Wednesday, March 29, 2017

எனது மேடைநாடக அனுபவங்கள் - தொடர்-6


  வான்கோழி  மயிலாக மாறியபோது...


           தலைப்பேறு தாய்க்குக் கடினமான ஒன்றாக இருந்தாலும், பேறு முடிந்து வெளிவந்த மகவைக் கண்டதும் அத்தாய் எத்தகைய மகிழ்வினை அடைவாளோ அதைப்போல பலபடித் தடைகளைத் தாண்டி ஒரு காதணி விழாப் பந்தலில்  அரங்கேறிய “ தாய்ப்பாசம்” நாடகம்  தந்த  மகிழ்வை நானும் எனது கலைவாணர் மன்ற நண்பர்களும் அடைந்தோம்.

            மறுநாள் முதல் பார்த்தவர்கள் அளித்த பாராட்டுகளும். புகழுரைகளும் என்னைத் தொடர்ந்து  மேடைநாடகப் படிகளேறிப் பயணிக்கத் தூண்டியது.ஆனாலும் ஒரு  தேநீர் கடைக்கார பெரிய மனிதர்,  தன் கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம்  “ மயிலப் பாத்து வான்கோழி ஆட நெனச்சா முடியுமாய்யா?” எனக் கேலியாகக் கேட்டுச் சிரித்த காட்சியைத்  தற்செயலாக நான்  பார்க்க நேர்ந்தது. அவர் விடிய விடிய நடந்த தெருக்கூத்துகளின் விரசங்களை மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்லியிருந்தாலும் என்னால் என்னவோ அந்தக் கூற்றை அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியவில்லை.

                   மயிலாக ஆடிக்காட்ட வேண்டும் என்று என்னுள் கிளர்ந்த
அவரின் விமர்சனம்தான்  என்னை மேலும்  மேடை நாடக ஈடுபாட்டில் தீவிரப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

                   அடுத்த ஆண்டு  இன்னும் சிறப்பாக ஒரு பொது மேடையில் நாடகத்தை நடத்த வேண்டும் என்று அடுத்த வாரமே மன்றம்  கூடிமுடிவெடுததது. எங்களைப் போல  சமூக எண்ணங் கொண்ட சில இளைஞர்கள் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.   மன்றத்தின் உறுப்பினர்கள் அதிகமானபோதும் அதில் ஒரு புதிய பிரச்சனை உருவாகவும் செய்தது. 

                  “கலைவாணர் என்ற  அடைமொழிக்குரிய என்.எஸ்.கிருட்டிணன் ஒரு பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் . அவர் பெயரில் மன்றம் இயங்கினால்  ஒரு கட்சிசார்ந்த அமைப்பாக ஊராரிடையே கருத்து மோதல்கள் உருவாகும். எனவே மன்றத்திற்கு வேறு ஒரு பொதுவான பெயரை வைக்க வேண்டும்” என்று  புதிதாகச் சேர்ந்த ஒரு மூத்த உறுப்பினர் கருத்தினைச் சொன்னார். வந்தவுடனேயே  தனிக்கட்சியா என நான் நினைத்தாலும்  இணைந்த இளைஞர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாளாதிருந்தேன்.

                   சனநாயக வழியில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு, இறுதியாக  சமுதாயத்திற்கு ஒலி எழுப்பும் “மணி”  யை அடிப்படையாகக் கொண்ட “ மணிமன்றம்” என்று கலைவாணர் மன்றப் பெயர் மாற்றப்பட்டது. அதன் நிருவாகியாக பொன்.கருப்பையா செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

 அரசியல் சார்பற்று. சாதி, மத.பேதமற்று மன்றத்தின் செயல் முறைகள் இருத்தல் வேண்டும். சமூக விழிப்புணர்வுக் கருத்துகளை, சமுதாய மேம்பாட்டு  முற்போக்கு எண்ணங்களை நாடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்குவது. ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்து ஒரு நாடகம் நடத்துவது. செலவினங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வது, பற்றாக்குறைக்கு நன்கொடையாளர்களை நாடுவது.
 உறுப்பினர் ஆண்டு சந்தா  எட்டணா. தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்களை ஆண்டு தோறும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுப்பது. மாதந்தோறும் 5ஆம் தேதி மன்றக் கூட்டம்  நடத்துவது. கூட்டத்தில் அவ்வக்காலத்து நடப்புகள் பற்றி விவாதிப்பது. தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வராதவர்களை மன்றத்திலிருந்து நீக்குவது. என்றெல்லாம் விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 

