புதுக்கோட்டை திருக்குறள் தலைவராக இருந்து கடந்த 05.02.2014 அன்று இயற்கை எய்திய திரு பா.இராமையா அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் 08.03.2014 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடந்தது.
திருக்குறள் கழகமும், புதுக்கோட்டை மூத்த குடிமக்கள் அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச்செம்மல் திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையேற்று மறைந்த திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா அவர்களின் திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்தார்.
தமிழிசைச் சங்கத் தலைவர் திருமிகு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் பா.இராமையா அவர்களின் சிறப்புகளைத் தனது அறிமுக உரையில் கூறினார் .
காலமான பா.இராமையா அவர்கள் தனது இல்லத்தின் உப்பரிகைப் பகுதியினைத் தமிழ்ப்பணிக்காக பாலா தமிழரங்கம் எனப் பெயரிட்டு தொடர்ந்து திங்கள் தோறும் அவ்வரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவுகள் நடத்தியமை, அவ்வரங்கம் முழுமையும் போற்றத்தகு தமிழறிஞர்களின் திருவுருவப் படங்கள் பொதிந்துள்ளமை, தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழிசைச் சங்கம், மூத்தகுடிமக்கள் அமைப்பு ஆகியவற்றை நிறுவியமை, ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டுவிழாக்களை தமிழ் மணம்கமழ நடத்தியமை, திருக்குறள் மாநாடு நடத்தியமை, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி திருச்சியோடு இணைக்கப்பட்டதைக் கண்டித்து இயக்கம் நடத்தியமை, தமிழ் செம்மொழியாக்கப்பட நடைப்பயணம் மேற்கொண்டமை.
2010ல் சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தோடு இணைந்து சங்க இலக்கியப் பயிலரங்கத்தினை பத்துநாள்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தியமை, திருக்குறளின் தேர்ந்த 330 திருக்குறள்களுக்கு ஆங்கில உரை எழுதி நூலாக வெளியிட்டமை, அறமும் புறமும் என்னும் நூல் வெளியிட்டமை, புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைப் புரந்தமை, அனைத்திற்கும் மேலாக புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே திருவள்ளுவர் சிலையினை அமைப்புக்குழுத் தலைவராக இருந்து நிறுவியமை ஆகிய அன்னாரது சிறப்புகளை நிகழ்விற்கு வருகை தந்திருந்த புதுக்கோட்டையின் இலக்கிய சமூக அமைப்பினர் நினைவு கூர்ந்து அஞ்சலி உரையாற்றினர்.
புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் திருமிகு.ரெ.இராமையா, இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு இராமுக்கண்ணு, உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டனை நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, புதுக்கோட்டை வர்த்தகக்கழக கவுரவத் தலைவர் திருமிகு இரா.சேவியர், உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு சண்முக பழனியப்பன், திலகவதியார் திருவருள் ஆதினத் தலைவர் திருமிகு தயானந்த சந்திரசேகரன், புலவர் துரை.மதிவாணன், ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால்செட்டியார், திருக்குறள் கழகப் பொதுச் செயலாளர் திருமிகு வே.இராமதாசு, மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா, சர்வசித் அறக்கட்டளையின் தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு, இலக்கியப் பேச்சாளர்கள் தஞ்சை வி.விடுதலை வேந்தன், செயசீலன், மதுரை பத்திரிகையாளர் திருமிகு தி.அரப்பா, முனைவர் தா.மணி, முனைவர் சு.மாதவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், வரலாற்றுப் பேரவை முனைவர் இராசாமுகம்மது, திருவள்ளுவர் மன்றத்தலைவர் திருமிகு மா.கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் இலக்கிய மன்றத் தலைவர் திருமிகு முகேசு , திரு ஆரோக்கியசாமி, தொழிலதிபர்கள் திரு மைக்கேல் ஏ.வி.எம் .நல்லையா.நட்புறவு இயக்கத் தலைவர் திரு முத்துச்சாமி ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்.
புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலிகளைச் செலுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்குறள் கழக இணைச் செயலாளர் திரு மா.மீனாட்சி சுந்தரம், பாவலர் பொன்.க ஆகியோர் செய்திருந்தனர். திருக்குறள் கழகப் பொருளாளர் திருமிகு கோ.கோவிந்தசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
2 comments:
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா... தொகுத்து அறிய வைத்தமைக்கு நன்றி...
வணக்கம் ஐயா
நினைவஞ்சலிக் கூட்டம் ராமையா அவர்களின் மீது தங்களைப்போன்றோரின் அன்பையும் ஐயா அவர்களின் தமிழ்ப்பணியையும் பறைசாற்றுகிறது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்..பகிர்வுக்கு நன்றிகள்..
Post a Comment