Thursday, August 25, 2011

தமிழ்ப் புத்தாண்டு

எது தமிழாண்டு?  ஒரு இனத்தின் அடையாளம் அவ்வினம் பேசுகின்ற மொழியேயாகும். அவ்வகையில் இலெமூரிய கண்டத்தில் நீண்ட நெடுங்காலத்திற்கு முன் தோன்றி, கடல்கோளால் அழிவுற்று. எஞ்சியத் தமிழினம், இந்தியத் துணைக்கண்டம் நகர்ந்து, வணிகம் மற்றும் வாழ்வியல் காரணங்களால் உலகம் முழுமைக்கும் பரந்து வாழும் நிலையில், அவ்வின அழிவிற்கு பிற பேரினம் கைக்கொண்டிருக்கும் ஆயுதம் தமிழ்மொழியின் சீர்மையை இயல் வழிகளிலெல்லாம் அழிப்பது என்னும் அற்ப முயற்சி. அதன் தொடர்ச்சிதான் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழினம் மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருந்த மாட்சியைக் குலைக்க,மீண்டும் ”சித்திரை - தமிழ்ப் புத்தாண்டு” என்னும்  சாணக்கிய அறிவிப்பு. இது ஏதோ முந்தைய அரசின் முதல்வர் தன்னிச்சையாக  அறிவித்த அறிவிப்பு இல்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பரிதிமால் கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் ” பிரபவ முதல் அட்சய” ஈறாய்  வழங்கப்பட்டு வரும் அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் இல்லை. அவற்றிற்காக கற்பிக்கப் பட்ட இதிகாசக் கதைகள், தமிழர் மரபு, மாண்பு, ஆகிய பண்பாட்டுக் கூறுகளுக்கோ, அறிவுக்கோ பொருத்தமானதாக இல்லை. மேலும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் குழப்பமின்றிக் கணக்கிட  ஏதுவாகவும்  இல்லை என ஆதாரங்களோடு விளக்கி, தமிழருக்கென ஒரு தொடர் ஆண்டினை அறுதியிட வேண்டுமெனப் போராடி வந்தனர். அதன் பின்னர்1921 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்கள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஆய்ந்து, தமிழ்மறை தந்த திருவள்ளுவர்  பெயரில் தொடர்  ஆண்டைத் தமிழ் கூறும் நல்லுலகம் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம்  கி.மு.31 என்பதைத் தமிழாண்டெனக் கொள்ள முடிவாற்றப்பட்டது. அதே வேளையில் தமிழ்நாட்டின் புவியியலை ஒட்டிய  பருவமாற்றங்கள், வேளாண் தொழில், வாழ்வியல் மேன்மைகளையொட்டி  விளைந்தவற்றை இயற்கை மூலமான கதிரவனுக்குப் படைத்து, உழைப்பிற்கு நன்றிகாட்டிட ஏற்ற திங்களான ”தை” த்திங்களையே திருவள்ளுவர் ஆண்டாகியத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத் திங்களாக கடந்த 2007ஆம்  ஆண்டு தமிழக அரசு அரசாணையாகப் பிறப்பித்துக் கொண்டாடப் பட்டு வருகிறது. இன்னும் தமிழ் மாதங்கள் என ” சைத்ர....முதல் ...பல்குனா” வரையான  சூரிய வீதியில் தங்கும் உடுக்களின் பெயர்கள் சமக்கிருத மொழியில் இருப்பதை ” சுறவம்,கும்பம் , மீனம் , மேழம்,விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை” எனத் தமிழில் வழங்கவேண்டுமெனத் தமிழறிஞர்கள் முனைந்து கொண்டிருக்கின்ற வேளையில், அரசியலிலோ, பொருளாதாரத்திலோ,  மக்கள் வாழ்வியலிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத  தமிழ்ப்புத்தாண்டு தை என்பதை சித்திரை என மாற்ற முயலுவது, தமிழ் உணர்வாளர்களை வேதனைப் படுத்தும் செயலாகும்  . அறிவுசால் ஆன்றோரின் மனக்குமுறலுக்கு அரசு ஆட்படும் நிலையினைத் தவிர்த்தலே அறிவார்ந்த அரசுக்கு நலம் பயக்கும்.

             தைத்திங்கள் முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு..
                                                     பாடல்.

 தைததிங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு
           தமிழ்ப் பண்பாடோடு தமிழாநீ கொண்டாடு                              --- தைத்திங்கள்

ஞாலத்தின் முதலதொழிலாய் வேளாண்மை தனைக்கொண்டு
           காலத்தை அதன்வழியே வகுத்தானே  நம்தமிழன்
ஆடிப்பட்டம் தேடிவிதைத்து மார்கழியில் மகசூல்கண்டு
        கூடிக்களிக்கும்  நாளாய்க் கொண்டானேத் தைமுதல்நாளை -- தைத்திங்கள்
சுழல்கின்ற புவிசெழிக்க சூரியனை முதன்மை கொண்டான் 
        சூரிய வீதியில் தங்கும் உடுக்கள் பன்னிரண்டு கண்டான் 
சுறவம்முதல்  சிலைஈறாய்ச் சு ழன்றிடும் ராசிகள்பெயரைச்
        ( சுறவம், கும்பம்,மீனம்,மேழம்,விடையொடு ஆடவை, 
          கடகம், மடங்கல், கன்னி, துலை,நளி,சிலை என) 
சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைதிங்கள் என்றான் -- தைத்திங்கள்

கார்கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்எனக்
        காலநிலைக் கேற்பப் பொதழுதைப் பருவங்களாய்ப் பிரித்து வைத்தான் வெயிமழை குளிர்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில் 
      விளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைக்கும் நாளே தைத்திங்கள்

மோகினி உருக்கொண்டு  கிருட்ணனை நாரதமுனியும்
     மோகித்துப் பிறந்திட்ட பிள்ளைகள் அறுபதன் பெயராம்
பிரபவமுதல் அட்சயஈறாய்  பெயரிட்டுத் தமிழாண்டென்னும் 
     பேதையர் புலம்பல் போக்க பிறந்ததே தமிழாண்டென்று            -தைத்திங்கள்

திங்களைப் பகுத்திட்ட திறன்மிகு தமிழ்ச் சான்றோர்
      திடமுடன் தமிழாண்டு தொடங்கிய காலம் சொன்னார்
தீங்கனிச் சுவைஊற்றாம் திருக்குறள் மறைதந்த 
      திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டு எனக்கொண்டார்              - தைத்திங்கள்

No comments:

Post a Comment