அறிவித்துவிட்டு,  ஏக்கத்தோடு நின்ற மாணவ நடிகர்களை அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன்.  


             பக்கத்திலிருந்த ஒரு ஆசிரியர் வீட்டில் அவர்களது ஒப்பனையைக் கலைத்து, அவர்களின் ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லி, ஒரு தானியில் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்  அவரவர் இல்லங்களில் சேர்ப்பித்தேன்.


              அரசு நர்த்தகியின் நடன நிகழ்ச்சி முடிந்தபின்,  அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க என்னையும் நாடகத்தில் நடித்த மாணவர்களையும் ஒலி பெருக்கியில்  அழைத்திருக்கிறார்கள் . நாங்கள் அந்த அழைப்பிற்கு மதிப்பளிக்கவில்லை.

                மறுநாள் பள்ளிக்கு வந்த கல்வி அலுவலர் நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தப்பட்டு , மாணவர்களை அழைத்து பரிசுகளை வழங்கிச் சென்றார்.


    ஒரு  படைப்பு அரங்கேற்றத்தின் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கொச்சைப் படுத்தப் படும்போது அந்தப்  படைப்பாளன் படும் மன வேதனையை பட்டவரே உணர்வர். அதைவிட இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்துத் தங்கள் திறமைகளை மேடையில்  காட்டி, பாராட்டுப் பெற நினைத்திருந்த மாணவர்களின் மனநிலை, அவர்களின் பெற்றோரின் மனநிலையும்  எப்படி இருந்திருக்கும்?


 நீறு  பூத்த நெருப்பாக நெடுநாளாக என்னுள் கனன்று கொண்டிருந்த அந்த ஆதங்கம் ஆற்றுப்படும் நாள் ஒன்று வந்தது.


சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் இணைந்து புதுக்கோட்டையில் 21,22,23-01-2011 ஆகிய மூன்று நாள்கள் நடத்திய “இயல், இசை, நாடகத்திற்குத் தமிழின் கொடை” என்னும் கருத்தரங்கின் ஐந்து நெறியாளர்களில் ஒருவனாக நானும் செயலாற்றும் வாய்ப்பு வந்தது.

    அக்கருத்தரங்கின் நிறைவு நாளில் நாடகத்திற்குத் தமிழின் கொடை என்னும் பொருளுக்கான  சங்க இலக்கியம் தந்த நாடகம் ஒன்றினை நடத்தித்தர  திலகவதியார் திருவருள் ஆதீன ப் பொறுப்பாளர்  தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.


    நெடுநாளாய்  நிறைவேறாதிருந்த கனவினை நனவாக்க  முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடிப்பூரம் பொருட்காட்சியில் முழுமை பெறாது தடைப்பட்ட குமணன் வரலாற்றை இன்னும் சற்று விரிவுபடுத்தி “பழிதவிர்த்த பாவலர்” என்னும் பெயரில் ஒரு மணி நேர நாடகமாக அரங்கேற்றினேன். 

 மணிச்சுடர் கலைக்குழுவினரால் நடிக்கப்பெற்ற அந்நாடகம்  கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது.
















அந்நாடகத்திற்காகக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

             கருத்தரங்கிற்குத் தலைமை யேற்றிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன எண்பேராயக் குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உதிர்த்த ஆனந்தக் கண்ணீர்தான் .

          ஆம் நாடகத்தில் குமணன் நாடிழந்து காட்டுக்குள் படும் துயரம் முதல் பெருந்தலைச் சாத்தனாரால் மனம் திருந்திய இளங்குமணன் தன் அண்ணனைத் தேடி ஓடி அண்ணனைக்  கட்டித் தழுவி அவனிடம்   தன் தவறுக்கு  மண்ணிப்புக் கோரி  மணிமுடியை ஒப்படைக்கும் காட்சி வரையிலான  நாடகத்தை முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த   சிலம்பொலி செல்லப்பனார் நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து  அகம் மகிழப்  பாராட்டினார். 

            அப்போது பாராட்டுரைத்த கவிச்சுடர் கவிதைப் பித்தன் “அய்யா சிலம்பொலியார்  விழிகள் சிந்திய   ஆனந்தக்      கண்ணீரே”   இந்நாடகத்திற்கான சிறப்புப் பரிசென அறிவித்தார். 


அந்தத் தமிழ்ச் சான்றோரின் கண்ணீர்த் துளிகளே கனகமணிகளினும் மேலாய் இன்றும் என்னுள்ளத்தில்  .





                     அம்மேடை நாடகத்தின் உரையாடல்கள் திருச்சி வானொலி    நிலையத்தாரால் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டு,  திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது .

                  இது போன்ற இலக்கிய வரலாற்று நாடகங்களை உரிய பின்புலங்களோடு நடத்த வேண்டுமென என்னுள் அரும்பிய எண்ணங்களை ஈடேற்ற,  மணிமன்றத்தின் முப்பதாம் ஆண்டு விழா மேடையில் ,    குறுந்தொகையில்  பெண்கொலை புரிந்த நன்னன் என வரும் வரியினை மையப்புள்ளியாகக் கொண்டு  “ துணை தேடும் கணையாழி”  என்னும்  வரலாற்று நாடகத்தை ஆக்கி  பொது வெளி மேடையில்    அரங்கேற்ற முனைந்தேன்.  

அந்த நாடக அரங்கேற்றத்தில்   இதுவரை பட்டிராத  பட்டறிவு எங்களுக்கு.

              என்னவென அறிய ஆவலா? 
       -----பொறுத்திருங்கள்  அடுத்த தொடரில் வரும்.  

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொரு பதிவாய் படிக்கப் படிக்க,தங்களின் நாடகத்தினை ஒரு முறையேனும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்னும் ஏக்கம் வந்துவிட்டது ஐயா

Kasthuri Rengan said...

அய்யா நினைவுகளின் பயணம் அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// உங்களது அனுபவங்கள் மூலம் விடாமுயற்சி என்பதற்கான பொருளை உணரமுடிகிறது.

Post a Comment