Wednesday, November 30, 2011

நேரு யுவ கேந்திரா- முப்பெரும் விழா

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
            29.11.2011 அன்று, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கலை அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையில், நேரு இளையோர் மையத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட இளையோர் எழுச்சிக் கூட்டம், மாவட்ட அளவிலான சிறந்த இளையோர்க்கு விருது வழங்கும் விழா, இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நிரல்பட நிகழ்ந்தன. திருமதி இராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்க உரையாற்றினார். புத்தா தற்காப்புக்கலை இளையோர் மன்ற சேது கார்த்தி கேயன், இமயமலையேற்றப் பயிற்சி பெற்ற செல்வி கண்மணி ஆகியோர்க்கு சிறந்த இளையோர்க்கான விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
        தொடர்ந்து ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களை இளையோர் மன்றங்களுக்கு வழங்கி ஆட்சியர் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் இளைஞர்கள் குறிக்கோளோடும் தன்னம்பிக்கை யோடும் செயல்பட்டால் சாதனைகள் படைத்து தானும் உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.முத்துக்குமரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திரு வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், மாமன்னர் கல்லூரி முதல்வர் திரு எஸ்.கார்த்திகேயன், திரு தளபதி மாணிக்கம், மாமன்னர் கல்லூரித் தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் திரு.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்கில் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”நாட்டுப் புறக் கலைகாட்டும் இளையோர் பண்பாடு” என்னும் தலைப்பில் நாட்டுப்புறப் பாடல்களோடு இன்றைய இளைஞர்களின் நோக்கும் போக்கும் சிறக்க உரையாற்றினார். ஒருமைப்பாடு, பயங்கரவாதத்திற்கு எதிரான அறவழி, சமூக மேம்பாட்டில் இளையோர் பங்கு, வரதட்சணை மறுப்பு,  சாதிமத பேதமற்ற சமுதாய மலர்ச்சி ஆகிய கருத்துகள் கொண்ட பாடல்களால் இளையோர் மனதில் எழுச்சியுறச் செய்தார். நிறைவாக சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment