Friday, August 28, 2015

நடுமூளைச் செயலாக்கம்

                    விடுதலை பெற்று அறுபத்தொன்பது ஆண்டுகள் கடந்த பிறகும் நாம் வளர்ந்து கொண்டிருக்கும் நாடாகவே உலக அரங்கில் அறியப்படுகிறோமே ஒழிய ,வளர்ந்து விட்ட நாடாக இன்னும் ஆகவில்லையே என்னும் ஆதங்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. 

ஏன் இந்த நிலை ? நமக்குப்பின்னர் விடுதலைபெற்ற நாடுகளும், இரண்டாம் உலகப்போரில் பேரழிவினைச் சந்தித்த நாடுகளும் கூட இன்று தொழில் வளர்ச்சியில் முன்னேறி, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று விளங்கும்போது நாம் மட்டும் இன்னும் ஏன் அந்த நிலையை அடைய முடியவில்லை. 

சற்று சிந்தித்தால்  காரணம் விளங்கும். அறிவியலில் அளப்பரிய  வளர்ச்சி பெற்றுள்ள நாம்,  அதனினும் மேலாக மூடநம்பிக்கைகளில் மூழ்கிப்போய்  முயற்சியைக் கைவிட்டு முடங்கிப்போய்க் கிடக்கிறோம் என்பதுதான் உண்மை.

அறிவியல் மனப்பான்மை ஊட்டி, அதன்வழியான சிந்தனைகளை வளர்ப்பதே மனிதவள மேம்பாட்டிற்கான வழி என்கிறது  நம் அரசியல் சட்டங்களின் அடிநாதம்.

                  ஆனால் அறிவியல் பட்டதாரிகள் கூட அறிவுக்குப் பொருந்தாத செயல்களில் ஈடுபடுவதும்,  அதற்கான குழுசேர்ப்பதும்தான் பெரும் வேதனைக்குரியது. முதுநிலை அறுவை மருத்துவர், ஒரு அறுவை சிக்ச்சை மேற்கொள்ளுமுன் தனது திறமையில் நம்பிக்கை இழந்து ஆண்டவனை வேண்டுவதும், விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வுக்கோளை ஏவுமுன் அவற்றிற்குப் படையலிடுவதும் எந்த வகையில் அறிவியற்பாற்பட்டதென்பதுதான் விளங்கவில்லை.

               தொன்று தொட்டு சில பிற்போக்குவாதிகள் பாமர மக்களை ஆசைகாட்டியும் அச்சமூட்டியும் அவர்களின் மூளைக்கு விலங்கிட்டும் சிந்தனைத் திறனை முடக்கி, மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்து வந்துள்ளமை  கண்கூடு.
               அறியாமையில் மக்களைத் தள்ளுவது என்பது சட்டப்படியான குற்றமாகும். அதிலும் அறிவியல் போர்வையில் மறைந்து கொண்டு மக்களை  மோசடி செய்து வருபவர்களை எப்படி அனுமதிக்க முடியும்?.

                அண்மைக்காலமாக  “நடுமூளை செயலாக்கம்” என்ற பெயரில் ஒரு புதிய மூடநம்பிக்கை நாடெங்கும் பரப்பப்பட்டு வருகிறது.  தங்கள் பிள்ளைகள் முதல் மதிப்பெண் எடுக்க  என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் பெற்றோரின் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி,வருவாய் தேடும் வழியாக இந்த “நடுமூளைச் செயலாக்கம்” என்னும் மோசடியைத் தொடங்கி யிருக்கிறார்கள் சில வியாபாரிகள்.

