Monday, May 20, 2013

சிக்கப்பட்டி- பட்டிமன்றம்

             20.05.2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், சிக்கப்பட்டியில் ஆலய ஆறாம் மண்டகப்படியினை முன்னிட்டு  சிந்தனைப் பாட்டுப் பட்டி மன்றம் நடைபெற்றது.
             “மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்பவை, குடும்ப உறவு, காதல் திரையிசைப் பாடல்களா?  சமுதாய தத்துவப் பாடல்களா?“ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
             பட்டிமன்ற நடுவராக புலவர் மகா.சுந்தர் அவர்கள் தனது முன்னுரையில்  இருசார் அணியினையும் அறிமுகம் செய்து. இரு தலைப்புகளிலும் உள்ள திரையிசைப் பாடல்களைக் கோடிட்டுக் காட்டினார்.
              மக்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்பவை சமுதாய தத்துவப் பாடல்களே என்ற அணித் தலைமையாக  பாவலர் பொன்.கருப்பையா அவர்கள், சமூக மாற்றத்திற்கு வித்திட்ட, இளைஞர்களைப் பக்குவப் படுத்திய, பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோர்களின்  பாடல்களைப் பாடி, நடப்பியலை நகைச் சுவையுடன் எடுத்துரைத்தார்.
            அடுத்து வாதிட்ட சிதம்பர ஈசுவரன், மக்கள் விரும்புவது குடும்ப உறவு மற்றும் காதல் பாடல்களே என்பதற்குச் சான்றான திரையிசைப் பாடல்களை இருகுரல் இசையோடு பாடிப் பாராட்டுப்  பெற்றார்.
             சமுதாய, தத்துவப் பாடல்களே என்ற தலைப்பில் அடுத்துப் பேசிய இராச.செய்சங்கர், கொச்சையான திரையிசைப் பாடல்கள் இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் நிலையினையும், சமூக மாற்றத்திற்கு வழிகாட்டிய பழைய புதிய பாடல்களைப் பாடியும், உணர்ச்சிகரமான எடுத்துக் காட்டுகளுடன் வாதிட்டுப் பாராட்டினைப் பெற்றார்.
            குடும்ப உறவு காதல் பாடல்கள் என்ற தலைப்பில் பேசிய வள்ளியப்பன் அவர்கள் தாயின் பெருமை , காதலின் அருமை பற்றிய பாடல்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
             பட்டிமன்ற நடுவர் மகா.சுந்தர் தனது நிறைவுரையில், காதலைக் கண்ணியமாகவும், குடும்ப உறவுகளை குதூகலமாகவும் காட்டிய திரைஇசைப் பாடல்களையும்,  இளைஞர் முதல் முதியோர் வரை இதமாக சமூக நிலைகளை உயர்த்திவரும் தத்துவப் பாடல்களையும் ஒப்பிட்டு. காதல் பாடல்களைவிட. சமுதாய மாற்றத்திற்காகத் தத்தவார்த்தமாகப் பாடப்பட்ட திரையிசைப் பாடல்களே காலத்தால் அழியாமல் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கின்றன எனத் தீர்ப்பளித்தார்.
           அறந்தாங்கி அலெக்ஸ் குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தது அருமை.

No comments:

Post a Comment