Monday, November 21, 2011

வாசிப்பு இயக்கம்

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                          புதுக்கோட்டை பெரியார் நகரில் 20.11.2011 மாலை பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தலைமையில் ” வாசிப்பு இயக்க”த் திங்கள் கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுவாதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் கீதா அவர்கள் ” என் பெயர் மரியாட்டு ” என்னும் நூலினை வாசித்து, புரட்சிக் காரர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான கனட நாட்டுச் சிறுமி தன் மன உறுதியினால் ஒரு சமூக மாற்றப் படைப்பாளியாக உயர்ந்த கதையினை உரிய உணர்ச்சிகளோடு அவைக்கு வழங்கினார்.
புலவர் மகா சுந்தர் அவர்கள் வாசிப்பு இயக்கம் வலுப்பெறும் வழிமுறை களையும் வளர்ச்சிப் படிநிலைக் கூறுகளையும் விளக்கினார். இரா.சம்பத்,  புலவர் மு.பா, கவிஞர் கஸ்தூரிநாதன், எய்ம்ஸ் கந்தசாமி, பீர்முகமது, சுரேசு,முகேசு, முத்துச்சாமி,திரைப்பட இயக்குநர் முரளி அப்பாஸ், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் வாசிப்பு இயக்கம் வலுப்பெற அரிய ஆலோசனை களை வழங்கினர். கலந்துரையாடலின் தொகுப்பாக, வாசிப்பு, இளைய தலைமுறைக்கு வழிகாட்டத் தக்கதாக அமைய, சமூக மேம்பாட்டுப் படைப்பாளிகளின் நூல்களைத் திங்கள் தோறும் ஒரு இலக்கிய ஆர்வலர் ஆய்ந்து, அப்படைப்பு பற்றிய கருத்தினை திங்கள் கூட்டத்தில் வழங்கி பங்கேற்போர்களின் கருத்துப் பகிர்வு மேற்கொள்ளுதல், வாசிப்பு இயக்கத்தில் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்தல் மனிதநேய மாட்சிமைக்கும் பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்கும் வழி வகுக்கும் எனத்  தலைவர் நிறைவுரையில் கூறினார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுவாதி அவர்கள் வருங்காலத்தில் வாசிப்பு இயக்கம் மேற்கொள்ள விருக்கும் பணிகளை விளக்கி நன்றியுரையாற்றினார்.
புத்தகங்களின் புனிதப் பணிகள் பற்றித்  தலைமையேற்ற பாவலர் பொன்.க அவர்கள் கீழ்க் கண்ட பாடலை இசையுடன் பாடி பங்கேற்றோரை மகிழ்வித்தார்.


புத்தகம்  நம்முடன்   பேசத்   துடிக்குது  பேசிப்   பார்ப்போமா?
புத்தகப்  பேச்சினில்  வித்தகம் ஆயிரம் விரும்பிக்  கேட்போமா?
மௌன  மொழியினாலே...நம் மௌனம்  களைத்து விடுமே
மனதுக்குள் புதுப்புது  மாற்றங்கள்  தந்திடும்  விந்தைகள்  அறிவோமா?


நேற்றைய  மாந்தரின்  மாட்சியை  வீழ்ச்சியை  நிரல்படச்  சொல்லிடுமே
இன்றையப்  புதுமையின்  எழுச்சியை  வளர்ச்சியை  எழிலாய்க் காட்டிடுமே
நாளையத்  தலைமுறை  நாடிடும்  செயலுக்கு  நம்பிக்கை  ஊட்டிடுமே
நாளொரு  நிகழ்வையும்  பொழுதொரு  நடப்பையும்  நலிவின்றிப்  பேசிடுமே.

அறிவியல்  வளர்ச்சியை  அணுயுகப் புரட்சியை ஆய்வுடன்  சொல்லிவரும்
அருங்கலை மிளிர்ச்சியை அழகியல் மலர்ச்சியை அமுதமாய்க் கொட்டித்தரும்
வானியல்  மருத்துவப்  பொறியியல்  வேளாண்  கருத்துகள்  ஊட்டிவிடும் 
வாழ்வியல் சுவைகளை  வகைவகை  இலக்கிய  ஏடுகள்  அள்ளித் தரும்

சிறியவர்  பெரியவர்  மாற்றுத்  திறனாளிக்  கேற்றதாய்ச்  சேதிசொல்லும்
சிந்திக்கச் சிரித்திடச் சீராய்வு மேற்கொள்வோர் தேவைக்கு வழிகள் சொல்லும்
எண்ணற்ற  அறிஞர்கள்  இவைவழி  காட்டலால்  ஏற்றங்கள்  பெற்றனரே
இன்னும்  தயக்கமா?  தொடங்குங்கள்   புத்தக  வாசிப்பை  இப்பொழுதே.

No comments:

Post a Comment