Tuesday, March 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்-3


சோதனை மேல் சோதனை.

            தானே சவரம் பண்ணிக்கிறேன்னு கன்னத்துல பிளேடு கீறலோட வந்த கதாநாயகனைத் திட்டிட்டு, கீறல்ல கொஞ்சம் திக்கா பவுடரை வ்ச்சு அமுக்கி மேக்கப் பை முடிச்ச சமயத்துல  தேவைகாரர் கூப்புடுறாரேன்னு பதறிக்கிட்டு ஒப்பனை நடந்த குடிசையை விட்டு வெளியே வந்து பாத்தா...

           வீட்டு வாசல்ல போட்டிருந்த  40க்கு 20 அளவுள்ள பந்தல் நிரம்பக் கூட்டம். பாயை. துண்டை விரிச்சுப் போட்டு இடம் புடிச்சு ஒக்காந்திருந்த  மக்களைப் பாத்த எனக்கு ஒரே மலைப்பு.
                 
                இத்தனைக்கும் ஒரு சின்ன நோட்டிசுகூட அடிச்சு விளம்பரப் படுத்தலே. காது குத்துப் பத்திரிகை வைக்கப்போன எடத்துல எல்லாம்  எங்க மன்றத்துப் பசங்க, மொத நாள் ராத்திரி நாடகம் ன்னு விசுறுன கொசுறு அழைப்போட எபக்ட்,  மறுநாள் காலையில வரவேண்டிய வெளியூரு சொந்தக்காரங்கல்லாம் குழந்தை குட்டிங்களோட  முதல்நாள் சாயங்காலமே வந்திருக்காங்க.

          மெதுவா கூட்டத்தை விலக்கிட்டு கூப்பிட்டு அனுப்புன தேவைகார ரெங்கன் மாமாவைத் தேடிப் போனேன். சமையல்காரர்கிட்ட எதையோ சீரியசா சொல்லிக்கிட்டிருந்தாரு.
” என்ன மாமா கூப்பிட்டீங்களான்னேன்” 
 ” யாரு மாப்ளே வெளியூருலைல்லாம் நாடகம்ன்னு சொன்னது?  அட நெருங்குன  சொந்தக்காரங்கதானே மொதநா ராத்திரி வருவாகன்னு  ரெண்டு பக்கா அரிசி வடிச்சு ஒரு சாம்பாரு, ஒரு கூட்டுன்னு
 ( முட்டைக்கோசுதான்) சமைக்கச் சொல்லியிருந்தேன்.  பாத்தா  இன்னக்கே எல்லாச் சொந்தங்காரனும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்கே. வந்தவுகளுக்குச் சோறுபோடலைன்ன கொறை சொல்லுவானுக. அதான்  இன்னம் ரெண்டு பக்கா போட்டு வடிக்கச் சொல்லிக்கிட்டிருக்கேன்” ன்னு வேதனையும் சிரிப்பும் கலந்த குரல்ல சொன்னாரு.

“ நாங்க யாருக்கிட்டயும் சொல்லலே மாமா. ஒங்க பையன் இதுக் சொல்லியிருப்பான் போலிருக்கு” ன்னு  அவரோட செல்ல மகன் மேல பழியப் போட்டுச் சமாளிச்சேன்.

      “சரி சரி. சமைக்கக் கொஞ்சம் லேட்டாகும்  சீக்கிரமா நாடகத்தை ஆரம்பி.. நாடகம் முடிஞ்சதுக்கப்பறம் பந்தி போடலாம்” ன்னாரு. 

              ஏழு மணிக்கேவா.. இன்னம்  கொஞ்சம் மேக்கப் பாக்கி இருக்கு மாமா” ன்னேன். ” அரிதாரம் போட்டவனுகளை வந்து நடிக்கச் சொல்லுப்பா“
          
                      “அப்படி இல்ல மாமா.. எல்லாருக்கும் மேக்கப் போட்டு  ஒவ்வொருத்தரையும் மேடையில அறிமுகப் படுத்தித்தான் நாடகத்தை ஆரம்பிக்க முடியும்”ன்னேன்..

 “அது வரைக்கும் ஏதாச்சும்  பபூன் , டான்சு காமிக் இருந்தா அவுகள விடு மொதல்ல .” 
அமெச்சூர் நாடகத்துல பபூன் டான்சா?  பழைய தெருக்கூத்து வாசனை மாறாமப் பேசுன  மாமனுக்கு என்ன சொல்றதுன்னு  சங்கடத்துல நெளிஞ்ச என்னை “ எதையாச்சும் சீக்கிரமாப் பண்ணு மாப்ளே“ ன்னு மிலிட்டரி ஆர்டர் போட்டுட்டு  சமையல் காரரைத்  தொடர்ந்தார். 