               மனித மூளையின் இடப்பகுதி, வலப்பகுதி இரண்டிற்கும் இடையில் இருக்கும் நடுமூளைப் பகுதியினைத் தூண்டுதல் செய்து மூளைத்திறனை மேம்படுத்தும் பயிற்சியினை இந்த நிறுவனங்கள் அளிப்பதாகப் பரப்புரை செய்து வருகிறார்கள்.  இதற்கு பிட்யுட்டரி சுரப்பியை வளப்படுத்தல், செரடோனின், மெலடோனின் அமிலத்திசுக்களை அதிகரித்தல் என்னும் அறிவியல் தொடர்களையும் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய நுண்ணுணர் தூண்டல்  மூலம் கண்ணைக்கட்டிக்கொண்டு கூட படிக்கும் ஆற்றல் ஏற்படும், நினைவாற்றல் பெருகும், படிக்கும் பாடங்கள் நன்றாக மூளையில் பதியும். தேர்வுகளிலும் போட்டிகளிலும் சிறப்பாகச் சாதிக்கலாம்   என்றெல்லாம் ஆசை காட்டித்  தங்கள் வியாபாரத்தை  தொடங்கியுள்ளன  இந்த நிறுவனங்கள் 

தில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் தொடங்கிய இந்த மோசடி தற்போது தமிழகத்திலும் தொடர்கிறது.

                முன்பெல்லாம் கண்கட்டி வித்தையென்று, கண்ணைக்கட்டிக் கொண்டு ஊர்திகளை ஓட்டுதல், கூட்டத்தினர் வைத்திருக்கும் பொருள்களின் பெயர்களைச் சொல்லுதல் என ஏமாற்றுச் செயல்கள் செய்து பிழைப்பு நடத்துவார்கள். பாமர மக்களிடம் கூட அத்தகைய செப்படி வித்தைகள் இப்போது செல்லுபடியாவதில்லை. ஆனால் தங்கள் பிள்ளைகள் முதன்மை பெற வேண்டுமென்னும் பேராசைகொண்ட பெருநகரப்  பெற்றோர் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற நிறுவனங்களில் சேர்த்து  முதன்மை நிலை எய்த முனைந்துள்ளனர்.


              அதிகஅளவாக பத்துபில்லியன் நரம்பணுக்கள்( நியுரான் ) அணுக்களைக் கொண்ட 1.450 கி.கி. எடையுள்ள மனித மூளை, சிறுமூளை, பெருமூளை, முகுளம் என்னும் பகுப்பில் அமைந்துள்ளதை எட்டாம் வகுப்பு அறிவியல்பாடம் விளக்கமாகச் சொல்கிறது. மண்டை ஓட்டினுள் இருபிரிவாக உள்ள மூளையின் இடப்பக்க மூளை, உடலின் வலப்பக்க உறுப்புகளையும், வலப்பக்க மூளை, உடலின் இடப்பக்க உறுப்புகளையும்  நரம்பணுக்களின் வழித் தூண்டல்களுக்கேற்ப துலங்கவைக்கின்றன. பெருமூளையின் நடுப்பகுதி இட,வலப் பகுதி மூளைகளின் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் செயலியாக உள்ளது என்கிறது உடற்கூறு அறிவியல். 
   
                இதுவரை அறிவியல் ஆராய்ச்சியில், மருத்துவ ஆய்வுகளில் மெய்ப்பிக்கப்படாத “நடுமூளைச் செயலாக்கம்” எந்த அறிவியல் அமைப்புகளோடும் தொடர்பில்லாத இந்த நிறுவனங்களுக்குப் புலப்பட்டிருப்பது விந்தையே.

இதில் சில கேள்விகள் எழுகின்றன.
முதலாவதாக இந்த நிறுவனங்களை நடத்துகிறவர்கள் அறிவியலறிஞர்களா?
இந்த நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களா?
10,15 நாள் பயிற்சியில் இப்படி மூளைச் சலவை செய்வது சாத்தியமா?
கண்ணைக்கட்டிக்கொண்டு ஏன் படிக்க வேண்டும்?
அதற்கு இருட்டிலேயே படிக்கலாமே...
அப்படியானால் பார்வையற்றவர்கள் இப்பயிற்சியால் பலன் பெற முடியுமா?
இப்படிப் பயிற்சி பெற்ற குழந்தைகள் நுண்ணறிவில் மேம்பட்டுள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா?
என்ற இக்கேள்விக்கு மாணவர்களை “ஆம்” எனப் பதிலளிக்கப் பயிற்சியளித்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

