“தமிழ்ப் பண்பாடு“ --கவிதை-
தமிழரின் பண்பாடு தரணியில்
அமைந்தது தனிப்பெருஞ் சிறப்போடு
தலைமணி முடியெனத் தகதகத்
திருந்தது தகைமைச் சான்றோடு
தனக்கென வாழாது பிறர்க்கென
வாழ்ந்தவர் தழைத்திட்ட ப் பூக்காடு
தன்மானம் காத்தலில் தமிழினம்
முதலெனச் சாற்றுவம் தெம்போடு
அன்பின் வழியினில் அகம்புற
வாழ்க்கையும் அமைந்தங்கு நடந்ததுவே
பண்பின் வெளிப்பாடு பட்டின்
ஒளியென பதிந்தெங்கும் கிடந்ததுவே
மன்புகழ் காத்திட மறத்தமிழ்
வீரரும் மார்தந்து மாண்டனரே
பண்வழிப் பாவலர் காட்டிய
நெறியினில் புவனத்தை ஆண்டனரே
கற்றவரைப் புகழ் பெற்றவரின்
மேலாய்ப் போற்றிப் புகழ்ந்தனரே
கொற்றவனைப் பாடிப் பெற்றபொருள்
கொண்டு சுற்றம் தழுவினரே
அற்றநிலை யெனில் அறம்தழு
வாதவரை அதட்டி இகழ்ந்தனரே
உற்றதுய ரினில்உடை இழந்தார்
கைபோல் உதவியே மகிழ்ந்தனரே
ஏறுதழுவிய வீரரையேப் பெண்டிர்
இணைய ராய் ஏற்றனரே
ஊறுளங் கொண்டவர் உற்றா
ராயினும் ஒதுக்கியே தூற்றினரே.
காதல் கணவரைக் கைபற்றி
நங்கையர் கற்புநெறிக் காத்தனரே
காணும் மக்கட்செல்வம் களிப்புற
வாழ்நெறி கடிதே யாத்தனரே
வந்தவிருந்தினர் வன்பசி போக்கியே
வாழ்ந்தது தமிழ்க் குடியே
நொந்தொன்றை விலக்காது நோற்பவர்
கருத்தையும் ஏற்றனர் முறைப்படியே
எந்நிலை மாந்தரும் எங்களது
உறவென்று ஏற்றசீர் மனத்தினரே
சிந்தையிலும் மாற்றார் சீர்கெட
நினையாத செந்தமிழ் இனத்தினரே
ஈட்டும் பொருளுக்கு ஏற்றநல்
உழைப்பினை ஈந்திட்ட தரப்பினரே
பாட்டும் இசையுமாய் பல்கலை
வளர்த்திட்ட பண்பமை மரபினரே
பிறர்க்கென வாழ்தலை பெற்றியாய்க்
கொண்ட பெருமக்கள் வாழ்ந்தனரே
எவர்க்கெப் புகழ்வரின் எமக்கென
மகிழ்ந்திட்ட இனிமனக் குணத்தவரே.
------------------------------------------------------------------------------------------------ -
2 comments:
நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் ஐயா
தொடருங்கள்
உடலும் மனமும் சோர்ந்து ஒதுங்கிய நிலையில் வற்புறுத்தலுக்காக ஒரு படைப்பு பதிவு.
Post a Comment