Tuesday, January 13, 2015

எது தமிழ்ப் புத்தாண்டு?

திருவள்ளுவர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டும்.

         1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் கூடி தமிழருக்கு எது புத்தாண்டு என்பதை ஆய்ந்தனர்.

உலகில் அனைத்து நாடுகளும் கிரிகோரியன் ஆண்டினைத் தங்கள் புத்தாண்டாக ஏற்கவில்லை என்பது கண்கூடு.மதம், மொழி, இனம் சார்ந்தே அந்தந்த நாடுகள் தங்கள் புத்தாண்டை வகுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் தமிழன் மட்டும் ஏன் “பிரபவ” முதல்  “அட்சய” ஈறாக உள்ள, சுழற்சிக்கு ஒவ்வாத,  தமிழ்ப் பெயரல்லாத அறுபது ஆண்டுகளைத் தமிழாண்டுகளாகக் கொண்டாடும்  சாறுண்ணியாக தனித்தன்மையின்றி இருக்க வேண்டும் எனக் கருத்தூன்றி உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆக்கித் தந்த அறிவாசான் திருவள்ளுவர் பெயரிலேயே  தமிழாண்டை நிறுவினர்.

திருவள்ளுவர் பிறந்ததாகப் பல தமிழறிஞர்களாலும் ஆய்வடைப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்ட கி.மு.31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக அறிவித்தனர். 

பல்வேறு அரசியல் மாச்சரியங்களுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு இதனை 2008 முதல் நடைமுறைப் படுத்த ஆணை பிறப்பித்தது. அதன்படி கி.பி ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்ட திருவள்ளுவர் ஆண்டு வரும்.                  ( 2015உடன்31ஐக் கூட்ட 2046)

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாக எந்தத் திங்கள் என்பதையும்  தமிழக மக்களின் வேளாண் தொழில் பயனீட்டும் திங்களான தை முதல் நாளே திருவள்ளுவராண்டின் தொடக்கத் திங்கள் என்பதையும் வகுத்தளித்தனர். 

தமிழ்த் திங்கள்களின் பெயர்களும் பண்டைய வானவியல் அறிஞர்களால்                           கீழ்வானில், சூரியவீதியி்ல் அவ்வக்காலத்தே தோன்றும் உடுக்களால்                                                  ( விண்மீன்களால் ) உருவாக்கப்படும்  தொகுப்பு வடிவங்களை  அடிப்படையாகக் கொண்டே    வழங்கப்பட்டு வந்துள்ளன.

அவை 
சுறவம்- ( தை) சுறாமீன் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
கும்பம் -( மாசி) குடம் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
மீனம் - ( பங்குனி ) மீன்போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
மேழம் - ( சித்திரை) ஆடுபோலத் தோன்றும் விண்மீன் தொகுதி
விடை - ( வைகாசி ) எருது போலத் தோன்றும் விண்மீன் தொகுதி
ஆடவை - ( ஆனி ) இரட்டையர் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
கடகம் - ( ஆடி ) நண்டு போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
மடங்கல் - ( ஆவணி ) அரிமா ( சிங்கம்) போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
கன்னி - (புரட்டாசி ) பெண் உருவம் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
துலை - ( அய்ப்பசி) துலாக்கோல் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
நளி - ( கார்த்திகை ) தேள் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.
சிலை - ( மார்கழி ) வில் போலத் தோன்றும் விண்மீன் தொகுதி.

இந்த விண்மீன் தொகுதிகளின் வடமொழிப் பெயர்களிலிருந்தே                                                       சித்திரை முதல் பங்குனி வரை வழங்கப் பட்டு வந்தது.

சைத்ர- சித்திரை, வைசாகி - வைகாசி, மூலன் - ஆனி, உத்திராட - ஆடி, அவிட்ட - ஆவணி, புரட்டாதி - புரட்டாசி, அசுவதி - அய்ப்பசி, கிருத்திகா- கார்த்திகை, மிருகசீர்சா - மார்கழி, புனர்தை - தை, மகசி - மாசி, பல்குனா-பங்குனி.

தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவதும், அவ்வாண்டின் தொடக்கத் திங்களாக சுறவம் ( தை ) சுறவம்  முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு நாளாகவும், அந்நாளையே தமிழர் திருநாளாக, வேளாண் மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் நன்னாளாக . பொங்கல் திருநாளாகக் கொண்டாடி மகிழ்வதே தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகக் கொள்வோம்.
  .

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்தை அறிந்தேன்...

இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இனிய வள்ளுவர்நாள் வாழ்த்துகள் அய்யா.
தங்களின் இந்த அரிய பதிவை எனது வலையில் பகிர்ந்திருக்கிறேன் - பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2015/01/blog-post_15.html
நன்றியும் வணக்கமும் அய்யா.

Unknown said...

அப்பாவணக்கம், நிலவன் அண்ணாவின் தளத்தில்
பார்த்துவ்ந்தேன் அருமையான விளக்கம் நீங்கள்
2008 க்கு முன்பிருந்தே திருவள்ளுவர் நாட்காட்டியை
வழங்கி இருக்கீங்க நான்பெற்றிருக்கிறேன் சற்று
சிறியதாக இருக்கும் இல்லையாப்பா.குறிப்பு மதிவாணன்சார்
எனக்கு இன்னிக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்து அனுப்பி இருக்கார் என்னன்னு கேளுங்க அப்பா.

Post a Comment