           15 நாள் பயிற்சிக்கு 25000 ரூபாய் வரை கட்டணம் பெறும் இந்த நிறுவனம்  இரண்டுநாள்களிலேயே அந்தக் குழந்தைகளிடம் “உன் மூளையில் ஒரு அற்புத சக்தியை கொண்டு வந்திருக்கிறோம். இதைப்பற்றி உன் பெற்றோர் உட்பட யாரிடமும்  “அப்படி இல்லை” என்று சொன்னால் அந்த சக்தி செயல்படாமல் போய்விடும்” என அச்சுறுத்தி விடுகிறார்கள். சக்தி கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்த குழந்தைகள் யாரிடமும் இப்பயிற்சிக்கு முரணாக எதையும் சொல்வதே இல்லை.  கேட்பவரிடம்  தனக்குள் ஒரு சக்தி உருவாகியுள்ளதாகப் பொய்யாகவே சொல்கிறார்கள். பெற்றோரும் நம்பி ஏமாந்து வருகிறார்கள்.

             ஆக தங்களிடம் பயிற்சிக்கு வரும் குழந்தைகளைப் பெற்றோரிடம் பொய்சொல்லத்தான்  பயிற்சியளிக்கிறார்கள். மேலும் இதன் தொடர்ச்சியாக ஏமாற்றவும் அக்குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன என்கிறார்கள் அறிவியலறிஞர்கள். இதனால் குழந்தைகளின் ஆக்கப்புர்வமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படும் ஆபத்தும் உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

               வேகமாகப் பரவிவரும் இம் மோசடியினைத் தடுக்க, இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(எப்.ஐ.ஆர்,ஏ) தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் சி.இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக பிரின்ஸ் என்னாரெசு, நிர்முக்தா இயக்கத்தின் பிரிவான சென்னை சுதந்திரச் சிந்தனையாளர்கள் அமைப்பின் கணேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோர்  தீவிரமாக முனைந்துள்ளனர். அண்மையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பினை நடத்தி, இம் மோசடி பற்றியும் மூளையின் இயற்கையான செயல்திறன் பற்றிய உண்மைகளையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கியிருக்கிறார்கள.

                அத்தோடல்லாமல்  இந்த “நடுமூளைச் செயலாக்க விளைவுகள்” அறிவியல் பூர்வமானது என நிறுவுவார்களேயானால் அவர்களுக்கு  அவ்விடத்திலேயே ஐந்து இலட்சம் வழங்கப்படும் என்றும் சவால் விட்டிருக்கிறார்கள்.

              மேலும் இத்தகைய மோசடி நிறுவனங்களைத் தடை செய்யக்கோரி தில்லிஉயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றும் தொடரப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். 

            சவாலை எதிர்கொள்வார்களா? நீதிமன்றத் தடை வருமா?  என்பதற்கெல்லாம் அப்பால் நாம் நம் எதிர்காலச் சந்ததியினரை இத்தகு மோசடி வலையில் சிக்கவைக்காமல் இருப்பதும், அறிவியல் மனப்பான்மையினை வளர்த்து ஆக்கப்பூர்வமான வழியில் அவர்களை வழிநடத்துவதும்  நமக்கும் நாட்டிற்கும் நல்லது.

                                                                                     நன்றி-- பெரியார் பிஞ்சு, தீக்கதிர்

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதர்களின் மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது ஐயா

Srimalaiyappanb sriram said...

௧௦௦௦ பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது அய்யா

Pavalar Pon.Karuppiah Ponniah said...

தானாய் எதுவும் மாறாது. தக்கவகையில மாற்றினால மாற்றம் வரும்

Post a Comment