                     மன்றத் தலைவர் சுப்பிரமணியன் ஆபத்பாந்தவனா வந்து 
“என் அண்ணன் மக நல்லா பள்ளிக்கூடத்து ஆண்டுவிழாவுல டான்சு ஆடுச்சு. அதை ஆடவிடுவோமா”ன்னான் 

                     “எதையாவது பண்ணுன்னு” மேடையப் பாத்தேன்.
 ஊக்குல பிணைச்ச வேட்டி சீனாத் தொங்குச்சு,   ஆறுமுகம் ஆர்க்லைட்டு செட்டப் பண்ணிக்கிட்டிருந்தான்.  இருக்க ட்யுப் லைட்ல,  மைக்செட் காரர்  கிராமபோன் ரெக்கார்டுல போட்ட “அழகான  பொண்ணுதான்” பாடலுக்கு  அந்தச் சிறுமி   மேடையில ஆட ஆரம்பிச்சுச்சு.
 கூடியிருக்க கூட்டம், தேவைகாரரோட சங்கடம் இதுகளுக்கிடையில  சொதப்பாம எப்படி  நாடகத்தை நடத்தப் போறோங்கிற பயம் என்னைக் கவ்விக்கிடுச்சு.

                  அவசர அவசரமா மேக்கப்பை முடிச்சுட்டு , நடிகர்களுக்கு தைரியத்தையும் வாழ்த்தையும் சொல்லிட்டு. வேகமா என் வீட்டுக்கு ஓடி 

 “ முதன் முதலா மேடையேறுறேன் என்னை வாழ்த்தும்மா”ன்னு அம்மா கால்ல விழுந்தேன். அவங்களோட  ரெண்டு சொட்டுக் கண்ணீர்  என் கழுத்துல விழுந்துச்சு. 

                 அதையே வாழ்த்து மாலையா ஏத்துக்கிட்டு அப்பாவைத் தேடுனேன். அவரு பந்தலுக்குப் போயிட்டாருன்னாங்க.
என் தங்கை பார்வதியை மடியில வச்சிக்கிட்டு முன் வரிசையில உட்கார்ந்திருந்த என் அப்பாவை மேடைக்குப் பின்னால அழைச்சு அவரோட வாழ்த்தையும் வாங்கிக்கிட்டேன்.

                 நடிக்கிற பசங்களை , அறிமுக சீனுக்கு பேரு கூப்பிடுற ஆர்டர்ல மேடைக்கு வரணும்ன்னு அறிவுறுத்தி மேடைக்குப் பின்னால வரிசையா நிப்பாட்டுனேன்.
ஆர்க் லைட்டை வெள்ளோட்டம் பாத்துக்கிட்டிருந்த ஆறுமுகத்தைக் கூப்பிட்டு நா விசிலடிக்கிறப்ப மேடை லைட்டை அணைச்சிட்டு  மேடையில நிக்கிற நடிகனோட முகத்துல மட்டும் ஆர்க்லைட்டை அடிக்கணும் ன்னு டைரக்சன் கொடுத்துட்டு,
திரையை இழுக்க ஏற்பாடு பண்ணியிருந்த அடைக்கலத்துக்கிட்டே
 ” நா விசிலடிச்சு லைட் ஆப் ஆனவுடனே ட்ராப் சீனை இழுக்கணு”முன்னு  உத்தரவும்  போட்டாச்சு. 


                      ஒருபாட்டுக்கு ஆடறேன்னு சொன்ன அந்தப் பாப்பா கொசுறா இன்னொரு பாட்டுக்கும் ஆடி முடிச்சிருச்சு. 

இனி நாடகத்தை ஆரம்பிச்சுடலாமுன்னு இருந்த நேரத்துல கடம் வாசிக்கிற பையன் ஓடிவந்து  எங்காதுக்குள்ளே 

”அண்ணே புல்புல்தாரா வாசிக்கிறேன்னு சொன்ன ஒங்க சித்தப்பா, ஆஸ்பத்திரியில அவசர டூட்டின்னு  புல்புல்தாராவை கொண்டாந்து வச்சுட்டுப் போயிட்டாரு” ன்னான். 
மண்டைக்குள்ளே ஆயிரம் அணுகுண்டு வெடிச்ச அதிர்ச்சி.  

அவரு எப்ப டூட்டி முடிஞ்சு வர்றது? எப்ப நாடகத்தை ஆரம்பிக்கிறது? பந்தல் நிரம்பி வழியுது, தேவைகார மாமா வேறே சீக்கிரம் ஆரம்பிக்கச் சொல்லி அணத்துறாரு.  மியூசிக் இல்லாம எப்படி அறிமுகம் செய்யுறது?  குழம்பிப் போன நா ஒரு முடிவுக்கு வந்தேன்....

                                                                                                     --- இன்னும் வரும்  

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சோதனை மேல் சோதனை ஐயா
அடுத்த பகிர்விற்காகக் காத்திருக்கிறேன்

Mathu S said...

காலச் சக்கரத்தை மீண்டும் திருப்பும்
பெருமூச்சு விடவைக்கும் பதிவு

Geetha M said...

ஆகா....நல்லாருக்கே அய்யா

Post a Comment