                  புதிதாகத் தொடங்கப்பட்ட “ மணிமன்றத்” தின் முதல் தலைவராக திரு அ.சுப்பிரமணியன்  தலைமையில் கூடிய முதல் கூட்டத்திலேயே அடுத்த ஆண்டு (1964) மணிமன்றத்தின் முதல்  மேடை நாடகத்தை பொது மேடையில் அரங்கேற்றுவது என முடிவானது.
 அடுத்த நாடகத்திற்கான  கதையினை எழுதி, உரையாடல் எழுதத் தொடங்கிய  வேளையில் எனது பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் எனக்கு எதிராக அமைந்து விட்டது. 

           “ கூத்தாடத் தொடங்கிப் படிப்பைக் கோட்டை விட்டான்டி ஒன் புள்ள” ன்னு அப்பா அம்மாவைத்திட்ட அடுத்த செப்டெம்பர் தேர்வுக்குப் படிக்க முனைந்ததில்   எனது புதிய நாடகம்  குறைப்பிரசவமாகவே உருப்பெறாமல் போயிற்று.

             “நீ பரிச்சை எழுது, எழுதாமப்போ, பாசாகு பாசாகமப் போ எங்களுக்கு மன்றத்த ஆரம்பிச்ச முத  வருசம்  நாடகத்தை நடத்தியே தீரணும்“ ன்னு  மன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் குரலெழுப்ப  பெத்தவங்களையும் நோகடிக்காம, மன்ற உறுப்பினர்கள் எண்ணத்தையும் பாழடிக்காம       காதணிப் பந்தல்ல போட்ட                               “ தாய்ப்பாசம்” நாடகத்திலேயேக் கொஞ்சம் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து, ரெண்டு மணி நேரம் நடத்துற மாதிரி, மன்றத் தலைவர்கிட்டே கொடுத்தேன். நா நேரடியா ஈடபடாம   டைரக்சன் கா.மாரிமுத்து ன்னு துண்டறிக்கையில போடச்சொல்லிட்டு மறைமுகமா அந்த நாடகத்தை இயக்குனேன். 


                1964 மே மாதம் 28 ஆம் தேதி நாடகத்தை நடத்த முடிவு செஞ்சு  முறையான  இசைக்குழு, நடராசபிள்ளை சீன், ராமகிருட்டிணன் ஒப்பனை, அழகப்பன் மேடை அமைப்பு என எல்லா ஏற்பாடுகளும்  முடிஞ்சு இறுதி ஒத்திகை நடக்க இருந்த 27.05.1964 அன்று பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் காலமானார். அதனால்  நாடகம் 07.06.1964 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து நடத்தப்பட்டது.

                  மணிமன்றத்தின் முதல் நாடக அரங்கேற்றச் செய்திகளுக்கே ஆறு தொடர்களாகிப் போச்சே. இவரோட 72 நாடகச் செய்திகளையும்  “ கன்னித்தீவு” மாதிரி எத்தனை வாரங்களுக்குப் போட்டு இழுக்கப்போறாரோ? ன்னு மலைக்க வேண்டாம்  வலைத்தள நட்புகளே.

            எனது எல்லா நாடக அனுபவங்களையும் கொட்டி  உங்களை அலுப்படையச் செய்யப்போவதில்லை.. அவற்றுள்  குறிப்பிடத்தக்க                       ( நகைச்சுவை, எதிர்பாராமல் நடந்த ) செய்திகள்  மட்டுமே இனிவரும் தொடர்களில்...

                                                                --- தொடர்ந்து சந்திப்போம்




2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர் நீள்வது பற்றிக் கவலை வேண்டாம் ஐயா
ஒவ்வொரு பதிவும், தங்களை மெருகேற்றிய அனுபவங்களை அல்லவாச் சுமந்து வருகிறது
தொடருங்கள் ஐயா
கத்திருக்கிறேன்

Kasthuri Rengan said...

கரந்தையார் சொல்வதே என்னுடைய கருத்தும் ...

தொடர் நன்றாக இருக்கிறது

Post a Comment