Friday, May 12, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-19


அவனைக் காப்பாற்றப் போய் அவள்...?

                   

              செறிவும் நிறையும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான - எனப் பெண்டிரின் இலக்கணமுரைக்கிறது தொல்காப்பியம்.   

பெண்ணின் பெருந்தக்க யாவுள  என்கிறார்  திருவள்ளுவர். 

பெண்டிரும் உண்டியும் இல்லெனின்  மக்கட்கு 
உண்டோ ஞாலத்து உறுபயன்? என்கிறது மணிமேகலை.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் - என்கிறார் முண்டாசுக்கவி.

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - என்றார் கவிமணி.


                இத்தகு பெருமைக்குரிய பெண்ணினம்  காலப் போக்கில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு முள்வேலிச் சுவர்களுக்குள்  அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதுதான்  வேதனைக்குரியது.


பெண்டிர்க்கழகு எதிர் பேசாதிருத்தல்,
குலமகளுக்கழகு கொழுநனைப் பேணுதல்

என்னும் இற்றுப்போன சொலவடைகளால் தன்மை 
அற்றுப் போகச் செய்தனர் பெண்டிரை.. 

               அடுப்பூ தும் பெண்களுக்குப் படிப்பெதற்கு எனக் கல்வி  மறுக்கப்பட்டு, ஆணுக்குரிய போகப் பொருளாய், வெறும் பிள்ளை பெறுகின்ற எந்திரங்களாய்  ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்தது.,  

          
         பெண்கள் உயர்வு பெறாமல் ஒரு சமூகம் மேம்படாது.

ஒரு பெண் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவள் கையிலிருக்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுங்கள் என்றார் பெரியார் 

பாட்டைத் திறப்பது பண்ணாலே,-இன்ப 
வீட்டைத் திறப்பது பெண்ணாலே

பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் 
பேதமை அற்றிடும் காணீர்

பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் 
பின்னிந்த உலகினில் வாழ்க்கை இல்லை

என்று பாரதியும்

கல்வியில்லை, உரிமையில்லை பெண்களுக்குக் 
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள் 

பெண்ஆண் என்ற இரண்டுருளை  யால் நடக்கும்  இன்பவாழ்க்கை

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு 
மண்ணடிமை தீர்ந்து வருதல்  முயற் கொம்பே

என்று பாரதிதாசனும்  தங்கள்  கவிச் சாட்டைகளைச் 
சுழற்றிய பின்னரே  

எட்டுமறிவினில்  ஆணுக் கிங்கே பெண்  இளைப்பில்லை காண்  என்று பெண்கள் கல்வியில்,  வேலைவாய்ப்புகளில்  விளையாட்டுத் துறையில், விண்வெளியில் வியப்பரிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர் .

அவர்கள் கவிதைகளின் தாக்கம்தான்  என்னை  பெண்ணியம் பற்றிய கருப்பொருள் கொண்ட நாடகங்களை எழுதத் தூண்டியது .

இன்றும்  கிராமப் புறப் பெண்கள் பண்பாடு கட்டுப்பாடு என்ற பெயரில் விலங்கிடப் பட்ட நிலையிலிருந்து  மீள முடியாத  நிலை இன்னும் தொடர்வது வேதனைக் குரியதே.

கொடுத்த வாக்குறுதி, குடும்பச் சொத்துகளைக் காப்பாற்றல் ,  கொத்தடிமை முறை   என்னும் நெருக்கடிகளால் பல இளம் பெண்கள்  முதிய ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், அம்முதிய கணவர்கள் இறந்தாலும்  பெண்கள் மறுமணம் செய்து கொள்ளாமல்  விதவையாகவே  இருக்க வேண்டும்  என்ற கட்டுப் பாடு இன்னும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது.

“வாடாத  பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தபின் மணத்தல் தீதோ? என்ற பாவேந்தரின் வரிகள் தான்  விதவைத் திருமணத்தை வலியுறுத்தி 1972ல் நான் படைத்த “ பட்ட மரம்” என்ற நாடகம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 
பாரினில் பெண்கள் நடாத்த வந்தோம் 

என்ற வரிகளைக் கருப்பொருளாய்க் கொண்டு 1976ல் 
உ ருவானதே ” நாடும் வீடும் ” என்னும்  எனது சமூக நாடகம்.                   வஞ்சகன் ஒருவனால்  வஞ்சிக்கப்பட்ட  படித்த பெண் ஒருத்தி,  தற்கொலை செய்து கொள்ளக் காட்டுக்குள் செல்கிறாள்.  அங்கு  வெட்டி விழுந்த மரத்துக்கடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு   விறகுவெட்டியைக் காப்பாற்றுகிறாள்,  அவனது நேர்மையாலும்   உழைப்பாலும்  அவனையே விரும்பித்   திருமணம் செய்துகொள்கிறாள் . அவனுடைய தொழிலை மதிப்புக் கூட்டிச் சந்தைப் படுத்தி அவனைப்  பொருளாதாரத்தில்   முன்னேற்றமடையச் செய்கிறாள்.  

 கெடுவாய்ப்பாக அவளை  முன்னர் வஞ்சித்த அந்தக்     கெடுமதியாளன் அந்தக் காட்டுக்குள் தன் கூட்டாளிகளோடு மறைந்து வாழ்ந்து இந்நாட்டு இராணுவ இரகசியங்களை அந்நிய முகாமிற்கு விற்றுப் பொருளீட்ட முயல்கிறான். அவனைச் சட்டத்தின் கையில் பிடித்துக் கொடுத்து ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த நாட்டைக் காப்பாற்றுகிறாள்.அந்த முயற்சியில் அந்தப் பெண் சந்திக்கும் சவால்களை எப்படிச் சமாளித்து நாட்டையும் வீட்டையும் காப்பாற்றுகிறாள் என்பதே  மேடை நாடகக்  கதையோட்டம்.

இந்நாடகத்தில் இரண்டு உத்திகளை மேடையில் காட்சிப் படுத்த திட்டமிட்டிருந்தேன்.

                       விறகு வெட்டி  மரத்தை வெட்டும் காட்சியில்      ஒரு உண்மையான மரத்தை நிறுத்தி ( மேடையின் உயர்த்திற்கேற்ப கிளைகளைக் குறைத்து ) கதைத் தலைவனை வெட்டச் செய்து அது அவன் மீது விழும்போது எப்படித் தாங்கிக் குப்புறச் சாய வேண்டும் என்று பயிற்சி யளித்திருந்தேன். அவரும் அப்படியே விழுந்தார். காட்சிப்படி தற்கொலை செய்து கொள்ள வந்த பெண் அதைப் பார்த்து,   அங்கு வந்து மரத்தைப் புரட்டி அவனைக் காப்பாற்ற வேண்டும்.

முதல்நாள் ஒத்திகையின்போது அட்டை மரத்தைத் தூக்கிய அந்த நடிகையால் கனமான உண்மையான மரத்தைத் தூக்க முடியாமல் திணறினார். ஒருவழியாக அந்த மரத்தை நிமிர்த்தியவர் கீழே மயங்கிக் கிடந்தவரைத் தூக்கக் குனிந்தபோது   யாரும் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு நடந்தது... 

                                          ----நடந்தது என்ன? அடுத்த  தொடரில்...  

3 comments:

KILLERGEE Devakottai said...

வபரபரப்புடன் படித்துக் கொண்டு வரும் பொழுது சட்டென விபரீதம் நடந்ததை அறிய தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது ஐயா
காத்திருக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எதிர்பார்க்காத அது என்ன ஐயா?....

Post a Comment