Wednesday, March 8, 2017

மகளிர் நாள் சிந்தனைகள்


உலக மகளிர் நாள் சிந்தனைகள்.


பெண்ணிற் பெருந்தக்க யாவுள -- திருக்குறள்.

மங்கையராக்ப் பிறப்பதற்கே நல்ல
 மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா- கவிமணி

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பெண்கள் அறிவை வளர்த்தால வையம்
 பேதைமை அற்றிடும் காணீர்
பெண்ணுக்கு விடுதலை நீர்இல்லையென்றால்
பின்னிந்த உலகினில் வாழ்க்கையில்லை. -- பாரதியார்.

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்
வல்லவன் பே ரறிஞன்ஷா வார்த்தை கேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்த வேண்டும்
இல்லையெனில் ஏதுசெயலாம்? பெண்ஆண் என்ற
இரண்டுருளை யால் நடக்கும் இன்பவாழ்க்கை. --பாரதிதாசன்.

பெண்கள் முன்னேற அவர்கள் கைகளில் இருக்கும் கரண்டிகளைப்
பிடுங்கிவிட்டுப் புத்தகங்களைக் கொடுங்கள் - பெரியார்.

என்பவையெல்லாம் மகளிர் பெருமை பேசும் சான்றோர் மொழிகள்.

ஆம் அவர்கள் கண்ட கனவு நனவாகியுள்ளது.
கடந்த நூற்றாண்டி்ல் இருந்ததைவிட இந்த 21ஆம் நூற்றாண்டில் மகளிர் அதிக விழுக்காடு கல்வியில் முன்னேறி இருக்கிறார்கள்.

வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த பெண்கள் இன்று விண்ணிலேறி சாதனை படைக்கிறார்கள்.

அனைத்துத் துறைகளிலும் மகளிர் ஆடவர்க்கு ஈடாகப் பணிபுரிந்து பொருளீட்டுகிறார்கள்.

முன்பைவிட சமூகப் பிரச்சனைகளில் அதிகமாக ஈடுபட்டு, அநீதிகளுக்கு எதிராகப் போராட்டக் களங்களைச் சந்திக்கிறார்கள்.

ஆனாலும் அவர்களை ஏதோ ஒரு சக்தி இன்னும் பின்னுக்கு
இழுத்துக் கொண்டிருப்பதை நடப்பியல் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.
எது அது?

தங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும்  
தடைகளைத் தகர்க்க, பெரும்பாலான் பாமரப் பெண்கள் 
விதியை நொந்து கொள்வதும், ஆன்மீக வேண்டுதல்களில் ஈடுபட்டுக் 
கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வாளாதிருப்பதுமே 
அந்த முட்டுக்கட்டையாக நான் கருதுகிறேன்.

அறிவை விரிவு செய் அகண்டமாக்கு என்ற பாவேந்தர் நெறியையும்,
அறிவு அற்றம் காக்கும் கருவி, அதைச் சென்ற இடத்தால் செலவிடாது 
நன்றின்பால் செலுத்தலே ஆக்கம் தரும் என்ற குறள் நெறியையும்  பின்பற்றி, மூடநம்பிக்கைகளை விட்டு பகுத்தறிவின் வழி சிந்தித்துச் செயல்படும் மகளிரின் விழுக்காடு உயர்ந்தால் பெண்டிர் பேதைமை அகன்று அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும் என்பதே இந்த மகளிர் நாள் சிந்தனையாக எனக்குத் தோன்றுகிறது.
மகளிர் மனத்திட்பமே மாற்றங்களின் வினைத்திட்பமாம்.

பாவலர் பொன்.க.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகளிர் மனத்திட்பமே மாற்றங்களின் வினைத்திட்பமாம்.

அருமை ஐயா

Mathu S said...

வணக்கம் அய்யா
நல்ல ஒப்பீடுகளோடு இருக்கும் கட்டுரை
நன்றி

Post a Comment