Thursday, February 6, 2014

திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.

புதுக்கோட்டை அண்ணலார் பு.அ. சுப்பிரமணியனார் அவர்களால் தொடங்கப்பட்ட திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்த திரு.பா.இராமையா அவர்கள் 06.02.2014 அன்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி என் போன்ற தமிழ் உணர்வாளர்களையும் சமூகச் சிந்தனையாளர்களையும் பெரிதும் பாதித்து விட்டது.

 இந்தியன் வங்கி மேலாளர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .  புதுக்கோட்டை வடக்கு அரச வீதியில் தனது வசிப்பிட உப்பரிகையில் “பாலா தமிழரங்கு“ என ஒரு அரங்கினை அமைத்து, கடந்த 1999லிருந்து திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்து  திங்கள் கூட்டங்களை தொடர்ந்து நடத்தித்  தமிழ்ச்சான்றோர்களை அழைத்து கருத்துரையாற்றச் செய்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்.

அதே அரங்கில் மூத்த குடிமக்கள் அமைப்பினையும் நிறுவி, தமிழிசைச் சங்கத்தினையும் இயக்கி வந்தவர்.

அவ்வரங்கு முழுமையும் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்த  சான்றோர்களின் ஒளிப்படங்களைப் பரப்பி மிளிரச் செய்தவர்.

கடந்த 2010 திசம்பர்த் திங்களில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு திருக்குறள் கழகத்தையும் இணைத்து பத்து நாள்கள் “சங்க இலக்கியப் பயிலரங்கத்” தினை கலை இலக்கியச் சுவையோடு நடத்தியவர்.

அன்னாரின் அருமுயற்சியால் புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே உருவாகி  உயர்ந்து நிற்கும் “ திருவள்ளுவர் சிலை “ அவரைக் காலமெல்லாம் நினைக்கத் தூண்டும் ..

ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டு விழாவினை கலை இலக்கிய நிகழ்வுகளோடு நடத்தி சிறந்த தமிழறிஞர்களுக்குக் “ குறள்நெறிச் செம்மல்“ விருதுகளை வழங்கி  வந்த அவர் கடந்த  23.11.2013 ல் திருக்குறள் கழகத்தின்        59 ஆம்  ஆண்டுவிழாவினை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை வைத்து, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பொ.திராவிடமணி அவர்களுக்கு “அண்ணலார்-சி.இலக்குவனார் குறள்நெறிச் செம்மல் விருதினை“ வழங்கிச் சிறப்பித்தார்.

திருக்குறளின் பால் தீவிர ஆர்வமுடைய இவர் “ திருக்குறள் ஆங்கில உரை விளக்கம்“ மற்றும் “ அறமும் புறமும்” ஆகிய இரு நூல்களைப் படைத்து அவற்றை சென்னை ஊடகவியலார் திரு.க.அய்யநாதன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்.

 தமிழியச் சிந்தனையும் பகுத்தறிவுச் சீர்மையும் கொண்டு  தன் வாழ்நாள் முழுவதும் தமிழின மேம்பாட்டிற்காக உழைத்த அன்னாரது மறைவு புதுக்கோட்டை இலக்கிய வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா திருக்குறள் அன்பர் பா.இராமையா அவர்களின் இழப்பு, உண்மையிலேயே புதுக்கோட்டை நகர மக்களுக்குப் பேரிழப்பே இதனை, நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, போகப் போகப் புரிந்துகொள்வர். அன்னாரது இறுதிநிகழ்வில் கலந்துகொள்ள இயலாத சூழலில் மிகவும் வருந்தினேன். படத்திறப்பு விழாவில் அவசியம் கலந்துகொள்வேன். தாங்கள் அந்த மாமனிதரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி அய்யா.

Post a Comment