Sunday, February 15, 2015

நாம் நாமாக நிற்பது எப்போது?

14.02.2015 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 11ஆவது புதுக்கோட்டை மாநாடு, நகர் மன்றத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் அன்றே எழுதி அப்போதே இசையமைத்துப் பாடிய பாடல் இது.

நாம் நாமாக நிற்பது எப்போது?

ஆத்துக்குள்ளே      நீரெடுத்து...
அக்கரையில்       மணலெடுத்து
அன்பையதில்    குலைச்சு
கலைகள்            செஞ்சோமே - இப்போ
ஆறுமில்லே     நீருமில்லே
அதிலாடும்       மீனுமில்லே 
ஆசைப்பட்ட    இயற்கை    வளம்  என்னாச்சு? - அட
அத்தனையும் அந்நிய     முதலை தின்னாச்சு 
                                                        --- தன்னனன்னே
ஏரிக்குள்ளே       நீரெடுத்து...
எங்கும்வய       வௌயவச்சு
எட்டுஊரு          பசியப்
போக்கச்            செஞ்சோமே - அந்த
ஏரிக்குள்ளே    நீருமில்லே
ஏரியோட        கரையுமில்லே
எங்கும்    பெரும்      கட்டடமா   நின்னாச்சு - நம்ம
ஏர்உழவு  பொழப்பு   இப்ப       மண்ணாச்சு 
                                                    --- தன்னனன்னே
காட்டுக்குள்ளே     மரம்வளர்த்து...
கண்கருத்தா            உயிர்வளர்த்து
காலமெல்லாம்     மழையும்
மருந்தும்                 கண்டோமே - அந்த
காடழிஞ்சு             மழையுமில்லே
காயம்காக்க         மருந்துமில்லே
கரியைக்   கக்கும்    ஆலைஎங்கும்   ஆயாச்சு - இப்பக்
காட்டு   விலங்கும்  ஊரைநோக்கி   வந்தாச்சு.
                                                     --- தன்னனன்னே
பாறையில       கல்லெடுத்து....
பக்குவமா        சிற்பம்செஞ்சு
பழங்காலப்   பெருமை
சொல்லி        நின்னோமே - அந்தப் 
பாறைகளை   ஒடச்செடுத்துப் 
பளிங்குகளா    மாத்திஇப்பப் 
பலபேரு      அதிபதியா    ஆனாங்க - நாம
பள்ளத்தில் படர்ந்த  ஊணாங்கொடியாப் போனோங்க
                                                 --- தன்னனன்னே
நஞ்சையில         பயிர்வெளைச்சு...
நாட்டுக்கெல்    லாம் படியளந்து
நாளும்               நெல்லுக்   
களஞ்சியமா    நின்னோமே - அதன்
நடுவுலக்        குழிபறிச்சு
மீத்தேனு       எடுப்பதாலே
நம்மபசி        நடுத்தெருவுல    இப்போது - நாம
நாமாநிற்கும்   நெலமை      இனிமே எப்போது?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய வரிகளுடன் பாடல் அருமை ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

நாமாநிற்கும் நெலமை இனிமே எப்போது?
சிந்தனைக்கு உரிய வரிகள் ஐயா

Post a Comment