Wednesday, July 24, 2013

இந்திய திரைப்பட நூற்றாண்டுக் கொண்டாட்டம்.

             .புதுக்கோட்டை நில அளவையர் சங்கக் கூட்ட அரங்கில் புதுகை திரைப்படக் கழகம் 21.07.2013 அன்று இந்திய திரைப்பட நூற்றாண்டு கொண்டாட்டத்தினையொட்டி “திரைப்படநாள் விழா“ வினை நடத்தியது.
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்  ஆறு பன்மொழி, பன்னாட்டுத் திரைப் படங்கள் திரையிடப் பட்டு, கருத்துப் பகிர்வுகள் நடந்தன.

             அவற்றுள் ஆஸ்கர் உள்ளிட்ட 19 விருதுகளைப் பெற்ற ” தி ரெட் வயலின் “ என்னும் கனடாக் கதைப் படத்தையும் , 27 விருதுகளைப் பெற்ற “தி வயலின்“ என்னும் மெக்சிகோ கதைப் படத்தையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
            
          “தி ரெட் வயலின் “ திரைப் படத்தை ப்ராண்ட்கோஸ் எனும் இயக்குநர் நேர்த்தியாக இயக்கி இ ருந்தார்.

           தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை பற்றிக் கவலைப்படும் தாய், தனது வீட்டுப் பணிப்பெண் கூறும் 5 சீட்டு ஆருடத்தின் அச்சத்தால் உடல் நலிந்து மகப்பேற்றின் போது ஒரு ஆண்குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண்மணியின் கணவர் ஒரு வயலின் இசைப் பிரயர் என்பதால்   மனைவியிடம் முன்னர் பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு வயலினை பரிசளிக்கப் போவதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இறந்த மனைவியின் உடலிலிருந்த எடுத்த தலைமுடியினைக் கருக்கி அவளுடம்பிலிருந்து எடுத்த இரத்தத்தில் குழப்பி அந்த வண்ணத்தை தான் பரிசளிக்க வைத்திருந்த வயலின் இசைக் கருவிக்கு வண்ணமாக்குகிறார்.
லாட் எண் 72 என்கின்ற அந்த வயலினைத் தன் குழந்தைக்கு பயிற்றுவிக்கிறார்.
ஒரு இசைப் போட்டியின் போது  கஸ்பார் வைன் என்கிற அந்தச் சிறுவன் மயங்கி விழுந்து இறக்கிறான்.

             அவனது இறப்பிற்குப் பின்னர் அந்த வயலின் அமெரிக்கா, பிரான்ஸ் ருஷ்யா, சீனா, மொரிசியஸ்  ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பல குணப்பட்டவர்களின் கைகளில் பயணிக்கிறது. அந்த வயலினை அதிக ஏலத்தில் எடுக்க பலர் போட்டி போடுகின்றனர்.

           காதல் வீரம் சோகம் என்னும் நிலைகளில்  ஆதிக்கம்  செய்த அந்த வயலினின்  தொன்மையினை மொரிசியல் தொல்லியல் துறை அறிஞர் துப்பறிந்து கண்டு பிடிப்பதாகக் கதை நிறைகிறது. நல்ல ஒளிப்பதிவு, இனிய வயலின் இசை, பின்னும் முன்னுமாகக் கதை நகர்த்தும் உத்தி முதலிய மேலான கூறுகள் அருமை.

             இசையின் இயல்பினை ஈர்ப்பாகச் சொல்லப் பட்ட இப்படத்தில் ஏனோ நம்ம ஊர் கிளிஜோசியக்கார உத்தியாக அந்த ஐந்து சீட்டுகளின் படி எல்லாம் நடப்பதாகக் கதை நகர்வது மூடநம்பிக்கை நமக்கு மட்டும் சொந்தமில்லை... உலகின் மூலை முடுக்குகளிலும் இன்னும் முனகிக் கொண்டுதான் இருக்கிறது என்பது சற்று நெருடல்தான்.

1 comment:

அ.பாண்டியன் said...

அய்யா அவர்களுக்கு வணக்கம், புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொண்டேன். தங்களின் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி. தங்களின் பல்துறை அறிவு என்னைப் பொன்ற இளைஞர்களுக்கு வழிக்காட்டும்.

Post a Comment