Thursday, September 15, 2011

அண்ணா-103

பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களின் 103 ஆவது பிறந்த நாளன்று  அவருடைய சிறப்புகளில் சில துளிகள் இங்கே பாவலர் பொன்.க அவர்களின்  பாடல் வரிகளில்....

முக்கனிச்   சாறோ    இல்லை        முத்தமிழ்   ஊற்றோ
காஞ்சிதந்த  கற்பகப்  பெட்டகம்    கண்ணுக்குள்ளே  - எந்தக்
காலத்திலும்   உங்கள்  நினைவுகள்   நெஞ்சுக்குள்ளே                          - முக்கனி

அய்யாவின்  பாசறை   தந்த  பொய்யாமணிச்  சுடர் விளக்கே
மெய்யான   பகுத்தறி  வினை உதித்ததில்  திசை கிழக்கே
பொய்யான  மூடநம்பிக்  கையைச் சுட்டெரித்த  சூரியப் பந்தே
செய்தஅருந்  தொண்டி னைப்பேச ஆண்டுநூறு ஆகுமே இங்கே     - முக்கனி

கேட்பவரைக் கிரங்க  வைக்கும் கீதமன்றோ  உனது மொழி
கேடுகளைக் குத்திக்  கிளிக்கும் சிறுகதைகள் உனது உளி
நாடகங்கள்  ஆக்கி நடித்து   நச்சுக்கொடி  வேர்கள  றுத்தாய்
நல்லதிரைக் கதைகள் தந்து நாட்டுமக்கள்  நெஞ்சில் நிலைத்தாய்  -முக்கனி

கண்ணியமாய்க் கடமை  யாற்றக்  கட்டுப்பாட்டைக்   கற்றுமே  தந்தாய்
பெண்ணினத்தின் பெருமை காக்க பெண்ணுரிமைச்  சட்டமும்  தந்தாய்
எண்ணியதை முடிக்கும்  ஆற்றல்  ஈரோட்டுக்  குகையில் பெற்றாய்
உன்னைத்தான்  தம்பிஎன்று  தினம்  ஓராயிரம்  மடல்கள்  தந்தாய்   -முக்கனி

மாற்றான்தோட்ட  மல்லிகை  யாயினும்  மணம்தந்தால்  ஏற்றிடச் சொன்னாய்
மதியில்லாக்  கயவர் செயலை  மனமதில்  தாங்கிடச் சொன்னாய்
இனம்மொழி  ஏற்றங்கள் தன்னை   எத்திசையும்  உணர வைத்தாய்
எந்தநாடும்  போற்றும் முனைவர்  பேரறிஞர்  பட்டங்கள்  பெற்றாய்  - முக்கனி

ஆண்டுஒன்று  அரைமட்டும்  நீ  ஆட்சி  செய்தாய்   தமிழகத்தை
அழகுடன்  தமிழ்நா டென்னும் பெயர்மாற்றிப்  புகழ் படைத்தாய்
ஆட்சிமொழித்  தமிழெனவே  அயல்மொழி ஆதிக்க மாய்த்தாய்
ஆரியத்தின் மாயையைக் கீறி அனைத்திலும்  தமிழைக் கண்டாய்       - முக்கனி

ஏழைகளின்  சிரிப்பி னிலே  இறைவனைக்  காணவே  எண்ணி
எண்ணிலா  நலத்திட்டங்களை  எல்லாப்பட்டி தொட்டிக்குந்  தந்தாய்
அறிவென்னும்  ஆயுதம் ஏந்து அகிலம்உன் கைகளில் என்றாய்
அண்ணாஉன்   தத்துவம்  வென்றால் அகிலமே  சிறக்கும்  நன்றாய்  - முக்கனி






No comments:

Post a Comment