Sunday, September 18, 2011

அழகு தங்க நகையிலா?

18.09.2011 அன்று புதுக்கோட்டை விஜய் உணவகக் கூட்ட அரங்கில், உலகத்திருக்குறள் பேரவையின் திங்கள் கூட்டத்தில்,  மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் தலைமையில், முனைவர் மு.பழனியப்பன் மற்றும் புலவர் மகா.சுந்தர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  பாவலர் பொன.கருப்பையா அவர்களின் தமிழிசைப் பாடல்கள் நிகழ்வு நடைபெற்றது.
தமிழின் அருமை பெருமைகள், சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழரின் மாண்புகள், தமிழர் பண்பாடு, திருவள்ளுவர், திருக்குறளின் பெருமை, தமிழுக்குழைத்த பாரதியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் தொண்டு, தமிழுக்கு இன்றைய இளைஞர்கள் ஆற்றவேண்டிய பணி, மகளிர்க்கு அழகு எது? என்னும் பல்வேறு தலைப்புகளில் தமிழிசைப் பாடல்களைப் பாவலர் பொன்.க. இசைக் கருவிகளின் பின்னணியோடு வழங்கியது அனைவராலும் பாராட்டப் பட்டது. இவ்வரங்கில்  அழகு தங்க நகையிலா? என்னும் புதிய பாடல் அரங்கேறியது.


அழகுதங்க     நகையில்    இல்லே   முத்தம்மா-உனக்கு
அறிவுதரும்  கல்வியே    பெரும்     சொத்தம்மா
உறவுபொன் பொருளில்  இல்லை  முத்தம்மா- பிறர்க்கு
உதவும்அறச் செயலே    அன்பின்   வித்தம்மா                                   -அழகு

பொறந்தவீட்டுப்  பெருமைகளும்  புருசன்வீட்டு  அருமைகளும்
போட்டி ருக்கும்   நகையில்   இல்லே  முத்தம்மா - நீ
புடவைக்கடைக்   காட்சிப்   பொம்மை  இல்லைம்மா
புவியின்போக்கை  மாற்றுவதும்  புதிதாய்ஒன்றை  ஆக்குவதும் 
பொறுப்பாய்ச்  செயல்  புரிவதில்தான்  முத்தம்மா - நீ
புனைந் திருக்கும்  பொறுமை  கோடிச் சொத்தம்மா                       - அழகு


சேதாரம்  செய்கூலி  இல்லாத    பொன்னகையே 
சிந்தும்     இதழின்    புன்னகைதான்  முத்தம்மா - உன் 
சிரிப்புக்குமுன்     வைரம்   வெற்றுக்  கல்லம்மா
முத்துமணி  மாலைகளும்  கொத்தாய்ப்  பிறர்கைமாறும் 
சொத்தாக  நிலைப்ப  தெல்லாம்   முத்தம்மா - உன்
வற்றாத மனிதப்   பாசப்   பித்தம்மா                                                        -அழகு

நகையில்மோகம்  மாறிடணும்  நயங்கள்   மனசேறிடணும் 
நாட்டில்  பெண்கள்  கவலைதீரும்  முத்தம்மா - பெண்மை 
நாளும்  மணம்வீசும்   மலர்க்   கொத்தம்மா
மண்ணகத்துக்  கனிவளமே  மனிதகுல  விளைநிலமே
விண்ணைத்  தாண்டும்  ஆற்றல்உன்னுள்  முத்தம்மா- வெறும்
மின்னும் பொன்னால் விளையும்தீமை       மாத்தம்மா - அழகு

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

பாவலர் பொன்.க. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
“அழகு தங்க நகையில் இல்லே முத்தம்மா” – பாடல் கண்டேன்.
இந்தப் பாடலைத் தங்களின் கம்பீரக்குரலில் கேட்க இயலாமல் அன்று நான் வேறு நிகழ்ச்சிக்காக வெளியூர் போனதற்காக வருந்துகிறேன்.

நம் பெண்கள் ‘நகை ஸ்டாண்டு’ போல தங்கப் பித்துப் பிடித்து அலைகிறார்களே என்று வருத்தப்பட்டார் தந்தை பெரியார்.
நகை வணிகர்கள் -தொலைக்காட்சி ஊடகங்களின் துணையோடு - இந்த நகைப் பித்தை அதிகரித்து வளர்த்துவரும் இந்தச் சூழ்நிலையில் தங்களின் பாடல் மிக அருமை.

இதுபோலும் வாழ்க்கை எதார்த்தத்திலிருந்து நிறைய எழுதுங்கள் பாவலர் அவர்களே!

நன்றி வணக்கம்.
தங்கள் பாடலைக் கேட்கும் ஆர்வத்துடன்,
தோழமையுள்ள,
நா.முத்துநிலவன்
20-09-2011

Post a Comment